கட்டுரைகள்

லோக்பால் அமைப்பும் நீதிமன்ற அதிகாரமும்

மக்கள் ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சியில் தொடங்கி நாடாளுமன்றம் வரை பதவிகளில் அமர்ந்து அரசு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள் நிரந்தர அதிகார மையங்களாகச் செயல்படுகின்றனர்.

செ. மாதவன்

மக்கள் ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சியில் தொடங்கி நாடாளுமன்றம் வரை பதவிகளில் அமர்ந்து அரசு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள் நிரந்தர அதிகார மையங்களாகச் செயல்படுகின்றனர். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த லஞ்சம் பெறுகின்றனர் என்பது தொடர்ந்து நிலவிவரும் குற்றச்சாட்டு ஆகும். இதைத் தடுப்பதற்கு 1947 மற்றும் 1988ஆம் ஆண்டுகளிலேயே லஞ்சத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்தியிலும், மாநில அரசுகளிலும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து தண்டனை வழங்கிட வேண்டுமானால், தனி அமைப்பின் மூலம் விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக பேசப்பட்டு, அதற்காக மத்தியில் லோக்பால் மக்கள் நீதிமன்றம், மாநிலங்களில் லோக் ஆயுக்தா மக்கள் நீதிமன்றம் அமைத்திட 2011ஆம் ஆண்டில் தொடங்கி, 2013-இல் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 1988ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்ற லஞ்சத் தடுப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டு முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த செய்திகள் அனைவரும் அறிந்ததாகும். 1988ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதியும், நீதிபதிகளும் டன்க்ஷப்ண்ஸ்ரீ நங்ழ்ஸ்ஹய்ற்ள் என்ற முறையில் கட்டுப்படுவார்கள் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உள்ளது.

அதுபோல் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் 1988ஆம் ஆண்டு சட்டத்தின்படி டன்க்ஷப்ண்ஸ்ரீ நங்ழ்ஸ்ஹய்ற்ள் என்ற பட்டியலில் அடங்குவார்கள் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில்தான் புதிய சட்டம் லோக்பால் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் 63 பிரிவுகள் உள்ளன. இதே நோக்கத்தில் செயல்பட்டு வருகின்ற லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் 31 பிரிவுகள் மட்டுமே உள்ளன. 1947ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்ற லஞ்சத் தடுப்புச் சட்டமும், 2013இல் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டமும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்ற சட்டப் பிரிவும் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன் லோக்பால் அமைப்பு அமைத்திட வேண்டும். இந்த அமைப்பின் தலைவரும், உறுப்பினர்களும் ஒரு தேர்வுக்குழு மூலம் பரிந்துரைக்கப்பட்டு அதன்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அந்தத் தேர்வுக்குழுவில் பிரதமர் தலைவராகவும், மக்கள்சபைத் தலைவர், மக்கள்சபை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமரும் தேர்வுக்குழு உறுப்பினர்களும் பரிந்துரைக்கும் புகழ்பெற்ற நீதி வல்லுநர் ஆகியோர் தேர்வுக்குழுவின் இடம் பெறுவார்கள்.

லோக்பால் அமைப்பின் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வுக்குழு நியமிப்பதற்கு முன்பு, அதற்குத் தகுதியானவர்களைக் கண்டறிய கமிட்டி ஒன்றைத் தேர்வுக் குழு அமைத்திட வேண்டும். இந்தக் குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய சமுதாயத்தினர், சிறுபான்மையினர், பெண்கள் முதலானோர் இடம்பெற வேண்டும் என்ற அரசியல் கருத்தும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கமிட்டியின் அறிக்கையினைப் பெற்றும் தேர்வுக் குழு பரிந்துரையைப் பெற்றும் லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளவர் அல்லது பணியாற்றியவர் அல்லது நீதிபதியாகப் பணியாற்றியவர்கள் அல்லது லஞ்ச ஊழல் பற்றி நன்கு அறிந்த நிபுணராக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக எட்டு பேரை நியமிக்கலாம். இந்த எட்டு உறுப்பினர்களிலும் பாதி பேர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற அரசியல் கருத்தும் சேர்க்கப்பட்ள்ளது.

லோக்பால் அமைப்புக்கு வரும் குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் காணப்பட்டால் விசாரணை நடத்திட வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. போதிய ஆதாரம் உள்ள புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திட, இந்தச் சட்டத்தின்படி நிறுவப்படும் தனி நீதிமன்றத்திற்கு லோக்பால் அமைப்பு அனுப்பி வழக்குப் பதிவு செய்யும் முறைகள் கூறப்பட்டுள்ளன.

லோக்பால் அமைப்பின் அனுமதி இல்லாமல் எந்த ஊழல் வழக்கும் தொடர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றத்திற்கு ஆளாகி உள்ளவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்திடும் அதிகாரமும் லோக்பால் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

லோக்பால் அமைப்புக்கு வரும் குற்ற வழக்குளை விசாரித்திட தனி நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லோக்பால் அமைப்பு அதிகாரம் பெற்ற எந்தக் குற்றச்சாட்டு பற்றியும் பிற நீதிமன்றங்கள் விசாரணை செய்திட முடியாது என்று தடுத்திடும் சட்டப் பிரிவும் இந்தப் புதிய சட்டத்தில் சேர்த்து, நீதிமன்றங்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. நீதியே பறிபோகும் நிலையும் ஏற்பட்

டுள்ளது.

மத்திய - மாநில அரசுகளின் அதிகார மையத்தில் செயல்படுபவர்கள்மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள் வரும்போது விசாரணை செய்து தண்டனைகள் வழங்கிட லஞ்சத் தடுப்புச் சட்டம் 1947ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 1964ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சந்தானம் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு சட்டம் திருத்தப்பட்டு 1988ஆம் ஆண்டு சட்டம் வந்துள்ளது. இந்தச் சட்டமும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் அமைப்புச் சட்டமும் ஒரே நோக்கத்தில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், புதிய சட்டம் கொண்டு வந்து, லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி, ஏற்கனவே உள்ள 1988ஆம் ஆண்டு லஞ்சத் தடுப்புச் சட்டத்தின்படியே குற்றவாளிகளைக் கண்டு, தனி நீதிமன்றங்களின் மூலம் தண்டனை அளிப்பதில் என்ன புதுமை என்று சிந்திக்க வேண்டும்.

1988 ஆம் ஆண்டுச் சட்டத்திலேயே தேவையான திருத்தங்கள் செய்து, அரசமைப்புச் சட்டம், மத்திய - மாநில அரசுகளின் சட்டங்களின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அதிகாரிகள் அனைவரும் இன்றுள்ள லஞ்சத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவார்கள் என்று தெளிவுபடுத்தினாலே புதிய சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

பிரதமர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட, லஞ்சத் தடுப்புச் சட்டத்திற்கு உள்பட்டவர்கள்தான் என்று தெளிவுபடுத்தினாலே 1988ஆம் ஆண்டு சட்டப்படி லஞ்சம் ஊழல்களைத் தடுத்திட முடியும். ஆனால், புதிய சட்டப்படி லோக்பால் அமைப்பு விசாரித்து, பிறகு பழைய 1998 ஆண்டுச் சட்டப்படி வழக்குகள் தாக்கல் செய்வது மேலும் கால தாமதத்தையும், நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்திடும் நிலையையும்தான் தோற்றுவிக்கும் எனத் தெரிகின்றது.

1988ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் யாருடைய முன் அனுமதியும் இல்லாமல், லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள், போதுமான ஆதாரங்கள் இருந்தால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் என்பதற்கு சட்டத்தில் வழி வகுத்தாலே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திடும்.

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும் விரைந்து செயல்பட்டால், லஞ்சம் ஒழிந்திட வாய்ப்பு ஏற்படும்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்திட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 105ஆவது பிரிவு பாதுகாப்புக் கொடுத்துள்ளது என்ற சட்டநிலை உள்ளது என்பதால் 1988 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற சட்டப் பிரச்னை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் லோக்பால் அமைப்பின் மூலம் அனுமதி வழங்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதனால் காலதாமதம் ஆவதும், அரசியல் நிலைப்பாடு நுழைவதும் தவிர்க்க முடியாதவை.

விரைவில் நீதி கிடைத்திட வேண்டுமானால், குற்றச்சாட்டுக்கு நீதிமன்றங்கள் ஏற்கும் ஆதாரங்கள் இருக்குமானால், பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு நீதிமன்றங்களில் யாருடைய அனுமதியும் பெறாமல் வழக்குகள் தொடர்ந்திட வழி வகுப்பதுதான் லஞ்ச ஊழலைத் தடுத்திடச் சிறந்த வழியாகும்.

இது போன்ற தனி நபர் லஞ்ச ஊழலைவிட அரசியல் லஞ்சம்தான் அரசியல் கட்சிகளையும், அரசு அமைப்புகளையும், நாட்டையும் பாழ்படுத்தி வருகின்றது. தேர்தல் களம்தான் அரசியல் லஞ்சத்திற்கு அடித்தளம் என்பதை நாம் உணர வேண்டும்.

கட்டுரையாளர்:தமிழக முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT