முகப்பு
கட்டுரைகள்

தேர்தலும் எதிர்பார்ப்பும்

மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல் என்பது வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களில் பெரும்பான்மையரால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல் என்பது வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களில் பெரும்பான்மையரால் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடைய அமைச்சரவை அரசு நிர்வாகத்தை வழிநடத்துவது மட்டுமல்லாமல், மக்களுக்குத் தேவையான சட்ட திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்ற வகை செய்யப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் ஆரம்ப காலத்தில் அரசர் பார்த்து எவரையும் - அவர் பாரம்பரிய பிரபுவாக இருக்கலாம் அல்லது மன்னருடைய நம்பிக்கையைப் பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும் இருக்கலாம் - பிரதமராக நியமிக்க முடியும். அப்பொழுது பிரபுக்களின் ஆலோசனையின்படிதான் மன்னர் ஆட்சி செய்தார். ஆயினும் மன்னருக்கும் அரசாங்கத்துக்கும் தேவையான நிதிகள் தேவைப்பட்டபொழுது மக்கள் பிரதிநிதிகளை அழைத்து வரிகளை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைக்கு சாமான்யர்கள் சபை (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) என்ற பெயர்தான் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் இன்றளவும் நீடிக்கிறது.

17ஆம் நூற்றாண்டில் சாமான்யர் சபையில் இருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் - ஸ்டூவர்ட் மன்னர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு இருவரிடையே கடும் போராக மாறி, முடிவில் சாமான்யர் சபையின் அதிகாரம் அதிகரித்தது. வரவு செலவுகளை நிர்ணயிப்பது, முக்கியமான சட்ட திட்டங்களை முடிவு செய்வது ஆகியவை சாமான்யர் சபையின் தனிப்பட்ட அதிகாரமாகின.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்தில் பிரபுக்கள் சபைக்கும் சாமான்யர் சபைக்கும் மீண்டும் ஒரு பெரும் போராட்டம் ஏற்பட்டு, கடைசியில் முடிவு ஏற்பட்டது. அதாவது, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பொதுத் தேர்தலில் சாமான்யர் சபையில் பெரும்பான்மை பெற்றிருப்பவரும், அந்த அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ள ஒருவர்தான் பிரதமராக ஆக முடியும் என்பதாகும்.

மாமன்னர் பரம்பரைக்குத் தெரிந்தவர், பிரபு வம்சத்தில் பிரபலமானவர் என்று பிரதம மந்திரியாக முன்பு இங்கிலாந்தில் இருந்த நாடாளுமன்ற நிலைமை அடியோடு மாறிவிட்டது.

இங்கிலாந்து நாடாளுமன்ற அரசியலில் பிரதம மந்திரி பற்றி எடுக்கப்பட்ட முடிவை கடந்த நூறாண்டு காலத்தில் இம்மியும் மாறாது கடைப்பிடித்து வருகிறார்கள். அதனால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் இன்றும் அங்கு நலிவடைந்து விடவில்லை.

பிரதம மந்திரி பற்றி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவைப் பின்பற்றி இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் தெளிவான முடிவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 1966 ஏப்ரல் மாதம் இந்திய நாடாளுமன்றத்திலும் கிளம்பியது.

1966 ஜனவரி மாதத்தில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மறைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் முயற்சியால் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக ஆனார். 1966இல் அமைந்த லால்பகதூர் சாஸ்திரி மந்திரிசபையில் இந்திரா காந்தி செய்தி - ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது அவர் நாடாளுமன்ற இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இல்லை. எனவே அப்பொழுது 1964 ஏப்ரல் மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவையில் உறுப்பினராக இல்லாதவர் பிரதமராக பொறுப்பேற்கக் கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரும் தனிநபர் மசோதாவை இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெரும் பங்கு வகித்த ஹெச்.வி.காமத் மக்கள் சபையில் முன்வைத்தார். அதன்படி, பிரதமராகப் பதவி ஏற்பவர் மக்களவையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்றும், உறுப்பினராக இல்லாதவர் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதன்மீதான விவாதம் 1966 ஏப்ரல் மாதத்தில் நடந்தது.

இந்த விவாதத்தில் 32 பேர் கலந்துகொண்டனர். அதில் 19 காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் தவிர, ஹரீஷ் சந்திர மாத்தூர், ஆர்.கே. கடில்காரர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் மிகவும் அழுத்தமாக காமத் முன்வைத்த மசோதாவின் அடிப்படையான நாடாளுமன்ற முறையை ஆதரித்தனர்.

ஹெச்.வி. காமத் மசோதாவின் கொள்கையை காங்கிரஸ் தலைவர்கள் முழுமையாக வரவேற்பதாகவும், ஆனாலும் அதை அரசமைப்புச் சட்டத் திருத்தமாக உடனடியாக ஆக்காமல், குறுகிய கால அளவுக்கு வைத்துக்கொண்டு, இங்கிலாந்து கடைப்பிடிக்கும் முடிவை நாமும் ஒரு மரபாக (கன்வென்ஷன்) வைத்துக்கொள்ளலாம் என்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

1967, 1971 தேர்தல்களில் இந்திரா காந்தி போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக வந்தார். அதனால் காமத் எழுப்பிய கோரிக்கை ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆனது.

1991இல் பி.வி. நரசிம்மராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அவர் உறுப்பினராக இல்லை. ஆயினும் ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளில் அவர் மக்கள் சபை உறுப்பினராக ஆனார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் பிரதமராகத் தொடர்ந்த அவலம் 1996இல் ஏற்பட்டது. ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக 10 மாதங்கள் பதவி வகித்த தேவெ கௌடா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஆனால், தொடர்ந்து பத்து ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் பிரதமராகத் தொடர்ந்தது மன்மோகன் சிங்தான்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் "கட்சி' என்ற சொல் எந்த இடத்திலும் வரவில்லை. எனவே, சட்டப்படி தேர்தலில் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 543 இடங்களையுடைய மக்கள் சபைக்கான தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஒருமித்து, கட்சிகள் சார்பற்ற 543 நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிடலாம்.

அந்த 543 பேரில் 273க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒருவரைக் குடியரசுத் தலைவர் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுத்து விடலாம். அத்தகைய பிரதமர் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான ஆதரவு நீடித்திருக்கும் வரை மந்திரிசபை அமைத்து அரசாங்கத்தை நடத்தலாம்.

ஆயினும் 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மற்ற அரசியல் கட்சிகளும் தத்தம் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து வாக்காளர்களின் ஆதரவைப் பெற முற்பட்டன. வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான விதிமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்தது. அரசியல் கட்சிகளை தேசிய அளவில், மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என்று நிர்ணயம் செய்தது.

அந்த வகையில் 1957 தேர்தலில் 4 தேசியக் கட்சிகள், 15 மாநிலக் கட்சிகள் இருந்தன. தற்போது 2014இல் 6 தேசியக் கட்சிகள், 54 மாநிலக் கட்சிகள், 1,563 அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன எனத் தெரிகிறது. இவைகளில் எந்தக் கட்சி மக்கள் சபையில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் அல்லது பெரும்பான்மை பலத்தை எட்டிப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியவரும்.

1989க்குப் பிறகு நடைபெற்ற எந்த பொதுத் தேர்தலிலும் தனிப்பட்ட எந்த ஒரு கட்சியாலும் மக்கள்சபையில் பெரும்பான்மையான பலத்தைப் பெற்று மத்திய அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை.

எல்லாவற்றையும்விட பொதுத் தேர்தலில் போட்டியிடாத ஒருவர், அதற்கு முன்பு போட்டியிட்டபோது வெற்றி பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ஒரு மகானுபாவர் தேர்தலுக்கு பிறகு பிரதம மந்திரியான விசித்திரம் 2004இல்தான் நடந்தது.

1946 முதல் 1949 வரை ஆலோசனை செய்த இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை, இங்கிலாந்து நாட்டில் வேரூன்றிய நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையில் இந்தியாவின் அரசமைப்பை உருவாக்கியது. இங்கிலாந்து நாட்டில் மரபு வழியாக நாடாளுமன்ற ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு நிலைபெற்றிருக்கிறது. அதேபோல் 1966இல் காங்கிரஸ் உறுப்பினர்களாலும் காங்கிரஸ் அரசாங்கத்தாலும் கடைப்பிடிக்கப்பட்ட மரபு முறை 2004 முதல் 2014 வரையான பத்தாண்டு காலத்தில், கற்பனையாய், கனவாய், பழங்கதையாய்போய் கைவிடப்பட்டுவிட்டது.

இந்தியாவில் வாக்காளர்கள் பெரும் அளவில் ஒரு கட்சிக்கு அல்லது கட்சியின் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவதால் மட்டும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் மூலம் வாக்காளர்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளும், அதற்கும் மேலாக நாடாளுமன்றத்தின் மாண்பும், மக்களாட்சி முறையின் அடிப்படையான உரிமைகளும் காப்பாற்றப்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது.

உதாரணமாக, அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.) கட்சியை ஆரம்பித்தார். 2009 பொதுத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் ஆர்.எல்.டி. இணைந்து அதற்கு ஒதுக்கப்பட்ட ஏழு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் போட்டியிட்ட ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஆர்.எல்.டி. ஐந்து தொகுதிகளில் பிரமிக்கத்தக்க அளவில் வெற்றி பெற்றது.

அஜித் சிங் கட்சியின் ஐந்து வேட்பாளர்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 13,94,203. அவர்களை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 3,81,936.

இது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியின் மீது, காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதானே கருதப்பட வேண்டும்?

ஆனால் 2012 டிசம்பர் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அஜித் சிங் ஐக்கியமானார். அமைச்சரவையில் விமானத்துறை அமைச்சராக அவருக்கு பதவி தரப்பட்டது. இதுவரை தொடர்ந்து அமைச்சராக இருந்து

வருகிறார்.

அப்படியானால் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் அஜித் சிங் கட்சிக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்த 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் நம்பிக்கை பொய்த்தது என்றுதானே பொருள்? அவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே சொல்ல வேண்டும்!

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மக்களுக்குக் கிடைக்கும் பெரும் வாய்ப்பு, அவர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வழங்கும் ஆதரவு, நாட்டின் எதிர்காலத்திற்கும் நாடாளுமன்றத்தின் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் மாட்சிதரும் நல்வாய்ப்பாக இருக்க வேண்டுமே தவிர நம்பிக்கை துரோகமாகிவிடக் கூடாது.

மரபுகள் பின்பற்றப்படுவதில்லை. நாடாளுமன்றத்தின் கெüரவம் காப்பாற்றப்படுவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அரசியல் கட்சிகளாலும், உறுப்பினர்களாலும் மதிக்கப்படுவதில்லை.

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களால் இந்திய ஜனநாயகம் வேரூன்றித் தழைத்த நாள்களையும், அவசரநிலை கால எதேச்சதிகாரப் போக்கை முறியடித்து மக்களாட்சியை மீட்டெடுத்த நாள்களையும் பார்த்த என்போன்றவர்கள் இன்றைய நாடாளுமன்றத்தின் தரத்தையும், செயல்பாடுகளையும் பார்த்து வேதனைப்படுவதல்லாமல் வேறென்ன செய்ய முடியும்?

மனித இனம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் நடை போடுகிறது. 14ஆவது மற்றும் 15ஆவது நாடாளுமன்றங்களின் செயல்பாடுகளும், நிர்வாகத்தின் நடைமுறைகளும் பாராட்டும்படியாக இருக்கவில்லை. 1977இல் மக்கள் மன்றம் ஆறாவது மக்களவைத் தேர்தலில் அளித்த தீர்ப்பின் மூலம் எதேச்சதிகாரப் போக்குக்கு வித்திட்ட அவசரநிலைச் சட்டத்தை அகற்றியது. இந்திய ஜனநாயகத்தைப் பீடித்திருக்கும் அவலத்தை வேரறுத்து, மீண்டும் நிஜமான மக்களாட்சியை மலரச் செய்யுமா 16ஆவது மக்களவைக்கு நடைபெற இருக்கும் இந்தத் தேர்தல்? எதிர்பார்ப்புகளுடன் என் போன்றோர் காத்திருக்கிறோம்!

முழு கட்டுரையைப் படிக்க →