முகப்பு
கட்டுரைகள்

முப்பெரும் சவால்களைச் சமாளிப்போமா?

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள மூன்று பொருளாதாரச் செய்திகள்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள மூன்று பொருளாதாரச் செய்திகள் கவலைக்குரியவை. ஒன்று, செப்டம்பர் மாதத்துக்கான தொழிற்சாலைகள் உற்பத்தியில் கடும் சரிவு; இரண்டு, அக்டோபர் மாதத்தில் எகிறிய பணவீக்கம்; மூன்று, அதிகரித்துவரும் சர்வதேச வர்த்தக இடைவெளி. (வெளி வர்த்தகப் பற்று-வரவில் பாதகமான போக்கு).

  இந்த மூன்று வெவ்வேறு செய்திகளும் ஒரே நேரத்தில் வெளிவந்தன என்பது மட்டும் அல்லாமல், இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிதி ஆண்டின் இரண்டாவது 6 மாதங்களில் - அதாவது அக்டோபர் முதல் அடுத்த மார்ச் மாதம் வரையில் - பொருளாதாரம் மேம்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. தொழிற்சாலைகளின் உற்பத்தி வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது மிக சொற்பமான வளர்ச்சி. கடந்த ஆண்டு (2011-இல்) செப்டம்பர் மாதத்தில் இந்த வளர்ச்சி இருந்தது. சுரங்கத்துறை தவிர, நுகர்பொருள்கள் முதல் மூலதன தளவாடங்கள் வரை அனைத்துத் தொழில் பிரிவுகளிலும் உற்பத்தி வெகு சொற்பம்.

 இந்த வீழ்ச்சியைக் காரணம் காட்டிதான், எஃப்.ஐ.சி.சி.ஐ. (ஃபிக்கி) உள்ளிட்ட பல தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள், வங்கிக் கடன் வட்டியைக் குறைத்திட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை மன்றாடிக் கேட்டன. வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலாவது தொழிற்சாலை உற்பத்தி விறுவிறுப்பு அடையக்கூடும் என்பது அவர்களது வாதமாக இருந்தது. இந்த வாதத்துக்கு மத்திய நிதி அமைச்சரின் ஆசிகள் பரிபூரணமாக இருந்தது.

  ஆனால் ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டம் வேறுவிதமாக இருந்தது. ஏற்கெனவே, நுகர் பொருள்களின் விலைகள் சார்ந்த பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வட்டிவிகிதம் குறைக்கப்பட்டால், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்த கதையாகிவிடுமோ என்று அஞ்சிய ரிசர்வ் வங்கி, அந்த கோரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டது. ரிசர்வ் வங்கியின் எண்ண ஓட்டம் எந்த அளவு சரியாக இருந்துள்ளது என்பதை, பிறகு வெளியான புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன.

 சில்லறை விலைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 9.75 சதவீதமாக உயர்ந்தது. இதனையொட்டி விலைவாசி மீண்டும் அதிகரித்துவிட்டது. சமையல் எண்ணெய் விலை 17.92 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

 பருப்பு வகைகள் விலை 14.89 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, சர்க்கரை என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.

  உணவுப்பண்டங்கள் அல்லாத ஆடைகள், காலணிகள் போன்ற பொருள்களின் விலையும் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

 தொழிற்சாலை உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டுமானால் ரிசர்வ் வங்கி வட்டியைக்  குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

 பணவீக்கம் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் முந்தைய முடிவு சரி என்பதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள்.

 இது ஒருபுறம் இருக்க, மூன்றாவது சவால் சர்வதேச வர்த்தகத்தில், அளவுக்கு அதிகமாக துண்டு விழுந்திருப்பதுதான். முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் துண்டு விழுந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட, இறக்குமதி மதிப்பு 21 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

 ÷நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் 2012 வரையிலான 7 மாதங்களில், சர்வதேச வர்த்தகத்தில் விழுந்துள்ள துண்டு மதிப்பு 110 பில்லியன் டாலர் ஆகும். இதே போக்கு நீடித்தால், இந்த நிதி ஆண்டு இறுதியில் இடைவெளி 200 பில்லியன் டாலரைத் தொட்டுவிடக் கூடும். இது முன் எப்போதையும்விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

÷இதற்குக் காரணம் என்ன என்பதை தேடிச் செல்லத் தேவை இல்லை. வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது.

÷அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக, நமது ஏற்றுமதி சரிந்துள்ளது. பாரம்பரியமாக நமது ஏற்றுமதியில் பெரும்பகுதி அந்த நாடுகளுக்குத்தான் போய் கொண்டு இருந்தது. இப்போது ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளைப் போன்ற புதிய சந்தைகளை நமது ஏற்றுமதியாளர்கள் நாடிச் செல்கின்றனர். இதில் முழு வெற்றிபெற கால அவகாசம் தேவை.

÷ஏற்றுமதியைப் பொருத்தவரை, இன்னொரு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால், அது ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் லாபம் ஈட்டித் தரும். ஆனால், நடப்பு ஆண்டில் ஏற்றுமதியாளர்களுக்கு அந்தப் பலன் கிடைக்கவில்லை.

÷இறக்குமதி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது. பெட்ரோலியப் பொருள் பயன்பாட்டை நம்மால் குறைத்திட முடியாது. ஆனால், திடீரென்று தங்கத்தின் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்திருப்பதுதான் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. தங்கத்தின் விலை எட்டுகால் பாய்ச்சலில் அதிகரித்திருக்கும் அதே நேரம், தங்கத்தின் இறக்குமதி பதினாறு அடி பாய்ந்துள்ளது என்பதுதான் வினோதம்!

÷தங்கத்தின் விற்பனையை மட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசும் பாரத ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

÷உதாரணத்துக்கு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குகையில், தங்கத்தின் மதிப்பில் 60 சதவிகிதத்துக்கு மிகாமல் மட்டுமே கடன் கொடுக்கலாம் என சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

÷அண்மையில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி ஒரு கருத்தை வெளியிட்டார். அதாவது, ""மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்து, இந்திய தங்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அது நம் பொருளாதாரம் மேம்பட உதவும்...'' என்றார். தங்கத்தில் போடும் பணம், பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படாமல் முடக்கப்படுகிறது என்பதே அவர் பேச்சின் உட்கருத்து.

÷இந்நிலையில், ரிசர்வ் வங்கி நவம்பர் 19}ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின் மூலம், தங்கத்தை நகையாகவோ, காசுகளாகவோ, தங்க பிஸ்கட்களாகவோ வாங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது. அதேபோல், தங்க வியாபாரிகளுக்கு, அவசியமான அளவுக்கு மட்டும் செயல் மூலதனக் கடன்  கொடுக்கலாமே தவிர, அவர்களிடம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மீது கடன் வழங்கக் கூடாது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் ஊக பேரம் நடக்காமல் தடுப்பதும், தங்க இறக்குமதியை இயன்ற அளவு குறைப்பதுமே, ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் நோக்கம் என்பது தெளிவு.

÷சென்ற நிதி ஆண்டில் (2011-2012) இந்தியாவில் தங்க இறக்குமதியின் மதிப்பு 60 பில்லியன் டாலர் ஆகும். அதாவது 3 லட்சம் கோடி ரூபாய்.

÷இதுபோன்ற விதிமுறைகளால் தங்க இறக்குமதியைச் சிறிதளவு குறைக்க முடியுமே தவிர, பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம், மக்கள் தங்கள் குடும்ப கெüரவத்துக்காகவும், ஆபரண ஆசைக்காகவும், அவசரத் தேவைகளுக்கான பாதுகாப்பு அரணாகவும் தங்கத்தைப் பார்க்கிறார்கள்.

÷முக்கியமாக, நடுத்தர மக்களையும், சாதாரண மக்களையும் சேமிக்கத் தூண்டுவதே தங்கம் தான். எனவே, அவர்களைக் கவரக்கூடிய, தங்கத்துக்கு இணையான, அதே சமயம் எளிதான முதலீட்டுச் சாதனங்களை உருவாக்கினால் ஒழிய மக்களின் தங்க மோகத்தை குறைத்திட முடியாது. குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்கு நீண்டகால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தவிர, முதலீட்டு நிறுவனங்களும் இத் திசையில் முனைப்பு காட்ட வேண்டும்.

÷இந்தியா எப்போதுமே ஏற்றுமதி செய்வதைவிட இறக்குமதி செய்வதுதான் அதிகம் என்பது வரலாறு. தற்போதைய பதற்றத்துக்குக் காரணம் இரண்டு. ஒன்று எப்போதையும் விட கூடுதலாக துண்டு விழுந்துள்ளது. இரண்டாவது தங்க இறக்குமதி அதிகமாகவும், வளர்ச்சிக்கு உதவக்கூடிய கனரக மூலதன தளவாடங்களின் இறக்குமதி குறைந்தும் உள்ளது. இது தற்போது ஏற்பட்டுவரும் மந்த நிலைக்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது.

÷இந்நிலையில் பொருளாதார மந்த நிலை வலுவடையாமல் தடுப்பதற்கும், நிதிப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கடும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

  அண்மையில் அறிவிக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உடனடியாக வளர்ச்சிக்கு உதவும் என மத்திய அரசு மனப்பால் குடிக்கக் கூடாது.

÷அரசு நிர்வாகச் செலவுகள், வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்கள் உள்ளிட்ட செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் மேலும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு, வங்கிக் கடன் வட்டியில், சலுகை காட்ட வேண்டும்.

  உணவு, உரம், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியத் தொகை பயனாளிகளுக்கு முழுமையாகக் கிடைக்கும் வகையில், இடையே நேரும் கசிவை அடைத்திட வேண்டும்.   பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் பணமாக வழங்கும் திட்டம் விரைந்து பரவலாக்கப்பட வேண்டும்.

÷ஊழல் புகார்கள் மேலோங்கியுள்ள இக்கால கட்டத்தில், அதிகார வர்க்கத்தினர் கொள்கை முடிவுகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதும், தாமதிப்பதும் தகாது. இந்த நிலை சரி செய்யப்பட வேண்டும்.

÷ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை மட்டுமே தீர்வு ஆகாது. மத்திய அரசு தன் பங்குக்குச் செய்ய வேண்டியதைச் செய்தே தீர வேண்டும். செய்யுமா மத்திய அரசு?

முழு கட்டுரையைப் படிக்க →