உண்மையை உணர்ந்த ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, தனது சமீபத்திய நிதி மற்றும் கடன் கொள்கையில், வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால், எஸ்.எல்.ஆர். (Statutory Liquidity Ratio)-ஐ அரை சதவீதம் குறைத்திருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, தனது சமீபத்திய நிதி மற்றும் கடன் கொள்கையில், வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால், எஸ்.எல்.ஆர். (Statutory Liquidity Ratio)-ஐ அரை சதவீதம் குறைத்திருக்கிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 8 சதவீதமாகவே தொடரும். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதமும் (சி.ஆர்.ஆர். - Cash Reserve Ratio) 4 சதவீதமாகவே தொடரும்.
எஸ்.எல்.ஆர். 22.5 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எல்.ஆர். என்பது, வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகையிலிருந்து குறிப்பிட்ட பகுதியை தங்கம் அல்லது அரசு பத்திரங்களில் முதலீடு செய்துவிட்டு, அந்த முதலீடுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிற விதிமுறை.
சி.ஆர்.ஆர். என்பது, வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகையில் குறிப்பிட்ட பகுதியை ரொக்கமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டும் என்பது. இப்படியாக, எஸ்.எல்.ஆர். மற்றும் சி.ஆர்.ஆர். ஆகிய இரு வகையிலும் ரிசர்வ் வங்கி
யிடம் டெபாசிட் செய்தது போக, மீதமுள்ள டெபாசிட் தொகையிலிருந்துதான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியும்.
சரி, தற்போதைய சூழலில், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நிதி மற்றும் கடன் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் என்னென்ன? வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை.
ஒரு வேளை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருந்தால், தொழில் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவை அதிகரிக்கும். தொழில் துறையினர் தங்கள் தொழில்களை விரிவாக்கம் செய்வார்கள்.
இதனால், தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும். விற்பனை அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆக மொத்தம், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பது ஒரு எதிர்பார்ப்பு.
ஆனால், அதே நேரம், வட்டி குறைக்கப்பட்டால், பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால், ஏற்கெனவே அச்சுறுத்தலாக இருக்கும் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும். விலைவாசி, குறிப்பாக உணவுப் பண்டங்கள், காய்கறிகள் விலை மேலும் உயரும்.
இதைக் கருத்தில் கொண்டுதான், ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்காமல், எஸ்.எல்.ஆர்.}ஐ மட்டும் அரை சதவீதம் குறைத்துள்ளது.
இதன் பயனாக, வட்டி குறையாவிட்டாலும், வங்கிகளின் கடன் கொடுப்பதற்கான நிதி ஆதாரம் பெருகும் என்பது ரிசர்வ் வங்கியின் கருத்து. அரை சதவீத எஸ்.எல்.ஆர். குறைவதால், ரூபாய் நாற்பதாயிரம் கோடி அளவுக்கு வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய முதலீடுகளின் அளவு குறையும்.
ஏற்கெனவே, ரிசர்வ் வங்கியிடம் சராசரியாக 26 சதவீத அளவுக்கு தங்கம் மற்றும் அரசுப் பத்திரங்களை வங்கிகள் -- குறிப்பாக பெரிய வங்கிகள் -- டெபாசிட் செய்துள்ளன. எனவே, பொதுவாக வங்கிகளுக்கு, குறிப்பாக பெரிய வங்கிகளுக்கு அல்லது அவர்களது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
சொல்லப் போனால், கடந்த ஜூன் மாத முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையிலேயே, ரெப்போ ரேட் குறைக்கப்படாமல், எஸ்.எல்.ஆர். 23 சதவீதத்திலிருந்து 22.5 சதவீமாக குறைக்கப்பட்டது.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுவது இதுதான்: இந்தியப் பொருளாதாரம் மீட்சி அடையும் என்ற எதிர்பார்ப்பில், கடந்த ஜூன் மாதம் எஸ்.எல்.ஆர். குறைக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
அண்மையில், மத்திய அரசு தனது கன்னி பட்ஜெட்டில், "நிதி நிலைமையை நிச்சயமாக ஸ்திரப்படுத்துவோம். நிதிப் பற்றாக்குறை, ஜி.டி.பி.யில் (நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு) 4.1 ஆக கட்டுப்படுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான சாத்தியக்கூறு பிரகாசமாக உள்ளது. இதன் விளைவாக வங்கிக் கடன்களுக்கான தேவை அதிகரிக்கும். கூடுதல் கடன் தேவையை எதிர்கொள்வதற்கு எஸ்.எல்.ஆர். குறைப்பு உதவிகரமாக இருக்கும்' என்கிறார் ரகுராம் ராஜன்.
அதேநேரம், புதிய பட்ஜெட் அடிப்படையில் புதிதாக உருவாகக் கூடிய பொருளாதார நடவடிக்கைகளையும், கடன் தேவைகளையும் மனத்தில் கொண்டு, வங்கிகள் தங்கள் கடன் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கு, இடையே உள்ள கால அவகாசம் பயன்படும் என்பது ரிசர்வ் வங்கியின் கருத்தாக உள்ளது.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. 2014-ஆம் ஆண்டு, ஜனவரி முதல் - அதாவது கடந்த 8 மாதங்களாக - ரெப்போ ரேட் 8 சதவீதமாகவே நீடிக்கிறது. தொடர்ந்தாற்போல், கடந்த மூன்று கடன் கொள்கையிலும் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
2015-ஆம் ஆண்டு, ஜனவரியில் பணவீக்க விகிதம் 8 சதவீதத்திற்குள் குறைக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் இலக்காக உள்ளது. அதேபோல், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பணவீக்க விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் பணவீக்கம் 8 சதவீதமாக குறைந்தால்தான், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை குறைக்கும் என்று தெரிகிறது. அண்மையில் கடன் கொள்கையை முறையாக அறிவித்த பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் பதில் அளித்தார்.
அப்போது அவர், "நான் வளர்ச்சிக்கு எதிரி அல்ல. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், வட்டி விகிதத்தைக் குறைப்பதால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சி வந்து விடுமா? வந்தாலும் அது தாற்காலிக வளர்ச்சியாகத்தானே இருக்கும்? பணவீக்கத்துக்கு எதிராகப் போராடி வெற்றி பெறுவோம். நீடித்த வளர்ச்சிக்கு அதுவே வழி வகுக்கும்' என்றார்.
இதற்கிடையில், இராக் அரசியல் நிலவரம், சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு, நடப்பாண்டியில் பருவமழை குறித்த நிலையற்ற தன்மை ஆகியவை பணவீக்கம் பற்றிய கவலையை அதிகரிக்க செய்கின்றன.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு மேலும் இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று கடந்த காலங்களில், ரெப்போ ரேட் தொடர்ந்து 13 முறை குறைக்கப்பட்டது. அப்போதுகூட, பணவீக்கம் குறையவில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் "ரெப்போ' கருவி ஒரு "மழுங்கிய கத்தி' என்று ராஜன் வர்ணித்தார் போலும்.
இரண்டாவது, உலகெங்கிலும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய எஸ்.எல்.ஆர்., இந்தியாவை ஒப்பிடும்போது மிகக் குறைவு.
இதனால், எஸ்.எல்.ஆர்.}ஐ படிப்படியாகக் குறைத்திட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கிறது. இதை சில மாதங்களுக்கு முன்பு அவர் தெரிவித்தும் இருக்கிறார். எனவே, ரிசர்வ் வங்கி, எஸ்.எல்.ஆர். குறைப்பை ஒரு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையாகவும் பார்க்கிறது.
தற்போது வங்கிக் கடனுக்கான தேவை மந்த கதியில் இருக்கிறது. இதனால், எஸ்.எல்.ஆர். குறைப்பு, உடனடியாகப் பயன் அளிக்காது என்கிறார்கள் வங்கியாளர்கள். இதை நடைமுறைக் கண்ணோட்டத்தில் பார்த்திட வேண்டும்.
வங்கிகள் மேலும் மேலும் டெபாசிட்கள் திரட்டுவதற்கு முனைப்புடன் களம் இறங்கினார்களேயானால், புதிதாகத் திரட்டப்படும் டெபாசிட்களுக்கு அவர்கள் அரை சதவீதம் குறைவாக எஸ்.எல்.ஆர். செலுத்தினால் போதும் அல்லவா? இது நீண்டகால அடிப்படையில் பார்த்தால் வங்கிகளுக்கு ஆதாயம் தானே?
புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கும்போதுதான், வங்கிக் கடன்களுக்கான தேவை அளவு உயரக் கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வளர்ச்சித் திட்டங்கள் விரைந்து முடுக்கி
விடப்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இவை சாதகமான அம்சங்கள் என்றாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில் 5.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்ததை, சமீபத்திய நிதிக் கொள்கையிலும் உறுதி செய்
துள்ளது. அதிகபட்சமாக 5 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள் மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கத்தை 2015 ஜனவரிக்குள் 8 சதவீதமாக குறைத்துவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே.
அதேநேரம், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் சில்லறை விலையிலான பணவீக்க விகிதத்தை 6 சதவீதமாக கொண்டு வர வேண்டும் என்கிற இலக்கு எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.
வளர்ச்சியை மேம்படுத்துவது, பணவீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டும் கடன் கொள்கையின் இரண்டு நோக்கங்கள் ஆகும்.
எனினும், தற்போதைய சூழலில், பணவீக்கத்தையும், விலைவாசியையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும் என்பதை ரிசர்வ் வங்கி உணர்ந்திருக்கிறது என்பதையே, அண்மையில் ரகுராம் ராஜன் வெளியிட்ட நிதி மற்றும் கடன் கொள்கை உணர்த்துகிறது.