நிதி நிறுவனங்களும் வங்கிகளாகலாம்
அண்மையில், இரண்டு வகை புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளின் முன் வடிவத்தை (டிராப்ட்) அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஒன்று "பேமெண்ட் வங்கி' எனப்படும் பணம் பட்டுவாடா செய்வதை முக்கிய தொழிலாகக் கொண்ட வங்கிகள்; இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்காது.
அண்மையில், இரண்டு வகை புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளின் முன் வடிவத்தை (டிராப்ட்) அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஒன்று "பேமெண்ட் வங்கி' எனப்படும் பணம் பட்டுவாடா செய்வதை முக்கிய தொழிலாகக் கொண்ட வங்கிகள்; இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்காது.
இரண்டாவது வகை வங்கிகள் சிறிய வங்கிகள். இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?
2012-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட "வங்கிச் சட்டத் திருத்த மசோதா' மூலம், புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் "டெபாசிட்' தொகைக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கில் விரிவான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, தனியார் துறையில் 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் புதிய வங்கி அமைக்லாம் என ரிசர்வ் வங்கி 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தது.
பொதுத் துறையில் இந்திய அஞ்சல் துறை, ஐ.எஃப்.சி.ஐ., எல்.ஐ.சி., வீட்டுக் கடன் வசதி நிறுவனம் மற்றும் தனியார் துறையில் ரிலையன்ஸ் கேபிட்டல், ஆதித்ய பிர்லா குழுமம், எல் அண்ட் டி பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ரிசர்வ் வங்கியால் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியாக ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த பந்தன் பைனான்ஷியல் சர்வீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே புதிய வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியது. அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தகவலைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சில குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை மட்டுமே வழங்கக்கூடிய வித்தியாசமான வங்கிகளுக்கான அனுமதி தரப்பட உள்ளது என்று அவர் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான் மேற்கூறிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் தன் பட்ஜெட்டில் புது வகையான வங்கிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
"பேமெண்ட்' வங்கி மற்றும் சிறிய வங்கி என்கிற இரண்டு வெவ்வேறு வகையான வங்கிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம், தொடக்க மூலதனம் ரூ.100 கோடி மட்டுமே என்பதாகும். (முழு அளவிலான வங்கிகளுக்கு மூலதனம் ரூ.500 கோடி.)
வங்கியைத் தொடங்குவதற்கு முன்வரும் "புரமோட்டர்ஸ்' 40 சதவீதம் மூலதனம் செலுத்தினால் போதுமானது. மீத மூலதனத்தை பங்குகளாகத் திரட்டலாம். வங்கியைத் தொடங்குபவர்களின் மூலதனமான 40 சதவீத மூலதனத்தை, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்.
அதேபோல், வங்கியைத் தொடங்குபவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக மூலதனம் செலுத்தியிருந்தால், 3 ஆண்டுகளுக்குள் தங்களது மூலதனத்தை 40 சதவீத அளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் தங்கள் மூலதனத்தை 30 சதவீதமாகவும், வங்கித் தொடங்கிய 12 ஆண்டுகளுக்குள் 26 சதவீதமாகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நியதியின் மூலம் வங்கியைத் தொடங்குபவர்களின் கை எப்போதுமே ஓங்கி இருக்கக்காது என்பதும், நாளடைவில் வங்கியின் பங்குகள் பரவலாக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கவை.
பேமெண்ட் வங்கியில் அந்நிய நேரடி முதலீடு என்பது அவ்வப்போது நிலவும் விதிமுறைகளுக்கு ஏற்ப அமையும் என்கிறது ரிசர்வ் வங்கி.
வங்கி சாராத பைனான்ஸ் நிறுவனங்கள், "பிஸினெஸ் கரஸ்பாண்டன்ட்ஸ்', சூப்பர் மார்கெட்களை நடத்தும் கம்பெனிகள், கூட்டுறவு அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் கம்பெனிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறையின்படி, வங்கிகள் உத்தேச பேமெண்ட் வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
பேமெண்ட் வங்கிகள் ஆன்லைனில் பொதுமக்களிடமிருந்து "டெபாசிட்' திரட்டலாம். பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பும் சேவையைச் செய்யலாம். கிராமப்புறங்களில் 25 சதவீத கிளைகளைத் திறக்க வேண்டும் என்பதால், கிராம வாசிகளுக்கும், நகரங்களில் வாழும் எளிய மக்களுக்கும் இடையே சேவிங்கஸ் பேங்க் கணக்கு சேவை விரிவு படுத்துவது இதன்மூலம் எளிதாகும்.
தற்சமயம் 58 சதவீத மக்களுக்கு மட்டுமே சேவிங்ஸ் பேங்கு கணக்கு இருக்கிறது. மீதமுள்ள மக்களிடமும் வங்கிச் சேவையை கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
அதேபோல், வெளிமாநிலங்களில் வசிப்போர், தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்புவது பேமெண்ட் பேங்கு மூலம் எளிமையாக இருக்கும். அமைப்புசாரா நிறுவனங்களில் பணி புரியும் எளிய மக்களுக்கும், வெளியூர்களில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கு பேமெண்ட் பேங்க் உதவிகரமாக இருக்கும்.
பேமெண்ட் பேங்க் திரட்டும் டெபாசிட்களுக்கு எஸ்.எல்.ஆர். என்கிற சட்டப்படி, ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு மற்றும் சி.ஆர்.ஆர். என்கிற ரொக்க கையிருப்பு தொடர்பான விதிமுறைகள் பொருந்தும். பேமெண்ட் வங்கிகள் தங்களது சொந்த கிளைகள் இல்லாத இடங்களில் பிஸினெஸ் கரஸ்பாண்டண்ட்ஸ் மூலம் வங்கிச் சேவை வழங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
தனியார் துறையில் முழு அளவிலான புதிய வங்கிகள் தொடங்கினால், அதன்மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் உருவாகக்கூடும் என்கிற அச்சம், மேற்கூறிய நெறிமுறைகளின் காரணமாகவும், பேமெண்ட் வங்கி நெறிமுறைகளின் காரணமாகவும், பேமெண்ட் வங்கி கடன்கள் வழங்கக்கூடாது என்ற நியதி மூலமும் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பலதரப்பட்ட கம்பெனிகள் பேமெண்ட் பேங்க் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்பதால் வங்கிச் சேவை உண்மையிலேயே பலவலாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். உதாரணமாக, மொபைல் கம்பெனிகளுக்கு கிராமங்கள் ஊடுருவிய அனுபவம் உண்டு. அவர்கள் வங்கித் துறையில், பேமெண்ட் பேங்க் சேவையை மேற்கொண்டால் கிராமவாசிகளை வங்கிச் சேவை எளிதில் சென்றடையும்.
சிறிய வங்கிகளைப் பொருத்தவரை, வங்கியில் பத்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தனி நபர்கள் மற்றும் தொழில் முறையாளர்கள் அல்லது கம்பெனிகள், சொசைட்டிகள் மேலே கூறிய மூலதன விதிமுறைகளுக்கு உள்பட்டு, சிறிய வங்கிகளைத் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே செவ்வனே செயல்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் என்கிற குறு நிதி நிறுவனங்கள், உள்ளூர் வங்கிகள் உரிய சட்டதிட்டங்களின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களை சிறிய வங்கிகளைக மாற்றிக் கொள்ளலாம்.
சிறிய வங்கிகள் குறைந்தபட்சம் 25 சதவீத கிளைகளை, வங்கிகளே இல்லாத ஊரகப் பகுதிகளில் திறக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. ஊரகப் பகுதி என்பது சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி 9999 பேருக்கு உள்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.
சிறிய வங்கிகள், முதல் 5 ஆண்டுகளில், பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவது, சிறு விவசாயிகள், சிறு, குறுந் தொழில்கள், அமைப்பு சாரா நிறுவனங்கள், தனி நபர்களுக்கு மட்டுமே கடனுதவி வழங்கலாம். முன்னுரிமை அடிப்படையிலான வங்கிக் கடன் வழங்கும் விதிமுறை சிறிய வங்கிகளுக்கும் பொருந்தும்.
ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு, ரொக்கக் கையிருப்பு விதிமுறைகள் சிறிய வங்கிகளுக்கும் உண்டு.
எந்த ஒரு குழுமத்துக்கோ, தனி நபருக்கோ வங்கியின் மூலதனத்தில் 15 சதவீதத்துக்கும் அதிகமாக கடன் வழங்கக்கூடாது; முதலீடு செய்யவும் கூடாது.
இதன்மூலம் குறிப்பிட்ட குழுமத்துக்கோ, தனிநபருக்கோ, பெரும் தொகை கடன் கொடுக்காமல், பரவலான வகையில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு சிறிய, சிறிய கடன்கள் வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கதே.
ரிசர்வ் வங்கிக்கு ஒரு யோசனை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வங்கிகள் தோன்றுவதற்கு முன்பே, அதாவது 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும். "நிதிகள்' என்கிற பரஸ்பர ஸகாய நிதிகளும் பேமெண்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கிகள் தொடங்குவதற்கு விண்ணப்பம் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதிக்கலாமே.
நீண்ட காலமாக, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இவர்கள் செய்துவரும் சேவையை நீதி அரசர் விஸ்வநாத சாஸ்திரி குழு, ஜேம்ஸ் ராஜ் குழு உள்ளிட்ட மத்திய அரசு அமைத்துள்ள பல குழுக்கள் பாராட்டி உள்ளன. இந்த நிதிகள் 1956-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டம் பிரிவு 620-ஏ மற்றும் 2013-ஆம் ஆண்டு புதிய கம்பெனிகள் சட்டம் 406 பிரிவு ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றன.
மத்திய அரசின், கம்பெனிகள் விவகாரத்துக்கான அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் "நிதி'கள் இயங்குகின்றன. ஒரு சில விஷயங்களில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படியே, "நிதி'கள் செயல்படுகின்றன.
இந்த விவரங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி முழுமையாக அறிந்துள்ளது. எனவே, இந்த யோசனையை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும் என்று நம்புவோம்.