முகப்பு
கட்டுரைகள்

கல்விக் கடனுக்கு தனி வங்கி!

வங்கிக் கடன்களில், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களால் அதிக அளவில் பேசப்படுவதும், அலசி ஆராயப்படுவதும் கல்விக் கடன்தான். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட்களிலும் கல்விக் கடன் பற்றிய தகவல் அல்லது சலுகை இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

வங்கிக் கடன்களில், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களால் அதிக அளவில் பேசப்படுவதும், அலசி ஆராயப்படுவதும் கல்விக் கடன்தான். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட்களிலும் கல்விக் கடன் பற்றிய தகவல் அல்லது சலுகை இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது.

தற்போது இடைக்கால பட்ஜெட்டிலும், கல்விக் கடனுக்கு முக்கியமான ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பெறப்பட்ட கல்விக் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. 31.12.2013 வரை நிலுவையில் உள்ள வட்டித் தொகைக்கு இது பொருந்தும். இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் ஒன்பது லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுவர். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

பணவசதி இல்லை என்பது உயர்கல்வி பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், ஒரு பக்கம் மத்திய அரசு நிதி அமைச்சகமும் இந்திய வங்கிகள் சங்கமும் கல்விக் கடன் திட்டத்தில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகிலேயே அதிக அளவிலும், எண்ணிக்கையிலும், நியாயமான வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படுவது இந்தியாதான் என்றும் கல்விக் கடன் பெற்றதில் தமிழகம்தான் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பல மேடைகளில் கூறியுள்ளார்.

இந்திய வங்கிகள் சங்கமும் கல்விக் கடனுக்கான விதிமுறைகளை அவ்வப்போது தளர்த்தி வருகிறது. 2012ஆம் ஆணடில் திருத்தி அமைக்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான விதிமுறைகளின் சாரம் வருமாறு:

எவ்வளவு கடன் கிடைக்கும்? உள்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடன் கிடைக்கிறது. ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கினால் "மார்ஜின்' தொகை கிடையாது (மார்ஜின் என்பது கடன் வாங்குபவர்கள், குறிப்பிட்ட தொகையில் ஒரு சிறு பகுதியை தாங்களே செலுத்த வேண்டும் என்பது).

ரூ.4 லட்சத்துக்கு அதிகமாக கடன்கள் பெறும்போது, மார்ஜின் தொகை 5 சதவீதம் மட்டுமே. வெளிநாடுகளில் படிப்பதற்கு கடன் வாங்கினால் மார்ஜின் 15 சதவீதம் செலுத்திட வேண்டும்.

எந்த எந்த செலவுகளுக்கு கடன் கிடைக்கிறது? கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகச் செலவு, தங்கும் விடுதி கட்டணம், வாகனச் செலவு ஆகியவற்றுக்கு கல்விக் கடன் கிடைக்கிறது.

யார், யாருக்கு? கலை, வணிகம், அறிவியல், பட்டப்படிப்பு, சட்டம், மருத்துவம், பல்மருத்துவம், கணினி, நிர்வாக இயல், பட்டய கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்), ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., நர்ஸிங், ஆசிரியர்கள் என எந்தத் துறையில் படித்தால் வேலைவாய்ப்பு இருக்கிறதோ அந்த துறையில் படிப்பதற்கு கல்விக் கடன் பெறலாம்.

ஆவணங்கள்; கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கல்லூரியில் சேர்க்கைக்கான கடிதம், கல்லூரி கட்டணங்களின் பட்டியல், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், செக்யூரிடி தேவைப்படும் பட்சத்தில், செக்யூரிட்டி பற்றிய தகவல்கள் போன்றவை.

செக்யூரிட்டி: ரூ.4 லட்சம் வரையிலான கடனுக்கு எவ்வித செக்யூரிட்டியும் கிடையாது. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு, அதே அளவு மதிப்புள்ள ஒரு நபர் கேரண்டி தேவைப்படுகிறது. ரூ.7.5 லட்சத்துக்கும் அதிகமான கடனுக்கு, அந்த அளவு மதிப்புள்ள அசையா சொத்துகளின் பத்திரங்களை கொலட்டரல் செக்யூரிட்யாக வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

நேஷனல் சேவிங்ஸ் பத்திரங்கள், எல்.ஐ.சி. பாலிசிகளையும் செக்யூரிடியாக தரலாம். வட்டி விகிதம் 10 முதல் 11 சதவீதமாகும். இது அவ்வப் போதும், வங்கிக்கு வங்கியும் சிறிதளவு மாறக்கூடும்.

வேலை கிடைத்த ஆறு மாதங்களிலோ அல்லது கடன் பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவோ மாதத் தவணை மூலம் கடன் மற்றும் வட்டித் தொகையை திரும்பச் செலுத்தத் தொடங்கலாம்.

படிக்கும்போது வட்டி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனினும், படிக்கும்போதே, பெற்றோர்களால் வட்டித் தொகையை மட்டும் செலுத்த முடியுமானால், செலுத்தியபின் மாணவர்கள் வேலையில் சேர்ந்த பிறகு அசல் தொகையை மாதத் தவணைகளில் கட்டுவது எளிதாக இருக்கும்.

பள்ளிப்படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக கல்லூரி படிப்புக்கு கடன் தர வங்கிகள் மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2012 அக்டோபரில் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி டி. ஹரி பரந்தாமன் தனது உத்தரவில் கூறிய விவரம்:

"மனுதாரர் தாழ்த்தப்பட்ட, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு இவரைத் தவிர இதுவரை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இதையெல்லாம் பரிசீலித்து வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்கியிருக்க வேண்டும்.'

இதுதவிர, அண்மையில் திருத்தப்பட்ட வங்கி விதிமுறைகளின்படி, ஒரு கல்விக் கடன் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி அனுமதிக்கலாம். ஆனால் அதை நிராகரிக்க அந்த அதிகாரிக்கு உரிமை இல்லை. அதை நிராகரிக்க வேண்டுமானால், அந்த அதிகாரிகளின் மேல் அதிகாரியால்தான் அது முடியும்.

ஆக எந்த ஒரு அதிகாரியும் தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ, அலட்சியத்தின் காரணமாகவோ ஒரு கல்விக் கடனை மறுக்க முடியாது.

ஆனால், மாணவர்களும், பெற்றோர்களும் சொல்வது என்ன?

"கடன் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், விண்ணப்ப படிவம் கிடைப்பதற்கே வங்கிக் கிளைக்கு நடையால் நடக்க வேண்டியிருக்கிறது. பிறகு கடன் கொடுப்பதற்கு மாதக் கணக்கில் எங்களை அலைக்கழிக்கிறார்கள்.

"படிக்கும்போதே வட்டி தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்... செக்யூரிட்டி தேவையில்லாத ரூ.4 லட்சத்துக்கு உள்பட்ட கல்விக் கடனுக்குகூட செக்யூரிட்டி தந்தால், விரைவில் கடன் கிடைக்கும் என்று மறைமுகமாக வற்புறுத்துகிறார்கள்.

கடன் கொடுப்பதை தட்டிக் கழிப்பதற்கு உண்டான எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள்' என்று தங்கள் உள்ளக்குமுறல்களைக் கொட்டித்தீர்க்கிறார்கள்.

இதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்? ஒன்று, கடந்த காலத்தில் சில அலுவலர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமாக இருக்கலாம். அவர்கள் கொடுத்த வங்கிக் கடன்கள் திரும்பி வராமல், வாராக்கடனாகி அதனால் அவர்கள் சிக்கலில் மாட்டி கொண்டிருக்கலாம்.

ஒரு மாணவர் 4 ஆண்டுகள் படிக்கிறார். அதற்குப் பிறகு அதாவது ஒரு வருடத்திற்குப் பிறகு கடனைத் திருப்பச் செலுத்த தொடங்கலாம். ஆக, 5 ஆண்டுகளில் கடனுடன் வட்டியும் சேர்ந்து கணிசமான தொûகாக அது வளர்ந்திருக்கும்.

ஒரு வருடத்திற்குள் வேலை கிடைக்காவிட்டால் கடனைத் திரும்பச் செலுத்துவதில் மேலும் தாமதம் ஆகும். சில நேரங்களில் அவை வாராக் கடனாகக்கூடும். இது சம்பந்தப்பட்ட அலுவலர்களை பாதிக்கும். இதுதான் வங்கி அலுவலர்களின் தயக்கத்துக்கு காரணம்.

இதற்கு தீர்வு காண, சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக, கல்விக் கடன் வழங்குவதில் இருக்கக்கூடிய தவறான அச்சத்தை போக்குவதற்கு பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். அத்துடன் இந்த பயிற்சி முகாம் மூலம், வங்கி அலுவலர்களுக்கு கிராமப்புற மாணவர்களோடு ஒரு நட்புரீதியான அணுகுமுறையையும் உருவாக்கிட வேண்டும்.

கடன் கேட்டு வருபவரும் வங்கியின் வாடிக்கையாளரே என்று அவர்கள் உணரவேண்டும். தங்களது அலட்சியத்தால் ஒருவரது வாழ்க்கையே இருண்டு போகும் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, விதிமுறைகளின்படி, நேர்மையாக, நம்பிக்கையுடன் கல்விக் கடன் வழங்கிய பிறகு, அந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், சம்பந்தப்பட்ட நேர்மையான வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை வங்கி நிர்வாகமும் ரிசர்வ் வங்கியும் கொடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து கல்விக் கடன் விஷயத்தில் ஒரு புதிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கல்விக் கடனை எளிமையாக்குவதற்கும் பரவலாக்குவதற்கும், கல்விக் கடனில் உள்ள வணிக "ரிஸ்க்'கை அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை "மறு நிதி வழங்குதல்' (ரீ ஃபைனான்ஸ்) முறையில் செய்திடலாம்.

ஒரு புதிய வங்கி அல்லது அரசு அமைப்பு, வங்கிகளுக்கு கடன் வழங்கும். இந்த வங்கிகள் தனி நபர்களுக்கு கல்விக் கடன் தரும். உதாரணமாக, விவசாயக் கடன்களுக்காக "நபார்டு' (சஅஆஅதஈ) சிறப்பு வங்கியாக செயல்படுகிறது. சிறு தொழில்களுக்கு "சிட்பி' (நஐஈஆஐ) மற்றும் ஏற்றமதி இறக்குமதிக்காக "எக்ஸிம்' (உலஐங ஆஅசஓ) போன்றவை இயங்குகின்றன.

இதே விதமாக, கல்விக் கடனுக்காக ஒரு சிறப்பு வங்கியை ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசின் நிதியோடு தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தேச வங்கி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் கல்விக் கடனுக்கு "ரீ ஃபைனான்ஸ்' வழங்கும்.

அறிவுசார்ந்த நாடாக இந்தியா மலருவதற்கும், கல்விக் கடனில் நீண்டகால அடிப்படையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கும் இதுவே சிறந்த வழியாக அமையும்.

முழு கட்டுரையைப் படிக்க →