கட்டுரைகள்

அறியாமையை என்னவென்பது?

வதோதரா மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்தபோது பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி ஜசோதா பென்னின் பெயரை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார் என ஊடகங்களில் 2014 ஏப்ரல் 10இல் செய்தி வெளியானது.

எஸ். குருமூர்த்தி

வதோதரா மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்தபோது பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி ஜசோதா பென்னின் பெயரை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார் என ஊடகங்களில் 2014 ஏப்ரல் 10இல் செய்தி வெளியானது.

பெண்களின் பெருமை குறித்து பேசி வரும் நரேந்திர மோடி, தனக்குத் திருமணமாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதற்கே பல தேர்தல்கள் பிடித்துள்ளன என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நையாண்டி செய்ததை "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' 12.4.14இல் செய்தியாக வெளியிட்டது. தனது அதிரடி கருத்துகளால் பல சமயங்களில் தனது கட்சிக்கே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், திருமணமானதை மறைத்ததற்காக மோடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முழங்கினார்.

தேர்தல் சட்டத்தின் அரிச்சுவடி கூட இத்தகைய புத்திசாலித் (!) தலைவர்களுக்கும், அவர்களது ஆலோசகர்களுக்கும், ஊடகத்தினர் ஒரு சிலருக்கும் தெரியவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு கணவர் - அவர் வாக்காளராக இருந்தாலும் சரி, வேட்பாளராக இருந்தாலும் சரி - அவரது மனைவியின் பெயரைத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக, ஒரு பெண் - அவர் வாக்காளராக இருந்தாலும் சரி, வேட்பாளராக இருந்தாலும் சரி - தனது கணவர் பெயரைத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

வாக்காளர் அல்லது வேட்பாளர் தனது குடும்ப உறவுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதி 4லிலும், படிவங்கள் 2இல் பிரிவு 1, 2, 3இலும் இடம் பெற்றுள்ளன. முதல் படிவம் (பிரிவு 1) என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கானதாகும். இந்தப் படிவத்தை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவரோ பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இந்தப் படிவத்தை முன்மொழிபவர் பூர்த்தி செய்தால், அவர் வேட்பாளரின் பெயர், வேட்பாளரின் தந்தை அல்லது தாயாரின் பெயர், திருமணமான பெண்ணாக இருந்தால் கணவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். வேட்பாளரே பூர்த்தி செய்தால், அவரைப் பற்றிய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது. தனது தந்தை, தாயார், கணவர் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை. காரணம், வாக்காளர் பட்டியலில் அந்த வாக்காளர் அல்லது வேட்பாளரின் தந்தை, தாய், கணவரின் பெயர் இடம் பெற்றிருக்கும்.

ஆண் மற்றும் திருமணமாகாத பெண்ணாக இருந்தால் தந்தையின் பெயரும், திருமணமான பெண் மற்றும் விதவையாக இருந்தால் கணவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 2012இல் வெளியிட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவரின் பெயருடன் மனைவியின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும் என்று எங்குமே தெரிவிக்கப்படவில்லை.

வாக்களிக்கத் தகுதி உள்ள நபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தால், படிவம் 6ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். திருமணமாகாத பெண்ணாக இருந்தால் தனது தந்தை அல்லது தாயாரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். திருமணமான பெண்ணாக இருந்தால் கணவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். திருமணமான ஆணாக இருந்தால், அவர் தனது திருமண நிலை பற்றியோ, தனது மனைவியின் பெயரையோ குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

அதேபோல, வாக்காளர் பட்டியலில் ஏதாவது குளறுபடி இருந்தால், அதில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதிலும் கூட திருமணமாகாத பெண் தந்தையின் பெயரையும், திருமணமான பெண் கணவரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்றுதான் உள்ளது. வாக்காளர் பெண்ணாக இருந்தால் தந்தை அல்லது கணவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்பதையும், ஆணாக இருந்தால் மனைவியின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை என்பதையும் தேர்தல் விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

அப்படியானால், திருமணமான வேட்பாளர் தனது மனைவியின் பெயரைக் குறிப்பிட வேண்டியது தேவையில்லையா என்று கேட்டால், நேரடியாகக் கூறுவதென்றால் தேவையில்லை என்பதுதான் பதில். ஆனால், 2013 செப்டம்பர் 30க்குப் பிறகு நிலை மாறிவிட்டது. அரசு சட்டம் இயற்றியதால் இது நிகழவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளால் இந்த நிலை ஏற்பட்டது.

