முகப்பு
கட்டுரைகள்

எழுச்சி உண்மையானதா?

இந்தியப் பங்குச் சந்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சில தினங்களுக்கு முன் எழுச்சி கண்டது. இம்மாத தொடக்கத்தில் "சென்செக்ஸ்' 322 புள்ளிகளைத் தொட்டது. அதாவது 2008 ஆம் ஆண்டின் ஜனவரி மாத உச்சத்தையும் விஞ்சியது. இது பலருக்கு பரவசத்தைக் கொடுத்தது; சிலருக்கு வியப்பை அளித்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:47 PM
பகிர்:

இந்தியப் பங்குச் சந்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சில தினங்களுக்கு முன் எழுச்சி கண்டது. இம்மாத தொடக்கத்தில் "சென்செக்ஸ்' 322 புள்ளிகளைத் தொட்டது. அதாவது 2008 ஆம் ஆண்டின் ஜனவரி மாத உச்சத்தையும் விஞ்சியது. இது பலருக்கு பரவசத்தைக் கொடுத்தது; சிலருக்கு வியப்பை அளித்தது.

சர்வதேசப் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு, இந்திய "கார்ப்பரேட்' நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறைந்தது. சில நிறுவனங்கள் இழப்பையும் சந்திக்க நேர்ந்தது. இந்த ஆண்டு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரியத் தொடங்கியது. இவையெல்லாம் இந்திய பங்குச் சந்தையின் கவர்ச்சியைக் குறைத்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையின் எழுச்சி சாத்தியமானது எப்படி? இந்த எழுச்சி உண்மையானதுதானா?

அண்மைக்காலமாக ரூபாயின் மதிப்பு 61 முதல் 63 வரை நிலைகொண்டுள்ளது. இதுவே ஒரு சாதனை. ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், டாலர்களை தாராளமாகப் புழக்கத்தில் விடுகின்ற கொள்கையை மேலும் சில காலத்துக்குத் தொடர்ந்து செயல்படுத்த உள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

அந்தக் கொள்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என கடந்த மே மாதம் ஃபெடரல் ரிசர்வ் கூறிய மாத்திரத்தில், இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட ஏராளமான டாலர்கள் வெளியேறின. அந்த வகையில், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு உதவியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதைவிட, வாங்கிக் குவித்ததே அதிகம். அதிலும் குறிப்பாக, 31-10-2013 வியாழக்கிழமை மட்டும் ரூ. 1,875 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் இந்திய பங்குச் சந்தைக்கு இது ஒரு டானிக்தான்.

எனினும், பங்குச்சந்தை எழுச்சி பரவலாக அமைந்துள்ளதா என்றால் இல்லை. சில நிறுவனங்களின் பங்குகள் விலை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், பல நிறுவனங்களின் பங்குகள் இந்த எழுச்சியின் பயனைப் பெறவில்லை. நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் கிடையாது. சிறு முதலீட்டாளர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிகப் பெரிய அளவில் பயனடைந்த துறைகளை கணக்கில் எடுத்துப் பார்த்ததால்கூட, இந்த எழுச்சிக்கு என்ன காரணம் என்பது விளங்கவில்லை. உதாரணத்துக்கு வங்கிகளின்- குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின்- பங்குகள் விலை அமோகமாக அதிகரித்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பது பற்றி நாடே கவலை கொண்டாலும் பங்குச்சந்தை அதைக் கண்டுகொள்ளவில்லை.

இது ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு வருவோம். நடப்பாண்டில், அது 5.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது. 5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. எது எப்படி இருந்தாலும், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டுக்கான வளர்ச்சி 4.4 சதவீதம் என்பதைக் கருத்தில் கொண்டால், நடப்பாண்டுக்கான வளர்ச்சி கணிசமாக உயரும் என்பது தெளிவு.

இந்த நம்பிக்கைக்கு காரணம் என்ன? பொருளாதாரத் தேக்க நிலையின் மோசமான கட்டத்தை தாண்டி விட்டோம் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது என்பது உண்மையே. பருவ மழை திருப்திகரமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியத் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு துறைகளில், கடந்த செப்டம்பர் மாதம் எட்டு சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதம் இது வெறும் 3.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில், மேற்கூறிய 8 துறைகளின் பங்கு 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, தொழிற்கூடங்களின் உற்பத்தி கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பும் பிரகாசம் அடைந்துள்ளது.

முக்கியமாக, இந்த ஆண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. முன்னதாக இந்தப் பற்றாக்குறை கவலை அளிக்கும் வகையில், ரூ. 4.25 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இது சுமார் ரூ. 3.66 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிகிறது.

அதேநேரம், பணவீக்கம் பெரும் சவாலாகவே தொடர்கிறது. சில்லறை விலைகள் அடிப்படையில் பணவீக்க வீதம் நடப்பாண்டில் 9 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தன் கடன் கொள்கையில் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் ரிசர்வ் வங்கி தனது கொள்கையை அக்டோபர் 29இல் அறிவித்தது.

ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உண்டு. முதலாவது, பணவீக்கத்தையும் அதன் மூலம் விலைவாசியையும் கட்டுக்குள் கொண்டு வருவது.

இரண்டாவது, அனைத்துத் துறையினருக்கும் தங்கு தடையின்றி வங்கிக் கடன் வசதி கிடைத்திட வேண்டும்.

இந்த இரட்டை இலக்கை எட்டிப்பிடிப்பதற்கு ஏதுவாக இதுவரை, ரெப்போ ரேட்டை (ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குத் தரும் குறுகியகால கடன் வட்டி) உயர்த்துவது அல்லது குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே ரிசர்வ் வங்கி நம்பி இருந்தது.

சமீபகாலமாக மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெசிலிடி என்கிற தினசரி கடன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதனால் வங்கிகள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு பணச்சந்தையை மட்டும் எதிர்பார்க்காமல், ரிசர்வ் வங்கியிடமிருந்தே இரண்டு வகை கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கும் மேலாக, ஏழு நாள்கள் "ரெப்போ' பதினான்கு நாள்கள் "ரெப்போ' என்கிற புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் முன்பு கிடைத்த கடன்தொகையைப்போல் இரண்டு மடங்கு கடன் தொகையை வங்கிகள் பெற்று பயன் அடையலாம். இந்த ரெப்போ ரேட் மற்றும் மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபெசிலிடி என்கிற இரண்டு வகை கடன் வட்டி விகிதங்களின் வித்தியாசம் ஒரே ஒரு சதவிகிதமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கும் சென்ற கடன் கொள்கையில் எட்டப்பட்டு விட்டது.

வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டுமானால், மத்திய அரசு தன் பங்குக்கு சில நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். இதற்கென அவர் ஐந்து அம்ச திட்டம் ஒன்றையுமó குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் டாக்டர் உர்ஜித் படேல் பரிந்துரைத்தபடி பொருளாதாரக் கொள்கை உருவாக்கம்; இரண்டு, வங்கித்துறையை மேலும் வலுப்படுத்துதல்; மூன்று, அரசு பத்திரங்களை, முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் மேம்படுத்துதல்; நான்கு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், அமைப்புசாராத நிறுவனங்களுக்கும் வங்கிக் கடன் எளிதில் கிடைக்கச் செய்தல்; ஐந்து, பெரும் நிறுவனங்கள் (கிங்பிஷர் போன்றவை) நலிவடைந்தால் வங்கிகள் பாதிக்கப்படாமல் பாதுகாத்தல்.

ஆக, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து தெளிவான, வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து, அவற்றை விரைந்து செயல்படுத்திட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே திருப்திகரமான பருவமழை, அதிகரித்துவரும் ஏற்றுமதி, முக்கிய தொழில் துறைகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி ஆகிய சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும்!

முழு கட்டுரையைப் படிக்க →