தினங்கள் ஆண்டுகளாகட்டும்
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் - சாதாரண மனிதனோ பிரபல மனிதனோ - தனது பிறந்த தினத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. நம் நாடுகூட சுதந்திர தினம், குடியரசு தினம் எனத் தேசிய தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறது. நாள்காட்டியைப் பார்த்தால் தினமும் ஏதேனும் ஒரு "தினம்' இருப்பது தெரிகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் - சாதாரண மனிதனோ பிரபல மனிதனோ - தனது பிறந்த தினத்தைக் கொண்டாடத் தவறுவதில்லை. நம் நாடுகூட சுதந்திர தினம், குடியரசு தினம் எனத் தேசிய தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறது. நாள்காட்டியைப் பார்த்தால் தினமும் ஏதேனும் ஒரு "தினம்' இருப்பது தெரிகிறது.
உதாரணமாக ஜன. 12 தேசிய இளைஞர் தினம், பிப். 28 தேசிய அறிவியல் தினம், மார்ச் 8 உலக மகளிர் தினம் எனதொடர்கிறது. இதில் மாணவர்களும், இளைஞர்களும் நன்கறிந்த தினங்களாக காதலர் தினம், நண்பர்கள் தினம், ஆசிரியர் தினம், அன்னையர், தந்தையர் தினம் ஆகியவை உள்ளன.
இந்தப் பட்டியலில் அண்மையில் சேர்ந்துள்ளது வேட்டி தினம். அண்மையில் வேட்டி தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது தொடர்பாக பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்திகளும் வெளியானது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது என்றும் தமிழர்களின் உடை தொடர்பான பண்பாடு மற்றும் கலாசாரம் மீட்டெடுக்கப்பட்டது என்றும் வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஆங்கிலேயரைப் போல ஆடம்பரமாக ஆடையணியும் பழக்கமுடைய மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை தமிழகம் வந்திருந்தபோது, தமிழக மக்களின் நிலையைப் பார்த்துதான், தான் அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைத் தூக்கிப்போட்டு அரையாடைக்கு மாறினார் என்பது வரலாறு.
அதேபோல் வேட்டி தினத்தன்றோ அல்லது தமிழர் திருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் மட்டுமோ வேட்டி அணிவது என்றில்லாமல் வாரத்தில் ஒரு நாளோ அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் இரண்டு நாளோ வேட்டி அணிவது என்ற நடைமுறையை நாம் மேற்கொண்டால் நெசவாளர்களின் வாழக்கையில் ஒரு கணிசமான முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்தலாம். மேலும், நமது பாரம்பரிய உடையின் மீதான ஈடுபாடும் நமக்கு இயற்கையாகவே ஏற்படும்.
இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானாலும் அவற்றை இளம் தலைமுறையினரான மாணவர்களிடம் இருந்து தொடங்கினால்தான் முடியும். அதனால்தான் அரசுகூட எந்தவொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும், மாணவர்களையே பயன்படுத்துகிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு என ஒவ்வொரு தினம் கொண்டாடும்போதும் மாணவர்களை கைகளில் பதாகைகளை ஏந்தியபடி சாலைகளில் பேரணியாக கோஷமிட்டுச் செல்ல வைக்கின்றனர்.
மாணவர்கள் மனதில் பதியும் எந்தவொரு விஷயமும் நிரந்தரமாகி, அதனால் சமுதாய மாற்றம் சாத்தியம் என்பதே இதற்கான அடிப்படைக் காரணம்.
எனவே கல்லூரி மாணவ - மாணவியர் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக வேட்டி, சேலை அணிந்து வரவேண்டும் என விதிமுறைகள் கொண்டு வரலாம். ஆரம்பத்தில் கட்டாயத்திற்காக இந்த ஆடைகளை அணிந்தாலும் விரைவில்
மாணவ - மாணவியர் அந்த ஆடைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், ஏதேனும் ஒரு நாள் மட்டும் ஒரு தினத்தைக் கொண்டாடுவதைவிட, ஒவ்வொரு தினத்தையும் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுசரித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உதாரணமாக, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு வருடம் ஜூன் மாதம் முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை சுற்றுச்சூழல் ஆண்டாக கடைப்பிடிக்க வேண்டும். அப்போது மாணவர்கள் அனைவரும் வகுப்பறை, வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் வார அறிக்கைகளை பள்ளிகளில் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும், இது தொடர்பாக தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினால், அனைத்து மாணவர்களும் இதனைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பர். இதன்மூலம் பள்ளி, வீடு, தெரு, ஊர் என அனைத்தும் சுத்தமாகி, பல்வேறு தொற்றுநோய்கள் நம் நாட்டைவிட்டே ஓடிவிடும்.
இதுபோலவே, பிளாஸ்டிக் ஒழிப்பு வருடம், சாலைப் பாதுகாப்பு வருடம், மின்சார சிக்கன வருடம், மரம் வளர்த்தல் வருடம், டெங்கு மற்றும் தொற்றுநோய் ஒழிப்பு வருடம் என தினங்களை வருடங்களாகக் கொண்டாடினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு நாள் கொண்டாட்டத்தின்போது செய்துவிட்டு பின்பு மறந்துவிடும் செயல்களை, வருடம் முழுவதும் சிறிது சிறிதாகச் செய்து நல்ல பழக்கமாக்கலாம். தொடர்ந்து செய்யும் செயல்களே பழக்கங்களாகின்றன; பழக்கங்களே மரபுகளா
கின்றன.
இவ்வாறு ஒரு வருடம் முழுவதும் செய்த செயல்கள் ஆயுள் முழுவதும் தொடர வாய்ப்புள்ளது. இதன்மூலம் நாம் நல்ல சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.