முகப்பு
கட்டுரைகள்

பாடப்புத்தகம் வேறு; பட்ஜெட் வேறு...

இந்தியாவில் பணக்காரர், பரம ஏழை; தொழில் அதிபர், விவசாயி; நகரவாசி, கிராமவாசி என இவர்களுக்கிடையே மட்டும்தான்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:37 AM
பகிர்:

இந்தியாவில் பணக்காரர், பரம ஏழை; தொழில் அதிபர், விவசாயி; நகரவாசி, கிராமவாசி என இவர்களுக்கிடையே மட்டும்தான் பெரும் இடைவெளி நிலவுகிறது என்று நினைக்க வேண்டாம். பொருளாதாரத்துக்கும் நிதித்துறைக்கும் இடையேயும் பயங்கரமான இடைவெளி இருப்பதைப் பார்க்கிறோம்.

 உதாரணத்துக்கு ஒருபக்கம், பங்குச் சந்தையில் எழுச்சி காணப்படும். அதேநேரம் பொருளாதாரத்தில் மந்த நிலை என்பார்கள். அப்படியானால், பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக்கும்போதுதான் பங்குச் சந்தை எழுச்சி அடையும் என்று பாடப்புத்தகங்கள் சொல்லுகின்றனவே, அதற்கு என்ன ஆதாரம்?

 இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவது கண்கூடு. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 8.5 சதவீத ஜி.டி.பி. (ஓராண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு) ஆக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் அது 5.5 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால், மத்திய புள்ளிவிவர அமைப்பு (சி.எஸ்.ஓ.) வளர்ச்சி 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்கிறது.

 நிதிப் பற்றாக்குறை மற்றும் ""கரண்ட் அக்கவுண்ட் டெஃபிசிட்'' (நடப்புக் கணக்குப் பற்றாக்குறை) கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது நமது மொத்த ஏற்றுமதியின் மதிப்புக்கும், இறக்குமதியின் மதிப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசம். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஏற்றுமதி குறைவு; இறக்குமதி அதிகம். ஆக நாம் கொடுக்க வேண்டியது அதிகம்.

 நம் நாட்டுப் பொருள்களை வாங்கிவந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணத் தட்டுப்பாடு என்பதால், அந்த நாடுகளில் நம் பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் நமது ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பு குறைந்துவிட்டது.

 அதேநேரம், நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருள்களின் அளவை நம்மால் குறைக்க முடியவில்லை. அதுமட்டும் அல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக நாம் இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவும், மதிப்பும் கிடு, கிடு என்று அதிகரித்துவிட்டன. விளைவு? நடப்புக் கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்) பற்றாக்குறை எகிறிவிட்டது.

 தங்க இறக்குமதியைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு அண்மையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. உதாரணமாக, வங்கிகளில் புதிய, திருத்தி அமைக்கப்பட்ட "தங்க டெபாசிட்டுகள்' அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னதாக, இந்த டிபாசிட்டுகளின் முதிர்வு காலம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளாக இருந்தன. அதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இப்போது முதிர்வு காலம் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் சில விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் மத்தியதர மக்களும் இந்த டெபாசிட் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 வங்கியில் டெபாசிட் செய்யப்படும் நகைகள் உருக்கப்பட்டு, உள்நாட்டு தங்க வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். இதனால் தங்க நகை வியாபாரிகள் தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது குறையும். டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் மதிப்புக்கேற்ப வட்டி கிடைக்கும். இறக்குமதி குறையும் என்பதுடன், வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் பூட்டி வைக்கப்படுகிற நகைகள் பொருளாதார சுழற்சிக்குள் கொண்டு வரப்படுகின்றன.

 வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பை ஈர்க்கும் வகையில், அவர்களது டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பங்குச் சந்தைக்கும், அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. 2012-இல் இந்தியாவுக்கு 25 பில்லியன் (ஒரு பில்லியன் நூறு கோடி) டாலர்கள் முதலீடுகளாக வந்துள்ளன.

 அண்மையில், மத்திய அமைச்சர்கள் ஹாங்காங், சிங்கப்பூர், ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் லண்டன் போன்ற நகரங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இவையெல்லாம், இந்தியப் பங்குச் சந்தையின் எழுச்சிக்கு உதவியிருக்கக் கூடும்.

 அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் மந்த நிலை நீடிக்கிறது. ஜப்பானும் விதிவிலக்கல்ல. அப்படி இருந்தும், இந்த நாடுகளில் எல்லாம் பங்குச் சந்தை என்னவோ ஏற்றத்தில்தான் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? முதலீட்டாளர்களின் பார்வை வித்தியாசமாக உள்ளது. தற்போது நிலவும் மந்த நிலையைத் தாண்டி, எதிர்காலத்தில் தங்களுடைய நாடுகளில் பொருளாதாரம் மீட்சி அடையும் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

 இது ஏன் இந்தியாவுக்கும் பொருந்தாது? சொல்லப்போனால், இந்தியாவில் விரைவில் ஏற்படக்கூடிய பொருளாதார மீட்சிக்கு பங்குச்சந்தை எழுச்சி கட்டியம் கூறுகிறது என்றுதான் பல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    நடுங்க வைக்கும் கடும் குளிர் காலத்துக்குப் பிறகு  "வசந்த காலம்' வர உள்ளது என்பதே அவர்களது கணிப்பு.

 இந்நிலையில், நிதி அமைச்சர் சிதம்பரம், எப்படியாவது நிதிப் பற்றாக்குறை விகிதத்தைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார். இந்தியா போன்ற பொருளாதார முரண்கள் நிறைந்த, பரந்துபட்ட ஒரு நாட்டின் பட்ஜெட்டைத் தயாரிப்பது எளிதான பணி அல்ல என்பதை அனைவரும் அறிவர். அதிலும் குறிப்பாக, பணவீக்கமும்,  நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அச்சுறுத்தும் நிலையில், பட்ஜெட் தயாரிப்பு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்றால் மிகை அல்ல. வரிகள் மூலம் வருவாய் திரட்டி, திட்டச் செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்வது மட்டும் பட்ஜெட்டின் நோக்கம் ஆகாது. அன்றாடப் பொருளாதார நிர்வாகத்தையும் தாண்டி, நீடித்த வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இப்போது முதல் தேவை.

 நிதி அமைச்சர் சிதம்பரம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கு அதீத முன்னுரிமை கொடுத்தால், அடிபடப் போவது வளர்ச்சியாகத்தான் இருக்கும்.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக, விழித்துக்கொண்டு, செலவுக் கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் சில ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி பூஜ்யமாகத்தான் உள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

 வளர்ச்சிக்கு உகந்த முதலீடுகள் செய்வதைத் தள்ளிப்போட முடியாது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கை எட்டும்வரை ஒரு வருடம் தள்ளிப்போவதால் குடிமுழுகிப் போய்விடாது. என்ன, "மூடீஸ்' மற்றும் "ஸ்டேண்டர்டு அண்டு பூர்' பயமுறுத்துவார்கள். அவ்வளவுதான். வளர்ச்சி விகிதத்தைக் காட்டினால் அவர்களும் வாயை மூடிக் கொள்வார்கள்!

 எப்படியும், வட்டிச்செலவு, ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றில் கை வைக்க முடியாது. மானியங்களையும் ஓர் அளவுக்கு மேல் குறைத்திட முடியாது. அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்தித்தாக வேண்டும். ஆக, திட்டச் செலவுகளை மட்டுமே குறைத்திட முடியும். அப்படிச் செய்தால், நாமே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்குச் சமம் ஆகாதா?

  நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு "கைவந்த கலை' ஒன்று உண்டு. வரியை அதிகரிக்காமல், வரிவசூல் தொகையை அதிகரித்துக் காட்டுவதுதான் அது. அந்த நல்ல பாணியை இந்த பட்ஜெட்டிலும் அவர் கையாள வேண்டும்.

 2008-ஆம் ஆண்டு, அமெரிக்க நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியாவை அது அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கு ஓர் ஊக்குவிப்புத் திட்டத்தை அவர் அறிவித்தார். அதேபோன்ற ஓர் ஊக்குவிப்புத் திட்டத்தை புதிய பட்ஜெட்டிலும் அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வரிச்சலுகைகள், வங்கிக்கடன் வசதி, வட்டி குறைப்பு ஆகியவையே அவை.

 இதனால், பொறியியல், ரசாயனப் பொருள்கள், மருந்து வகை, ஆபரணம், ஆபரணக் கற்கள், ஜவுளி ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், கடல்சார் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்க புதிய ஊக்குவிப்பு திட்டம் உதவும். இறைக்கிற கிணறுதானே சுரக்கும்?

 ஏற்றுமதியாளர்களும், அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் மட்டும் நம்பி இருக்காமல், புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

 கடந்த ஆண்டில், குடும்ப சேமிப்பு (டொமஸ்டிக் சேவிங்ஸ்) வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கு விலைவாசி உயர்வு ஒரு முக்கிய காரணம். சென்ற ஆண்டு சேமிப்புக்கு புதிய ஊக்குவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை. அந்தக் குறையை இந்த ஆண்டு பட்ஜெட்டில் தீர்த்து வைக்க வேண்டும். "80-சி' வழியிலான வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும்.

 "80-சி'யிலும் ஒரு முரண் காணப்படுகிறது. வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக டெபாசிட்டுகள் 5 ஆண்டுகளுக்குப் போட்டால் மட்டுமே வரிச்சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், பங்குகள் சார்ந்த சேமிப்புத் திட்டத்துக்கு (இ.எல்.எஸ்.எஸ்.) மூன்று வருடம் முதலீடு செய்தாலே வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

 இந்த முரண்பாட்டை அகற்றும் வகையில் வங்கியில் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் போடப்படும் 3 வருட டெபாசிட்டுகளுக்கும் "80சி'யில் வரிச்சலுகை வழங்க வேண்டும்.

 தற்போதைய பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்புக்கு உட்பட்டிருப்பது நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளதாரர்கள்தான். அவர்களுக்குச் சிறிதளவு நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்திட வேண்டும்.

 இது ஏற்கெனவே கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டிலாவது இதைச் செயல்படுத்திட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்:  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர்.)

முழு கட்டுரையைப் படிக்க →