இலக்கையே சிதறடிக்கும் கடன் தள்ளுபடி
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்திலும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசின.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்திலும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசின. அதில் ஒன்றும் விசேஷமில்லை. ஆனால், சுய உதவிக் குழுக்கள் வாங்கியுள்ள வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதி நாட்டின் மற்ற மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த வல்லதாகும். ÷
சுய உதவிக் குழுக்களின் வங்கிக் கடன் தள்ளுபடி என்பது, சுய உதவிக் குழுக்கள் எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கங்கள் சுய உதவிக் குழுவின் முன்னோடி மாநிலமான ஆந்திரத்திலேயே சிதைவதற்கு காரணமாகிவிடும்.
2012ஆம் ஆண்டின் குறுநிதி நிலவர அறிக்கையின்படி, 2012 வரை வங்கிக் கடன் பெற்ற 43.5 லட்சம் சுய உதவிக் குழுக்களில், ஆந்திரத்தில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சம் சுய உதவிக் குழுக்கள் கடன் பெற்றுள்ளன. இது மொத்தத்தில் 32.17 சதவீதம் ஆகும். நாட்டில் உள்ள மொத்த சுய உதவிக் குழுக்களின் நிலுவைக் கடன் ரூ.36,341.47 கோடியாகும். இதில் ஆந்திர சுய உதவிக் குழுவினரின் பங்கு ரூ.15,341.72 கோடியாகும். இது மொத்தத்தில் 42.21 சதவீதம் ஆகும்.
Advertisement
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் மட்டுமே நாட்டில் உள்ள சுய உதவிக் குழுவினரின் மொத்த வங்கிக் கடனில் 53.78 சதவீதத்தைப் பெற்றுள்ளனர். இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் மட்டுமே வங்கிக் கடனில் 69.42 சதவீதம் நிலுவைத் தொகை வைத்துள்ளனர்.
இந்தியாவில் அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் மேற்கொண்ட வெற்றிகரமான ஒரு சில சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களில் சுய உதவிக் குழு திட்டமும் ஒன்று. சேமிப்பு தொடர்புடைய 79.6 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 10.4 கோடி பேர் - பெரும்பாலும் பெண்கள் - ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக குறுநிதி நிலவர அறிக்கை தெரிவிக்கிறது. சுய உதவிக் குழுக்களின் சேமிப்புக் கணக்கில் ரூ.6,551 கோடி உள்ளது. இது அந்தக் குழுக்களின் கடனில் 18 சதவீதம் ஆகும்.
தனி நபர்களுக்கு கடன் வழங்கும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (ஐ.ஆர்.டி.பி.) போன்ற திட்டங்களைவிட சுய உதவிக் குழுக்களின் மூலம் கடன் வழங்குவது சிறந்த முறையாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இந்த முறையில் அடமானப் பொருள் எதுவும் கேட்கப்படுவதில்லை. இருப்பினும், கடனைத் திரும்ப வசூலிப்பதில் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. ஏழைகளுக்கான வேறு எந்த திட்டத்திலும் இத்தகையதொரு வெற்றி கிடைக்கவில்லை.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுய உதவிக் குழுக்களின் வெற்றியைக் கண்டு கொண்ட தனியார் குறுநிதி நிறுவனங்கள், இந்த சுய உதவிக் குழுக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தின. சமுதாய அடிப்படையில் இயங்கும் சுய உதவிக் குழுக்களை "முறையான குறுநிதி' என்றும், பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ள, லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ள தனியார் குறுநிதி நிறுவனங்களை முறைசாரா குறுநிதி என்றும் வகைப்படுத்தலாம்.
இந்த வகையான தனியார் குறுநிதி நிறுவனங்களின் தலையீடு இல்லையெனில், குறுநிதி அமைப்புகளிலேயே சுய உதவிக் குழு அமைப்புதான் சிறந்தது என்று கூற முடியும். மிகவும் புகழப்படுகின்ற வங்கதேசத்தின் கிராமீண் வங்கி மாதிரியை விட சுய உதவிக் குழு அமைப்பு மிகவும் சிறந்ததாகும். ஆனால், அப்படி ஒரு நிலை ஏற்பட இந்த தனியார் குறுநிதி நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.
கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தனியார் குறுநிதி நிறுவனங்கள் அதிக தொகையை, அதிக வட்டிக்கு ஏழைப் பெண்களுக்கு வழங்கின. சில நிறுவனங்கள் 24 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வட்டி வசூலித்தன. சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியை விட இந்த தனியார் குறுநிதி நிறுவனங்களின் வளர்ச்சி படு வேகமாக இருந்தது. தனியார் குறுநிதி நிறுவனங்கள் வெறும் 4 ஆண்டுகளில் 20 மடங்கு வளர்ச்சி பெற்றன. 2005இல் தனியார் குறுநிதி நிறுவனங்களின் நிலுவை வங்கிக் கடன் ரூ.897 கோடியாக இருந்தது. இது 2010இல் ரூ.18,344 கோடியாக அதிகரித்தது.
எங்கு சுய உதவிக் குழுக்கள் வெற்றிகரமாக செயல்பட்டனவோ, அங்குதான் தனியார் குறுநிதி நிறுவனங்களும் கவனம் செலுத்தின. குறுநிதி நிலவர அறிக்கையின்படி, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் குறுநிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் சதவீதம் 63 ஆகும். இதில், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றது 34.46 சதவீதம்.
கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால், குறுநிதி நிறுவனங்கள் கடன்களை தாராளமாக அள்ளி வழங்கின. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏழைகளை விட 6.35 மடங்கு கடன்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஏழையும் சராசரியாக 6-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றுள்ளார் என்பதே இதன் பொருள். இந்த விகிதம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தில் முறையே 2.77, 2.49, 1.74 ஆகும்.
தனியார் குறுநிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக கடன் தொகை பெற்றதாலும், அதிக வட்டி விகிதம் காரணமாகவும், கடன் பெற்றவர்களால் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. கடன் கொடுத்த நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகளால் விழித்துக் கொண்ட ஆந்திர அரசு, இந்த தனியார் குறுநிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றியது. இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஏற்கெனவே கொடுத்தது போன்ற நெருக்கடியை இந்த நிறுவனங்களால் கொடுக்க முடியவில்லை. முன்னர் அளித்ததுபோல, தங்கள் இஷ்டத்துக்கு வரம்பில்லாமல் கடனும் அளிக்க முடியவில்லை. இதனால், குறுநிதி நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்தன. தொழில் துறையினர் இதை நெருக்கடி என்று வர்ணித்தனர்.
ஆனால், இது ஏழைகளுக்கு நிவாரணமாக அமைந்தது. புதிதாக கடன்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும், 2012 மார்ச்சில் குறுநிதி நிறுவனங்கள் அளித்த கடன் தொகை ரூ.20,913 கோடியாக இருந்தது. இதில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, கடன் வசூலாகாததாலும், வட்டி சேர்ந்ததாலும் இருக்கும் என்றே கருத வேண்டும்.
கொள்ளை லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட தனியார் குறுநிதி நிறுவனங்களை அனுமதிப்பது என்ற அரசின் கொள்கை, ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்த சிறந்த குறுநிதி அமைப்புக்கு பாதகமாக ஆனது. சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாக கடன் வழங்குவதற்குப் பதிலாக, தனியார் குறுநிதி நிறுவனங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வங்கிகள் தாராளமாக பணத்தை அளித்தன.
அத்தகைய நிதி நிறுவனங்கள், அதிக லாபம் ஈட்டுவதற்காக மிக அதிகமான வட்டி விகிதத்தில் ஏழைகளுக்கு கடன் வழங்கின. 2012 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1960 குறுநிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.11,450.35 கோடியை வழங்கியுள்ளன. இதில் 179 குறுநிதி நிறுவனங்களிடம் இருந்து வாராக் கடனான ரூ.254.34 கோடியும் அடக்கம்.
வங்கிகளுடன் இணைந்த சுய உதவிக் குழுக்களுக்கு நிகராக குறுநிதி நிறுவனங்களை அனுமதித்ததன் மூலம் அரசு தவறிழைத்தது. அத்துடன் "சுவர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் யோஜனா'வை (கிராமத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் திட்டம்) அறிமுகப்படுத்தியதன் மூலம் சுய உதவிக் குழுக்களின் கடன் கொடுக்கும் நடவடிக்கைக்கு அரசு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தனியார் குறுநிதி நிறுவனங்களுக்கு பெருமளவு நிதி வங்கிகள் மூலம்தான் கிடைக்கிறது. மார்ச் 2012 வரை வங்கிகள் ரூ.46,11,852 கோடி கடன் அளித்துள்ளன. அதில் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட கடன் ரூ.36,341.47 கோடிதான். இது வங்கிகள் அளித்த ஒட்டுமொத்த கடனில் 0.78 சதவீதம்தான்.
இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி 2013 மார்ச்சில் நாடு முழுவதும் 155 வங்கிகள் 1,09,811 கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 64 மண்டல ஊரக வங்கிகள் ஆகும். இவற்றுக்கு நாடு முழுவதும் 17,564 கிளைகள் உள்ளன. அத்துடன் நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிக் கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் அலுவலகங்களையும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் அளிக்கப் பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும் அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தனியார் குறுநிதி நிறுவனங்கள் என்பது தேவையில்லாதது. சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதும் தேவையில்லாதது. அப்படி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால், இப்படிப்பட்ட நிலை தோன்றக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி என்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கப் போவதுமில்லை; ஏழைப் பெண்களுக்கு வருமானத்தைப் பெருக்கப் போவதுமில்லை. அதற்கு பதிலாக கடன் தள்ளுபடி செய்வது என்பது இத்தகைய இலக்குகளுக்கு எதிரானதாக அமைந்து விடும்.