நிதித்துறை மேலாண்மை: மாற்றங்கள் தேவையா?
வங்கிகளைக் கண்காணிக்கவும், வழிநடத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இது 1935-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்களை
வங்கிகளைக் கண்காணிக்கவும், வழிநடத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. இது 1935-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்களை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும், "காப்பீட்டு நெறிமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்' (ஐ.ஆர்.டி.ஏ.) இருக்கிறது.
முதலீட்டுச்சந்தை, பங்குச்சந்தை ஆகியவற்றைக் கண்காணித்திட "செபி' செயல்படுகிறது. அதேபோல் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்க "ஓய்வூதிய ஆணையமும்', பண்டங்கள் (கமாடிட்டீஸ்) சந்தையை வழிநடத்துவதற்கு "பண்டங்கள் சந்தை ஆணையமும்' செயல்படுகின்றன.
இப்படி பல்வேறு அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் பதில், இவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்திட முடியுமா என ஆய்வு செய்து பரிந்துரைக்க, மத்திய அரசு நீதியரசர் பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்திருந்தது.
குழுவின் பரிந்துரைகள் அண்மையில் வெளிவந்துள்ளன. அதன் சாரம் இதுதான்:
வங்கிகளைக் கண்காணிப்பது, நிதிக்கொள்கை மற்றும் பணப்பட்டுவாடா (பேமெண்ட் சிஸ்டம்) ரிசர்வ் வங்கியிடம் தொடரும். ஆனால், அரசின் செலவுகளுக்குக் கடன் பத்திரங்கள் (பாண்டுகள்) மூலம் கடன் திரட்டும் பணி, ரிசர்வ் வங்கியிடமிருந்து, ""கடன் மேலாண்மை அலுவலகம்'' (டெட் மேனேஜ்மெண்ட் ஆபிஸ்'') என்கிற புதிய அமைப்புக்கு கைமாறும்! அதேபோல், ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் பணியும் வேறு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த நிதித்துறை அமைப்பு (யுனைட்டட் ஃபைனான்ஷியல் ரெகுலேட்டரி ஏஜென்சி) என்னும் புதிய அமைப்பு, "செபி'யின் பணியையும், ஐ.ஆர்.டி.ஏ. பொறுப்பையும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் செய்து வரும் பணியையும், "முன்பேர சந்தை' என்கிற பண்டங்கள் சந்தை ஆணையத்தின் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது பரிந்துரை.
தற்சமயம் "அன்னிய நேரடி முதலீடு' (எஃ.டி.ஐ.) தொடர்பான கொள்கையை வகுப்பது, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின் பொறுப்பாக உள்ளது.
அதேநேரம், அன்னிய நேரடி முதலீட்டுக்காக வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவது, அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியத்தின் கடமை. அப்படி அனுமதி அளிப்பதற்கு முன் மேற்கூறிய வாரியம், அமல்பிரிவு (என்ஃபோர்ஸ்மென்ட்) இயக்குநரகம், சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இப் பணிகளை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் பொறுப்பில்விட வேண்டும் என்கிறது குழு.
இதுதவிர, "முடிவுகள் (அமல்) கழகம்' (ரெஸல்யூஷன் கார்ப்பரேஷன்) என்கிற சட்டப்பூர்வமான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது குழுவின் மற்றொரு பரிந்துரை. நாட்டில் இயங்கும் முக்கியமான நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்து, முறைகேடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியக் கூடியவையாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் நிதி இழப்பு மிக அதிகமாவதற்கு முன், அதைத் தடுக்க முடியும் என்கிறது குழு.
மிக முக்கியமான பரிந்துரை, மத்திய நிதி அமைச்சர் தலைமையில் "நிதித்துறை மேம்பாட்டு மன்றம்' (ஃபைனான்ஷியல் செக்டார் டெவலப்மெண்ட் கவுன்சில்) அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். அனைத்து நிதி நெறிமுறை ஆணையங்களின் தலைவர்களும் இச் சபையில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஆக, குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படுமேயானால், ரிசர்வ் வங்கி, நிதித்துறை மேம்பாட்டு மன்றம் (எப்ஃ.எஸ்.டி.சி.), ஒருங்கிணைந்த நிதித்துறை அமைப்பு (யு.எஃப்.ஆர்.ஏ.), "கடன் மேலாண்மை அலுவலகம்' மற்றும் "முடிவுகள் (அமல்) கழகம்' (ஆர்.சி.) ஆகிய ஐந்து அமைப்புகள் செயல்படும்.
மேற்கூறிய பரிந்துரைகள் இப்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் முடிவு மேற்கொண்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இப் பரிந்துரைகளைப் பாராட்டி வரவேற்பவர்களும் உண்டு. அதேநேரம், இந்தியாவின் யதார்த்த நிலைமைகளுக்கு இவை ஏற்புடையவை அல்ல என்று சாடுபவர்களும் இருக்கிறார்கள்.
தற்போதுள்ளபடி, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும்போது, கடந்த காலங்களில், இரு ஆணையங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
உதாரணமாக, யூனிட்டுகள் தொடர்புடைய காப்பீட்டுத் திட்டங்களைச் (யூலிப்) செயல்படுத்துவதில், செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஐ. இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ""எது, யாருடைய பொறுப்பு?'' என்பதை நிர்ணயிப்பதில் சர்ச்சை எழுந்தது. காரணம், "யூலிப்' திட்டத்தில் அந்த இரண்டு அமைப்புகளுக்குமே தொடர்பு உள்ளது. முதலீடு என்ற வகையில், "செபி'க்கு அதிகாரம் இருக்கிறது. காப்பீடு என்ற வகையில் ஐ.ஆர்.டி.ஏ.க்கு அதிகாரம் இருக்கிறது.
மேற்கூறிய சர்ச்சை தீர்த்து வைக்கப்பட்டுவிட்டது என்றாலும், இதுபோன்ற குழப்பங்கள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் புதிய பரிந்துரைகளில் சில உதவக்கூடும். அதேபோல், அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு துறைகள் ஈடுபட்டுள்ளன. இதனை ஒருங்கிணைப்பதன் மூலம் கால விரயத்தைத் தவிர்க்கலாம். இதுவும் பரிசீலனைக்கு உரியதே.
அதேநேரம், "செபி', ஐ.ஆர்.டி.ஐ., ஓய்வூதிய நிதியம், பண்டங்கள் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் என பல ஆணையங்களின் செயல்பாடுகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறை சாத்தியமா என்பதை ஆழ்ந்து ஆய்வு செய்திட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, ஸ்ரீகிருஷ்ணா குழுவின் சில பரிந்துரைகள் நிச்சயமாகக் கடும் சர்ச்சைக்குரியவை. முக்கியமாக, ரிசர்வ் வங்கியின் சில பொறுப்புகளை புதிய அமைப்புகளிடம் ஒப்படைப்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. கடன்களுக்கான வட்டியை நிர்ணயிப்பது ஆண்டாண்டு காலமாக ரிசர்வ் வங்கியின் பணியாக இருந்து வந்துள்ளது.
இனி அது ஒரு புதிய ""நிதி மற்றும் வட்டி கொள்கைக் குழு''விடம் ஒப்படைக்கப்பட உள்ளது. குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கி கவர்னர் இருப்பார். உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அரசு வட்டி குறித்து ஒரு கொள்கை விளக்கம் அளிக்கும்.
இது அவ்வப்போது மாறும் தன்மை உடையது. வட்டி கொள்கைக் குழுவின் முடிவு வாக்கெடுப்பு மூலம் நிர்ணயிக்கப்படும். இத்தனைக்கும் பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னர், சில குறிப்பிட்ட சூழலில் வட்டி குழுவின் முடிவை நிராகரிக்கலாம். ஆனால், அதற்கு அவர் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்திட வேண்டும்.
அதேபோல், மத்திய அரசுக்குத் தேவையான நிதி ஆதாரத்துக்காக, கடன்களைத் திரட்டுவதும், கடன் பத்திரங்களை வினியோகிப்பதும் இதுவரை ரிசர்வ் வங்கியின் பொறுப்பாக இருந்தது. அந்த நடைமுறையை மாற்றி, அதற்கென ஒரு புதிய "கடன் மேலாண்மை அலுவலகத்தை' (டெட் மேனேஜ்மெண்ட் ஆபிஸ்) உருவாக்கி மேற்கூறிய பணியை அந்த அமைப்பிடம் விடுவது என்கிற பரிந்துரை ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
மூலதனம் தொடர்புடைய பணிகளிலும், பணப்பட்டுவாடா செய்வதையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்றும், வரவு சார்ந்த பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தில், ஒரு பாதியை ரிசர்வ் வங்கியும், மறுபாதியை மத்திய அரசும் செய்ய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன "தர்க்க நியாயம்' (லாஜிக்) இருக்கிறது?
மேற்கூறிய, ரிசர்வ் வங்கி தொடர்புடைய மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என்று நம்புவோமாக. கடந்த காலங்களில், ரிசர்வ் வங்கியின் எந்த ஒரு கொள்கையாலோ அல்லது செயல்பாட்டாலோ நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டதாக வரலாறு கிடையாது.
மாறாக, சர்வதேச அளவில் எப்போதெல்லாம், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதோ, அப்போதெல்லாம், இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய வங்கிகளையும் கட்டிக்காத்த பெருமை ரிசர்வ் வங்கியையே சாரும்.
ரிசர்வ் வங்கியின் முன்யோசனையுடன் கூடிய பாதுகாப்பு நிறைந்த நடைமுறைகள் மற்றும் கண்காணிப்பின் பயனாகவே, 2008-ஆம் ஆண்டில் நேர்ந்த சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சியின்போது, இந்திய வங்கிகள் பாதிக்கப்படாமல் தப்பின என்பதை ""நியூயார்க் டைம்ஸ்'' பத்திரிகை தனது 19-12-2008 இதழில் தெளிவாகக் கூறியுள்ளது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
எனவே, ரிசர்வ் வங்கியின் தற்போதைய பொறுப்புகளிலிருந்து எதையும் எடுத்து வேறு புதிய அமைப்புகளுக்கு வழங்குவது தேவையோ, நியாயமோ அல்ல!
கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர்.