கட்டுரைகள்

வழிகாட்ட வேண்டும்

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதனால்தான், ஆதிகாலம் முதல் தண்ணீரை சேமித்து வைக்க பலவித உத்திகள் கையாளப்பட்டு வருகிறது.

சி.ராஜசேகரன்

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். அதனால்தான், ஆதிகாலம் முதல் தண்ணீரை சேமித்து வைக்க பலவித உத்திகள் கையாளப்பட்டு வருகிறது. குளம், ஏரி, குட்டை, ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பயன்படுத்தி தண்ணீர் வீணாக போகாதபடியும், அதிகப்படியான தண்ணீரால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராதபடியும் சேமித்து வைக்கப்படுகிறது.

பின்னர், தேவையான நேரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கும், விவசாயத் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் நீர்நிலைகளை சரிவரப் பராமரிக்காததால், ஆறுகள் வாய்க்கால்களாகவும், வாய்க்கால்கள் வடிகால்களாகவும் மாறின.

ஆறு, வாய்க்கால் ஆகியவற்றின் பராமரிப்பு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், குளம், குட்டை இவற்றின் பராமரிப்பு அந்தந்த ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

ஆறு மற்றும் வாய்க்கால் மூலமே தண்ணீர் குளங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று சேர்வதால், அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு குறித்த காலக்கெடுவுக்குள் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அடையவில்லை என்றால், அனைவரது குற்றச்சாட்டும் ஆறுகளை பராமரிக்கும் பொதுப்பணித்துறை மீதே விழுகிறது.

பொதுவாக விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கை, ஏப்ரல், மே மாதங்களிலேயே ஆறு, வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்பதுதான்.

அதிலும் ஒரு பிரச்னை உள்ளது. அப்போது தூர் வாரினால் பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்துக்குள் வாய்க்கால்கள் மீண்டும் செடிகள் முளைத்து வீணாகிவிடும். அதனைக் கருத்தில் கொண்டு, தண்ணீர் திறக்கப்படும் காலம் நெருங்கும் நேரத்தில் தூர் வாரப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தண்ணீர் திறந்து விடப்பட்டு அந்தப் பகுதிகளில் வந்து விட்டால், மீண்டும் அடுத்த ஆண்டு விட்ட இடத்திலிருந்து தொடருவோம் என்பார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் பழைய இடத்தில் மீண்டும் செடிகள் முளைத்துவிடும். ஆக ஆறு, வாய்க்கால்கள் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்கும்.

கிராமங்களில் மன்னர் கால உத்தி நீண்ட காலத்துக்கு இருந்து வந்தன. திருவாரூர் மாவட்டத்தில் 28 பெரிய ஆறுகளும், 100-க்கும் மேற்பட்ட சிறிய வாய்க்கால்களும் உள்ளன.

இவற்றை 20 நாள்களுக்குள் பொதுப்பணித்துறை கண்டிப்பாக தூர்வார இயலாது. ஆறுகளில் சில கி.மீ. தூரம் தூர் வாரப்பட்டாலும், நகரப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் பெரும்பாலும் தூர் வாரப்படும். கிராமப்புற பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் பல நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றன.

விவசாயம் கிராமப் பகுதிகளில் இன்னமும் உயிர் வாழ்வதால் அங்கு விவசாயிகளே பெரும்பாலான நேரங்களில் வாய்க்கால்களை சுத்தம் செய்து விடுகின்றனர்.

உதாரணமாக, கல்லணையிலிருந்து பிரிந்து வெண்ணாறு வருகிறது. வெண்ணாற்றிலிருந்து சிறு சிறு வாய்க்கால்கள் பிரிந்து ஆறுகள் இல்லாத கிராமங்களில் பாய்ந்து பயனளிக்கிறது.

தொடக்க காலங்களில் மே மாத இறுதியில் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து வாய்க்கால்களை தூர் வாருவர். அதாவது, ஒரு ஏக்கர் அளவுள்ள நிலம் வைத்திருப்பவர் சுமார் மூன்று கோல் அளவுக்கு வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். ஒரு கோல் என்பது 12 அடி கொண்ட குச்சியாகும். அதேபோல், அந்த வாய்க்காலின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் அனைவரும் இதில் பங்கேற்பர்.

தங்களுடைய வயல்களுக்குப் பாயக்கூடிய தண்ணீர் என்பதால், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவர். வாய்க்கால்கள் நேர்த்தியாகத் தூர் வாரப்பட்டிருக்கும்.

தற்போது நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் வாய்க்கால்கள் தூர் வாரப்படுகின்றன. இந்த வாய்க்காலால் எந்தெந்த கிராமங்கள் பயனடைகின்றனவோ அவை தங்களது பங்களிப்பை செய்து வந்தன.

அவர்களுக்கு, தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பயிர்களுக்குத் தண்ணீர் வேண்டும். அவை உயிர் வாழ்ந்தால்தான் நாம் உயிரோடு இருக்க முடியும் என்பதை அறிந்தவர்கள் அவர்கள்.

அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி மட்டுமே தேவை. ஒரு வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டால், ஒரு கிராமம் பயனடையும். சுற்றுவட்டார மக்களுக்கு பயனளிக்க வேண்டுமெனில், அந்த வழியாக செல்லும் ஆற்றை சுத்தப்படுத்த வெண்டும்.

இதற்கு அதன் மூலம் பயனடையும் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு வழி நடத்தல் மட்டுமே தேவைப்படுகிறது. தண்ணீர் கடைமடை பகுதி வரை சேரவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்தி புலம்புவோர் இதற்கு வழிகாட்டினால் சிறப்பாகப் பணிகளை முடிக்க முடியும்.

நூறு நாள் திட்டங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இதற்கு பயன்படுத்தினால், ஆறு நிச்சயமாக ஆறாகவே இருக்கும்; வாய்க்காலாகச் சுருங்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT