மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யும்?
ஊடகங்களில் கடந்த சில மாதங்களாக, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகளவில் இடம் பிடித்தன. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர்.
ஊடகங்களில் கடந்த சில மாதங்களாக, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகளவில் இடம் பிடித்தன. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கிறது. அத்யாவசியப் பொருள்களின் விலை உடனடியாக உயர்கிறது. முதல் நாள் ரூ. 30-க்கு விற்ற அரிசி அடுத்த நாள் ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு ஒரு விலையில் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவில் 14 மணி நேர மின்வெட்டை அனுபவித்து வருகிறோம். இந்த மின் தடையினால் அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். மின்தடை எத்தனை மணி நேரம் என்று அறிவிப்பு செய்த நிலை மாறிவிட்டது. எத்தனை மணி நேரம் மின்சாரம் கிடைக்கும் என்ற அறிவிப்புதான் தேவைப்படுகிறது.
மின் தடையினால் உற்பத்தி இல்லை. தொழில் பாதிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மின்தடை மக்களை சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.
காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்தது ஒரு காரணம். பருவமழை பொய்த்ததால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்திருக்கிறது. நாளடைவில் மக்களிடம் மின்சாரப் பயன்பாடும் அதிகரித்த காரணத்தால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.
ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 2-ல் இருந்து 4 பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். வீட்டுக்கு வீடு கணினி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், அறைக்கு ஒரு டி.வி., மிக்சி, மின்சார அடுப்பு என மின்சாரத்தினால் பயன்படுத்தும் பொருள்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக மின்சாரத் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்து, உற்பத்தி குறைந்த காரணத்தாலும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள மின்னுற்பத்தி நிறுவனங்களின் இயந்திரங்கள் தங்களுடைய முழு ஆயுள்காலத்தைப் பூர்த்தி செய்துவிட்டதால் அடிக்கடி பழுதாகின்றன. எரிவாயுவை மூலப்பொருளாகக் கொண்ட மின்னுற்பத்தி நிலையங்களிலும் பழுதுகள் காணப்படுகின்றன. அனல் மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியின் கையிருப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
நீர் மின் நிலையங்களின் உற்பத்தியும் போதுமானதாக இல்லை. மேட்டூர் அணை மூடப்பட்டதால் அங்கிருந்து கிடைத்த மின்சாரம் குறைந்துவிட்டது. காற்று ஓய்ந்ததால் காற்றாலை மின்சார உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற மின்பாதை கிடைத்தபாடில்லை. பிரதமர் மன்மோகன் சிங் உடனே தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.
மின் வெட்டு காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. சிறு, குறு தொழில் செய்பவர்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயர்ந்துவிட்டது. வர்த்தகர்கள் மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் பயன்படுத்துவதால் அச் செலவுகளை அத்தியாவசியப் பொருள்களின் விலையில் சேர்க்கின்றனர்.
பருவமழை பொய்த்ததால் விவசாயம் இல்லை. உணவு உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக விளைபொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்ட சாதாரண அரிசி விலை தற்போது ரூ.30-ல் இருந்து ரூ. 32 வரை - அதற்கும் மேலும் கூட - விற்கப்படுகிறது. மின் வெட்டினால் ஜெராக்ஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களை குடிநீர்த் தட்டுப்பாடு கடுமையாகப் பாதித்துள்ளது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து ஆழ்துளை அடிபம்புகளில் தண்ணீர் கிடைப்பதில்லை. புயல் சின்னத்தால் பெய்த மழை பல மாவட்டங்களில் நீர்நிலைகளை நிறைத்திருந்தாலும் நிலத்தடி தண்ணீரை உயர்த்த இது போதுமானதல்ல.
தொழில் வாய்ப்பு குறைந்து வருமானத்தை இழந்து ஏழை, எளிய நடுத்தர மக்கள் தவிக்கின்றனர். இந்த நிலையில் இருந்து எப்படி மீளப் போகிறோம்? மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.