முகப்பு
கட்டுரைகள்

ரேஷன் அமைப்பை குலைக்க திட்டம்!

வியாதியைக் கொல்வதற்கான சிறந்த வழி, வியாதியஸ்தர்களைக் கொல்வதுதான்! இதுதான் பொது விநியோக திட்டத்தைப் பொருத்தவரை (ரேஷன் கடை நிர்வாகம்) மத்திய அரசின் அணுகுமுறை என்று தோன்றுகிறது.

Updated On : 25 ஜனவரி, 2013 at 2:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:40 PM

வியாதியைக் கொல்வதற்கான சிறந்த வழி, வியாதியஸ்தர்களைக் கொல்வதுதான்! இதுதான் பொது விநியோக திட்டத்தைப் பொருத்தவரை (ரேஷன் கடை நிர்வாகம்) மத்திய அரசின் அணுகுமுறை என்று தோன்றுகிறது. பொது விநியோக முறை (பி.டி.எஸ்.) திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்குப் பதிலாக, திட்டத்தையே சீர்குலைத்து மங்களம் பாடிவிட முயற்சிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி வாத்வா கமிட்டி, பொது விநியோக அமைப்பில் உள்ள பல்வேறு குறைகளை அடையாளம் கண்டு விரிவாக அறிக்கை தந்திருப்பது உண்மைதான்; பொது விநியோக அமைப்பில் ஊழலும் திறமையின்மையும் மண்டிக் கிடக்கின்றன; எந்தப் பிரிவினருக்காகக் குறிவைத்து பொது விநியோக திட்டம் கொண்டுவரப்பட்டதோ அவர்களுக்கு உரிய பலன்கள் சென்று சேருவதில்லை என்று தெரியவந்துள்ளது.

மத்திய திட்டக் கமிஷன் மேற்கொண்ட ஆய்வின்படியே, யாருக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதோ அவர்களில் 57 சதவீதம் பேருக்கு இதில் பலன் கிடைப்பதில்லை.

Advertisement

தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு மேற்கொண்ட 61-வது சுற்று ஆய்வில், வறியவர்களிலேயே கடைநிலையில் இருக்கும் 20 சதவீதம் பேரில் சரி பாதிப்பேர் - அதாவது அவர்களில் 50 சதவீதம்பேர் - சொந்தமாக ரேஷன் கார்டுகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள்! இப்படி இருந்தால் ரேஷனில் தரும் பொருள்களை அவர்கள் பெறுவது எப்படி?

பொது விநியோக அமைப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள்; ஏழைகளுக்கான உணவு தானியங்களும் இதர அத்தியாவசியப் பண்டங்களும் "எங்கோ' கடத்தப்படுகின்றன. மானிய விலையில் மக்களுக்குத் தரப்படவேண்டிய பொருள்கள் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு நல்ல விலைக்கு விற்கப்பட்டு "யாருக்கோ' கொழுத்த லாபத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தக் குறையைப் போக்குவதற்கான தீர்வு அரசிடம்தான் இருக்கிறது. பொதுவிநியோகத்தை அவ்வப்போது ஆய்வுசெய்து, தொடர்ந்து கண்காணித்து, முறைகேடான செயல்கள் இருந்தால் அவற்றை அவ்வப்போது உரியவகையில் தடுத்துவந்தால் அலட்சியமும் ஊழலும் முறைகேடுகளும் குறையும்.

நாட்டின் ஏழை, நடுத்தரவர்க்க மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, கெரசின் உள்ளிட்ட அவசியப்பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் உணவுப் பாதுகாப்பை வழங்கவும் வகுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையின் ஓரங்கம்தான் பொது விநியோக அமைப்பு. தட்டுப்பாடில்லாமல் அத்தியாவசியமான உணவு தானியங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் உபரியாக விளையும் காலங்களில் உணவு தானியங்களைக் கொள்முதல்செய்து பற்றாக்குறை காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டதுதான் பொது விநியோக திட்டம்.

சாகுபடியாளர்களுக்கு லாபமும் நுகர்வோர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையும் ஒருசேரக் கிட்டும் வசதி சந்தையில் இல்லை என்பதால் அரசின் தலையீட்டால் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. இதற்காகவே 1965-ஆம் ஆண்டு "இந்திய உணவு கார்ப்பரேஷன்' (எஃப்.சி.ஐ.) என்ற பொதுத்துறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் (நியாய விலைக் கடைகள்), சங்கிலித்தொடர்போல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 1960-கள் தொடங்கி 1990-கள் வரையில் ரேஷன் கடைகளில் "எல்லோருக்கும்' உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.

அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள பற்றாக்குறையைக் குறைப்பதே நாட்டு நிர்வாகத்தின் முக்கிய கடமை என்று கருதிய அரசு, ரேஷன் கடைகளில் வாங்கவரும் மக்களை 2 பிரிவுகளாகப் பிரித்தது. "வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்', "வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர்கள்' என்பதே அந்தப் பிரிவினை. வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்கிறவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் இனி வழங்கப்பட வேண்டியதில்லை என்ற முடிவை அரசு எடுத்தது. இதனால் ஏராளமான ஏழைகளே பொது விநியோக திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அரசிடம் இதுவரை காணப்படவில்லை. அதே வேளையில், இவர்களைப் போலவே மேலும் பல கோடிப் பேரை இந்த திட்டத்திலிருந்து எப்படி ஒதுக்கிவைக்கலாம் என்ற ஆராய்ச்சிதான் நடக்கிறது. இதற்காகவே, ஏழைகள் யார் என்பதற்கான இலக்கணம் அடிக்கடி திருத்தியமைக்கப்படுகிறது. வறுமை என்பதற்கு என்னென்ன வரைமுறைகளோ அவை புதிது புதிதாக திருத்தப்படுகின்றன.

பொது விநியோக முறை சீர்குலைக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழிகள் அளிக்கப்பட்டாலும், பொது விநியோக முறை மூலம் உணவு தானியம் பெறும் சில குழுக்களுக்கு தானியங்களுக்குப் பதிலாக நேரடியாகவே பணம் வழங்கும் திட்டம் சோதனை முறையில் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமாக அமலானால் நாடு முழுக்க விரிவுபடுத்தப்படுவதுடன் எல்லா பிரிவினருக்கும் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகவே "ஆதார்' அடையாள அட்டை திட்டம் தீவிரமாகவும் நாடு முழுக்கவும் வேகமாகக் கொண்டுவரப்படுகிறது. "யுனீக் ஐடென்டிட்டி கார்டு' என்று அழைக்கப்படும் அட்டைக்கு "ஆதார்' என்று பெயரிட்டிருக்கின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான ஆதாரங்களைப் பறித்துவிட்டு அவர்களை நிராதரவாக்கும் திட்டமே இது என்று தெரிகிறது.

மின்சாரம், பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள், தண்ணீர், பஸ் - ரயில் கட்டணம் ஆகியவை கணிசமாக உயர்த்தப்படுகின்றன. எனவே அதிக ஊதியம் பெறுவோர் மட்டுமே அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற அளவுக்கு வாழ்க்கைத் தரம் குறைந்துகொண்டே வருகிறது. இவை மட்டும் அல்லாமல் மருத்துவச் செலவும் கல்விக் கட்டணங்களும்கூட அதிகரித்துக் கொண்டேவருகின்றன.

எல்லோருக்கும் வழங்கும் அளவுக்கு உணவு தானியம் கிடைக்காததால் பொது விநியோக அமைப்பிலிருந்து ஏராளமானோரை விலக்க வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுவது ஏற்க முடியாததாக இருக்கிறது.

பொது விநியோகத்துக்கு 250 லட்சம் டன் உணவு தானியங்கள்தான் தேவை. ஆனால் இந்திய உணவு கார்ப்பரேஷனோ 2013 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி 667 லட்சம் டன் உணவு தானியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கிறது; அதாவது தேவையைவிட 167 சதவீதம் அதிகம்.

பொது விநியோக முறைக்கு அதிக மானியம் தேவைப்படுவதால் மக்களுடைய வரிப்பணம் வீணாகிறது, எனவே மானியங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அரசு கூறுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் பதுக்கல், கொள்ளை லாபத்தை ஒழிக்கவும், பட்டினிச் சாவுகளைத் தடுக்கவும்தான் பொது விநியோகமே கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு உதவும் மானியத்தை, "நிதிச்சுமையாக' அரசு கருதுவது சரியே அல்ல.

உணவு தானிய விளைச்சல் குறைவாக இருப்பதால் கொள்முதல் அளவையும் குறைத்துக் கொள்வதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விளைச்சல் குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்தத்தான் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, மக்களைப் பார்த்து, "விளைச்சல் குறைவாக இருப்பதால் கொஞ்சமாக சாப்பிடுங்கள்' என்று கூறக்கூடாது.

மக்களுக்குள்ள "வாங்கும் சக்தி'யைக் குறைக்கும் வகையில், ஒரு நாளைக்கு 33 ரூபாய் சம்பாதித்தால்கூட அவர் வறுமைக் கோட்டைத் தாண்டிவிடுகிறார் என்று கூறி அவர்களுடைய குடும்பத்துக்கு உணவு தானிய வழங்கலை மறுக்கக் கூடாது. இப்படிச் செய்வதன்மூலம் ஏழைகளை அதிகம் வாங்க வைப்பதற்குப் பதிலாக, எதுவுமே வாங்க முடியாமல் விரட்டத்தான் அரசின் முடிவு உதவும்.

ஏழைகளிடையே "வாங்கும் சக்தி' குறைவாக இருப்பதால்தான் மானியம் தந்தால்கூட ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க முடியாமல் அதன் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.

அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கும் திராணியற்றதாக பொது விநியோக அமைப்பு முடக்கப்படுவதால்தான் இந்தக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அனைவருக்கும் தர முடியாது என்று மத்திய அரசு கூறும் அதே வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் - எதுவாக இருந்தாலும் - ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அந்த மாநில அரசால் எப்படி தரப்படுகின்றன?

எந்த மாநிலத்தில் அனைவருக்கும் ரேஷன் பொருள்கள் தரப்படுவதில்லையோ அங்குதான் முறைகேடுகளும் ஊழல்களும் பொது விநியோகத்துக்கான பொருள்கள் கடத்தப்படுவதும் அதிகமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வழங்கினால் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள்தான் பலன் பெறுவார்கள் என்ற வாதமும் சரியல்ல. பணக்காரர்கள் தங்களுடைய வருவாயில் உணவு தானியங்களுக்காகச் செலவிடுவது மிகமிகக் குறைவு; அதே சமயம், ஏழைகள் தங்களுடைய வருவாயின் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிடுகிறார்கள். எனவே பணக்காரர்களும் ரேஷனில் அரிசி, கோதுமை வாங்குவதால் ஏழைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற வாதமே தவறானது.

"அனைவருக்கும் உணவு' என்பது அடிப்படை உரிமை என்றான பிறகு, "உணவுப் பாதுகாப்பை அளிப்பதே அரசின் லட்சியம்' என்று அறிவித்த பிறகு, எல்லோருக்கும் தரமான உணவு தானியம் வழங்குவதற்கான வழியைத்தான் அரசு யோசிக்க வேண்டும். ஆனால் அரசின் சிந்தனையும் செயலும் எதிர்மறையாக இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.