முகப்பு
கட்டுரைகள்

தேவை அடிப்படையிலான சுகாதாரச் சேவை

ஒருவரின் பணம் செலுத்தும் திறனின் அடிப்படையில் அல்லாமல், தேவையின் அடிப்படையில் அவருக்குச் சுகாதாரச் சேவைகள் அளிக்கப்பட வேண்டும்'' என்பதுதான் கனடா நாட்டு சுகாதாரத் திட்டத்தின் வழிகாட்டிமுறையாகும்.  நம்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:13 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:04 PM

ஒருவரின் பணம் செலுத்தும் திறனின் அடிப்படையில் அல்லாமல், தேவையின் அடிப்படையில் அவருக்குச் சுகாதாரச் சேவைகள் அளிக்கப்பட வேண்டும்'' என்பதுதான் கனடா நாட்டு சுகாதாரத் திட்டத்தின் வழிகாட்டிமுறையாகும்.

 நம் நாட்டில் திட்டக்குழுத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி தலைமையிலான நிபுணர் குழு வகுத்துள்ள சுகாதார சீர்திருத்தத்தின்படி நமது குறிக்கோள் அனைவருக்கும் சுகாதாரம் என்பதாகும். இதுதான் நமது குறிக்கோள் எனில், உலகில் உள்ள சுகாதாரத் திட்டங்களில் கனடா நாட்டு சுகாதாரத் திட்டத்தை மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.

 வரலாற்றை நாம் உற்றுநோக்கினால், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, சுகாதாரம் பேணுதல் என்பது கனடாவில் தனியார் நிதியுதவி மூலம் சேவை அளிக்கப்பட்டு வந்தது. 1947-ல் கனடாவில் உள்ள சஸ்கட்செவான் என்ற மாகாணத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 1950-ல் பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்டா ஆகிய மாகாணங்களிலும் இதே முறை பின்பற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு கனடா நாட்டு அரசு அனைவருக்கும் பொதுவான சுகாதாரத் திட்டத்தை பொதுவான நிபந்தனைகளுடன் அமல்படுத்த முடிவு செய்து, இதற்கென மருத்துவக் காப்பீடு மற்றும் நோய் கண்டறியும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, மாகாணங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் மருத்துவமனையில் குறிப்பிட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவைகளுக்குச் செலவிடப்படும் தொகையை முழுமையாகத் திரும்ப அளிக்கவோ அல்லது மொத்த மருத்துவச் செலவில் 50 சதவிகிதத்தைத் திருப்பி அளிக்கவோ முன்வந்தது.

Advertisement

 இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு அனைத்து மாகாணங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளும் (கனடாவில் தற்போது 10 மாகாணங்களும் 3 எல்லைப் பகுதிகளும் உள்ளன) மருத்துவமனையில் நோய்களைக் கண்டறிந்து, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தன.

 இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் சில மாகாணங்கள் மத்திய அரசின் (பெடரல் அரசின்) உத்தரவுக்கோ அல்லது நிதியுதவிக்கோ காத்திராமல் தாங்களாகவே முன்வந்து அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தை ஆர்வமுடன் செயல்படுத்த முன்வந்தன.

 சஸ்கட்செவான் மாகாண அரசு அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தை முதன் முதலாகத் தொடங்கியது மட்டுமல்லாமல், அடுத்த கட்டமாக 1962-ல் அனைவருக்கும் பொதுவான மாகாண மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதாவது, தனது மாகாணத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் மருத்துவர்கள் சேவை கிடைக்கச் செய்யவே இத்திட்டத்தைக் கொண்டுவந்தது.

 இதைத் தொடர்ந்து, கனடா நாட்டு மத்திய அரசு 1966-ல் அனைவருக்கும் மருத்துவச் சேவை சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது, மாகாணங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் அனைவருக்கும் மருத்துவச் சேவை அளிப்பதற்கான செலவைத் திரும்ப அளிப்பது அல்லது மொத்தம் ஆகும் செலவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சேவை அளிப்பதற்கான செலவைத் திருப்பி அளிப்பதற்கும் இந்தச் சட்டம் வகை செய்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் அனைவருக்கும் பொதுவான மருத்துவச் சேவை அளிக்கும் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படும் என்பதை யாரும் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 1957-க்கும் 1977-க்கும் இடையே மத்திய அரசு, மாகாணங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் காப்பீடு செய்யப்பட்ட மருத்துவமனைகள், அங்கு மருத்துவர்கள் சேவைக்காக செலவிட்ட தொகையில் பாதியைத் திருப்பிக் கொடுத்தன. அதன் பிறகு, தொகுப்பு நிதி என்ற முறை ஏற்படுத்தப்பட்டு செலவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இதற்காக தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

 தொகுப்பு நிதி என்பது ஒரு குறிப்பிட்ட செலவினங்களுக்காக அரசு ஒதுக்கீடு செய்வது. மத்திய அரசு வரிகளைக் குறைத்தும், மாகாண மற்றும் எல்லைப் பகுதி அரசுகள் வரிகளை அதிகரித்தும் தொகுப்பு நிதி சேர வழிவகுத்தன. இதனால், மாகாண அரசுகள் சுகாதாரத் திட்டத்துக்குத் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்க முடிந்தது.

 1996-97-ல் மத்திய அரசு தொகுப்பு நிதி மற்றும் வரி வருவாயிலிருந்து கிடைக்கும் தொகையை இத்திட்டத்துக்குச் செலவிட்டு வந்தது. 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணங்கள் மற்றும் எல்லைப் பகுதி அரசுகள் இதற்காக எவ்வளவு செலவிடுகின்றன என்று கணக்குப் பார்க்காமல், அதிக அளவு நிதி செலவிட மத்திய அரசு முன்வந்தது.

 கனடா நாட்டு சுகாதாரத் திட்ட முறைகளுக்கான ஐந்து வழிகாட்டிகள்: 1. மாகாண மற்றும் எல்லைப் பகுதி அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு லாப நோக்கு இல்லாத அடிப்படையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.

 2. மாகாணம் மற்றும் எல்லைப் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகள், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், அளிக்கப்படும் மருத்துவச் சேவைகள் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

 3. சுகாதாரத் திட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவும், ஒரே மாதிரியான நிபந்தனைகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

 4. எந்தவிதமான தடையும் இல்லாமல் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் அணுகும் வகையில் இத்திட்டம் இருக்க வேண்டும்.

 5. தகுதியான நபர்கள் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றாலும், அனைவருக்கும் மருத்துவச் சேவை கிடைக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாடு செல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்கப்பட வேண்டும்.

 கனடா நாட்டு மத்திய அரசு சுகாதாரச் சட்டத்தின் கீழ் சில தேசியக் கொள்கைகளை வகுத்து அதைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேருக்கு தொடக்க மற்றும் துணைச் சேவைகளை அளித்து வருகிறது. கனடா நாட்டு படையினர், ராயல் கனடியன் போலீஸôர், முதியோர், சிறைச்சாலையில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் உள்ளோர், அகதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

 பாதுகாப்பான சுகாதாரம், மருந்து, உணவுப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் விஷயத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்துவது, நுகர்வோர் பாதுகாப்பு, சுகாதார ஆராய்ச்சி மேற்கொள்வது, வருமுன் பாதுகாத்தல் ஆகியவற்றிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தவிர, மருத்துவச் செலவினங்களுக்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

 மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது, மருத்துவமனைகளில் மருத்துவச் சேவை அளிக்கப் போதுமான நிதி ஒதுக்குவது, வசதிகள் செய்து தருவது, மருத்துவர்களின் சேவை, சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவது மாகாண மற்றும் எல்லைப் பகுதி அரசுகளின் பணியாகும்.

 மருத்துவச் சேவைகளுக்கு அரசு பெருந்தொகையைச் செலவிட்டு வந்தாலும், சில சேவைகளுக்கு நாம் தனியாகப் பணம் செலவிட்டுத்தான் ஆகவேண்டும். அரசுத் திட்டத்தின் கீழ் மருந்துகளின் செலவு, வீட்டில் இருந்தபடியே உடல்நலம் பேணுவது, பல் மருத்துவம் ஆகியவற்றுக்கு இத் திட்டம் பொருந்தாது. இதற்கு தனி நபரோ அல்லது குடும்பத்தினரோ தனியாகப் பணம் செலவிட வேண்டும் அல்லது தனியார் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்தான் பலன்பெற முடியும்.

 கனடாவின் மக்கள்தொகை 3 கோடியே 30 லட்சம். சுகாதாரத் திட்டத்துக்காக கனடா அரசு செலவிடும் தொகை ஆண்டுக்கு 20,000 கோடி டாலர். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.6 சதவிகிதமாகும். இதில் அரசின் பங்கு 71 சதவிகிதமாகும். எஞ்சிய 29 சதவிகிதம் தனியார் துறையால் செலவிடப்படுகிறது. இதில் 12 சதவிகிதம் தனியார் காப்பீட்டுத் திட்டம் மூலம் கிடைக்கிறது.

 கனடாவில் சுகாதாரத் திட்டம் என்பது பொது நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், பயன்பெறுபவர்கள் எதுவும் தரவேண்டியதில்லை. தனியார் மருத்துவமனைகள் மருத்துவச் சேவை அளிக்கும் பட்சத்தில் அதற்கான தொகையை கனடா அரசே செலுத்திவிடுகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் மருத்துவச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரே காப்பீட்டுத் தொகையை பெறும் விஷயத்தைக் கையாள்கிறார். எனவே, சிகிச்சை பெற்ற நோயாளிகள் இதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

 ஒவ்வொரு மாகாணத்திலும் அதன் கீழ் உள்ள சுகாதாரத்துறையே பெயரைப் பதிவு செய்துகொண்டு அனைவருக்கும் சுகாதார அட்டையை வழங்குகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல் மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் இத்திட்டத்தின் கீழ் வராது. எனினும், இவை தொழில்நிறுவனங்கள் மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலமும் செயல்படுத்தப்படும். மூத்த குடிமக்களுக்கான மருந்து, மாத்திரை செலவுகளை அரசு ஏற்கிறது. ஆனால், ஏழைகளுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்கள் மூலம் தனியார் காப்பீடு மூலம் இதற்கு வகை செய்யப்படும். இன்னும் சொல்லப்போனால் மருந்து, மாத்திரைகள் நியாயமான விலைகளில் கிடைப்பதை அரசே உறுதி செய்கிறது.

 கனடா அரசு சுகாதாரத் திட்டத்தை நன்றாகச் செயல்படுத்தி வந்தாலும், அதைக் குறைகூறாதவர்களும் இல்லை. சுகாதாரத் திட்டத்தின் கீழ் சில பிரிவுகள் வரவில்லை என்றும், இதற்காக மக்கள் தங்கள் கையிலிருந்து அதிகம் செலவிட வேண்டியுள்ளது என்றும் கூறுகின்றனர். சில நோய்களுக்கு சிகிச்சை பெற நீண்டநாள் காத்திருக்க வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்டு. மருத்துவச் சேவைகளுக்காக அரசு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. அதாவது, அரசின் செலவினங்களில் 20 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டுக்காகச் செலவிடப்படுகிறது என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், மக்களுக்குத் தேவையான அடிப்படைச் சுகாதாரத் தேவைகளை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

 மருத்துவச் சேவைத் திட்டத்தில் சில பிரிவுகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவச் சேவை அளிக்கும் முறையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். எந்த ஒரு திட்டமானாலும் அதைச் செயல்படுத்தும்போது சில விமர்சனங்கள் எழலாம். சுகாதாரத் திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அதைக் கண்டறிந்து சீரமைப்பது அவசியம். எப்படியிருந்தாலும் கனடா நாட்டு சுகாதாரத் திட்டம் இதர நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.