சூரியனை மூடும் முகில் கூட்டம்
ஜவாஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்' 2010-இல் உருவானது. இது தடுமாறும் தட்பவெப்பத்தின் தடுப்பு அணையாகச் செயல்பட வேண்டுமென்றும், நிலக்கரி எரிமின்சாரம் தவிர்க்கப்பட்டு சூழலைக் காப்பாற்றும் சுத்த மின்சாரத்தை சூரிய வெப்பத்தால் பெற்றாக வேண்டும் என்ற நல்ல குறிக்கோளில் இந்தியா 2002-ஐ நெருங்கும்போது சூரிய மின்சக்தி 20,000 மெகா வாட்ஸ் அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது.
கட்டுரைகள்சூரியனை மூடும் முகில் கூட்டம்
ஜவாஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்' 2010-இல் உருவானது. இது தடுமாறும் தட்பவெப்பத்தின் தடுப்பு அணையாகச் செயல்பட வேண்டுமென்றும், நிலக்கரி எரிமின்சாரம் தவிர்க்கப்பட்டு சூழலைக் காப்பாற்றும் சுத்த மின்சாரத்தை சூரிய வெப்பத்தால் பெற்றாக வேண்டும் என்ற நல்ல குறிக்கோளில் இந்தியா 2002-ஐ நெருங்கும்போது சூரிய மின்சக்தி 20,000 மெகா வாட்ஸ் அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது.
ஜவாஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்' 2010-இல் உருவானது. இது தடுமாறும் தட்பவெப்பத்தின் தடுப்பு அணையாகச் செயல்பட வேண்டுமென்றும், நிலக்கரி எரிமின்சாரம் தவிர்க்கப்பட்டு சூழலைக் காப்பாற்றும் சுத்த மின்சாரத்தை சூரிய வெப்பத்தால் பெற்றாக வேண்டும் என்ற நல்ல குறிக்கோளில் இந்தியா 2002-ஐ நெருங்கும்போது சூரிய மின்சக்தி 20,000 மெகா வாட்ஸ் அளவில் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இதை மூன்று கால இடைவெளியாகப் பகுத்து முதல் காலம் 2010-2013-இல் 2,000 மெகா வாட்ஸ்.
இரண்டாவது காலம் 2014-2017-இல் 9,000 மெகாவாட்ஸ். மூன்றாவது காலம் முடிவில் 2022-இல் 20,000 மெகாவாட்ஸ் என்பது நல்ல பகுத்தறிவான - பகுதி பகுதியான திட்டமே. முதல் காலம் முடிந்துவிட்ட நிலையில் 1,000 மெகா வாட்ஸ் உற்பத்தி என்றாலும், "ஜே.என். சோலார் மிஷனில்' சேராத குஜராத் மாநில வழங்கல் 700 மெகா வாட்ஸ் கழிந்தால், சாதனை 300 மெகா வாட்ஸ் மட்டுமே.
இனி வருங்காலத்தில் சூரிய மின்சக்தி உயர்த்தப்படுமா, உற்பத்தி மெதுவாகவே ஊர்ந்து செல்லுமா என்று கேள்விகள் உண்டு. நல்ல செய்திகளும் உண்டு. கெட்ட செய்திகளும் உண்டு. இக்கெட்ட செய்திகளால் சூரியனைச் சுற்றிக் கார்மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தக் கார்மேகங்கள் கீழே கொட்டினால் காற்றாலைகளும் ஓடும். சூரிய மின்சக்தியும் கிட்டும். பெரிய பட்ஜெட் போட வேண்டியுள்ளது. மாநிலங்களின் மின்சார வாரியங்களில் படிந்துள்ள தூர்களைக் களைய வேண்டும். நிர்வாகச் சீர்கேடு கரிய வடிவமெடுத்து விலக்க முடியாத சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதே, சூரிய கிரகணம் நீங்க வேண்டுமே!
நல்ல செய்தி எதுவெனில் சூரியமின் சக்தி யூனிட் விலை வேகமாகக் குறைந்து வருவதுவே. நவம்பர் 2010-இல் ஃபோட்டோ வால்ட்டிக் சூரிய மின்சக்தி ஏலம் கேட்கப்பட்டபோது குறைந்தவிலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 10.85. டிசம்பர் 2011-இல் மேலும் குறைந்து ரூ. 7.49 ஆயிற்று. இப்படி சூரிய மின்சக்தி விலை குறைந்தாலும், அரசிடம் வாங்குவதற்குப் பணம் இல்லை என்பது நல்ல செய்தி அல்ல.
இரண்டாவது கெட்ட செய்தி - உள்ளூர்த் தொழில் நசிவு. இந்தியாவில் சோலார் மின்சாரத் தொழில் முனைவோர்களில் பெரும்பாலோர் தொழிலை நிறுத்திவிட்டனர். ஏராளமானவர்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். முக்கியமான காரணம், சீனத்து இறக்குமதியே; மலிவு விலையில் நலிந்த சீனத்துச் சரக்குகள் இந்தியாவில் குவிந்துவிட்டன. தேசிய சோலார் மிஷனின் குறிக்கோள் சூரிய மின்சக்தி உற்பத்தியில் உள்ளூர்த் தொழில்நுட்பத்தை வளர்ப்பதுதான்.
சீனத்து இறக்குமதியால் உள்ளூர்த் தொழில் நசிந்தது நல்ல செய்தி இல்லை. இதில் இன்னமும் மோசமான செய்தி எதுவெனில், தேசிய சோலார் மிஷனின் அறிவுரைகள் அல்லது நெறிமுறைகளின்படி நல்ல தரமான ஃபோட்டோ வால்ட்டிக் நிலை நிறுத்தல் கடைப்பிடிப்பை உள்ளூர் சோலார் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடித்து நஷ்டமானதுவே. சோலார் மின் உற்பத்தியில் இரண்டு வகையான தொழில்நுட்பங்கள் உண்டு. ஒன்று ஃபோட்டோ வால்ட்டிக் கிரிஸ்டலைன் சிலிக்கான். இது உறுதியானதாம்! இறக்குமதியாகும் சீனா / யு.எஸ். தொழில்நுட்பம் திறனற்ற மெலிந்த பிலிம் என்று கூறப்படுகிறது.
சூரிய மின்சக்தியின் உலகத் தேவையைக் கணக்கிட்டு இத்துறையில் முதலிடம்பெற ஏராளமான வரிச்சலுகைகளுடன் சீனா மளமளவென்று சோலார் மின்சாதன உற்பத்தியை உயர்த்தி ஏற்றுமதி செய்ததால் இந்தியாவில் மட்டுமல்ல; ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பி.வி. (ஃபோட்டோ வால்ட்டிக்) சோலார் சாதனங்களின் விலை வீழ்ச்சியுற்றுத் தொழிலும் பாதிப்புற்றது. 2008-லிருந்து 2011-க்கு வரும்போது சீனா, யு.எஸ். நாடுகளின் மெலிந்த சோலார் பிலிம் தொழில்நுட்ப உற்பத்தியால் பி.வி. சோலார் சாதனத் தொழில் உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சியுற்றது.
சோலார் மின் உற்பத்தி சாதனங்களில் சீனாவின் தரம் மோசமா, அமெரிக்க (யு.எஸ்.) தரம் மோசமா என்பதை எடை போட்டுப் பார்க்க முடியாது. எனினும், பி.வி. தொழில்நுட்பம் பழையதாகவும், மெலிந்த பிலிம் தொழில்நுட்பம் புதியதாகவும் கருத இடமுண்டு.
புதிய புதிய தொழில்நுட்ப வரவால் சோலார் மின் சாதன விலைகளின் வீழ்ச்சி உலகளாவியதாக உள்ளது. சீனாவின் ஏற்றுமதியால், மலிந்த சரக்கு ஒவ்வொரு நாட்டிலும் குப்பைக் குவியலானது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சுமார் 40 சோலார் நிறுவனங்கள் திவாலாகியுள்ளன.
அரசுக்கு மஞ்சள் காகிதம் (திவாலா அறிவிப்பு) வழங்கிவிட்டன. ஆகவே, ஐரோப்பாவும், அமெரிக்காவும் இறக்குமதிக் குப்பைக் குவியல் எதிர்ப்பு வரி (பன்மடங்கு இறக்குமதி வரி உயர்வு) போட்டதால் சீனாவிலும் சோலார் மின்சாதன உற்பத்தி குறைந்து பல நிறுவனங்கள் மூடப்பட்டாலும் இந்திய வழி திறந்துள்ளதால், சீனா சிறிது மூச்சு விடுகிறது. அமெரிக்கா நிர்பந்தம் செய்தால் இந்திய வழி மூடப்பட்டாலும் வியப்பில்லை. சோலார் மின் சாதன விலை வீழ்ச்சியின் பின்னணி இதுவே.
இருப்பினும் கூட இந்திய சோலார் கட்டமைப்பில் (கிரிட் வழித்தட இணைப்பு) சீன உறவில் உள்ள பிரச்னைகளைவிட அமெரிக்க உறவில்தான் பிரச்னைகள் உள்ளன. சோலார் மின் இணைப்பு இந்தியத் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கக் கடனில் முதல் பெற்று வாழ்கின்றன.
