"நினைவாற்றல் இழப்பு நோய்'
கேரளத்தில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே வளர்ந்து, மலையாளம், தமிழ் மற்றும் கொஞ்சம் ஆங்கிலம் இவை தவிர வேறு எந்த மொழியோ, எந்த உலகமோ அறியாமலேயே வாழ்ந்து 80 வயதைக் கடந்தவர் விஸ்வம். அவருடைய மனைவி 30 ஆண்டுகளுக
கேரளத்தில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே வளர்ந்து, மலையாளம், தமிழ் மற்றும் கொஞ்சம் ஆங்கிலம் இவை தவிர வேறு எந்த மொழியோ, எந்த உலகமோ அறியாமலேயே வாழ்ந்து 80 வயதைக் கடந்தவர் விஸ்வம்.
அவருடைய மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். தன்னுடைய ஒரே மகனோடு பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்த விஸ்வம், திடீரென்று ஒரு நாள் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார். நான்கு நாள்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் அவருடைய உடலை அவர் மகன் அடையாளம் கண்டுபிடித்தார். போலீஸ் விசாரணையில் தெரியவந்த செய்தி குடும்பத்தாரைத் திடுக்கிட வைத்தது.
ஆறு ஆண்டுகளாக நினைவாற்றல் இழப்பு நோயால் (அல்ஜீமர் நோயால்) பாதிக்கப்பட்டிருந்த விஸ்வத்தை அவருடைய மகனும், மருமகளும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் அவருடைய மகன் அலுவலகம் சென்றிருந்தபோது, மருமகள் சின்னஞ்சிறு குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில், வீட்டைவிட்டு வெளியே சென்றார் விஸ்வம். திரும்பி வர வழி தெரியாமல் தன்னுடைய அடையாளம் மற்றும் முகவரி எல்லாம் மறந்துவிட்ட நிலையில், எங்கெங்கோ சுற்றித்திரிந்துவிட்டு, 3 நாள்களுக்குப் பிறகு, ஒரு பூங்காவில் பட்டினியால் வாடி, உயிர் துறந்தார் விஸ்வம்.
முதல் நாள் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளுக்குப்போய் கதவைத்தட்டி தன் வீட்டைத் தேடும் முயற்சியில் விஸ்வம் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால், விஸ்வத்தின் மொழிப்பிரச்னை, நினைவாற்றல் இன்மை இவற்றின் காரணமாக அந்த வீட்டுக்காரர்கள் பலர் அவரை விரட்டிவிட்டனர். சிலர் அவர் பிச்சை கேட்பதாக எண்ணி, உணவளிக்க முன் வந்திருக்கிறார்கள்.
ஆனால், இலவசமாக இன்னொருவர் கொடுக்கும் உணவை ஏற்க மறுத்து, எங்கெங்கோ சுற்றித்திரிந்து, பசியால் வாடி, மனம்சோர்ந்து ஒரு பூங்காவில் படுத்துக்கிடந்து இறந்து போனார் அந்த 82 வயது பெரியவர். இது சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய தன்ராஜுக்கு வயது 49 தான். திடீரென மாரடைப்பால் இறந்துவிட்ட அவரது உடலை, ஒரு வாரம் கழித்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வந்து சேர்த்தார்கள்.
ஊரே திரண்டு ஓலமிட்ட நிலையில் தன்ராஜின் தாயார், 76 வயதுப் பெண்மணி மட்டும் கண் கலங்கவில்லை. பலருக்குக் காரணம் புரியவில்லை. சவப்பெட்டியின் அருகில் தன்ராஜின் தாயாரை அவரது தகப்பனார் அழைத்துக்கொண்டு வந்து காட்டினார். உடனே, தன்ராஜின் தாயார் கேட்டார் ""இது என்ன இது? எதற்காக இதை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்?''.
இதைக் கேட்டவர்களுடைய நெஞ்சமெல்லாம் வெடித்துச் சிதறியது. ஆனால், அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்ட அந்த அம்மையாருக்குத் தன்னுடைய மகனையோ, அவன் இறந்து போனதையோ நினைவில்கொண்டுவந்து நிறுத்திக்கொள்ள முடியவில்லை. இது 6 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கண்ட நிக(நெகி)ழ்ச்சி.
2009-ம் ஆண்டு பௌதிகத்துக்கான நோபல் பரிசு, பில்லார்டு போயில் என்கிற கனட - அமெரிக்கருக்கும், ஜார்ஜ் ஸ்மித் என்கிற அமெரிக்கருக்கும், சார்லஸ் கா குன் என்கிற சீனருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இழை ஒளியியல் துறையில் ஆய்வு நடத்தி, நீண்ட நெடுந்தூரத்துக்கு மெல்லிய இழைகள் மூலம் ஒளியைக் கொண்டு செல்ல முடியும் என்பதை உலகத்துக்கு உணர்த்திய கா குன்னை, ஹாங்காங் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அக்டோபர் 2009-ல் பேட்டி காணச் சென்றபோது, அவர் "தன்னை மறந்தவராக' இருந்தார்.
அவருடைய கண்டுபிடிப்பைப் பற்றியோ, தான் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றியோ அவருக்குக் கொஞ்சமும் நினைவில் இல்லை.
எனவே அவருடைய மனைவியோடு "ஸ்டாக் ஹோம்' நகரத்துக்குப் போய், டிசம்பர் 10-ம் நாள் நோபல் பரிசை வாங்கினார் கா குன்.
நோபல் வெற்றியாளர்கள் வழக்கமாக நிகழ்த்த வேண்டிய உரையை மட்டும் அவரால் நிகழ்த்த முடியவில்லை. அதற்குக் காரணம் நினைவாற்றல் இழப்பு நோய்.
நினைவாற்றல் இழப்பு நோய் (அல்ஜீமர் நோய்) வரமா? சாபமா?
""இரண்டு மனம் வேண்டும்; இறைவனிடம் கேட்டேன்; நினைத்து வாழ ஒன்று; மறந்து வாழ ஒன்று'' என்பது பாடல் வரிகளுக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம். ஆனால், இருப்பது ஒரு மனம். அது காலப்போக்கில் தன் நினைவாற்றலை இழக்கிறது என்பது நிஜம்.
1901-ம் ஆண்டில் "அலோய்ஸ் அல்ஜீமர்' என்கிற ஜெர்மானிய மனநல மருத்துவரால், அகஸ்தி டி என்கிற 50 வயதுப் பெண்மணியிடம்தான் முதன்முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதைக் கண்டறிந்த மனநல மருத்துவரின் பெயராலேயே இந்த நோய் இன்றளவும் அழைக்கப்படுகிறது.
இன்று உலகமெங்கிலும் 3.60 கோடி மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2050-ம் ஆண்டில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை 11.5 கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கிலும் சமீப காலமாக இந்த நோயைப்பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே தொடக்கக் காலத்திலேயே இந்த நோய்க்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்து, இந்த நோய் முற்றிவிடாமல் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றிய ஆராய்ச்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நோய் தீவிரம் அடையும்போது, இளம் வயதில் மிகப்பெரிய நினைவாற்றலைக் கொண்டிருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் மனிதன்கூட, தன்னுடைய உடையைத் தானே அணிந்து கொள்வது, குளிப்பது, கழிவறையை உபயோகப்படுத்துவது போன்ற மிகச் சாதாரணமான வேலைகளைக்கூட சரியாகச் செய்ய மறந்துபோய்விடக் கூடும்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ஒருவருடைய தாய், தன் புடவையைக் கையிலே எடுத்துக்கொண்டு அதை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் அப்படியே நின்றுகொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம், இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும் மறக்காமல் நினைவில் கொண்டிருப்பதையும் நாம் காணலாம்.
கடந்த 30 ஆண்டுகளாக எவ்வளவோ ஆராய்ச்சி செய்தும், இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணமோ அல்லது இதை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை முறையோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகமெங்கிலும் உள்ள மருத்துவர்கள் இந்த நோய்க்கான அறிகுறிகளை தொடக்க காலத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் மேற்கொண்டு ஏற்படும் "மனச்சீரழிவை' தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள்.
இந்த நோய் வருவதற்கான எச்சரிக்கை மணி கீழ்க்கண்டவாறு அடிக்கப்படுகிறது:
அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் மறதி.
சாதாரண சூழ்நிலைகளில்கூட திட்டமிட முடியாமலும், சாதாரண பிரச்னைகளைக்கூடத் தீர்க்க முடியாமலும் திணறுதல்.
வழக்கமான வேலைகளைக்கூட ஆற்றுவதில் சிரமம்.
நேரம், காலம் இவற்றைப் பற்றிய குழப்பம்.
பேசுவதிலும், எழுதுவதிலும் தயக்கம்.
வேலைகளிலிருந்தும், சமூக உறவுகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொள்ளுதல்.
-பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்ட நாடுகளில்கூட இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை நிர்வகிக்கும் சமூகச்செலவு கூடிக்கொண்டே போவதை எண்ணி மிரண்டு போயிருக்கிறார்கள்.
அன்பான சூழல், நல்ல கட்டமைப்புள்ள கூட்டுக்குடும்பத்தின் அரவணைப்பு இவை இந்நோயை மட்டுமல்லாமல், இதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்களையும் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பது மனநல மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
எனவே, குடும்பங்களைத் திண்மையுறச் செய்வதே உலக அல்ஜீமர் நாளாகிய இன்று (செப்டம்பர் 21) நாம் கொள்ள வேண்டிய சூளுரை ஆகும்.
அதனால்தான், "அல்ஜீமர் நோய் - இண்டர்நேஷனல்' நிறுவனம் இந்த ஆண்டு உலக அல்ஜீமர் தினத்துக்காக வழங்கியுள்ள கருத்துச் சொற்றொடர் -
""மனமற்றுப் போதல் - கூடிவாழ்தல்'' என்பதாகும்.
(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி)