முகப்பு
கட்டுரைகள்

ஆராய்ச்சிக்கு முன்னுரிமை!

அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்தது 2 சதவிகிதத்தையாவது செலவிட வேண்டும் என்றும், இதற்கு தொழில் துறையினரும் தங்களது பங்களிப்பைத் தர வேண்டும் என்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்தது 2 சதவிகிதத்தையாவது செலவிட வேண்டும் என்றும், இதற்கு தொழில் துறையினரும் தங்களது பங்களிப்பைத் தர வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

 ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் அண்மையில் நடைபெற்ற 99-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது வியப்பைத் தருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் அவரது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், இவ்வளவு காலமாக இதுவிஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு அவர்தானே பொறுப்பேற்க வேண்டும்.

 இதேபோல, அறிவியல் ஆராய்ச்சித் துறையில் சீனா நம்மை முந்திவிட்டது என்றும், இதுவிஷயத்தில் உலக அளவில் நமது பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்றும் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கவலை நியாயமானதே. ஆனால், முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் வெறுமனே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடாது. இந்தத் துறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதற்கு பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்குத்தான் உள்ளது.

 சீனாவுக்கு நிகராக நம்மிடமும் மனிதவளம் உள்ளது. இருப்பினும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் சீனாவைவிட நாம் மிகவும் பின்தங்கியிருப்பதற்கு என்ன காரணம் என்பதை தீவிரமாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுயேச்சையான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஆராய்ச்சித் திட்டப் பணிகளில் சீனாவில் 8,50,000 பேரும் இந்தியாவில் 1,15,000 பேரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதேபோல, ஒவ்வோராண்டும் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் இந்தியாவைவிட 4 மடங்கு ஆராய்ச்சியாளர்களை சீனா உருவாக்கி வருகிறது. சீனாவில் 10 லட்சம் மக்கள்தொகையில் 708 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளதாகவும், இந்தியாவில் இந்த எண்ணிக்கை 119 ஆக மட்டுமே உள்ளதாகவும் உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 கடந்த 20 ஆண்டுகளாக நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.71- 0.91 சதவிகிதம் மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டு வருகிறது. இதே காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 2.5 சதவிகிதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது.

 கடந்த 2002-ம் ஆண்டு, 10-வது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கியபோது, 2007-ல் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான செலவினம் நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. மன்மோகன் சிங் அரசு இதுவிஷயத்தில் உரிய கவனம் செலுத்தாததால், அந்த இலக்கை எட்ட முடியாமல் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

 இதற்கான காரணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, வருங்காலச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் நமது அறிவியல் கொள்கைகளை வகுக்க வேண்டும். அதோடு, அந்தக் கொள்கைகளை உறுதியுடன் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

 அறிவியல் துறையைப் பொருத்தவரையில், செயற்கைக்கோள்களை வடிவமைத்து, அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் நமது நாடு பிற நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கு வெற்றி கண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தனியார் மருத்துவச் சேவையிலும் நமது நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆனால், பிற துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

 நாம் இன்னமும் பின்பற்றி வரும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய மெக்காலே கல்வி முறையால், நிறைய பட்டதாரிகளையும், பொறியாளர்களையும் மட்டுமே உருவாக்கி வருகிறோம். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அல்லது அவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கக் கூடிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் சுயமாக வெளிப்படுத்தக் கூடிய அறிவுக்கூர்மை வாய்ந்த விஞ்ஞானிகளை பெருமளவில் நம்மால் உருவாக்க முடியவில்லை. எந்தவொரு புதிய பொருளானாலும் அது வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதியாகும் சூழல் நிலவுகிறது.

 உதாரணமாக, நமது ராணுவத்துக்குத் தேவையான போர் விமானங்கள், கப்பல்கள், கவச உடைகள் உள்பட அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் அரசுத் துறை நிறுவனமான பெங்களூர் எச்ஏஎல் நிறுவனம் இலகுரக போர் விமானங்களை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்து வருகிறது. ஆனால், இந்த விமானங்கள் இன்னும் நமது விமானப் படையின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

 இதேபோலத்தான், நோய்களைத் தீர்க்கும் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் நமது நாட்டின் பங்களிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் புதிய வகை மருந்துகளைச் சோதித்துப் பார்க்கும் மனித எலிகள் பரிசோதனைக் கூடமாகத்தான் இந்தியா மாறி வருகிறது.

 இதற்கு நமது நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலரும் விதிகளைப் புறந்தள்ளிவிட்டு உடந்தையாக உள்ளனர்.

 இந்த நிலைமை மாற வேண்டுமானால் நமது அடிப்படைக் கல்வி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். மனனம் செய்யும் கல்வி முறையைப் படிப்படியாக விட்டொழித்து, மாணவர்களின் தனித் திறமையைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியலை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில், அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதேபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய உலகத் தரம் வாய்ந்த சில ஆராய்ச்சிக்கூடங்கள் மட்டுமே நமது நாட்டில் உள்ளன. எனவே, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான், நமது நாட்டில் படித்துவிட்டு, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

 இதுபோன்ற விஷயங்களில் உரிய கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சித் திட்டங்களில் நமது நாட்டின் பங்களிப்பு குறைந்து வருகிறது என்று புலம்புவதில் அர்த்தமில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →