முகப்பு
கட்டுரைகள்

இந்திய "எழுச்சி'யின் பற்றாக்குறை

மறைமூர்த்தி கண்ணா, மனமோகனா, குறை நிறைய உள்ளதப்பா, மலையப்பா, கோவிந்தா என்று நீ, நிதிப்பற்றாக்குறையை நீக்குவாய்?

கட்டுரைகள்

இந்திய "எழுச்சி'யின் பற்றாக்குறை

மறைமூர்த்தி கண்ணா, மனமோகனா, குறை நிறைய உள்ளதப்பா, மலையப்பா, கோவிந்தா என்று நீ, நிதிப்பற்றாக்குறையை நீக்குவாய்?

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:31 AM
பகிர்:

மறைமூர்த்தி கண்ணா, மனமோகனா, குறை நிறைய உள்ளதப்பா, மலையப்பா, கோவிந்தா என்று நீ, நிதிப்பற்றாக்குறையை நீக்குவாய்? இந்தியாவை ஆளும் மனமோகனனும் சிதம்பரமும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் உள்ளிட்ட தலைவர்களும் திருவாய் மலரும் போதெல்லாம் - இன்றல்ல நேற்றல்ல, "2003-ஆம் ஆண்டு நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டம்' கொண்டு வந்த நாளிலிருந்து - பற்றாக்குறையை ஒழிப்பதுதான் எங்கள் இலக்கு - என்ற வாக்குறுதியை ஆண்டுதோறும் நினைவுபடுத்துவார்கள்.

 ஆண்டுதோறும் காந்தி, நேரு, இந்திரா காந்தி சமாதிகளுக்கு மலரஞ்சலி செலுத்துவதுபோல், பற்றாக்குறை நீக்கும் 2003-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கும் நினைவாஞ்சலி செலுத்திவிட்ட சூட்டோடு பற்றாக்குறையை உயர்த்தவே பாடுபடுகிறார்கள்.

÷பற்றாக்குறையை மூன்று விதமாகத் தரம் பிரிக்கலாம். முதலாவதாக வருவாய்ப் பற்றாக்குறை. வருமான வரி, கலால் வரி, சுங்க வரி ஏய்ப்புகள் நாகரிகமாக "வருவாய்ப் பற்றாக்குறை' எனப்படுகிறது. வரிச் சலுகை வழங்கியும் பற்றாக்குறை உயரலாம்.

 2003-இலிருந்து 2007 வரையில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 3.5 சதவீதமாயிருந்த வருவாய்ப் பற்றாக்குறை, படிப்படியாக உயர்ந்து 2010-11-இல் 5 சதவீதமாகி 2011-12-இல் பழைய நிலையில் அதாவது 3.5 சதவீதமாகக் குறைந்தாலும் பற்றாக்குறை நிலைத்துவிட்டது.

÷இரண்டாவதாக பற்றாக்குறை பட்ஜெட் (அ) நிதிப் பற்றாக்குறை. இந்தப் பற்றாக்குறை 2003-04-இல் 4.6 சதவீதம். 2011-12-இல் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 5.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

  மூன்றாவதாக பொதுநலச் செலவுப் பற்றாக்குறை (பிரைமரி டெஃபிசிட்), பூஜ்ஜியமாயிருந்த நிலை மாறி மேலே மேலே உயர்ந்து 2011-12-இல் 3.5 சதவீதமாயுள்ளது. ஜி.டி.ப்பியில் 3.5சதவீதம், 5.3 சதவீதம் என்று பேசப்படும்போது அவை வெறும் 4 ரூபாய் 5 ரூபாய் என்று அர்த்தமல்ல. எல்லாம் "ட்ரில்லியன் டாலர்' பட்ஜெட்டின் பற்றாக்குறை சதவீதங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ரூபாயில் குறிப்பிட வேண்டுமானால் ஒன்று போட்டு 13 முதல் 14 வரை பூஜ்ஜியங்கள் போடலாம்! "தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?' என்ற நிலைதான். பற்றாக்குறை உயர்ந்து கொண்டே சென்றால் முதலீடுகள் குறையும்.

