ஒழிக்கப்படுமா பொம்மை கல்யாணங்கள்!
மிக உயர்ந்த கலாசார, பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள் நம் பாரத மக்கள். எவ்வளவோ அதிநவீன
மிக உயர்ந்த கலாசார, பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள் நம் பாரத மக்கள். எவ்வளவோ அதிநவீன தொழில்நுட்பங்களையும், தொலைத் தொடர்பு சாதனங்களையும் வைத்துக்கொண்டு இன்றைய அறிவியல் கண்டறிந்த அற்புதங்களை, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எவ்வித உபகரணங்களையும் பயன்படுத்தாமல் தங்கள் ஞான திருஷ்டியின் மூலம் கண்டறிந்த பெருமைக்குரியவர்கள் நம் முன்னோர்கள்.
இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றிருந்தும் நம் நாடு முன்னேறாததற்கு முக்கிய காரணம் நம்மைச் சுற்றி மாயவலை பின்னியிருக்கும் நம் மூட நம்பிக்கைகளும், முறையற்ற பழக்க வழக்கங்களுமே ஆகும். இதில் மிக முக்கியமானது பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணம்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டங்களில் பால்ய விவாகம் என்பது மிகச் சாதாரணமான விஷயம். ஒரு பெண் குழந்தையை 6, 7 வயதிலேயே அவளைவிட சற்றே மூத்த சிறுவனுக்கு மணமுடித்து விடுவார்கள். பின்னர் அப்பெண் பருவமெய்தி, பூப்படைந்ததும், அவர்களிருவரையும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுத்தி குடும்பஸ்தர்களாக அங்கீகரிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
பெண்கள் ஆண்களின் சேவகர்கள் என்றும், அவர்களுக்குக் கல்வி அவசியமற்றது எனவும், பெண்களின் முக்கியக் கடமையாக குடும்பப் பராமரிப்பும், குழந்தைப்பேறும் மட்டுமே என அவர்களின் மீது அடக்குமுறைகள் திணிக்கப்பட்டிருந்த காலம் அது.
பெண் குழந்தைகளுக்கு இவ்வாறு சிறுவயதிலேயே திருமணம் செய்வதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, மிக இளம் வயதிலேயே குழந்தை பேற்றுக்கும் ஆளாவதால், அவர்களின் உடல் நலமும் சீர்கெடுகிறது.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் திருமணம் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய கொடுமைகள் தடுக்கப்பட வேண்டியவை எனக் கருதியே அரசு, ஒரு பெண் உடல் மற்றும் மன அளவில் திருமண வாழ்வுக்குத் தயாராகும் குறைந்தபட்ச வயதாக 18-ஐ அறிவித்தது.
இந்த வயது நிறைவடைவதற்கு முன்பு நடைபெறும் திருமணங்கள் செல்லத்தக்கதல்ல என்று கூறி, அத்தகைய முயற்சியில் ஈடுபடும் பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டமியற்றப்பட்டது.
சொத்து கைவிட்டுப் போகாமலிருக்கவும், சொந்தம் கைவிட்டுப் போகாமலிருக்கவும் நடத்தப்படும் சிறு வயது அவசரத் திருமணங்களால் அப் பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதோடு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மரபணு சார்ந்த நோய்களுக்கு ஆளாக வேண்டி வருகிறது. இவ்வாறு குழந்தைத் திருமணம் என்பது ஒரு பெண்ணின் கல்வி மற்றும் எதிர்காலக் கனவுகளைப் பொசுக்கிவிடுவதோடு, ஒரு சமுதாயத்தையே ஆரோக்கியமற்றதாகச் சீரழித்துவிடுகிறது.
பெண்கள் ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை ஓட்டுகிறார்கள். மிகவும் சவாலான பணிகளான காவல், ராணுவம், தீயணைப்பு எனப் பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றும் இன்றைய காலகட்டத்திலும் இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை.
இந்தியாவின் வட மாநிலங்களிலும், தெற்கே ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் குழந்தைத் திருமணங்கள் இப்போதும் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
தங்களின் கடமையைக் கழித்தால் போதும் எனக் கருதும் ஒருசில பெற்றோர் பள்ளி இறுதி வகுப்பு கூட முடிக்காத தங்கள் பெண் குழந்தைகளுக்கு இத்தகைய திருமணங்களை நடத்தி வைக்கின்றனர் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம்.
பெண் கல்வி மற்றும் பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த இதுபோன்ற விஷயங்களில் அரசு முக்கிய கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுத்து பொம்மைக் கல்யாணங்களை தடுத்து நிறுத்தி பெண்களின் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் 8-ஆம் வகுப்புக்கு மேல் இடைநின்ற மாணவியர் குறித்து கணக்கெடுத்து, அவர்களின் தற்போதைய நிலை குறித்து அறிந்து, அந்த மாணவியின் எதிர்காலக் கல்வி மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் செயல்களில் சமூகநலத்துறை ஈடுபட வேண்டும்.
குழந்தைத் திருமணங்கள் மற்றும் அதனால் சமுதாயத்தில் ஏற்படும் தீமைகளையும், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்பதையும் விளக்க வேண்டும். குழந்தைத் திருமணம் நடத்தினால் சட்டத்தில் என்னென்ன கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்பதையும் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
"தாய் நாடு' என்று தாயை முன்னிறுத்தியே நாட்டைப் போற்றும் நாம், பெண்களின் கல்வியிலும், முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தினால்தான் நாடும் முன்னேறும், நாட்டு மக்களும் நலம் பெறுவர்.