முகப்பு
கட்டுரைகள்

இயற்கையைக் காப்போம்

அண்மையில் அடுத்தடுத்து இரு செய்திகள் நாளேடுகளில் வந்தன. ஒன்று, ஒடிஸாவை அச்சுறுத்திய "பாய்லின்' புயல், கரையைக் கடந்த போது பல ஊர்கள் சீர்குலைந்தாலும், மக்களுக்கு புயல் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்ட செய்தி.

கட்டுரைகள்

இயற்கையைக் காப்போம்

அண்மையில் அடுத்தடுத்து இரு செய்திகள் நாளேடுகளில் வந்தன. ஒன்று, ஒடிஸாவை அச்சுறுத்திய "பாய்லின்' புயல், கரையைக் கடந்த போது பல ஊர்கள் சீர்குலைந்தாலும், மக்களுக்கு புயல் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்ட செய்தி.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

அண்மையில் அடுத்தடுத்து இரு செய்திகள் நாளேடுகளில் வந்தன. ஒன்று, ஒடிஸாவை அச்சுறுத்திய "பாய்லின்' புயல், கரையைக் கடந்த போது பல ஊர்கள் சீர்குலைந்தாலும், மக்களுக்கு புயல் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்ட செய்தி.

அடுத்த செய்தி; மத்தியப் பிரதேசத்தில் ஒரு கோயில் வழிபாட்டுக்குச் சென்றவர்கள், வதந்தி காரணமாக முண்டியடித்துக் கொண்டு சென்றதால் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். முன்னது இயற்கைப் பேரழிவு. பின்னது மனிதச் சீரழிவு. இந்த இரண்டு செய்திகளும் எதைக் காட்டுகின்றன?

அறிவியலின் துணையால் இயற்கை விளைவிக்கும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளோம். அதே சமயத்தில், அச்சத்தாலும், அறியாமையாலும், வழிதவறி நம்மை நாம் காத்துக் கொள்ள வழியின்றியிருக்கிறோம். இயற்கையை பெருமளவு அறிவியலால் வென்றுவிட்டோம்; ஆனால் மனித இயற்கையை, அதன் சில அடிப்படைக் குறைகளை, ஆசைகளையும், அச்சங்களையும் இன்னும் வெல்லவில்லை. இதனால் வழிபாடு தவறு என்பது அர்த்தமில்லை. விபத்து நேர்ந்ததற்கு வழிபாட்டுணர்வு காரணமல்ல. அதைச் செய்வதற்கு சரியான வழிமுறைகளை வகுத்துச் செயல்படாததுதான் காரணம்.

இயற்கைப் பேரழிவுகளிலிருந்து காத்துக் கொள்ளக் கற்றுக் கொண்ட நாம், மனிதக் குறைபாடுகளால் ஏற்படும் சீரழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் ஆசையும் அச்சமும் அறியாமையும்தான். தேவைகளை நிறைவேற்ற விரும்புவது தவறில்லை. நம்முடைய ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணராததே இன்றைய வாழ்வின் சிக்கல்.

மகாத்மா காந்தியும், "இந்த பூமியில் நம் எல்லாரது தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான வளங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற அதனால் முடியாது'. இப்படிப்பட்ட பேராசைதான், இயற்கைச் சூழல் கெட்டதற்கும் அதன் வளங்கள் வற்றியதற்கும், இயற்கைப் பேரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

ஆசையும், அச்சமும்தான் மனித வரலாற்றில் நிகழ்ந்த நிகழும் கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும், போர்களுக்கும் காரணங்கள். இவைகள் எல்லாம் மனிதன் மனிதனோடு மோதியதால் விளைந்த அழிவுகள். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு பேரழிவு பிரபஞ்சத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அது மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழாமல், இயற்கையை மாசுபடுத்தியதால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களும், புவி வெப்பமயமாவதுமே. தொழிற்சாலைகளை உருவாக்க இயற்கையின் எழிற்சோலைகளை மனிதன் அழிப்பதால் நல்ல காற்றும், குடிநீரும் குறைந்து போய்விட்டன.

இயற்கை மனித உலகின் அங்கமல்ல. மனிதன்தான் இயற்கையின் அங்கம். இதை உணராமல், இயற்கையை நாம் அழிப்பது, நம் தாயையே அழிப்பதாகும்.

தொழிற்சாலைகளிலிருந்தும் எரிபொருள் பயன்பாட்டிலும் வரும் கரியமில வாயு, வான்மண்டலத்தைத் தாக்குவதால், புவி வெப்பம் கூடிக்கொண்டே போகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது.

இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால், நீருக்காகவும் நிலத்துக்காகவும், காற்றுக்காகவும் மனிதன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இது உலகளாவிய சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனித குலத்தின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

பொருளாதாரம் உலகமயமானதுபோல், இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதும் உலகப் பிரச்னையாகிவிட்டது. இதனை மூன்றாம் உலகப் போர் என்றும் கூறுகிறார்கள். இந்தப் பேரழிவைத் தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

பிரிட்டிஷ் அயல்நாட்டுச் செயலர் மார்கரெட் பெக்கர், 2007-இல் கூறியது: "பருவ நிலைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருவது வெளியிலிருந்து இல்லை; நமக்குள்ளிருந்தே. நாம் அனைவருமே நம் பகைவர்களாகி விட்டோம்.

இது பாதிப்பது எந்த ஒரு தனி நாட்டையும் அல்ல; எல்லா நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பையே. இதற்காக தொழில் வளர்ச்சியைக் குறைக்க வேண்டும் என்பதல்ல. அது வளரும் நாடுகளுக்கு ஏற்புடையதல்ல. ஆனால், குறைந்தளவே கார்பனை வெளியேற்றும் முறைகளைக் கையாள வேண்டும்'.

முடிவாக, இயற்கைப் பேரழிவுகளுக்கும் மனிதச் சீரழிவுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அவற்றை நாம் கட்டுப்படுத்துவதோடு அவை வராமலிருக்க, நம் உற்பத்தி முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இணைந்து இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தால் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து மட்டுமின்றி, மனிதச் சீரழிவுகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம். இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →