இருளில் மூழ்கிவிட்ட "ஒளிக்கொள்கை'!
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரியவே இல்லை. "பவர்கட்' பழகிப்போன விஷயமாகிவிட்டது. இந்தியாவை நினைத்தால் "இருள் சூழுதே அப்பா, இனி எங்கு நான் செல்வேன், இல்லம் தூரத்தில் ஆச்சுதே..... அருள்ஜோதியே வழிகாட்ட
கட்டுரைகள்இருளில் மூழ்கிவிட்ட "ஒளிக்கொள்கை'!
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரியவே இல்லை. "பவர்கட்' பழகிப்போன விஷயமாகிவிட்டது. இந்தியாவை நினைத்தால் "இருள் சூழுதே அப்பா, இனி எங்கு நான் செல்வேன், இல்லம் தூரத்தில் ஆச்சுதே..... அருள்ஜோதியே வழிகாட்ட
ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரியவே இல்லை. "பவர்கட்' பழகிப்போன விஷயமாகிவிட்டது. இந்தியாவை நினைத்தால் "இருள் சூழுதே அப்பா, இனி எங்கு நான் செல்வேன், இல்லம் தூரத்தில் ஆச்சுதே..... அருள்ஜோதியே வழிகாட்டிடு, அழைத்துமே அப்பா சென்றிடு' என்ற அருட்பா நினைவுக்கு வருகிறது.
உருப்படியான ஒளிதரும் எரிசக்திக் கொள்கை வேண்டாமா? ஒளிசக்தியாகிய மின்சக்திக்கு எரிசக்தி வேண்டும். விரயமாகும் எரிசக்தியைத் தடுத்து நிறுத்தி எரிசக்தி சிக்கனம், எரிசக்திப் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் பேசப்படுகின்றனவே தவிர செயல்படுவதில்லை.
எரிசக்திப் பாதுகாப்பு இல்லாத நிலையை யோசிக்கும்போது பாதிநேரம் இருளில் மூழ்கி வரும் நிலை நாளை முக்கால் பகுதியோ முழுமையாகவோ நாம் இருளில் மூழ்கிவிடுவோம் என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
ஒளிசக்திக்கு அடிப்படையான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதி 2006-ல் ஜி.டி.பி. என்ற ஒட்டுமொத்த வருமான மதிப்பில் 8 சதவிகிதமாயிருந்த நிலை 2010 வரும்போது 10 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.
12-வது திட்டம் முடியும் வரை இந்த 10 சதவிகித நிலை நீடிக்கும். இப்படி நாம் செய்யும் எரிசக்தி மூலப்பொருள் செலவு ஏறத்தாழ ஆண்டுக்கு ஆறு லட்சம் கோடி ரூபாயை நாட்டின் அன்னியச் செலாவணி டாலர் வடிவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு வழங்கி வருகிறோம்.
ஒவ்வோராண்டும் இந்தச் செலவு மகாத்மா காந்தி ஊரக வேலைக்குறுதித்திட்டம் + கிராமிய வீட்டு வசதித்திட்டம் + கிராமியச் சாலை திட்டம் ஆகிய மூன்று திட்டச் செலவு மொத்தத்துக்கு நிகரானது.
ஆண்டுக்கு ஆண்டு நிதிப்பற்றாக்குறை - பணவீக்கம் மற்றும் அகண்டு சென்று கொண்டிருக்கும் அன்னியச் செலாவணி வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி மதிப்பு உயர்ந்து செல்கிறது. அதேசமயம் அனைத்துலகச் சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்து செல்கிறது.
12-வது திட்டம் முடியும் 2016-17-க்கு வரும்போது சராசரி டாலர் விலை ரூ. 60 என்று கணக்கிட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்த எரிசக்தி இறக்குமதிக்கு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி தேவைப்படும்.
ஒட்டுமொத்த தேச வருமான மதிப்பில் சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல் "எனர்ஜி' இறக்குமதிக்காகச் செலவு செய்யும் இந்தியா உலகத்தில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் கறுப்புப்பணப் பதுக்கல், ஸ்விஸ் வங்கி முதலீடு, பினாமி கொடுக்கல் வாங்கல், எனர்ஜி இறக்குமதி, மணல் கொள்ளை, கருங்கல் கொள்ளை, நிலக்கரி கொள்ளை இவற்றில் போட்டி வைத்தால் இந்தியா முதலிடம் பெற்றுத் தங்கம் குவிக்கும்.
எரிசக்தி சிக்கனம் இல்லாவிட்டால் இந்தியா இருளில் மூழ்கிவிடும். முதற்கண் போக்குவரத்திலிருந்து தொடங்குவோம். ஏனென்றால், எனர்ஜி இறக்குமதியில் 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் - பெட்ரோல் வகையறா. அதிக எனர்ஜி செலவுள்ள விமானம், கார் (தனியார் துறை) ஓங்கியும் குறைந்த செலவுள்ள பொதுத்துறை பஸ் போக்குவரத்து, ரயில்வே பயணம் குறைந்தும் வருகிறது.
எனர்ஜி செலவே இல்லாத சைக்கிள், காளை - குதிரை வண்டிப்பயன் குறைந்துவிட்டது. அன்று சைக்கிளில் அலுவலகம் சென்ற இன்றைய சீனியர் சிட்டிசன்களிடம் உள்ள ஆரோக்கியம், இன்று டூவீலர் பயணிகளிடம் இருப்பதில்லை. தொந்தி, தொப்பை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எல்லாம் 35 வயதுள்ளவர்களுக்கு வந்துவிடுகிறது. நோயற்ற வாழ்வுக்கு ஏற்ற நடைப்பயணம், சைக்கிள் பயணம், கட்டை வண்டி, குதிரை வண்டி, நாட்டுச்செக்கு எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு "தேசி' எனர்ஜியை இழந்துவிட்டதால் "அன்னிய' எனர்ஜி இறக்குமதியை நம்பி இந்தியர்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் தேவை.
இந்தியாவின் கிராமியச் சூழ்நிலை, புவியியல் சூழ்நிலை புறக்கணிக்கப்பட்டு கண்மூடித்தனமாக அமெரிக்க முன்மாதிரிகளைப் பின்பற்றும் இந்தியா தன்னையே இழந்து நிற்கிறது. அமெரிக்காவைப்போல் இந்தியாவில் ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. அமெரிக்காவில் உற்பத்தியாகும் அத்தனை கார்களும் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. அமெரிக்காவில் மக்கள்தொகை குறைவு. கிராமங்கள் அரிது.
இங்கு ஏராளமான கிராமங்கள், மக்கள் நெரிசல், கால்நடைகள், போக்குவரத்து விதிகள் தெரியாத ஓட்டுநர்கள். தினம் தினம் நூற்றுக்கணக்கான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர் பலிகள், மனிதர்கள், ஆடு மாடுகள், நாய்கள், கோழி, பூனை மரித்தவண்ணம் உள்ளன.
இதைவைத்து இன்சூரன்ஸ் கம்பெனிகள், நஷ்ட ஈடு பெற்றுத்தரும் வக்கீல்கள் பிழைப்பு நடத்துகின்றனர். இப்படிப்பட்ட நஷ்டம் ஒருபுறம். போக்குவரத்தில் பொதுத்துறை வளர்ச்சியுறாமல் நடுத்தர மக்கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக்கொள்ளும் அளவில் நம்மிடம் பெட்ரோலோ, டீசலோ மலிவாகக் கிடைக்குமா? இந்த விஷயத்தில் சிக்கனம் இருந்தால்தான் கணிசமாக எனர்ஜி இறக்குமதியைக் குறைக்க முடியும். ஆகவே, தனியார் கார் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் மாறி மாறி எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் "பவர் கட்' தொடர்கதையாகி விட்டது. மின் உற்பத்திக்கு நிலக்கரி தேவை. இன்றளவும் நிலக்கரியை எரித்து ஏற்படும் அனல் மூலம் பெறப்படும் மின்சாரமே அதிகப் பங்களிக்கிறது. காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம், அணு மின்சாரம் ஆகியவற்றின் பங்களிப்பு குறைவு. சூழலை அழித்து, மீன்வளத்தை அழித்து உருவாகும் கூடங்குளம் எல்லாம் நமது பகாசூரப் பசிக்குப் பற்றாது. மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. மின் சிக்கனமும் போற்றப்படுவதில்லை.
