முகப்பு
கட்டுரைகள்

பரிசைவிட பாராட்டு மேலானது

திருமண நாள் பரிசு, திருமண ஆண்டுத் திருநாள் பரிசு, பிறந்த நாள் பரிசு, தேர்வில் சிறப்பிடம் பெற்றால் பரிசு என

Updated On : 2 மார்ச், 2013 at 2:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

திருமண நாள் பரிசு, திருமண ஆண்டுத் திருநாள் பரிசு, பிறந்த நாள் பரிசு, தேர்வில் சிறப்பிடம் பெற்றால் பரிசு என நமது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித உறவுகளின் மேன்மையைச் சொல்ல இதுபோன்ற பரிசளிப்புகள் அவசியமாகிறது.

 இது ஒருபுறம் இருக்கட்டும். நமது அன்றாட வாழ்வில் உரிய நேரத்தில் வேலையை முடித்த வேலையாள்களுக்கும், வீட்டைச் சுத்தம் செய்யும் பெண் தொழிலாளிகளுக்கும், குழந்தையைப் பராமரிக்கும் ஆயாக்களுக்கும், பாடத்தில் தேர்ச்சிபெற உதவும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், கூடுதல் மதிப்பெண்கள் பெறும் பிள்ளைகளுக்கும் நாம் பரிசு வழங்குகிறோமா என்றால், பெரும்பாலும் "இல்லை' என்றுதான் கூற வேண்டும். இதுபோன்று நாம் பாராட்டுவது மிகவும் குறைவுதான்.

  மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் பயணித்து, சென்னை சென்றடைந்ததும், பஸ் டிரைவரிடம், "பாதுகாப்பாக எங்களை சென்னைக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள். உங்களுக்குப் பாராட்டுகள்' என கைகுலுக்கிப் பாராட்டுங்கள். இரவில் தூங்காமல் கண்விழித்து பஸ் ஓட்டிய களைப்புடன் இருக்கும் அந்த டிரைவரின் முகத்தில் வெளிச்சப் பூக்கள் பூக்கும்.

Advertisement

 பேண்ட், சட்டையை தையல் தொழிலாளியிடம் கொடுத்து தைத்து வாங்குகிறீர்கள். அது உங்களது உடலுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. உடனே அந்தத் தையல் தொழிலாளியிடம், "நன்றாக இருக்கிறது உங்கள் தையல்' எனக் கூறி பாராட்டுங்கள். அவர் முகம் பிரகாசமாகும், உழைத்த களைப்பும் மறையும். இது போன்ற சின்னச் சின்ன பாராட்டுகளை வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், அது நமது மனத்துக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். செலவில்லாமல் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவது இதுதான்.

   ஒரு பள்ளியில் வகுப்பு ஆசிரியர், "மாதாந்திரத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வாங்கியுள்ளீர்கள். நோட்டுப் புத்தகத்தைக் காண்பியுங்கள்' என மாணவர்களிடம் கூறி, நோட்டுப் புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டுவந்தபோது, ஒரு மாணவன் தனது நோட்டுப் புத்தகத்தைக் காண்பிக்க மிகவும் சங்கடப்பட்டான். அதைக் கவனித்துவிட்ட ஆசிரியர் அந்த மாணவனின் நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது அதில் "25 மதிப்பெண்கள்' என இருந்தது.

  "இதனை ஏன் காட்டத் தயங்கினாய்?' என மாணவனிடம் ஆசிரியர் கேட்டார். "தேர்ச்சிபெறும் மதிப்பெண்களைப் பெறவில்லை' என்றான் மாணவன். "கடந்த தேர்வில் நீ 20 மதிப்பெண்கள்தான் பெற்றிருந்தாய். இந்தத் தேர்வில் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் பெற்றுள்ளாய். வரும் தேர்வில் இன்னும் கூடுதலாக மதிப்பெண் பெறுவாய், முயற்சி செய்' எனப் பாராட்டினார் ஆசிரியர்.

  ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், ஒவ்வோர் ஆண்டும் பாராட்டு தின விழாவை நடத்தி வந்தான். அந்த தினத்தில், சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களையும், கவிஞர்களையும், இளவட்டக் கல்லைத் தூக்கியவர்களையும், வேளாண்மையில் அதிக விளைச்சல் எடுத்தவர்களையும் பாராட்டி வந்தான்.

  அருகில் உள்ள நாட்டு மன்னனுக்கு இந்தச் செய்தி கிடைத்தது. ஒவ்வோர் ஆண்டும் பலருக்கு, பாராட்டு என்ற பெயரில் பொன்னும் பொருளும் கொடுப்பது என்பது சிறந்த ஒன்றுதான். நாமும் எப்படி அந்த மன்னர் செயல்படுகிறார் எனப் பார்க்க வேண்டும் என ஒரு பாராட்டு தின விழாவுக்கு வந்தார். திறந்த வெளியில் ஊர் கூடி இருந்தது. அரசன் பாராட்டுப் பெறுபவர்களுக்கு ஒரு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, விண்ணை முட்டும் கைதட்டல் ஒலி கேட்டது. பாராட்டப்பட்டவர் முகம் பெருமிதத்தால் ஒளிர்ந்தது. அருகில் உள்ள நாட்டு அரசருக்கே ஆச்சரியம். பணமுடிப்பு வழங்குவார் எனப் பார்த்தால் பொன்னாடையும் சான்றிதழும் மட்டும் மன்னர் வழங்குகிறாரே என ஆச்சரியப்பட்டு, மன்னனிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்.

 "சாதனையாளர்களுக்கு பொதுமக்களின் கைதட்டல்தான் மாபெரும் பரிசு, பாராட்டு எல்லாம். எனவே, ஊர்மக்கள் முன்னிலையில் கௌரவிக்கிறேன்' என்றான் மன்னன். இது நமக்கும் பாடம்.

  நீங்கள் யாரையாவது கண்டிக்க வேண்டும் என்றால், அவரைத் தனியே கூப்பிட்டுக் கண்டியுங்கள்; பாராட்ட வேண்டியவர்களை அனைவரின் முன்பும் பாராட்டுங்கள்.     நமக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களையும், வாழ்க்கைக்கு உதவுபவர்களையும் அவ்வப்போது பாராட்டினால் நாம் நமது வாழ்வில் வெற்றிபெறலாம். ஒருவருடைய முதுகுக்குப் பின்னால் நாம் ஒரு காரியம்தான் செய்ய வேண்டும், அது முதுகைத் தட்டிக் கொடுப்பது.

 சுத்தத்தை உணர்த்த, "கை கழுவும் தினத்தை' அனுசரிப்பதைப் போல, பண்பாட்டினை உணர்த்தப் பாராட்டு தின விழாவை நாமும் நடத்தினால் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.