யு.எஸ். எக்ஸிம் வங்கி 6 சதவீத மலிவுக்கடனை இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதில் உள்ள முக்கிய நிபந்தனை அமெரிக்க சோலார் சாதனங்களைத்தான் வாங்க வேண்டும். இந்தியப் பொருள்களை வாங்க முடியாது. அமெரிக்காவுக்கு இரட்டை லாபம். தடுமாறும் தட்பவெப்பத் தடுப்பு நிதி என்ற சுத்த எரிசக்தி பணத்தையே கைப்பற்றி உள்ளூர் சோலார் மின்சக்தி சாதனத் தொழிலையும் வளர்த்துக் கொள்ளலாம். மூன்றாவது லாபம் சோலார் சாதன ஏற்றுமதி மூலம் அமெரிக்கா தங்களின் நிதி நெருக்கடியையும் தணித்துக் கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில் இந்திய நிலைப்பாடு என்ன? நம் கண்முன் மூன்று சவால்கள் தெரிகின்றன.
முதலாவது சவால், சோலார் மின்சாதனங்களின் விலை பாதாளத்தில் சரிந்தும்கூட சோலார் மின் நிலையங்களை அமைக்க நம்மிடம் பணம் இல்லை. கோடிக்கணக்கான இந்தியர்கள் இருட்டில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் இந்த இருளைப் போக்க நாம் எந்த "மாடல்' அல்லது எத்தகைய தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவது?
மூன்றாவதாக எப்படி இந்தியா சூழலுக்கு உகந்த தூய எரிசக்தியை (சோலார் எனர்ஜி) வழங்கி, உள்ளூர் சோலார் தொழில் நிறுவனங்களை வாழ வைத்து, மின் உற்பத்தியைப் பெருக்கும்?
புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சரகம் சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன உதவி செய்தல், இயந்திரங்கள், உதிரி பாகங்கள் போன்ற மூலதனப் பொருள்களுக்கு மானியம், பல கட்டங்களில் வரிச்சலுகை என்றெல்லாம் அறிவிப்புகள் உள்ளன. இப்படிப் பல்வேறு சலுகைகளைப் பெற்றும்கூட சோலார் மின்உற்பத்தி உயரவில்லை. சோலார் மின் உற்பத்திக்கேற்ப சலுகைகள் வழங்க வேண்டும் என்று பார்த்தால் அப்படி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு லாபகரமான விலை கிட்டுமா?
அனைத்துலக அங்காடியில் சோலார் மின் உற்பத்தி சாதனங்களின் விலை வீழ்ச்சியால் சோலார் மின்சாரம் யூனிட்டு விலை ரூ. 7 முதல் ரூ. 9 என்றால், டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் ரூ. 8 முதல் ரூ. 15 ஆகிறது. அடக்கவிலை குறைவுதான் என்றாலும் அரசு கிரிட்டுக்கு வழங்கக்கூடிய சோலார் மின்சாரத்திற்கு வாங்கும் விலை ரூ. 3 முதல் ரூ. 5 எனப்படுவதால், புத்தூக்கம் போதவில்லை.
புதிய, புதிப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறை மாநிலங்களுக்கு விற்கும் மின்சாரத்தில் ஒரு பகுதி சோலார் மின்சாரமாகப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகியவை வரவேற்றுத் தங்களுக்கென்று தனியான திட்டங்களையும் தீட்டியுள்ளன. மாநிலத் திட்டங்கள் எல்லாம் காகிதங்களில் கட்டுக்கட்டாக உள்ளன.
நிஜமான விஷயம் மரபுசாரா மின் சக்தியை வாங்குவதற்கு மாநில நிதி பற்றாது என்பதுடன் மாநில மின்துறைகளின் வாராக்கடன்கள் வங்கிகளை திவாலாக்கும் அளவில் உண்டு.
மாநில அரசு உத்தரவாதத்துடன் எதுவும் ஒரு சோலார் மின் நிறுவனம் வங்கிகளிடம் கடன் பெறச் சென்றால், ""போதுமடா சாமி'' என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கை விரித்துவிடுவதைக் கவனிக்கலாம். ""சோலார் மின்சார உற்பத்தியை உயர்த்தி கிரிட்டுக்கு விற்கும் அளவில் செயல்படும்போது தோன்றும் சிக்கல்கள் எவ்வளவு வந்தாலும் அவை தீர்க்கப்பட்டால்தான் நிரந்தரமான பரிகாரம் ஏற்படும்.
