கட்டுரைகள்

படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...

இன்றைக்கு ஜனநாயகத்தின் ஆட்சி, நிர்வாகம், நீதி ஆகிய முத்துறைகளைத் தாண்டி நான்காவது தூணாக மாறிவிட்டது ஊடகத்துறை. ஊழல் செய்ததில் யார் "பெரியவர்' - நாட்டின் முதல் அமைச்சரா, மைய அரசின் அமைச்சரா? என்று ஊடகங

நெல்லை சு. முத்து

இன்றைக்கு ஜனநாயகத்தின் ஆட்சி, நிர்வாகம், நீதி ஆகிய முத்துறைகளைத் தாண்டி நான்காவது தூணாக மாறிவிட்டது ஊடகத்துறை.

ஊழல் செய்ததில் யார் "பெரியவர்' - நாட்டின் முதல் அமைச்சரா, மைய அரசின் அமைச்சரா? என்று ஊடகங்கள் தோறும் பட்டிமன்றங்கள். ஐம்பது வருடத்துக்கு முன்பு சிறுமியாய் இருந்தபோது பாரதத் தாய்க்கு குட்டைப் பாவாடை அணிந்து மகிழ்ந்தோம். இன்றைக்கும் அதே உடையை அணிவித்து ரசிக்கின்றன நம் தேசியக் கட்சிகள்.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆட்சியின் தவறுகளை மக்களிடம் "போட்டுக் கொடுத்த' மறு கட்சி ஆளும் மன்றத்தைக் கைப்பற்றிய சாகசம் கிடக்கட்டும். வந்தவர்களும் தொடர்ந்து அதையே "மெகா' அளவில் செய்ததுதான் தேசிய சாதனை. கேட்டால் "10 வருடத்துக்கு முந்தி அவங்க செய்ததைத்தான் செய்தோம்?' என்று அடிக்கடி வருகிற நியாயவாதம் வேறு.

பல்லின் துர்நாற்றத்தைப் போக்க விசேடப் பற்பசை உண்டாம். தில்லியில் "கோல்கேட்' என்றால் கவிச்சை வாடை!

நிலக்கரி 1.87, அலைக்கற்றை 1.76, விமானத்தளம் 1.63, பொதுச் சொத்து ("காமன்வெல்த்') விளையாட்டு என்று லட்சம் கோடிகளில் நாட்டுக்கு இழப்பாம். அறிக்கையில் உள்ளதை விட்டுவிட்டு சொன்னவரைக் குறி வைக்கிறார்கள். தணிக்கையில் பிழை என்று "நாட்டின் முதல்வரே' மறுக்கிறார். நாட்டுக்கு நஷ்டமே இல்லை என்று வாதாடுகிறார்களா?

அயல்நாட்டில் பதுக்கிவைத்த இந்தியர் பணத்தைக் கொண்டு வாருங்கள் என்று போராட்டம் நடத்தினார் ஒரு சமூக ஆர்வலர். நம்மவர்க்கு அங்கு பணக்கணக்கே இல்லையா? அதன் "மெய்ப்பொருள்' காண்பது அல்லவா அறிவு? அதைவிடுத்து, போராடுவோர் வருமானக் கணக்கில் புழுத்துளை இடுவதுதான் புலனாய்வு!

ஆட்சிமன்றத்தில் லஞ்சப் பணத்தை எடுத்துக் காட்டியவர் சொன்னதை யார் கேட்டார்கள்? சொன்னவர்தான் இன்று சிறையில்.

"சொன்னதை விடு, சொன்னவனைச் சுடு'. இந்தப் புது விதியை எந்த நாளும் காப்போம் என்று இன்றைய கட்சிகள் கங்கணம் கட்டித்திரிகின்றன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.சி.எஸ். இவற்றுக்கு நிகரான புதிய பட்டயப் படிப்பும் வரும்போல. "இந்தியன் ஏஜெண்ட் சர்வீஸ்', "இந்தியன் பினாமி சர்வீஸ்', "இந்தியன் கரப்ஷன் சர்வீஸ்'.

