திருப்புமுனை ஏற்படுத்தும் தேர்தல் முடிவுகள்!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். மாயாவதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை, தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட க
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருக்கும்.
மாயாவதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதை, தேர்தல் முடிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் பல ஒன்றுபட்டுக் கூறியபோதிலும், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதிக் கட்சி தனிப்பெரும்பான்மை பெறாத, அதேசமயம் சட்டப் பேரவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக வெற்றி பெறக்கூடும் என்றுதான் பலரும் கருதினார்கள். பெரும்பாலான கருத்துக் கணிப்புகளுக்கும் கருத்துத் திணிப்புகளுக்கும் மாறுபட்டு, வாக்குகள் எண்ணிக்கைக்குப் பிறகு, இதற்கு முன்பு ஏற்பட்டிருக்காத அளவுக்கு, 403 உறுப்பினர்கள் உள்ள உ.பி. சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மையுடன் 224 இடங்களை முலாயம் சிங் கட்சி பெற்றுவிட்டது.
வாக்குகள் எண்ணப்பட்ட மார்ச் 6-ம் தேதி காலையில்கூட தொங்கு சட்டப் பேரவை வரக்கூடும் என்று சிலர் கூறினார்கள். அதைவிட, மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா, தொங்கு சட்டப் பேரவை வந்துவிட்டால் மாயாவதியுடன் உடன்பாடு வைத்துக்கொள்வது காங்கிரஸýக்கு நல்லது என்று ஓர் அரிய ஆலோசனையைத் தந்தார். அவர் இரும்புத்துறை அமைச்சராக இருப்பதைவிட, ரப்பர் துறை அமைச்சராக ஆகியிருக்கலாம்.
சுதந்திர இந்தியாவில் இந்தியா என்கிற பாரத் என்கிற உத்தரப் பிரதேசம் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அடிப்படைப் பாடமாகும். 1950 முதல் தொடங்கிய இந்திய ஜனநாயக ஆட்சி முறையில், 1977-79 மொரார்ஜி தலைமையில் ஜனதா அமைச்சரவை இருந்ததைத் தவிர, 1989 வரை காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஏகபோக ஆளுங்கட்சியாக ஆட்சி புரிந்தது.
1989-க்குப் பிறகு, எந்த ஒரு கட்சியாலும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இயலவில்லை.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பதவியை எடுத்துக்கொண்டாலும் 1950-ல் கோவிந்த் வல்லப் பந்த் முதல், 2012 மாயாவதி காலம் வரை 31 முதல் மந்திரிகள் ஆட்சி செலுத்தியுள்ளனர். பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியினர்தாம் முதல்வர் பதவியில் இருந்தனர். இடையிடையே எதிர்க்கட்சியினர் சில மாதங்கள் காங்கிரஸ் ஆதரவுடனும் அல்லது கூட்டணி அமைப்புகளுடனும் ஆட்சி அமைத்தது உண்டு. உத்தரப் பிரதேசத்தில் 8 தடவைகள் குடியரசுத் தலைவர் ஆட்சி குறுக்கிட்டது.
எதிர்க்கட்சியின் சார்பில் மாயாவதி மட்டும்தான் ஐந்தாண்டு காலம் முழுமையாக முதலமைச்சர் பதவியில் இருந்தார். அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு சமாஜவாதி கட்சியின் சார்பில் ஒருவர் முதல் அமைச்சராக இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களில் கிடைத்துள்ள சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு, அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் விழுந்த பயங்கர அடி, காங்கிரஸ் தலைவர்களை மிகவும் கதி கலங்க அடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தனிப்பட்ட பெரும்பான்மை பலம் காங்கிரஸýக்குக் கிடைத்துள்ளது.
ஆயினும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி - வருங்காலப் பிரதமர் என காங்கிரஸ்காரர்களால் முடிசூட்டப்படும் இளவரசர் - காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எதைக் காட்டுகிறது என்றால், காங்கிரஸ் என்றால் ராகுல் காந்தி, ராகுல் காந்தி என்றால் காங்கிரஸ் என்ற அடிப்படை நிலைமையை வலியுறுத்துவதாகும்.
இதனால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பத்திரிகை நிருபர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பிரமாண்டமான பாதிப்பு போதுமானது என்று காங்கிரஸ் தலைவர் நினைக்கிறார் போலும். மேலும் மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகி நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் உடனடியாக நடைபெறுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கும் பிரதமருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2014 வரை அவர்தான் பிரதமர் என்று சோனியா காந்தி கடுமையாகப் பதிலளித்தார்.
வெளிநாடுகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் எப்படி இந்தியப் பிரதமரைப் பாதிக்காதோ அந்த அளவுக்குத்தான், ஐந்து மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும் இந்தியப் பிரதமரைப் பாதிக்காது என்று ஏற்பட்டுவிட்டது.
இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும், முக்கியமான ஆட்சி முடிவுகளைத் தருவதிலும், அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தான் ஆட்சியின் உண்மையான அதிபதி என்ற அரசியல் நிலைமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
உத்தரப் பிரதேசத் தேர்தலில் கிடைத்த மாபெரும் தோல்வியைவிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலி தொகுதியில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அனைத்திலும் ஒன்று தவறாமல் காங்கிரஸýக்குப் பெரும் தோல்வி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதைப்போலவே ராகுல் காந்தியின் அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளான ரேபரேலி, அதை அடுத்துள்ள அமேதி ஆகியவை ஆரம்ப காலத்திலிருந்து நேரு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய தொகுதிகளாகும்.
ரேபரேலி தொகுதியில்தான் இந்திரா காந்தியின் கணவர் பிரோஷ் காந்தி 1952, 1957 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றார். அவருக்குப் பிறகு 1967-ல் பிரதமர் இந்திரா காந்தியும் அந்தத் தொகுதியில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-ல் ஜனதா கட்சியின் வெற்றிப் பேரலையில் ராஜ் நாராயணிடம் இந்திரா காந்தி தோல்வி அடைந்தாலும், 1980-ல் மீண்டும் ரேபரேலி தொகுதியில் நின்று வெற்றி பெற்று பிரதமராக ஆனார்.
1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிப் பொறுப்பேற்றதும், சஞ்சய் காந்திதான் அடுத்த பிரதமர் என்ற எதிர்பார்ப்பு பரவியது. அமேதி தொகுதியில் 1980-ல் சஞ்சய் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக 1980 ஜூன் மாதத்தில் விமான விபத்தில் அவர் இறந்ததும், ராஜீவ் காந்தி அரசியல் களத்துக்கு அழைக்கப்பட்டு, அமேதி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு வந்தார். 1984 அக்டோபர் 30-ல் இந்திரா காந்தி படுகொலைக்கு ஆளான பிறகு, நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி அமேதி தொகுதியில் நின்று பெருவாரியான வெற்றியில் இந்தியாவின் பிரதமராக ஆனார்.
ஆயினும், போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கி, 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்றாலும், அமேதி தொகுதியில் வெற்றிபெற்று ராஜீவ் காந்தி எதிர்த்தரப்புத் தலைவராக ஆனார். அடுத்து 1991 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகொலைக்கு ஆளானார்.
1997-ல் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக ஆனார். 1999 தேர்தலில் அமேதி தொகுதியிலிருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்த்தரப்புத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையில் ஐக்கிய முற்போக்கு அமைப்பு ஏற்பட்டு ஆட்சிப்பொறுப்பேற்கும் நிலைமையில் மன்மோகன் சிங்கைப் பிரதமராக சோனியா காந்தி ஆக்கி வைத்தார். 2004, 2009 பொதுத்தேர்தல்களில் ரேபரேலி தொகுதியில் நின்று பெருவாரியான வாக்குகள் பெற்று சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற 2012 உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் அவருடைய நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தது செய்தியாளர்களிடையே ஆச்சரியத்தையும் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது.
2004 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் விழுந்த 6 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் முதலிடம் பெற்று சோனியா காந்திக்கு 59 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதேபோல் 2009 பொதுத்தேர்தலிலும், ரேபரேலி தொகுதியின் சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் முதலிடம் பெற்று, சோனியா காந்தி 72 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.
ஆனால், 2012 சட்டப் பேரவைத் தேர்தலில் ரேபரேலியின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர் என்பது மகத்தான அரசியல் மாறுதல் ஆகும்.
ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் இருக்கும் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
ரேபரேலி, அமேதி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி பிரசாரப் பீரங்கியாக விளங்கியது மட்டுமல்ல, அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி, சகோதரியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியவர்களும் சூறாவளிப் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.
ஒரு கூட்டத்தில் ராபர்ட் வதேரா குறிப்பிட்டாராம்: இரண்டு தொகுதியிலும் உள்ள 10 இடங்களிலும் வெற்றிபெற்று சோனியா காந்தி அம்மையாரை நாம் பெருமைப்படுத்துவோம். தேவைப்பட்டால், நானும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். இதைப் பற்றி, பாரம்பரியக் குடும்ப ஆதிக்கம் காங்கிரஸ் கட்சியில் பரவுகிறது என்று செய்தியாளர்கள் அறிவித்தனர்.
நேரு-காந்தி பாரம்பரியத்தில் இப்படிப்பட்ட அரசியல் சரிவு ஏற்பட்டுள்ளது பற்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து நாட்டின் பிரபல நாளேடு டெய்லி டெலகிராப் பின்வருமாறு எழுதியுள்ளது:
இந்தியாவின் மிகப்பெரிய - முக்கியமான மாநிலத்தில் அண்மைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தோல்வி, வருங்கால இந்தியாவின் பிரதமர் என்று ராகுல் காந்தி அழைக்கப்பட்டு வருவது ஐயப்பாட்டுக்கு ஆட்பட்டுவிடும் என்று தோன்றுகிறது.
யார் என்ன சொன்னாலும் எழுதினாலும் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடாளும் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் 2014 தேர்தல் வரை எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. வாக்காளர்கள்தான் அதுவரை காத்திருந்தாக வேண்டும்!