நாம் நம்பியுள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் உற்பத்தியே செய்யாமல் ஊழலில் சிக்கியுள்ளன. பற்றாக்குறைக்குப் பாதிநாள் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். மேல்மட்டத்தில் ஊழல். நிலக்கரி இறக்குமதியும் செய்யப்படுகிறது.
நம்முடைய நிலக்கரி வளத்தைப் பயன்படுத்தாமல் நிலக்கரியை இறக்குமதி செய்வதால் நாடு உருப்படுமா?
உள்ளூர் நிலக்கரி "எங்கோ' கடத்தப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியிலும் ஊழல். எரிசக்தியில் சிக்கனமோ, மாற்று எரிசக்திகளில் குறிப்பாக விறகு, அடுப்புக்கரி, சாண எரிவாயு, காளைகளின் "குதிரை சக்தி' ஆகியவை பற்றி சிந்திக்காத அரசு 2030 - 31 வரையிலும் நிலக்கரி, கச்சா எண்ணெய் இறக்குமதிகளைத் தொடர்ந்து நிகழ்த்தும்.
இந்த இறக்குமதிகளால் இந்தியாவே திவாலாவாகும் சூழ்நிலை தூரத்தில் இல்லை. சூழலுக்கு ஏற்ற மாற்று எரிசக்திகளில் காற்றாலை, சூரியசக்தி, கடல் அலை சக்தி ஆகியவற்றில் அதிக அளவு முன்னேற்றம் தேவை. சூழலுக்கும் மனித உயிர்களுக்கும், கடல் வளத்துக்கும் எமனாயுள்ள அணு மின்சாரம் மற்ற மரபுசாரா எரிசக்திகளைவிட அதிகச் செலவுள்ளது என்ற விஷயமும் மறைக்கப்படுகிறது.
இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் மூன்றாவது முறையாகத் தானே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்தில் தனது சுதந்திர தின உரையில், ""ஒளிமயமான எதிர்காலம்'' பற்றிப் பேசியுள்ளார். இந்தியாவில் இன்னமும் 25 சதவிகித மக்களுக்கு மின்சார ஒளிவிளக்குகள் இல்லையென்பதால் 100 சதவிகித மக்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என்று பேசியுள்ளார். நல்லவேளை செவ்வாய் கிரகத்திலிருந்து மின்சாரம் வரும் என்று சொல்லவில்லை.
எனினும் இறக்குமதி எரிசக்திப் பயனை கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் வாக்குறுதி நமது பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும். உதாரணமாக, கேஸ் அடுப்பு. கிராமங்களில் கேஸ் அடுப்பு வருவதற்கு முன் விறகு, கரி பயன்படுத்தினர்.
விறகு, கரி ஆகியவற்றின் பயன் வனப்பாதுகாப்புக்கு ஒரு பிரச்னையாகும் என்று கருதிய ஜவாஹர்லால் நேருவின் மந்திரி சபை சீமைக்கருவையின் பயனை உருவாக்கியது. 1876-ல் ராணுவ மேஜர் ஜெனரல் ஆர்,எஸ். பெட்டோம், பிரேசிலிருந்து சீமைக்கருவை (வேலிக்காத்தான்) விதைகளைத் தருவித்து ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளில் பயிரிட உதவினார். அது காடாக வளர்ந்து அந்த மக்களின் விறகுத் தேவையைச் செலவில்லாமல் நிறைவேற்றியது.
1954 - 58 காலகட்டத்தில் நேரு மந்திரிசபையில் எஸ்.கே. டே - சமுதாய நலத்திட்டத்தின் (இன்று ஊரக வளர்ச்சி) அமைச்சராயிருந்தார். அப்போது எம்.எஸ். சிவராமன் ஐ.சி.எஸ். வேளாண்மை மற்றும் சமுதாய நலத்திட்ட செயலராக இருந்தார். "நேரு - டே' யோசனையைச் சிரமேற்கொண்டு அவர் இந்தியா முழுவதும் சீமைக்கருவை வளரக் காரணமானார்.
முக்கியமாக ரயில்மூலம் இருப்புப்பாதை இருமருங்கிலும், நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் விதைகள் தூவப்பட்டன. நாளடைவில் போதும்போதும் என்று சொல்லும் அளவுக்கு வேலிக்கருவை ஆக்கிரமித்துக் கொண்டாலும் மக்கள் காடுகளுக்குச் சென்று விறகுவெட்டும் வழக்கத்துக்கு முற்றுப்பள்ளி வைத்தனர்.
இன்றளவும் இந்திய கிராமங்களில் சீமைக்கருவை விறகுத் தேவையை நிறைவு செய்வதுடன் பனை மரங்களையும் பாதுகாத்து வருகிறது. செங்கல் சூளைக்குப் பனைமரங்களை வெட்டாமல் வேலிக்கருவை மரங்களைப் பயன்படுத்துகின்றனர். அடுப்புக்கரி தயாரிப்புக்கும் பயன்படும் வேலிக்கருவைகூட இப்போது லாபம் தரும் பயிராகிவிட்டது. 1 டன் விறகு ரூ. 4,000 விற்கிறது.
எஸ்.கே. டே காலத்தில் சாண எரிவாயுத்திட்டம் போடப்பட்டது. சீனாவைப் பார்த்து நாம் கற்க வேண்டிய விஷயம் ஒன்று இருந்தால் அது சாண எரிவாயுப் பயனே.
சீன கிராமங்களில் எரிசக்திப் பாதுகாப்பு சாண எரிவாயுப் பயனால் நிறைவேறுகிறது. இந்திரா காந்தி மறைவுக்குப் பின் இந்தியாவில் இந்தத் திட்டம் காணாமல் போய்விட்டது.
இந்தியக் கால்நடைகளின் ஆற்றல் சுமார் 50,000 மெகாவாட். காளை, எருமை, குதிரை, ஒட்டகம், கோவேறு கழுதைகளின் பார வண்டிகள் மறைந்துவிட்டன. டிராக்டர்களின் மாற்றாக காளைகளைப் பூட்டி நவீன உழவு சாதனங்களை வெட்டுக்கலப்பை, சட்டிக்கலப்பை, உருட்டுக்கலப்பை ஓட்டலாம். மிதிவண்டிகளின் பயனை அதிகரிக்கலாம்.
அரிசி விலை உயர்வுக்கு "பவர் கட்' காரணமாக நெல் அரைவையில் மந்த நிலையும் காரணம். இதற்கு மாற்றாக உரல் உலக்கை, சக்கி, தெங்கி, குந்தாணி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கைக்குத்தல் அரிசி உற்பத்தி செய்யலாமே! நல்ல விலையும் கிடைக்கும். மகாத்மா காந்தி வேலைக்குறுதித் திட்டத்தில் கைக்குத்தல் அரிசி உற்பத்தியைச் சேர்த்தால் மின் செலவும் மிச்சமாகுமே!
தேசநலம் விரும்பும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் எரிசக்தி சிக்கனத்துக்கும் பாதுகாப்புக்கும் மரபுசாரா எரிசக்திப் பயன்களுடன், மகாத்மா காந்தி கற்றுக்கொடுத்த சாண எரிவாயுத் திட்டம், இயற்கை விவசாயம், கைக்குத்தல் அரிசி, கதர் உற்பத்தி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் ஒளி பிறக்காமல் இந்தியா இருளில் சூழ்வது இன்று இல்லையென்றாலும், நாளை உறுதியாகிவிடும்.