சூறையாடப்படும் சிறுமுதலீட்டாளர்கள்
""ருசியான ஈமு! காசு அள்ளித்தரும் ஈமு! ஒருமுறை முதலீடு! வாழ்நாள்
""ருசியான ஈமு! காசு அள்ளித்தரும் ஈமு! ஒருமுறை முதலீடு! வாழ்நாள் முழுவதும் வருமானம்! ஒப்பந்த அடிப்படையில் ஈமு பண்ணைகள் அமைத்துத் தரப்படும். இளைஞர்களே வாரீர்! சுயதொழில் முனைவோர்களே வாரீர்! சுயஉதவிக் குழுக்களே வாரீர்! ஒரு சில மாதங்களில் உங்கள் முதலீடுகள் இரண்டு மடங்காகும்...'' என்று கூவிக் கூவி அழைத்த ஈமு பண்ணைகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். இது மாதிரியான விளம்பரங்கள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வருடக்கணக்கில் வந்தவண்ணம் இருந்தன.
""தலா ஒன்றரை லட்சம் ரூபாய் குறைந்தபட்ச டெபாசிட்டாகச் செலுத்தினால் மாதாமாதம் ஊக்கத்தொகை, வருடாவருடம் போனஸ் தொகை வழங்கப்படும்; அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் ஈமு வளர்க்கப்பட்டு, முதலீடுகள் பல மடங்காகப் பெருகும்'' என்று கூறினார்கள்.
விளம்பரங்களை நம்பி ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, அப்பாவி மக்கள் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் "டெபாசிட்' செலுத்தினார்கள். ஆரம்பத்தில், ஓரிரு ஆண்டுகள் மாதந்தோறும் ஊக்கத்தொகை கிடைத்தது. அவ்வளவுதான்.
ஒவ்வொரு நிறுவனமும், பத்து கோடி, 20 கோடி என்று பணத்தை வசூல் செய்துகொண்டு, அந்த நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைமறைவாய் போய்விட்டனர். பணத்தை இழந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸில் புகார் செய்தனர்.
இந்நிறுவனங்களை நடத்தியவர்களில் பலரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸôர் கைது செய்துள்ளனர். மோசடி செய்தவர்களில் பலர் தலைமறைவாகிவிட்டனர். தேடும் படலம் தொடர்கிறது.
இதேபோல், வேறு சிலர் நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவனத்தை நடத்தி வந்தனர். ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ. 9,000 ஊக்கத்தொகை, ஆண்டுக்கு ரூ. 1,200 போனஸ் தொகையும் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் ரூ. 23 கோடிவரை முதலீடு செய்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊக்கத்தொகை வழங்காதபடியால், அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் இந் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இருவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸôர் கைது செய்தனர். பிறகு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
முதலீடு செய்தவர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளன.
ஈமு கோழிப்பண்ணை, நாட்டுக் கோழிப்பண்ணை போன்ற மோசடிகள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள முதல் மோசடியல்ல. 1990-களிலிருந்தே தேக்கு மர வளர்ப்புத் திட்டம், ""ஹாலிடே ரிசார்ட்' என்கிற விடுமுறை சுற்றுலா விடுதி திட்டம், ""24 சதவிகித வட்டி - தங்கக் காசு இனாம்'' டெபாசிட் திட்டம் எனப் பல கட்டங்களில் பல திட்டங்களின் பெயரில் போலி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றியிருக்கின்றன.
இத்தனைக்குப் பிறகும், இதுபோன்ற திட்டங்களைப் பார்த்து மக்கள் மயங்குகிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. அதேநேரம், இதுபோன்ற ஏமாற்று வேலையை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் மத்திய - மாநில அரசுகள் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கிடவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
இந்த நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்க்கும்போதே, இது நேர்மையான திட்டமோ அல்லது நடைமுறை சாத்தியமானதோ அல்ல என்பது தெரியவரும். ஒரு குறிப்பிட்ட தொகை வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால், இப்போதைய வட்டி நிலவரப்படி, எட்டரை ஆண்டுகள் ஆகும்.
உதாரணமாக, மத்திய அரசுத் திட்டமான கிசான் விகாஸ் பத்திரம் - 8 சதவிகித வட்டி - 103 மாதங்களில்தான் இரண்டு மடங்காகும். (சமீபத்தில் இத்திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது).
1990-களில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, நடந்துள்ள நல்ல விஷயம் ஒன்று உண்டு என்றால், அது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸ் முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான். ஆனால், இப்போதைய நடைமுறைகளின்படி, அவர்களுக்குப் புகார் வந்தபிறகுதான், விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கின்றனர். ஆனால், பொருளாதாரக் குற்றங்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் இப்போதுகூட இல்லை என்பதுதான் உண்மை.
இது ஒரு முதலீடு தொடர்புடைய விஷயம் என்பதால், இதில் பாரத ரிசர்வ் வங்கியின் அணுகுமுறை, நிலைப்பாடு என்ன? பொதுமக்களிடமிருந்து ஒரு வங்கி அல்லாத பைனான்ஸ் கம்பெனி (என்.பி.எஃப்.சி.) வைப்புத்தொகை (டெபாசிட்) திரட்ட வேண்டுமானால், அந்த நிறுவனம், பாரத ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்துகொண்டு, அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதான். அங்கீகாரம் பெறாத பைனான்ஸ் நிறுவனங்களைத் தடை செய்வதுடன் அவற்றின் பெயர்களைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுக்கிறது.
மேலே குறிப்பிட்ட மோசடி நிறுவனங்கள், தாங்கள் திரட்டும் பணத்தை வைப்புத்தொகை (டெபாசிட்கள்) என்று கூறாமல் "முன் பணம்' என்றும், வட்டி என்று கூறாமல் "ஊக்கத்தொகை' என்றும், "போனஸ் தொகை' என்றும் கூறுகின்றன. "ஒப்பந்த அடிப்படையில் ஈமு பண்ணை அமைத்தல்' என்று சுற்றி வளைத்துக் கூறுகின்றன. எனினும் அவர்களது நோக்கம், முதலீட்டாளர்களின் பணத்தைப் பறிப்பதுதான். எனவே, இவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்து, ஆரம்ப நிலையிலேயே குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு வழி காணப்பட வேண்டாமா? இதற்கு ரிசர்வ் வங்கியைவிட சிறந்த, தகுதி வாய்ந்த, ஆற்றல் மிக்க அமைப்பு வேறு எதுவாக இருக்க முடியும்?
இது ஒருபுறம் இருக்க, "கலெக்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்கீம்' என்கிற கூட்டு முதலீடு திட்டம் என்று ஒன்று உள்ளது. இது, பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திலான திட்டத்தில் முதலீடு செய்வதாகும். இந்த மாதிரி முதலீடு "செபி' (செக்யூரிடிஸ் எக்ஸ்சேஞ் போர்டு ஆஃப் இந்தியா)யின் அதிகார வரம்புக்கு உள்பட்டது.
ஹரியாணா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு மோசடி முதலீட்டுத் திட்டம் நல்லவேளையாக சமீபத்தில் "செபி'யின் கவனத்துக்கு தற்செயலாக வந்துள்ளது. தில்லியை அடுத்த குருகாம் நகரில் செயல்படும் "பீட்டல் லைவ் ஸ்டாக்' என்கிற கம்பெனி, ஆடு வளர்க்கும் திட்டத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது. ""சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால், ஒரு ஆடு கிடைக்கும்; அந்த ஆடு கம்பெனியால் வளர்க்கப்படும்; மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், முதலீட்டாளர் தந்த பணம் இரண்டு மடங்காகும். மேலும், ஒரு ஆடு வருடத்துக்கு நான்கு குட்டிகள் போடும்; அந்தக் குட்டிகள் வேறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும்; ஆக, முதல் ஆண்டிலேயே, முதலீடு நான்கு மடங்கு ஆகும். அடுத்தடுத்த ஆண்டுகளில், முதலீடு பல மடங்காகும். இதுதான் கம்பெனியின் விளம்பரங்களின் சாரம்.
அந்த நிறுவனத்துக்கும் அதன் நான்கு இயக்குநர்களுக்கும் "செபி' விளக்கம் கேட்டு "நோட்டீஸ்' அனுப்பியது. ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்த "நோட்டீஸ்' "செபி'க்குத் திரும்பிவந்துவிட்டது. இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸýம் திரும்பி வந்துவிட்டது.
மேற்கூறிய நோட்டீஸ்களை செபியின் தில்லி அலுவலகத்திலிருந்து நிறுவனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று செபி செய்தித்தாள்கள் மூலம் பொது விளம்பரம் தந்துள்ளது. 2012 நவம்பர் 10-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளத் தவறினால் நிறுவனத்தின் விளக்கம் பெறாமலேயே "எக்ஸ்பார்டி' நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட்டுள்ளது.
"செபி'யின் இந்தச் செயல்பாடு வரவேற்கத்தக்கது. அதேநேரம், ஏறக்குறைய இதேபோல் தமிழ்நாட்டில் நடந்துள்ள ஈமு பண்ணை, நாட்டுக் கோழிப்பண்ணை ஆகிய விவகாரங்கள் "செபி'யின் பார்வையிலிருந்து தப்பியது எப்படி?
வங்கித்துறை, வங்கிசாரா பைனான்ஸ் நிறுவனங்களையும் கண்காணிப்பதற்கு ரிசர்வ் வங்கி இருப்பதுபோல், பங்குச்சந்தை உள்ளிட்ட சில துறைகளைக் கண்காணிக்க செபி, காப்பீட்டுத்துறைக்கு ஐ.ஆர்.டி.ஏ. எனப் பல்வேறு உயர்நிலைக் கண்காணிப்பு அமைப்புகள் இயங்குகின்றன.
இதுதவிர, கள்ளப்பணம் குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்படும் கள்ளப்பணத்தைக் கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் வழிமுறைகள், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பற்று வரவு உள்ள கணக்குகள் பற்றி வங்கிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள், "பைனான்ஸ் இன்டெலிஜென்ஸ்' என்கிற பணம் தொடர்பான "துப்பறியும் சாம்புகள்' என எத்தனையோ வழிகள் இருக்கும்போது, வெளிப்படையாக, விளம்பரம் செய்து அப்பாவி சிறு முதலீட்டாளர்களைச் சூறையாடும் போலி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறிவது என்ன அவ்வளவு கடினமா? குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டி என்ன பயன்?