விரைவுப் பேருந்து என்ற போர்வையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நோக்கில் அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேருந்துகள் இடையில் நிற்காது எனக் கூறி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடத்துநர்கள், தங்களது விருப்பம் போல பல இடங்களில் நிறுத்தி நிறுத்திச் செல்வதால், பயணிகள் கூடுதல் கட்டணம் அளித்தும் குறித்த நேரத்துக்கு செல்ல முடிவதில்லை.
தமிழகத்தில், சென்னையைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளுடன் போட்டி போடும் அளவுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் பேருந்துகளுக்கு இடை நில்லாமல் செல்லும் வகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களால் உரிமம் அளிக்கப்படுவதில்லை.
இந்தப் பேருந்துகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வழியாகச் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
ஆனால், குறிப்பிட்ட ஊருக்கு அவசரமாகச் சென்றாக வேண்டிய இக்கட்டான சூழலுடன் பேருந்து நிலையத்துக்கு வருவோரை வழியில் எங்கும் நிற்காது எனக் கூறி, தனியார் பேருந்து நடத்துநர்கள் வளைக்கும் காட்சியை அன்றாடம் நாம் காண முடியும்.
இதனால் பயணிகளிடம் முழுக் கட்டணத்தைப் பெறும் தனியார் பேருந்து நடத்துநர்கள், பேருந்து செல்லும் வழியில் உள்ள ஓர் ஊரில் இறங்க வேண்டும் என்று வேண்டினாலும் மனிதாபிமானத்தைத் தொலைத்து விட்டு அலட்சியப்படுத்துவதை ஒவ்வொரு பயணத்திலும் பார்க்க முடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பல நேரங்களில் அரசுப் பேருந்துகளே விரைவுப் பேருந்து என ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேலையில் ஈடுபடுவதுதான்.
பெரும்பாலான அரசுப் பேருந்துகள் நல்ல நிலையில் இல்லாமல் மழைக் காலங்களில் பயணிகள் நனைந்து போகும் நிலையை உருவாக்குவது கண்கூடு.
தருமபுரியில் இருந்து சேலத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் ரூ.30-ம், விரைவுப் பேருந்துகளில் ரூ.39-ம் கட்டணமாக வசூலிக்கப்
படுகிறது.
இந்தப் பேருந்துகளில் விரைவுப் பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதனால், செல்ல வேண்டிய இடத்துக்கு விரைந்து சென்று விடலாம் என நினைத்து ஏறினால் பல நேரங்களில் இந்தப் பேருந்துகள் பழுதாகி நிற்பதையும், மாற்றுப் பேருந்துக்காக குழந்தைகள், வயதானவர்கள் நடுவழியில் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்கும் நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறுகின்றன.
ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்குக் கொண்டு வரப்படும் பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்யாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம்.
அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல அனுமதி பெற்றுள்ள அரசுப் பேருந்து பழுதடைந்து நின்றுவிட்டால், மாற்றுப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த மாற்றுப் பேருந்துகள் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல வசதியாக அதற்கான அனுமதிச் சீட்டு ஓட்டுநர்களிடம் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, சுங்கச்சாவடிகளுக்கு வரும் மாற்றுப் பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதி மறுக்கின்றனர்.
இந்த நிலையில், அண்மையில், வாணியம்பாடி, பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல மாதாந்திர அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை 50 முறைக்கு மேல் அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி ஊழியர்களின் முடிவெடுத்துள்ளனர். விரைவில் இந்த நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும் எதிரொலிக்கலாம்.
இதுபோன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தந்தக் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழைகளும், நடுத்தர வகுப்பினரும்தான் அதிக அளவில் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்காமல் பயணிகள் நலனுக்கே முன்னுரிமை தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.