ஓர் ஊழியர் தினமும் அலுவலகத்துக்குத் தாமதமாகவே வருவார். ஆனாலும் மாலையில் சீக்கிரமாகவே பெட்டி, பேனாவுடன் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். ஒரு நாள் அதிகாரி அவரை நிறுத்தி விசாரித்தார். ""இன்றைக்கு ஒரு மணிநேரம் லேட்டாத்தானே வந்தீங்க'' என்றார். ஊழியரோ, ""அதுக்கு ஈடுகட்டத்தான் இப்போ ஒரு மணிநேரம் முன்னதாகவே புறப்படுகிறேன்'' என்றாரே பார்க்கலாம்.

அதே நிலைதான். கஜானாவில் பணம் எடுப்பார்கள். அதற்கு ஈடாகக் குத்தகைக்காரரிடமும் பணம் பறிக்கிறார்கள். இரட்டை லாபம்.

அரசு ஊழியரின் வருங்கால வைப்புநிதி "பி.எஃப்'. "பிராவிடண்ட் ஃபண்ட்'. கட்சிகளுக்கோ "பி.எஃப்' உண்டு. "பார்ட்டி ஃப்ண்ட்'. இந்த உண்டியலில்தான் தனியார் நிறுவனங்கள் "காணிக்கை' செலுத்துகிறார்கள். அனைத்துக் குத்தகைகளுக்கும் பிரதி உபகாரம். கும்பலில் பலரும் சொந்தக்கார "முதலை'கள். அதிலும், தொழில் அனுபவம், ஆரம்ப முதலீடு, உள்கட்டமைப்பு என்று ஒன்றுமே இல்லாமல் காகிதத்தில் கம்பெனி நடத்தும் கில்லாடிகள்.

அரசின் குத்தகைக் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வது கூட இல்லை. அடி மாட்டு விலைக்கு ஒப்பந்தத்தை "வாங்கி' விடுகிறார்கள்.

பின்னர், அந்த அரசு உத்தரவை விளம்பரம் ஆக்கினால் போதும். தங்களின் "பிறக்காத' கம்பெனிக்குப் பங்குகள் குவியும். முடிந்தால் குத்தகையை நிறைவேற்றுவதாகப் பாசாங்கு பண்ணலாம். இப்படியே அடுத்த தேர்தல் வரை "ஹாய்யாக' காலத்தை ஓட்டலாம். நீதிமன்ற வழக்கு என்று வந்தால் இன்னும் சௌகரியம். "ஆறு நாள் ஜெயில்', "ஆயுள் காலம் பெயில்'. அவ்வளவுதானே.

இப்போது எல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கிற கட்டணத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலாவது காரியம் நடக்குமோ என்கிற விவேகம் வந்துவிட்டது சிலருக்கு.

""இந்த மண்ணில், மண்ணுக்கு மேல் விண்ணில், மண்ணுக்குக் கீழ் பாதாளத்தில் உள்ள அனைத்துச் சக்திகளைவிட ஆத்ம சக்திக்குப் பலம் அதிகம்'' என்பார் டாக்டர் கலாம். அரசியலிலோ "தாய் மண்'ணின் மடியில் நிலக்கரி, கருங்கல் தொடங்கி புறம்போக்கு மனைகள், விண்ணில் அலைக்கற்றை என்று எதிலும் ஆளும் சக்திக்குப் பணம் அதிகம்.

நீண்ட நாள் நண்பருக்குச் சலுகை செய்வதும் ஊழல்தான். ஆங்கிலத்தில் இதற்குக் "குரோனியிசம்' என்பது பெயர். கிரேக்கத்தில் குரோனியஸ் என்றால் "நெடுநாள் நட்பு'.

