முகப்பு
கட்டுரைகள்

குறை கூறுபவர்களை வாழ்த்துங்கள்

உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல், வெற்றிக் களிப்பில் மிதத்தல், தோல்வியில் சுருண்டு விழுதல், பழிவாங்குதல், அடுத்தவர் மீது பழிபோடுதல், எதிலும் குறை காணுதல், சில சமயங்களில் பாராட்டுதல், பிறரை உற்சாகப்படுத்துதல், நம்பிக்கை ஊட்டும்படி பேசுதல் என பல குணங்களின் கலவையாக மனிதர்கள் உள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2013 at 2:30 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:50 PM

உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல், வெற்றிக் களிப்பில் மிதத்தல், தோல்வியில் சுருண்டு விழுதல், பழிவாங்குதல், அடுத்தவர் மீது பழிபோடுதல், எதிலும் குறை காணுதல், சில சமயங்களில் பாராட்டுதல், பிறரை உற்சாகப்படுத்துதல், நம்பிக்கை ஊட்டும்படி பேசுதல் என பல குணங்களின் கலவையாக மனிதர்கள் உள்ளனர்.

இந்த குணங்களை எந்த நேரத்தில் வெளிப்படுத்துகிறார்களோ அதற்கு ஏற்றார்போல மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

எந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என சுய கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களை வெற்றிகரமான மனிதர் எனக் கூறலாம்.

Advertisement

எனினும், இதுபோன்ற குணங்களை மனிதன் வெளிக்காட்டாமல் இருந்தால், மனதளவில் பல பாதிப்புகள் வரும் என மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் நீங்கள் ஏதாவது குறைகூறிக் கொண்டே இருந்தால், "என்னடா இந்த மனுஷன், எப்போது பார்த்தாலும் ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறார்' என சக ஊழியர்களும், வீட்டில் உள்ளவர்களும் நினைப்பதுண்டு.

கத்தியைக் கூர்மையாக்க தீட்டுவதுபோல, மனிதனை சீரமைக்க, குறை கூறுவது அவசியமாகிறது என்ற முதுமொழியை நினைத்துக் கொள்ளுங்கள், சகித்துக் கொண்டுவிடலாம்.

வீட்டில் மனைவியிடம், "இன்று சமையல் சுமார்தான்' எனக் கணவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். சாதாரணமாக மனைவிக்குக் கோபம் வரும். இதனை சற்று மாற்றி யோசியுங்கள். கணவரானவர், வேறு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் சமையல் நன்றாக இல்லாவிட்டாலும், "சூப்பர்' எனத்தான் கூறுவார். ஏனெனில், விருந்துக்குச் சென்ற வீடு வேறு வீடு. அவர்கள் மனம் புண்படக் கூடாது.

அந்த வீட்டில் உரிமை எடுத்துக் கொள்ள இயலாது. ஆனால், மனைவியிடம் உண்மையைக் கூற கணவருக்கு முழு உரிமை உள்ளது.

இதனால் சமையலை மேலும் கவனமாகச் செய்ய இயலும்.

நமது குழந்தையை நாம் அடிக்கலாம். தவறு செய்தாலும் பக்கத்து வீட்டுக் குழந்தையை நாம் அடிக்க முடியாது. நமது குழந்தையிடம் நமக்கு உரிமை உள்ளது. அடுத்த வீட்டுக் குழந்தையிடம் நமக்கு உரிமை இல்லை. அதுபோல, கணவர் நம்மைக் குறைகூற உரிமை உள்ளவர் என மனைவி எண்ண வேண்டும். இப்படி புரிந்துகொண்டு வாழ்ந்தால் குடும்பத்தில் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

ஒரு சிலர் நாம் வகிக்கும் பதவிக்காகவோ, நம்மால் நடக்க வேண்டிய காரியத்துக்காகவோ காரணமின்றிக்கூட புகழ்வார்கள்; அந்தப் புகழ்ச்சியெல்லாம் மயிலிறகால் வருடுவது போலத்தான் இருக்கும்.

அதே சமயம் நம்முடைய நலனில் அக்கறை உள்ளவர்கள் நாம் செய்யும் தவறுகளைத் தயக்கம் இல்லாமல் முகத்துக்கு நேராகச் சுட்டிக்காட்டுவார்கள். அது கல்லால் அடிப்பது போல வலிக்கும். அதற்காக அவர்கள் மீது கோபப்படுவதும் அவர்களுக்குத் தீங்கு செய்ய நினைப்பதும் நமக்கே தீமையாக முடியும்.

""சிரிக்கச் சிரிக்சச் சொல்வார் அயல் மனிதர், அழ அழச் சொல்வார் நம் மனிதர்'' என்பது மூதுரை. மருந்து கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரும். இதை வாழ்க்கையில் மறக்கக்கூடாது.

நாம் செய்வது சரியில்லை என்பதை ஒருவர் சுட்டிக்காட்டினால் அது நம்மீது கொண்டிருக்கும் அக்கறையால் என்று கருதி தவறைத் திருத்திக்கொண்டால் அது நமக்குத்தான் நன்மை.

"வாழ்க வசவாளர்கள்' என்றார் அண்ணா. அது அவருடைய கனிந்த அரசியல் அனுபவத்தால் வந்த பக்குவம். திட்டுகிறவர்கள் யார் என்று பார்க்காமல் திட்டுவதில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பதே முக்கியம். எனவே உங்களைப் பார்த்து குறை கூறுபவர்களை மனதுக்குள் வாழ்த்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.