தேர்தல் தொடர்பான ஒரு வழக்கில் 2003இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதையடுத்து, ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து, கடன்கள், தனது கணவர் அல்லது மனைவியின் சொத்து, கடன்கள், தன்னைச் சார்ந்தவர்களின் சொத்து, கடன்கள் குறித்த விவரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் (படிவம் 26) குறிப்பிட வேண்டும் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியது. வேட்பாளர் திருமணமானவராக இருந்தால் மனைவியின் பான் அட்டை எண், வருமான நிலவரம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி யிடுவதற்காக பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் 2013 மே 10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தபோது, மனைவியின் பெயர் என்ற இடத்தில் "ஒன்றுமில்லை' (nil) என்றும், பான் எண் மற்றும் வருமான நிலவரம் பற்றிய இடத்தில் "பொருத்தமற்றது' (not applicable) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏன் தெரியுமா? அவரது மனைவிக்கு பான் எண் இல்லை. இல்லத்தரசியாதலால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை.

வேட்பாளரின் மனைவிக்கு சொத்து இருந்தாலோ அல்லது வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டினாலோதான் மனைவியைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று அந்த சமயத்தில் அந்தச் சட்டம் பற்றி புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக 2013 மே மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவரது ஆலோசகர்கள் எந்தவிதமான ஆலோசனைகளை வழங்கியிருப்பார்களோ, நரேந்திர மோடி 2012 நவம்பர் 29இல் வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவரது ஆலோசகர்களும் அதே விதமான ஆலோசனைகளையே வழங்கியிருப்பார்கள் என்பது தெளிவு.

எனவேதான், மன்மோகன் சிங் செய்ததைப் போலவே, நரேந்திர மோடியும் மனைவியின் பெயரையோ, அவரது வருமான வரி விவரங்களையோ தெரிவிக்கவில்லை. மன்மோகன் சிங்கோ, மோடியோ தங்களுக்குத் திருமணமானது என்பதை பிரமாணப் பத்திரத்தில் மறுக்கவில்லை. தங்கள் மனைவியின் வருமானம் பற்றிய விவரங்களை, படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டுமோ அந்த முறையில் பூர்த்தி செய்திருந்தனர். தனது மனைவி குருசரண் கெளரின் பெயரைக் குறிப்பிடாததால் மன்மோகன் சிங் தனது மனைவிக்கு எந்தவித அவமரியாதையையும் இழைக்கவில்லை. அப்படியிருக்கும்போது, தனது மனைவியின் பெயரைக் குறிப்பிடாததால் மோடி தனது மனைவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்று எப்படி கூற முடியும்?

ஆனால், பிரமாணப் பத்திரத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வேட்பாளர் பூர்த்தி செய்தால்தான் வேட்பு மனுவை ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 13.9.2013இல் உத்தரவிட்டது. பிரமாணப் பத்திரத்தில் கேட்கப்பட்டுள்ள எந்த விவரத்தையும் பூர்த்தி செய்யாமல் விடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தர

விட்டது.

அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, பிரமாணப் பத்திரத்தில் (படிவம் 26) எந்தப் பகுதியையும் பூர்த்தி செய்யாமல் வெறுமனே விடக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் 30.9.2013இல் அறிவிக்கை வெளியிட்டது. 30.9.2013க்கு முன், மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் சில பகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் விட்டதன் மூலம் அவர் எந்தவிதமான சட்ட மீறலும் செய்யவில்லை என்பதைச் சொல்வதற்கு ஒரு நிபுணராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இப்போதும் கூட தனது மனைவியின் பெயரை மோடி குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. தனது மனைவியின் வருமான வரி விவரங்கள் தெரிந்திருந்தால் அதைத்தான் அவர் குறிப்பிட வேண்டும். இருப்பினும், கட்டாயமில்லாதபோதும், அவர் தனது மனைவியின் பெயரை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவியின் பெயரைக் குறிப்பிடாதது குறித்து புகார் கூறும் ராகுல் காந்தி, முன்னதாக 29.11.2012இல் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தபோது இருந்த விதிகள் பற்றியும் அறிந்திருக்கவில்லை; 30.9.2013 இல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கைக்குப் பின்னர் உள்ள புதிய விதிமுறைகளைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. தனது மனைவிக்கு மரியாதை அளிக்கும் விதமாகவே வேட்புமனுவில் மனைவியின் பெயரை வேட்பாளர் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது என்றே ராகுல் காந்தி கருதுகிறார் போலும்.

ராகுல் காந்தியின் அறியாமையை வெளிப்படுத்தாமல், எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் அவரது கருத்துகளை வெளியிட்டதென்பது ஊடகத்தினர் ஒரு சிலரின் அறியாமையையோ அல்லது உடந்தையாக இருக்கும் தன்மையையோதான் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ஜனநாயகத்தின் தாண்டவம் என்று சிலர்

கூறுகிறார்களோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT