முகப்பு
கட்டுரைகள்

சமுதாய வளர்ச்சிக்கே  கல்வி

அண்மையில் நான் வங்கிக்குச் சென்றிருந்தபோது, ஒரு கல்லூரி மாணவர், வரைவோலை விண்ணப்பம் ஒன்றை நிரப்பித்தரும்படி வேண்டினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

அண்மையில் நான் வங்கிக்குச் சென்றிருந்தபோது, ஒரு கல்லூரி மாணவர், வரைவோலை விண்ணப்பம் ஒன்றை நிரப்பித்தரும்படி வேண்டினார். நான் அவர் என்ன படிக்கிறார் என விசாரிக்க, மிகவும் பெருமையாக பி.காம்., ஃபைனல் இயர் என்றார்.

வணிகவியல் இறுதியாண்டு படிக்கும் ஒரு மாணவருக்கு வரைவோலைக்கான விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது எனத் தெரியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இவர் மட்டுமல்ல, இவரைப் போன்றே ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், பல்வேறு அலுவலகங்களில் கோரிக்கை, வேண்டுகோள், புகார் மனுக்கள் எழுதத் தெரியாமல் விழிக்கின்றனர்.

யாரோ ஒருவர் தயாரிக்கும் விண்ணப்பத்தில் தன் பெயர், வயது, முகவரி இன்னபிற விவரங்களை உள்ளீடு செய்து தனக்குரியதாக மாற்றிக்கொள்ளும் வழக்கம்தான் இன்றைக்கு நடைமுறையில் உள்ளது.

இதற்கு காரணம், நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போகாத நமது கல்வி முறையே ஆகும்.

ஒரு பட்டதாரிக்கு, தனது தெருவில் காணப்படும் ஒரு குறைபாட்டை போக்க யாருக்கு மனு எழுதவேண்டும். எப்படி எழுதவேண்டும் எனத் தெரிவதில்லை. இவர் கற்ற கல்வியினால் எந்தவொரு பயனும் இல்லாமல் போய்விடுகிறது.

பள்ளி மாணவர்களை கோயில்கள், அருங்காட்சியகங்கள், அரண்மனைகளுக்கு கல்விச் சுற்றுலா கூட்டிச்சென்று அவர்களுக்கு வரலாற்றை கற்றுக் கொடுப்பதோடு,  வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் மாதமொருமுறை அழைத்துச் செல்லவேண்டும்.

அந்தத் துறைகளின் பணிகள், அவர்கள் எவ்வாறு மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றனர், அச்சேவைகளைப் பெற அவர்களை பொதுமக்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பன போன்ற தகவல்களை விளக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு சமுதாயத்தோடு எவ்வாறு தொடர்பு கொள்ளவேண்டும் என்ற விவரம் தெரியவரும்.

கல்வி என்பது சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நம்முடைய அணுகுமுறைகளை மாற்றி, அதனோடு ஒன்றிணைந்து வாழ கற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி முறையானது மாணவர்களின் மனப்பாட சக்தியைப் பெருக்கவும், அதன்முலம் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறவும், இறுதியாக நிறைய வருமானம் தரும் பணியில் அமர வைக்கவுமே பயன்படுகிறது.

இந்நிலையைப் போக்க மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகிறது. முதல்கட்டமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தினசரி  செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

அப்போதுதான் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பனவற்றை அவர்களால் அறிய இயலும்.

மேலும்  மாணவர்களை பள்ளி, கல்லூரி தேர்தல்களில் ஈடுபடுத்தி, சேவை, தலைமைப் பண்பு, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத் திறன், வாக்களிப்பதன் முக்கியத்துவம் போன்றவற்றை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஆனால் ஏடு பிடிக்கும் பிஞ்சுக் கைகள் சமுதாய அவலங்களையும், அதற்கான தீர்வுகளையும் எழுதினால் எப்படி இருக்கும்.

அண்மையில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் சமூக சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் சமூகப் பங்களிப்பு பதிவுகள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் சமூக பங்களிப்புப் பதிவுகள் என்ற பெட்டி வைக்கப்படும். அப்பெட்டியில் ஒவ்வொரு மாணவரும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போதும், பள்ளியில் இருந்து மீண்டும் வீடு திரும்பும்போதும் காணும் சமூகம் சார்ந்த விஷயங்களை, ஆக்கப்பூர்வமான கோரிக்கைகளை தீர்வுகளோடு எழுதி பள்ளியில் வைக்கப்படும் பெட்டியில் போடவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த பெட்டியில் சேரும் பதிவுகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் சென்று, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற அற்புதமான திட்டம் தமிழகம் முழுவதும் செயலாக்கப்பட்டால் இளம் தலைமுறையினர் மிகுந்த ஆக்கபூர்வமான சிந்தனையுடனும், செயல்பாட்டுடனும் இருப்பர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கல்வி என்பது தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமன்றி, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பயன்படும்போதுதான் முழுமையடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →