ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள் முதலில் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளானாலும் சரி, மாநில கட்சிகளானாலும் சரி, அவை ஜனநாயக முறையில் செயல்படுவதில்லை.
பல கட்சிகள் பரம்பரை தலைவர்களைப் பெற்று இருக்கின்றன. கட்சித் தொண்டர்கள் பரம்பரை தலைமையை ஆரவாரத்தொடு ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். ஜனநாயக முறையில் ஏற்படுத்தப்பட்ட கட்சி விரைவில் சர்வாதிகாரக் கட்சியாகி விடுகிறது.
ஜனநாயக நாட்டில் இரண்டு ஜனநாயகம் இருக்கிறது. முதல் ஜனநாயகம் அரசியல் கட்சி ஜனநாயகம். அது எந்தக் கட்சியிலும் இல்லை. இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். தகவல் அறியும் சட்டத்தின்படி கட்சிகள் பற்றிய விவரங்களைக் கேட்டதற்குக் கொடுக்க முடியாது என்று எல்லா கட்சிகளும் சேர்ந்து கூறின. அதோடு அரசியல் கட்சிகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று சட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டன.
ஆனால் ஜனநாயக முறை வழுவாமல் தங்கள் கட்சியில் ஜனநாயகம் பேணப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பிவைக்கின்றன. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஜனநாயக செயற்பாடுகள் பற்றிய அறிக்கையை வாங்கி ஃபைலில் வைத்துக் கொண்டு விடுகிறது.
இரண்டாவது ஜனநாயகம், அரசு அதிகாரம் பெற நடைபெறும் தேர்தல். பொது மக்கள் வாக்களிப்பது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தின் பல நாடுகளிலும் ஜனநாயக முறையிலான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு முறையில் இல்லை.
ஏனெனில் ஒரே மாதிரி இருக்கும் மனிதர்கள் ஒன்றில்லை. சிறந்த ஜனநாயகவாதிகளாக வாழ்க்கையைத் தொடங்கியவர்களில் பலர் கொடிய சர்வாதிகாரிகளாக மாறியிருக்கிறார்கள். ஜனநாயகமும், சர்வாதிகாரமும் பிரிக்க முடியாதவிதத்தில் அரசியலில் இருந்து வருகிறது.
உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் எண்பத்தொரு கோடிக்கு மேலிருக்கிறார்கள். அதில் உலக மகா பணக்காரர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கலைஞர்கள், வேலையற்றவர்கள், வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்கிறவர்கள் - என்று பலரும் இருக்கிறார்கள்.
ஆனால் வாக்காளர் என்ற முறையில் ஒற்றை வாக்குப் பெற்றவர்கள், வாக்காளர்களின் சமூக, கல்வி, பொருளாதார அரசியல் நிலைமைகள் எதுவும் வாக்காளர் என்ற ஒற்றை வாக்கில் குறுக்கிடுவதில்லை. அதாவது ஒரு வாக்காளர், ஒரு வாக்கு. அதுதான் ஜனநாயகம் என்பதின் அடிப்படை.
இந்தியாவில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். எவ்வளவு உயர்ந்தப் பதவியில் இருந்தாலும், பெரிய பட்டங்கள் பெற்றிருந்தாலும், உடல் ஊனமுற்று இருந்தாலும் தன் வீட்டில் இருந்து கொண்டே வாக்களிக்க முடியாது. ஜனநாயகம் என்பது எல்லாரையும் ஒன்றாகவே நடத்துகிறது என்பது அதுதான்.
ஒரு வாக்காளர் வாக்குச் சாவடிக்குச் சென்று தெரியாமலோ தெரிந்தோ தவறான முறையில் வாக்களித்தால் அது செல்லாத வாக்கு; பலனற்றது. வாக்காளர் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருந்து விட்டால் அவர் வாக்குச் செல்லாதது இல்லை. போடப்படாத வாக்கு. ஜீவன் உள்ளது. இன்னொருவர் போடக்கூடியது. அப்படிப் போடப்பட்டால் அது கள்ளவோட்டு. ஆனாலும் செல்லும் வோட்டு. எனவேதான் கள்ள வோட்டைத் தவிர்க்க ஒவ்வொருவரும் வாக்குப் போட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் நிறுத்தும் வாக்காளர்களுக்கு எதிராக வாக்களிக்கவும் தங்கள் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சரிவர செயல்படாவிட்டால் திருப்பியழைத்துக் கொள்ள உரிமை வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரினார்கள்.
அவர்கள் கோரிக்கையை பல ஆண்டுகள் ஆராய்ந்த தேர்தல் ஆணையம் நோட்டாவை கொடுத்து இருக்கிறது. நோட்டா எதிர்ப்பு வாக்கு. ஆனால் யாருக்குமானதில்லை. நோட்டா வாக்கு வெற்றி தோல்வியை தீர்மானிப்பது கிடையாது. அது ஒரு வகையில் செல்லாத வாக்கு.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு நிறுத்தும் வேட்பாளர்களில் ஐம்பது சதவீதத்தினர் குற்றவாளிகள். அதற்கு கட்சிகள் சொல்லும் காரணம், முந்திய அரசும், ஆளும் கட்சியும் எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு இருக்கின்றன. நீதிமன்றங்களில் நாங்கள் நிரபராதிகள் என்று நிலைநாட்டி விட்டு வெளியில் வருவோம். குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத வரையில் நாங்கள் குற்றமற்றவர்கள். எனவே தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் சேவையாற்றுவோம் என்று சூளுரைக்கிறார்கள்.
அரசியலில் அதிகமானவர்கள் ஈடுபட, தேர்தலில் நிற்க முதல் காரணம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி கௌரவமானதாக, அதிகாரம் மிக்கதாக இருக்கிறது. பெரிய அளவில் சம்பளம், ஏராளமான சலுகைகள் பெறக்கூடியதாக உள்ளது. சுகஜீவியாக இருக்கலாம். தன்னையும், தன் பரம்பரையையும் நன்றாக வாழ வைக்கலாம்.
அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் என். கோபாலசாமி, "பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வருகிறார்கள். சேவை செய்வதற்கு என்று யாரும் வருவதில்லை' என்றார். அவர் வெறுப்பால் சொன்னார் என்று சொல்ல முடியாது. நிலைமையை அறிந்து மனம் கசிந்து சொன்னார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் எப்போதுமே ஏராளமான பணக்காரர்கள் வேட்பாளராக நிற்க முன்வருகிறார்கள். அதில் பலர் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்து சீட் வாங்கியவர்கள்.
பணக்காரர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்பது இல்லை. ஆனால் முறையற்ற வகையில், லஞ்சம், ஊழல் செய்து பணம் சம்பாதித்தவர்கள், கருப்பு பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்தப் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினராவது சரியானது என்று தேர்தலுக்கு வருகிறார்கள்.
அவர்களோடு அரசின் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பலர் நேர்மையற்ற அரசியல்வாதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு தேர்தலில் களம் காணுகிறார்கள். கேளிக்கை, பொழுதுபோக்கு விளையாட்டு என்று பல தளங்களில் இருந்தவர்கள் அரசியலால் கவரப்பட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அதில் நடிகைகள், நடிகர்கள் எண்ணிக்கைக்கூடி வருகிறது.
"தேர்தல் ஜனநாயகம் என்பதே மோசடியானது. லஞ்ச ஊழல் பேர்வழிகள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஏழை, எளிய மக்களைப் பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்று வஞ்சித்து வருகிறார்கள். அது ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்கிறது' என்று ஜனநாயகம் பேசுகிறவர்கள் சொல்கிறார்கள்.
இந்திய வாக்காளர்களில் பாதிபேர்களுக்கு மேல் பள்ளிக்கூட படிப்பு இல்லை. அதாவது அவர்கள் டூன் ஸ்கூல், இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போய் படிக்கவில்லை. ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் என்று கல்லூரிகளுக்குப் போகவில்லை. ஆனால் ராமாயணம், மகாபாரதம் கேட்டிருக்கிறார்கள். புத்தர் பொன் மொழிகள், பகவத் கீதை, திருவள்ளுவர், விவேகானந்தர் சொன்னவற்றை அறிந்திருக்கிறார்கள். சொந்தமாக, நன்மை, தீமை பற்றி தெரிந்துவைத்து இருக்கிறார்கள்.
எப்போதும் பசித்த வயிற்றோடு இருந்தாலும் வஞ்சகம், சூழ்ச்சி அற்றவர்கள். எல்லாரும் வாழ மழை பொழிய வேண்டுமென்று இறைவனிடம் இறைஞ்சி வேண்டுகிறவர்கள். பெரிய தவறுகள் செய்ய பயப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அற்பர்கள் கொஞ்சம் பணமும், புட்டியில் சாராயமும் கொடுத்து கெடுத்துவிடுகிறார்கள்.
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நல்ல மனத்தோடு வாக்குச் சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களிக்கிறவர்கள். அதனால்தான் வாக்களிப்பு எழுபது சதவீதமாக இருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் இருக்கும் முப்பது சதவீதத்தினர் மேல் கோபமும் வெறுப்பும் வருகிறது. முப்பது சதவீதம் வாக்களிப்பு இருந்திருந்தால் தங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று நினைக்கிறார்கள். எனவேதான் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அதுதான் ஜனநாயக கடமை என்கிறார்கள்.
அதற்காக வாக்களிப்பைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறார்கள். வாக்களிக்காதவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று கூப்பாடு போடுகிறார்கள். அபராதம் கட்ட பணம் இல்லை என்றால் வாக்குரிமையைப் பறித்துவிடலாம். ரேஷன் அட்டையை பிடுங்கி விடலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.
ஜனநாயகம் - தேர்தல் என்பதை முன் நிறுத்தும் ஜனநாயகம் என்பது நூற்றுக்கு நூறு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருக்க முடியாதது என்பது மட்டுமல்ல, இருக்கவும் கூடாதது. அதுதான் ஜனநாயகம் என்பதின் அடிப்படை.
தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்பதுபோல - வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு பிரஜையின் உரிமை.
ஒரு நல்ல, யோக்கியமான குடிமகன் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை அரசியல் கட்சிகள், தலைவர்கள், எல்லாரும் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என முழங்கும் சமூக ஆர்வலர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.