அதேசமயம், கிரிட்டுக்கு வழங்காமல் கிராமங்களில் கொண்டு செல்லப்படும் வீட்டுக்கூரைக் கட்டுமானத்தால் விளக்கை எரிய வைக்கலாம். அடுப்பை எரிய வைக்கலாம். மிஞ்சிப்போனால் சிறிய மின் விசிறியை இயங்க வைக்கலாம்.
சூரிய மின்சாரத்தின் வெற்றிக்கதைகள் சிறிய சிறிய கட்டுமானங்களில் மட்டுமே உண்டு. முயன்றால் ஒரு குதிரை சக்தி மோட்டாரை ஓட வைத்து கிணற்று நீர் - நிலத்தடி நீர் இறைக்கலாம்...'' என்றெல்லாம் இளக்காரமாகப் பேசப்பட்டாலும்கூட, நம்முடைய அண்டை மாநிலமான கர்நாடகத்தில் செயலாற்றும் "செல்கோ'வின் வெற்றிக்கதை தமிழ்நாட்டுக்கு வந்தால் நமக்கு நற்பயன் உண்டு. "செல்கோ' என்றால் சோலார் எலக்ட்ரிக் கம்பெனி என்ற தொண்டு நிறுவனத்தை ஹரிஷ் ஹண்டே என்ற பொறியியல் விஞ்ஞானி தோற்றுவித்துள்ளார். இவர் மகசேசே விருது பெற்றவர்.
இவர் கருத்துப்படி, நகரங்களில் 100 மெகாவாட் சூரிய மின்திட்டம் (கிரிட் தட இணைப்பு) செய்யக்கூடிய பணியைவிட ஒரு கிராமத்தில் 10 கிலோவாட் அல்லது 10 யூனிட் பாக்கேஜ் செய்யும் பணி மகத்தானது. கிராமத்தில் உள்ள மாணவமணிகளுக்குப் படிக்கும் நேரம் கூடுதலாகக் கிடைக்கும். கிரைண்டர் சுற்றலாம். கைவலி ஏற்படாமல் அடிபைப்பில் (ஹேண்ட் பம்ப்) நீர் இறைக்கலாம். பஞ்சாயத்து அலுவலகத்தில் "ஃபிரிட்ஜ்' வைத்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டு நனவாக்கிவரும் ஹண்டே திட்டம் சிறப்பானது.
ஹண்டே, கிராமங்களில் சோலார் விளக்குகளை விற்பதுடன், ஒருங்கிணைந்த சோலார் சேவை மையத்தை உருவாக்கிப் பகலில் சோலார் விளக்குக்கு "ரீ-சார்ஜ்' செய்து தருகிறார். கைப்பேசிக்கும் "ரீ-சார்ஜ்' செய்கிறார். இவருடைய பணி மையம் பல கிராமங்களில் உண்டு. சுமார் 1.50 லட்சம் வீடுகளுக்கு இவர் விளக்குகள் வழங்கியுள்ளார். லாபநோக்கில் இவர் செய்யும் சேவைகளுக்கு நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவசரத்திற்கு சோலார் விளக்குகளை வாடகைக்கும் தருகிறார். ஒரு கிராமத்தில் குடும்பத்திற்கு 200 ரூபாய் வரை (மாதம்) வசூல் வரும். 40 குடும்பமுள்ள கிராமத்திலிருந்து ரூ. 8,000 வரை சம்பாதிக்கிறார்.
"செல்கோ' சேவை மையம் 20 சதவீதம் முதல் வழங்கி, மீதி 80 சதவீதம் கடனுக்கும் ஏற்பாடு செய்து தருகிறதாம். கிராமத்தில் சோலார் பணி மையம் தொடங்க வேண்டுவதெல்லாம் ஒரு சோலார் பேனல், ஒரு பாட்டரிப் பெட்டி, அவ்வளவே.
இப்படிப்பட்ட "செல்கோ' நிறுவனங்களால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அனைத்துலக நிறுவனங்களுடன் கூட்டு வைத்து மில்லியன் பில்லியன் டாலர் முதலீடுகளுடன் இயங்கும் மாபெரும் நிறுவனங்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் நிறைய உண்டு.
குறிப்பாக சோலார் மின்சக்தி "கிரிட்' இணைப்பில் ஈடுபடும்போது மாநில அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பணி கடினமாகும். காலப்போக்கில் சூரியனைச் சுற்றியுள்ள கார்முகில் கூட்டம் விலகி, திக்கெல்லாம் ஒளிவீசும் என்று நம்புவோம். வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.