÷உலகப் பொருளாதாரச் சூழ்நிலையிலும் பற்றாக்குறையின் அளவு தலைக்கு மேல் போகும் வெள்ளமே. உலக நிதி நிலவரமே அவ்வாறு உள்ளபோது, நிதிப் பற்றாக்குறை,  வளர்ச்சிப் பொருளாதாரத்தின் சாபக் கேடு. இதன் விளைவாகப் பொதுக் கடனில் நிலைத்த தன்மையைப் பெற முடியாமல் முதலீடுகள் ஓட்டமெடுக்கின்றன. "சென்செக்ஸ்' சதிராட்டம் போடுகின்றன. ஜி.டி.பி. உயர மறுக்கின்றன. முதலீடுகளாகப் பொதுக்கடன் மாறாமல் கைக்குக் கைமாறும் பணமாகிக் கருப்பாகவும் பதுங்கி விடுகிறது.

÷நிதிநிலை அறிக்கையின் கூற்றுப்படி 2012-13-இல் இந்தியப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 5.1 சதவீதமாகக் குறையும் என்ற நிலைகூட பகல் கனவுதான். இரவுக் கனவு மட்டும் நிஜமாகுமா என்ன? இரவுக் கனவு என்பது இலக்கு. பகல் கனவு என்பது நிறைவேற்ற முடியாத நிலை. 2007-08 ஆண்டுக்குரிய நிதிப் பற்றாக்குறை இலக்கு ஜி.டி.பி.யில் 3% என்ற இரவுக் கனவு நிறைவேறியதா?

 2012-13-க்கு 5.1 சதவீதம் என்ற பகல் கனவுதான் மிச்சம். மீண்டும் இரவுக் கனவாக 12-வது ஐந்தாண்டுத் திட்டம் முடிவுறும் 2017-18-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக நிர்ணயமாகியுள்ளது. பற்றாக்குறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்ற இலக்கு குறி தப்பிவிட்டதே அரசின் தவறு.

   வளர்ச்சிக்குக் குறி இலக்கு வைப்பது சரி. ஆனால் தளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் குறி இலக்கு வைப்பது எப்படி சரியாகும்? இதிலிருந்து இந்திய நிதி நிலவரம் அந்த அளவில் வீழ்ந்து விட்டதை விளங்கிக் கொள்ள உதவும்.

 உண்மையில் வீழ்ச்சிக்குறிய குறி இலக்கான 5.1 சதவீதம் என்ற நிதிப் பற்றாக்குறை குறைந்த மதிப்பீடுதான் என்று விளங்கிக் கொள்ள பட்ஜெட் பற்றாக்குறைக்கும் நிஜமான பற்றாக்குறைக்கும் உள்ள ""வித்தியாச வளர்ச்சி'' பற்றிய புள்ளிவிவரம் வழங்கப்பட்டுள்ளது.

÷2010-11-ம் ஆண்டில் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள பற்றாக்குறையை விட 48.9 சதவீதம் கூடியுள்ளது. 2011-12-ஆம் ஆண்டில் இந்த வித்தியாசம் 85.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 அதாவது பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை என்றால் வரவு-செலவு முடித்த பின்பு கவனித்தால் பற்றாக்குறை 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் 85.6 ஆயிரம் கோடிக்கு உயர்ந்தால் அந்த அளவுக்கு ரிசர்வு வங்கி நோட்டு அடித்து வழங்கியிருக்கும். 2012-13 நிலை (ஏப்ரல் - நவம்பர்) வரை 80.4 சதவீதம் வித்தியாசம் வளர்ந்துள்ளது. அரசு என்ன சொல்லும் என்றால் நமது வீழ்ச்சி 5.2 சதவீதம் குறைந்துவிட்டதாகக் குழப்பும்.

 பற்றாக்குறைக் கணக்கைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 80.4 சதவீதம் பற்றாக்குறை வளர்ந்தது ஏன்? பற்றாக்குறையை அரசு வருவாய் மூலம் குறைத்துள்ளதா என்ற கேள்விதான் முக்கியம்.

÷அரசு வரவு-செலவுப் புள்ளிவிவரத்தை கவனித்தால், ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களை ஒப்பிட்டால் 2010-11இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 69.3 சதவீதமே வரவு வசூல். செலவும் 62.3 சதவீதம்.

 2012-இல் வரவு 48.2 சதவீதமாகவும் 2012-13}இல் வரவு மேலும் குறைந்து 46.5 சதவீதமே. ஆனால் செலவு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 60.5 சதவீதமும் (2011-12) 58.2 சதவீதமும் (2012-13) உயர்ந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குப்படி வருவாய் ஏன் குறைந்தது?

÷அரசு வருவாயில் இரண்டு பிரிவு உண்டு. வரிகள் மூலம் வரவு மற்றும் வரியில்லாத வரவு ஒரு பிரிவு. கடன் தவிர்த்த முதலீட்டு வரவு இரண்டாவது பிரிவு. முதல் பிரிவில் அடங்கும் வரவு 2010-11-இல் 69.9 சதவீதமாயிருந்து 47.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதலீட்டு வரவு 2010-11-இல் 60.8 சதவீதம் என்ற நிலை 2012-13}இல் 21.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதலீட்டு வரவு என்பது பொதுத் துறைப் பங்குகளை விற்றுப் பெறுவது.

÷ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரிவிதிப்பின் மூலம் வருவாயைப் பெருக்கும் என்று கருதுவதற்கில்லை. வரிவிதித்தால் தனியார் முதலீடுகள் குறையும் என்ற அச்சம் உள்ளது.

 அதே சமயம் முதலீட்டு வரவும் எட்டாக் கனவாகிவிட்டது. பொதுப் பங்கு விற்பனை மூலம் 30,000 கோடி ரூபாய் திரட்ட எண்ணியதும் குறிதவறிவிட்டது.

÷வருவாயை உயர்த்த உச்ச நீதிமன்றம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் வழிகாட்டியுள்ளது. ராஜா வழங்கிய உரிமங்கள் எல்லாமே ரத்தாகிவிட்ட சூழ்நிலையில் புதிய உரிமம் வழங்கி வருவாயை உயர்த்தலாம்.

 ஆனால் அரசியலில் மீண்டும் லஞ்சம் பிரவேசித்து மிகக் குறைந்த விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரவேண்டிய வருவாயை வரவேற்காமல் தேசத்தின் சொத்தை விற்றுத்தான் பற்றாக்குறையைக் குறைக்க முற்பட்டுவிட்ட நிதியமைச்சரின் தேசபக்திக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பச்சைக் கொடி காட்டுவது வியப்பல்லவே.

 தேசத்தின் வெள்ளிச் சேமிப்பை விற்க வெள்ளிக்கு "பாலிஷ்' போடுகிறார்கள். பொதுத் துறைப் பங்குகளை விற்றும் பற்றாக்குறை நீங்காவிட்டால் ரயில்வே, விமானத் துறை, கப்பல் துறை வனத் துறைக்குச் சொந்தமான மனைக்கட்டு நிலங்களையும் விற்கலாம் என்ற கேல்கர் கமிட்டியின் யோசனை ஏற்கப்படலாம்.

÷"பற்றாக்குறை இந்தியாவை' நாம் எப்படிப் பார்க்கிறோம்? இந்தியாவை "ஏழை நாடு' என்று சொல்லிக் கொள்ள கம்யூனிஸ்டுகள் விரும்பலாம். இல்லை இந்தியா ஒரு "நடுத்தர மக்கள் நாடு' என்று பாரதிய ஜனதா கருதலாம். "வளரும் நாடு' என்று நிபுணர்கள் கூறலாம்.

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி மட்டும் ""வளர்ச்சியுறும் நாடு'', ""எழுச்சியுறும் நாடு'' என்று கூறலாம். வளர்ச்சியுறவும் எழுச்சியுறவும் அன்னிய முதலீடு பெற்று அரசுச் சொத்தை விற்பதுதான் வழி என்றால், எழுச்சிக்கு என்ன பொருள் என்று புரியவில்லை.  வாழ்க பாரதம்.

முழு கட்டுரையைப் படிக்க →