இயந்திரமயமாகிவிட்ட இன்றைய மனித வாழ்க்கையில் கூலித் தொழிலாளர்களில் தொடங்கி, மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வரை எல்லோருக்குமே பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
அதை போக்குவதற்கு அனைவருக்குமே மாற்று வழி தேவைப்படுகிறது. அவர்களின் இந்த தேவையை பூர்த்தி செய்வதில் அங்குள்ள பூங்கா, திறந்த வெளி மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு முக்கியப் பங்குண்டு.
இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல விதிக்கப்படும் நுழைவுக் கட்டணமும் குறைவு என்பது நடுத்தரக் குடும்பங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தவிர்த்து திரையரங்குகளுக்குச் சென்றால், நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பங்களுக்கே குறைந்தபட்சம் ரூ.500 செலவு ஏற்படுகிறது. இதனால் திரையரங்கம் செல்லும் பழக்கத்தையே பெரும்பாலானோர் நிறுத்திவிட்டனர்.
பெரு மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அங்கு அமைக்கப்படும் கண்காட்சிகள் மிகச்சிறந்த பொழுதுபோக்கிடம். கண்காட்சியில் பலவகை. புத்தக கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி, தங்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் கண்காட்சி, நாணயக் கண்காட்சி என தொடங்கி நாய்க் கண்காட்சி வரை பல பெயர்களில் பொதுமக்களை கவரும் வகையில் நடத்தப்படுகின்றன.
இந்த கண்காட்சியில் கூடும் மக்களிடம் பல வகையான தின்பண்டங்களை விற்பனை செய்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். ரூ.5 செலவில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள், சிறு நகரங்களில் ரூ.30க்கும், சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்மூலம் கொடுக்கும் பணத்துக்கு தகுதியான உணவுப் பண்டங்கள் கிடைக்காவிட்டாலும், குடும்பத்தாரின் நிர்பந்தம் காரணமாக அவற்றை வாங்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது.
அறிவுப் பசிக்கு தேவையான லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும் புத்தக கண்காட்சிக்கு கூடும் மக்களைவிட, வீட்டு உபயோகக் கண்காட்சியை பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அந்தந்த நகர மக்களின் ரசனையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
திண்டுக்கல் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன், நாள்தோறும் சிந்தனை அரங்கம், உலகின் சிறந்த குறும்படங்கள் திரையிடுதல், சொற்பொழிவு என அனைவரின் அறிவுப் பசிக்கும் தீனியாக அமைந்திருந்தது அந்த புத்தக கண்காட்சி.
நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படாத நிலையிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் முதல் இரண்டு நாளில் விற்பனையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் ஆதரவு இல்லை.
ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அதே வளாகத்தில் வீட்டு உபயோகப் பொருள்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கலாம் என நினைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அரங்கிற்குள் செல்ல ரூ.10 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதுதான்.
உள்ளே நுழைந்தால் வீட்டு உபயோகப் பொருள்கள் மட்டுமின்றி, வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்களும் தள்ளுபடி, குறைந்த விலை, லோன் மேளா என பல சலுகைகளுடன் வரிந்துகட்டி நின்றன.
மலிவான விலையில் பொருள்கள் வாங்கலாம் என உள்ளே சென்றவர்கள், அரங்கம் முழுவதும் சுற்றிவிட்டு வெளியே வந்தபோதுதான், கட்டணம் செலுத்தி பொருள்களை பார்வையிட்டது புரிந்தது. இதனால் பலருக்கு வெறுப்பும், எரிச்சலுமே மிஞ்சியது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட அதிகமான மக்கள் கூடிய அந்த பகுதியில் போதிய காற்றோட்டம் இல்லாமல் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பலர் விரைவாக வெளியேறினர்.
அதேபோல் அங்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இதுபோன்ற கண்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் முன், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் அளித்துள்ள வாக்குறுதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக, உணவுப் பண்டங்களின் தரத்தினை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில்தான் மக்கள் மகிழ்ச்சியோடு வந்து செல்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.