அண்ணாவின் வெற்றி ரகசியம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் நான் படித்த காலத்தில் 1943இல் அண்ணாவை முதன்முறையாகச் சந்தித்தேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பிரிவில் நான் படித்த காலத்தில் 1943இல் அண்ணாவை முதன்முறையாகச் சந்தித்தேன். அண்ணன் நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் கழக ஈடுபாட்டில் சிறந்த சொற்பொழிவாளர்களாக விளங்கியவர்கள். அவர்களின் முயற்சியினால், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்ற அண்ணா அங்கு வந்திருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவருடன் பேச மாணவர்களான நாங்கள் சென்றோம்.
அமைதியாக, ஆடம்பரம் எதுவுமில்லாமல், துண்டைமட்டும் தோளில் போட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தை அண்ணா படித்துக் கொண்டிருந்தார். அன்பழகன் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். "நெடுஞ்செழியன் தம்பி - கணித எம்ஏ' என்று என்னைப்பற்றிச் சொன்னதும், அண்ணாவின் கூர்மையான பார்வை என்னை அளவிட்டது.
"ஜமீன்தார்களும், ராஜாக்களும் தலைவர்களாக இருந்து வழிநடத்தும் நீதிக் கட்சியில் எப்படி ஏழை பாழைகளுக்கு இடம் இருக்கும்?''. என்று நாங்கள் அண்ணாவிடம் கேட்போம்.
புன்னகையுடன் அண்ணா சொன்னார்: ""அதே கவலையுடன்தான் நானும் இருக்கிறேன். நீண்ட கால வரலாறு, கலாசார, நாகரிக, இலக்கிய பண்பாடுகள் மிக்க திராவிட இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நீதிக்கட்சியின் பெரும் தலைவர் டாக்டர் நடேசன் வற்புறுத்தியிருக்கிறார். அதனை நான் மதிக்கிறேன்,. இப்பொழுதுள்ள நிலைமையில் நீதிக்கட்சியிலிருந்து யாரும் விலகிவிடுவது எளிது, அந்த பிரபுக்களை நீதிக்கட்சியிலிருந்து நீக்கி விடவேண்டும், நீக்கிவிடமுடியும் என்று நினைக்கிறேன். பிறகு அது சாமான்ய மக்களின் இயக்கமாக ஆகிவிடும்''.
எங்களுடன் வந்திருந்த காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுடைய ஒரு மாணவர் கேட்டார்; ""பிரித்தாளும் இங்கிலீஷ் ஆதிக்கம் இருக்கிறவரை, இந்தப் பிரபுக்களை உங்களால் வெளியேற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?''
அண்ணா சொன்னார்; ""வெள்ளைக்கார ஆட்சியே வெளியேறும் நிலைமை வந்துவிடும் காலத்தில், இந்தப் பிரபுக்களும் நீதிக்கட்சியை விட்டு அவர்களாகவே வெளியேறி விடுவார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதிகார பலம் எங்கு இருக்கிறதோ அங்கு எல்லா வகையிலான பணபலமும் சேர்ந்துவிடத் தயாராக இருக்கும்''. அண்ணா சொல்லியது எங்களுக்குத் திருப்தியைக் கொடுத்தது.
நானும் என் நண்பர் வாணனும் - அவருடைய சொந்தப் பெயர் "வேலாயுதம்', நல்ல தமிழில் அவருக்கு நான் தந்த பெயர்தான் "வாணன் - சென்னையில் பிராட்வே வீதி அருகில் உள்ள செம்புதாஸ் தெருவில் "கார்னர் எஸ்டேட்' என்ற நான்கடுக்கு கட்டடத்தில் நான்காவது தளத்தில் ஒரு அறையில் இருந்தோம். அண்ணன் நெடுஞ்செழியன் சென்னை வந்தால், எங்கள் அறையில்தான் தங்குவார்.
ஒரு தடவை, அவருடன் அண்ணாவும் எங்கள் அறைக்கு வந்தார். அண்ணாவுக்கு அந்த இடம் பிடித்து விட்டது. மேல் மொட்டை மாடிக்குச் சென்றால் கடற் காற்று நன்கு வீசுகிறது. சிறிது தூரத்தில் இங்கிலீஷ், தமிழ் திரைப்பட அரங்குகள் பல இருக்கின்றன என்பதால் அண்ணா சென்னைக்கு வந்தால், எங்கள் அறையில் தங்க ஆரம்பித்தார்.
நான்கு, ஐந்து நாள்கள் அங்கேயே இருப்பார். கீழே இறங்கமாட்டார். அவருக்கு வேண்டிய சிற்றுண்டி, சாப்பாடு, டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, பத்திரிகைகள் எல்லாம் அங்கு வந்துவிடும். ""இருக்குமிடம் தேடி என் பசிக்கு உருக்கமுடன் வந்தால் உண்பேன்'' என்று பட்டினத்தார் பாடலை அண்ணாவே சொல்வார். அறையில் இருந்தபடியே கட்டுரைகளை எழுதி காஞ்சியில் இருந்து வெளிவந்த "திராவிடநாடு' வார இதழுக்கு அனுப்பிவிடுவார்.
என் அறையில் தங்கியிருந்த அண்ணா, நாளடைவில் என்னையும் தன்னுடைய சுற்றுப் பயணத்தில் அழைத்துக் கொண்டு சென்றார். திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியதும் அண்ணாவுக்கு முழுநேரத் துணையாக ஆனேன். அண்ணா 1962இல் மாநிலங்களவை உறுப்பினரானபோது, நானும் மக்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். நாடாளுமன்றம் அருகிலுள்ள நார்த் அவென்யூ இல்லத்தில் நானும் என் மனைவி பிரேமாவும் தங்கியிருந்தோம். தமக்கென ஒரு பெரிய வீட்டைப் பெற மறுத்து அண்ணாவும் எங்கள் இல்லத்தில் ஐந்தாண்டு காலம் டெல்லி வரும்பொழுது தங்கி விடுவார்..
அண்ணாவுடன் நெருங்கியிருந்த காரணத்தால் நான் கற்றுக்கொண்ட பாடங்கள், விதிமுறைகள் ஏராளம்.
வாழ்க்கையிலும் அரசியல் வரலாற்றிலும் தீவிரமாக, நேர்மையாக, பெருந்தன்மை உள்ளவராக அண்ணா அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் செயல்பட்டு வந்தார்.
அரசியலில் போராட்டங்களை அடிக்கடி நடத்தவேண்டும் என்பதில் கட்சி அமைப்பில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டினாலும் அண்ணா அவற்றை எற்றுக் கொண்டதில்லை. ஆயினும் போராடவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால், கழகத்தினுள் அது பற்றி முழுமையாக ஆலோசனை செய்து, கழகத்தினரையும் பொதுமக்களையும் எந்த அளவு தயார் செய்திருக்கிறோம் என்று தெளிவுபட உணர்ந்த பின்புதான், அது பற்றி செயல்பட ஆரம்பிப்பார்.
ஒரு போராட்டத்தைத் துவக்குவதற்கு முன்னதாக அதிலுள்ள சிக்கல்கள், விளைவுகள் ஆகியவற்றையும் அண்ணா பலவகைகளிலும் பார்ப்பார் என்பதை விளக்கிட 1957இல் நடைபெற்ற ஒரு சிறிய போராட்டத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதி பற்றி உள்ள குறிப்பை நீக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் முடிவெடுத்தது. அதன்படி, அந்தக் குறிப்புள்ள பகுதியின் பிரதிகளை திராவிடர் கழகத்தினர் 1957 அக்டோபர் 26 நாளன்று எரிக்கத் தலைப்பட்டனர். அதனால் பெரியார் உள்ளிட்ட 3000 பேர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களிலிருந்து மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை பெற்றனர்.
இதற்கான மசோதா சென்னைப் பேரவையில் முன்வைக்கப்பட்டபொழுது சட்டத்தின் விளைவுகளை அண்ணா குறிப்பிட்டுப் பேசினார். இதைப் போன்ற கடுமையான சட்டத்தை உருவாக்கி, பெரியார் மீது வழக்குத் தொடர ஆரம்பித்தால் அதன் பிறகு லட்சக்கணக்கான தொண்டர்கள் தமிழ் நாட்டில் தத்தம்போக்கில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
அதனையொட்டிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியையும் அண்ணா மேற்கோள் காட்டினார். ""கத்தோலிக்க மதகுரு போப் எடுக்கும் நடவடிக்கைகைகளைக் கண்டித்து ஜெர்மன் நாட்டில் மார்டின் லூதர் எழுதினார், பேசினார். ""இவ்வாறு கூறியதற்கு மன்னிப்புக் கோராவிட்டால்,, கிருத்துவ மதத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவார்'' என்று போப் பன்னிரண்டாவது ஜான் கட்டளை அனுப்பினார். மார்டின் லூதர், போப் அனுப்பிய கட்டளையை தீயிலிட்டு பொசுக்கினார். அதன்பிறகு போப் அதிகாரத்துக்கு எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் பரவி கிருத்துவ மதம் பிளவுபட்டது''.
பெரியார் எடுத்த போராட்டத்தைக் கண்டித்து அது "படுமோசமானது' என்றும் அதே போக்கில் ராஜாஜி தரும் கண்டனங்கள் "வயோதிகத்தின்' விளைவு என்றும் பிரதமர் ஜவகர்லால் நேரு கடுமையான முறையில் பேசிவிட்டார்.
நாகர்கோவிலில் 16.11.1957இல் கூடிய திமுகழகத்தின் செயற்குழு ""நேருவின் ஆணவப் போக்கைக் கண்டித்து 1958 ஜனவரி 6 அவர் சென்னைக்கு வரும்பொழுது, கருப்புக் கொடி காட்டுவது'' என்று தீர்மானித்தது.
இந்தப் போராட்டத்தை விளக்கி 1958 சனவரி 3இல் சென்னைக் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டம் போடுவது என்றும் அதில் அண்ணா, ஈவிகே சம்பத் (அப்பொழுது அவர் நாடாளுமன்ற மக்கள் அவையின் உறுப்பினர்) ஆசைத்தம்பி, நான் ஆகியவர்கள் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தை நடத்தக் கூடாது என்று சென்னை போலீஸ் தடை விதித்தது. ""தடையை மீறி கூட்டத்தில் நாங்கள் பேசப் போகிறோம்'' என்று அண்ணா அறிவித்தார்.
அப்பொழுது மாகாண முதல்வராக இருந்தவர் காமராஜர். இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களுக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் என்பதால், முன்னேற்பாடாக நாங்கள் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சிறிதுநேரம் பேசிய பிறகு நான் அன்று தூங்கிவிட்டேன்.
11 மணி அளவில் அண்ணா என்னைத் தட்டி எழுப்பினார். போலீஸார் வந்து விட்டனரோ என்று நினைத்தேன். ""நாளைக்கு நாம் என்ன செய்வது?'' என்று கேட்டார் அண்ணா. நான், ""144 தடையை மீறியதற்காக போலீஸார் நம்மைக் கைது செய்து சிறையில் போடுவார்கள். அவ்வளவுதானே'' என்றேன்.
""நம்மைக் கைது செய்யாமல் விட்டுவிட்டால்..?'' என்று அண்ணா கேட்டதற்கு, "நல்லதாகப் போயிற்று. நாம் கடற்கரைக்குப் போய்க் கூட்டத்தில் பேசுவோம்'' என்றேன்.
""அதற்கு மாறாக பேசுகிற நான்கு பேர்களை மட்டும் அனுமதித்துவிட்டு பொதுமக்களை, கழக உறுப்பினர்களை அனுமதிக்காமல் போலீஸார் விட்டுவிட்டால் என்ன செய்வது?'' என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். நான், ""நீங்கள் பேசுங்கள் நாங்கள் மூன்று பேரும் கேட்கிறோம். உங்கள் பேச்சை நான் குறிப்பெடுத்து மறுநாள் பத்திரிகைகளுக்குத் தந்து விடுகிறேன்'' என்றேன்.
அண்ணா, ""ஏதோ போலீஸார் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. நாம் கவனமாக இருக்கவேண்டும்'' என்று கவலைப்பட்டார்.
மாலை 5 மணிக்கு மேல் அண்ணாவோடு சம்பத், ஆசைத் தம்பி, நான் மூவரும் காரில் கிளம்பினோம். பின்னால் இன்னொரு காரில் மற்றவர்களுடன் கருணாநிதி வந்தார். தொடந்து பல கார்களில் தலைவர்கள் வந்தனர். கடைசியில் போலீஸ் வேன்கள் பல வந்து கொண்டிருந்தன.
போகும் வழியில் பொது மருத்துவமனை அருகில் எங்கள் காரில் இருந்தவர்களை போலீஸ் கைது செய்தது, வழக்கம்போல் சென்னை மத்திய சிறைக்கு அழைத்துக் கொண்டு போகாமல், அடையாறு காவல் நிலையத்துக்குச் சென்று சிறையில் அடைத்தார்கள், பின்னால் தொடர்ந்து வந்த கார்களில் இருந்த கருணாநிதியையும் ஓட்டுநர் உட்பட மற்றவர்களையும் கைது செய்தார்கள். மறுநாள் காலை அறிவகத்தை முற்றுகையிட்டு நெடுஞ்செழியன் அன்பழகன், மதியழகன் மற்றும் தலைவர்கள் பலரையும் கைது செய்தார்கள்.
சனவரி 6 வரை அடையாறு சிறை நிரம்பியபடி இருந்தது. இதுவும் போதாதென்று கழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் எம்ஜிஆர். கேஆர்.ராமசாமி, எஸ்எஸ்ராஜேந்திரன், டிவி நாராயணசாமி ஆகியவர்களையும் முன்னேற்பாடாக போலீஸார் கைது செய்தனர்.
ஆயினும் போலீஸாரின் அடக்குமுறைகளையும் ஏற்பாடுகளையும் மீறி, சனவரி 6 சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்க இருந்த காங்கிரஸ்காரர்களின் கூட்டத்தைவிட பன்மடங்கு அதிகமாக கருப்புக் கொடியினரின் கூட்டம் நின்றது. போலீஸாரின் தடியடியில் இருவர் உயிரிழந்தனர், பலர் சிறைச்சாலைக்கும் மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
மிகவும் சுருக்கமாக நான் குறிப்பிட்டதில் பல தலைவர்கள் கழகப் பொறுப்பாளர்கள் பெயர்களும், நிகழ்ச்சிகளும் விடுபட்டிருக்கலாம். மன்னிக்கவும்.
இதில் நான் விளக்க நினைப்பது என்னவென்றால், ஒரு நாள் போராட்டம் என்றாலும், அதில் ஏற்படக்கூடிய சாதகமான - பாதகமான விளைவுகள் எண்ணிப் பார்த்து எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய விதத்தில் அண்ணா திட்டமிட்டு செயல்பட்டதைத்தான்.
ஒரு நாள் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கும் போராட்டத்துக்குமே அண்ணா இந்த அளவு எங்களிடம் விளையக்கூடிய சாதக - பாதகங்களை ஆராய்ந்து பார்த்தார் என்றால், இதைவிட நாடு தழுவிய பெரிய நீண்ட போராட்டங்களை, அடக்குமுறைக்கு ஆளாகும் தீர்மானங்களை எடுப்பதற்கு முன், நாங்கள் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு, நிதானமாக ஆராய்ந்து விளைவுகளைச் சீர்தூக்கி கடைசியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவில் ஒரு முடிவை அண்ணா எடுப்பார்.
முடிவெடுத்தபிறகு, அதனை விளக்கிட அண்ணா ஒலிபெருக்கியை கையில் எடுத்தால் போதும். அரசியல் மேதை - ஆற்றல் மிகும் சொல்லாளர் அண்ணா தலை நிமிர்ந்து, தெளிவாக, திட்டவட்டமாக, உறுதியுடன், தங்கு தடையில்லாமல், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அவருடைய விளக்கங்களைத் தந்துகொண்டே போவார். ஆலோசனை செய்யும் பொழுது அவர் போடும் கேள்விகளால் அல்லற்படும் நாங்கள் அடைந்த சங்கடம் - ஐயப்பாடு - கவலை எல்லாம் அவருடைய பேச்சில் பறந்து விடும். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான ஆதரவு அவருடைய பேச்சின்மூலம் கிடைக்கும்.
அண்ணாவின் சமயோசிதத்திற்கும், ராஜதந்திரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்த இன்னொரு நிகழ்வு, திராவிட நாடு கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட வேண்டிய சூழ்நிலை. பல அரசியல் சட்ட வல்லுநர்களைச் சந்தித்து அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வரும்படி என்னைப் பணித்தார் அண்ணா. "இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு' என்கிற வார்த்தையை இணைத்து சமயோசிதமாக அண்ணா செயல்பட்டதுடன், "திராவிட நாடு கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும் குறிப்பிட்டு ராஜதந்திரத்துடன் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மக்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்தார்.
வள்ளுவர் எழுதிய ""எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்பதற்கு ஒப்ப, எதையும் நுணுக்கமாக எண்ணிய பிறகுதான் அண்ணா அவர்கள் ஒவ்வொரு முடிவையும் எடுத்தார். அதனால்தான் 1949இல் வெட்ட வெளியில், கொட்டும் மழையில், கையில் காசில்லாமல், மனதில் மாசில்லாமல் அவர் துவக்கிய அரசியல் அமைப்பு வளர்ந்தது, அவருடன் நின்ற நாங்களும் வளர்க்கப்பட்டோம்.
மேலே எழுதிய கட்டுரையில் உள்ள விவரங்கள், "அண்ணாவுடன் கால் நூற்றாண்டு' என்ற பெயரில் தொடர் கட்டுரை எழுத நினைத்து, அதற்காக என்னால் சேர்த்து வைக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
நாளை அண்ணா பிறந்த நாள்.
கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.