கண்துடைப்பு சட்டங்கள்
அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த மதுபானக் கடையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு ஒன்று நகைப்புக்குள்ளாக்கியது.
அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த மதுபானக் கடையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு ஒன்று நகைப்புக்குள்ளாக்கியது.
அந்த அறிவிப்பாவது: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்) விதிகள் 2003, விதி எண். 11 ஏ-யின் படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்படமாட்டாது.
மேற்கண்ட அறிவிப்பு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கட்டாயமாக ஒட்ட வேண்டுமென அறுவுறுத்தியதின்பேரில் ஒட்டப்பட்டுள்ளதாம்.
இதேபோல் அனைத்து புகையிலை விற்பனைக் கடைகளிலும், 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
யாருக்காக இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன? இவற்றால் என்ன பயன்? எங்கேனும் மது வாங்கவோ, புகை பிடிக்கவோ வருபவரிடம் உங்களுக்கு வயது குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட பொருளைத் தரமாட்டேன் என்று கடைக்காரர் கூற முடியுமா?
மதுவோ, புகையிலைப் பொருளோ வாங்க வரும் ஹஒரு நபர், அப்பொருளைப் பயன்படுத்தும் தகுதி வயதை அடைந்துவிட்டாரா இல்லையா என்பதை கடையின் விற்பனையாளர் அறிந்துகொள்வது எப்படி? கடைக்கு வரும் ஒவ்வொருவரிடமும் வயதுச் சான்றிதழை கேட்க முடியுமா?
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மது விற்பனை ரூ. 100 கோடி அதிகம் என தங்களின் சாதனையைப் பெருமையாய் பேசும் விற்பனை நிறுவனத்தினர், வரும் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அளித்து விற்பனையை அதிகரிக்க எண்ணுவார்களா? அல்லது வயது குறித்து சர்ச்சை செய்து விற்பனையைக் குறைக்க விரும்புவார்களா?
சினிமாவில் தந்தையே மகனுக்கு மது ஊற்றிக் கொடுப்பது போன்ற காட்சிகளும், புகைக்க கற்றுத் தருவது போன்ற காட்சிகளும் வரத் தானே செய்கின்றன.
சந்தோஷமோ, துக்கமோ அதை மதுவோடுதான் கொண்டாட வேண்டும் என்பது சினிமாவில் மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் எழுதப்படாத விதியாகி விட்டது.
மேலும், வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்த பின்னர், வேறொரு நபரை விட்டு வாங்கி வந்து இத்தகைய போதை வஸ்துகளை 21 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் பயன்படுத்த முடியாதா? இத்தகைய சட்டங்கள் எந்த விதத்தில் இளைஞர் சமுதாயத்தை போதையின் பாதையில் இருந்து மீட்டுவிடும்?
இத்தகைய சட்டங்களின் குறிக்கோள்தான் என்ன? மக்கள் நலனில் அக்கறை கொண்டு இயற்றப்பட்ட சட்டம் என்றால், அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்.
ஏனெனில் பண்டிகை நாள்களில் ரேஷன் கடைகளில் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு பொருள்கள் வாங்குவதுபோல, குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வயது குறித்தெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியுமா?
பொது இடங்களில் புகை பிடித்தல், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஒட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அதிகாரிகள், தங்கள் உயரதிகாரிகளிடமும், பத்திரிகைகளிலும் பாராட்டு பெறுவதற்குப் பயன்படும் சட்டங்களைப் போலத்தான் இத்தகைய சட்டங்கள் பயன்படுமே தவிர இவற்றால் வேறு ஒரு பயனும் இல்லை.
பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம் எனில், பொது இடத்தில் சிகரெட் விற்பதை மட்டும் அனுமதிக்கலாமா? சிகரெட் விற்பனையையே நிறுத்திவிட்டால் அந்தக் குற்றமே நடைபெறாதே? நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளுக்கு ஆணிவேராக இருக்கும் மதுவையே ஒழித்துவிட்டால் நாடே சுத்தமாகிவிடுமே.
மது, வெளிநாட்டினர் தங்களின் குளிர்பிரதேச நாட்டில் உடல் தட்பவெப்ப நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தினர். ஆனால் வெப்ப பிரதேசமான நம் நாட்டுக்கு மது அவசியமில்லை.
சட்டம் என்பது குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்களைக் குறைக்கவும் பயன்பட வேண்டுமே தவிர, சட்டத்தினால் குற்றங்களை அதிகரித்துவிடக் கூடாது. 21 வயதுக்குள்பட்ட ஒருவர் மது பாட்டிலோடோ, அல்லது மது அருந்தியோ பிடிபட்டு தண்டனைக்கோ, அபராதத்துக்கோ ஆளாகும்போது ஒரு புது குற்றவாளிதான் உருவாகிறார்.
சட்டங்கள் என்பவை மக்களின் நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதோடு, நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தக் கூடியனவாக இருக்க வேண்டும். மாறாக, கண்துடைப்புக்காக இயற்றப்படும் சட்டங்கள் என்றும் ஏட்டளவில்தான் உறங்குமே தவிர, நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.