அரசியலிலோ "கூடா நட்பு' என்று சொல்லிக்கொண்டே கூட்டணியில் ஒட்டுண்ணிகள் பல.

நெல்லை வட்டாரக் கிண்டல் கதை ஒன்று நாசூக்காகச் சொல்கிறேன். அனைத்தையும் மொத்தமாக எழுதினால் வம்பு. இந்தக் கதைக்கே தவறுதலாக சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடக்கூடும். சரி விஷயத்துக்கு வருவோம்.

உருளைக் கிழங்குப் பிரமுகர் ஒருவர், "சிங்கிடி' ஒருவரையும் கூடவே சம்பளத்துக்கு அழைத்துச் செல்வார். தனது செருப்பு துடைக்கவோ, எச்சில் சொம்பு தூக்கவோ அல்ல. உயிர்ப் பாதுகாப்புக்கும் அல்ல. அதைவிட முக்கியம். மானம் காப்பதற்குத்தான். அவருக்கு உடல் உபாதையால் அவ்வப்போது "பின்புறக் காற்று' சீறுவது செரிமான அறிவியல். கூட்டத்தில் அநாகரிகமாக நசுக்கிவிடுவார். சத்தம் பிறர்க்குக் கேட்டுவிட்டால், ""சீ, வெறுவாய்க்கு அலை மூதி, வந்தா தூரப் போக வேண்டியது தானேலேய். நாறப் பயலே, எல்லாருக்கு முன்னாலேயா'' என்று அடியாளிடம் போலிக் கோபம் காட்டித் தம் கரியமில வாயுவைக் காப்பாற்றிக் கொள்வார்.

அதே கதைதான் அரசியலும். மக்கள் மத்தியில் பெயர் "ரிப்பேர்' ஆகும்பட்சத்தில் வேறென்ன செய்ய? அதிகாரிகள் மீது பாவத்தைப் போட்டு தாங்கள் "ஞான ஸ்நானம்' பண்ணிப் புனிதர் ஆகிவிடுவார்கள். மத்திய மந்திரி, மாநில மந்திரியைக் குறை சொல்வார். கூட்டணியில் "தாய்'க் கட்சி, "தம்பி'க் கட்சியைத் தண்டிப்பதும் நடக்கும். சில நேரங்களில் காவல்துறைகூட புகார் கொடுத்தவர்களை மிரட்டுவதும் இதற்காகத்தான்.

தொலைக்காட்சித் துறையைப் பொருத்தமட்டில் வடக்கு வாழ்கிறது. தெற்கு உண்மையிலேயே தேய்கிறது. அவை நாட்டு நடப்புகளை நேரடியாக ஒளிபரப்புகின்றன.

அண்டை மாநிலத்தில் 3,000 விவசாயிகள் வறட்சியால் தற்கொலை. இந்த முகூர்த்தத்தில் 14 ஆட்சிமன்ற உறுப்பினர்கள் வறட்சி காரணத்தைத் தேடி தென் அமெரிக்கா பயணமாம்.

"இது வீண் செலவு அல்லவா?' என்று கேட்டால், "மும்பையில் தீவிரவாதப் படுகொலைகள் நடத்திய வெளிநாட்டு இளைஞனுக்காக 25 கோடி செலவு செய்கிறார்கள். எங்களுக்கு வெறும் 8 கோடி தானே?' என்று தர்க்கம் செய்கிறார் மாநில ஆளும் கட்சி உறுப்பினர். தேள் கொடுக்கு மீசை அவர் உதட்டில் மட்டுமல்ல, உள்ளத்திலும்தான்.

அவன் 160 இந்தியர்களைக் "கசாப்' செய்தான். அதே கணக்கில், இந்த உறுப்பினர்கள் 50 பேரைக் கொன்றதாக ஒத்துக் கொள்கிறார்களா? அதிலும் ஐஸ்லாந்து நாட்டில் நம் "அரசியல் சித்தர்கள்' என்ன படிக்கப் போய் இருக்கிறார்களோ?

அந்தப் படுகொலையாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது இருக்கட்டும். அந்தச் செய்திக்காக வடக்கே ஊடகங்கள் கண் இமைக்காமல் காத்துக் கிடக்கின்றன.

யார் தலையில் இடி விழுந்தால் என்ன? இங்கே மைத்துனியிடம் கொட்டைப் பாக்கு பற்றிப் பாடிப் பொழுது கழிக்கும் தமிழ் ஊடகங்கள் தொண்டு வாழ்க!

இசைத்தகடு வெளியீடு, குறுந்தாடிக் காதலர்கள், படப்பிடிப்பு பற்றிய பதவுரை, பொழிப்புரைகள், நடிகையர் பேட்டிகள், போட்டிகள், வெட்டி விழாக்கள், வசூல் விமர்சனங்கள் என எத்தனை எத்தனை சேவைகள்!

கிழவி ஆன இந்தி நடிகை திருமணம், தொப்பி வைத்த தொந்தி நடிகர் மறுமணம் எல்லாம் தேசியச் செய்திகள். இங்கே ஒரு நடிகை குழந்தை உண்டானாலும் சரி, உடல் குண்டானாலும் சரி, பரபரப்புச் செய்திகள். நாட்டுக்கு மிக முக்கியம் பாருங்கள்.

தாடி நாயகர்களோ கால், கை வீசி கரப்பான் பூச்சி மாதிரி ஆடுகிறார்கள். கதாநாயகி கிடைத்துவிட்டால், அவர்கள் பேய் ஆட்டம், பிசாசு ஆட்டம்தான். வேண்டுமானால், இன்றைய திரைப்படப் பாடல்களைச் சற்றே ஒலியை அணைத்துவிட்டு வெறும் காட்சிச் சலனங்களை மட்டும் பாருங்கள். அப்போது புரியும் நம் நடன சிகாமணிகளின் அங்க அசைவுகள் தரும் ஆயாசங்கள்.

அதிலும் நேயர்கள் நேரடி சினிமாப் பாட்டு கேட்கும் நிகழ்ச்சி படு சுவாரஸ்யம். "உங்க லவ் எப்படிப் போயிட்டு இருக்கு?' என்று கேட்கிறர் தொகுப்பாளினி; என்னவோ பன்னாட்டு நிறுவன வர்த்தகம் மாதிரி ஆக்கிவிட்டார்கள். இல்லை என்றால் நிலையத்தில் இருந்து பதிலுக்குக் காதலிக்க வேறு ஆள் அனுப்பி வைப்பார்களோ?

தமிழ் ஊடகத்தின் கள நிருபர்களுக்கோ நறுக்குத் தெறித்தார்போலப் பேச வரவில்லை. "ஆங்', "ஊங்' என்று பேச்சுக்கு இடையே எத்தனை பிரசவ முனகல்கள். "தமிழர் முன்னேற்றக் கழகங்கள்' உதயம் ஆகும் நாள் எந்நாளோ?

அரசியல் கட்சிகள் இடையே ஊழல், பொதுவுடைமை ஆகிவிட்டது. பணத்தின் அளவில்தான் மாறுபடுகின்றனவே அன்றி, குணத்தில் மாறிவிடவில்லை.

பாருங்களேன், மத்தியப் புலனாய்வு விசாரணை, உரிமங்கள் ரத்து எல்லாம் அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் நிறைவேறின. இன்றோ நிலக்கரி சமாசாரத்தில் அதே நடவடிக்கைகள் ஊடகங்களால் மக்கள் மன்றத்தின் நேரடிக் கண்காணிப்பினால் அரங்கேறி வருகின்றன.

நாடாளுமன்றத்துக்கு வெளியே ஜனநாயகத்தின் புதிய பரிமாணம் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT