என்னவாகும் ஏழைத் திட்டங்கள்?
இந்தியாவை பணபலம் கொண்டு ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஏழையாகி விட்டது. இன்னமும் தாங்கள்தான் சோஷலிசத்திற்காகப் பாடுபடுவதாக சோனியாவும் ராகுலும் பெருமைப்படுவதில் பொருள் இல்லை.
கட்டுரைகள்என்னவாகும் ஏழைத் திட்டங்கள்?
இந்தியாவை பணபலம் கொண்டு ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஏழையாகி விட்டது. இன்னமும் தாங்கள்தான் சோஷலிசத்திற்காகப் பாடுபடுவதாக சோனியாவும் ராகுலும் பெருமைப்படுவதில் பொருள் இல்லை.
இந்தியாவை பணபலம் கொண்டு ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஏழையாகி விட்டது. இன்னமும் தாங்கள்தான் சோஷலிசத்திற்காகப் பாடுபடுவதாக சோனியாவும் ராகுலும் பெருமைப்படுவதில் பொருள் இல்லை. ஏனெனில் சோஷலிசத்தின் சரியான வரையறை, "முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு முடிவு கட்டித் தொழில் உற்பத்தியைப் பொது உடமையாக்க வேண்டும்' என்பதே ஆகும்.
நரசிம்மராவ் காலத்திலேயே பொது உடைமைகள் தனி உடைமைகளாக மாற்றப்பட்டனவே? ருஷியாவும் சீனாவும் முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் வந்துவிட்ட பிறகு இந்தியா மட்டும் எம்மாத்திரம்? இதுநாள் வரை சோஷலிசம் என்று கூறி காங்கிரஸ் கட்சி நடத்தி வந்த வேடிக்கை ஒரு கேலிப் பொருளே என்று நிரூபிக்கும் வகையில் 2014 தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.
உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி சோஷலிசப் பாதையில் சென்றிருக்குமானால் ஏழைகள் ஏன் பா.ஜ.கவை தேர்ந்தெடுத்தார்கள்? 2014 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போய்விட்டனர். உலக முதலாளித்துவத்திற்கு உலக சோஷலிசமே மண்டியிட்டுவிட்ட சூழ்நிலையில், எந்த வகையான காப்புப் பொருளாதாரத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்?
எந்த அளவில் நாம் ஒரு தன்னிறைவுக் கொள்கையை வகுத்துப் பன்னாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள இயலும் என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்தால் வழி பிறக்கும். அதுவரை எந்த இசமும் பயன் தராது.
பிறக்கும்போதே வெள்ளிக் கிண்ணத்தில் அமுதம் உண்டவர்கள் ஏழைகளைப் பற்றி எண்ணுவது சோனியா - சிதம்பரயிசம். ஏழையாகவே வாழ்ந்து மண் கலயத்தில் கஞ்சி குடித்தவர் ஏழையைப் பற்றி எண்ணுவது மோடியிசம்.
சோஷலிசம் என்று சோனியா - சிதம்பரம் விளம்பரம் தேடிக் கொண்ட நான்கு திட்டங்களாவன: மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை உறுதித் திட்டம், உணவுக்கு உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு திட்டம், தேசிய நல வாழ்வுக் கமிஷன், கல்விக்கு உறுதித் திட்டம்.
இந்த நான்கில் ம.கா.தே.கி. குளத்து வேலைத் திட்டம் மட்டுமே ஓரளவுக்குச் செயல்பட்டது. ஒடிசா, பிகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இத்திட்டம் செயல்படவில்லை. 2008-2009 ஊதல் வளர்ச்சியைத் தொடர்ந்து ஊன வளர்ச்சி ஏற்பட்டதால் 2009க்குப் பின் இத்திட்டங்களைச் செயலாற்ற நிதி வசதி எட்டப்படவில்லை.
இதையே காரணமாக வைத்து மோடி அரசு மேற்படி ஏழைத் திட்டங்களை முடக்கி விடுமோ என்ற ஐயமும் இருக்கிறது. மேற்படி நான்கு திட்டங்களும் நாடாளுமன்ற ஓட்டெடுப்பு மூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சிக் குழு ஒப்புதல் பெற்று 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் புதிய அரசு புறக்கணிக்க முடியாது என்றாலும் மாற்றங்கள் செய்ய வாய்ப்புகள் உண்டு. 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 35,68,626 கோடி ரூபாய் ஏழைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6.75 லட்சம் கோடி ரூபாய் குளத்து வேலைத் திட்ட ஒதுக்கீடு.
நிதியமைச்சர் தயாரிக்கப் போகும் 2014-15 பட்ஜெட்டில் எந்த அளவுக்கு ஏழைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும். ஏழைத் திட்டங்களை நிதிப் பற்றாக்குறை காரணமாகவே ஐ.மு. கூட்டணி அரசாலும் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே வரவு-செலவுத் திட்டம் வளர்ச்சியை நோக்கிச் செல்லப் பற்றாக்குறை தவிர்க்கப்பட வேண்டும்.
உற்பத்தியில் வளர்ச்சி இல்லை. கூடவே பணவீக்கம், விலை ஏற்றம் ஆகிய காரணங்களினால் அசல் வருமானத்தில் தொய்வு. 2007-2009 காலகட்டத்தில் நிகழ்ந்த வளர்ச்சி, பணவீக்கத்தால் ஏற்பட்ட ஊதல் வளர்ச்சியே தவிர அசல் வளர்ச்சி இல்லை. உற்பத்தி அடிப்படையில் ஊதியம் வழங்காமல் போனதால் உற்பத்தியில் லாபம் இல்லை. தொழில் துறை முதலீடுகள் ஊக்கம் பெறவில்லை. தொழில் துறை முதலீடுகள் லாபம் தரும் வழியில் பல்வேறு அமைச்சரகக் கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டை போட்டன.
புதிய அரசு மெள்ள மெள்ள இம் முட்டுக்கட்டைகளை அகற்றினால் லாபம் உண்டு. எனினும் இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் அடிப்படையான ஒரு முரண்பாட்டை நீக்குவது அவசியம்.
இந்தியப் பொருளாதாரம் செம்மையுற வேண்டுமானால் நாட்டின் நிதிக் கொள்கைக்கும் நாட்டின் பணக் கொள்கைக்கும் உள்ள வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு தனித்தனி அமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
நிதிக் கொள்கை என்பது பணத்தைச் செலவு செய்யும் அதிகாரம். பணக் கொள்கை என்பது பணத்தை உருவாக்கும் அதிகாரம். பணத்தைச் செலவு செய்யும் அதிகாரம் நிதியமைச்சரிடம் உள்ளது. பணத்தை உருவாக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் உள்ளது. ரிசர்வ் வங்கி தனக்குரிய அதிகாரத்துடன் செயல்படவிடாமல் நிதியமைச்சர் குறுக்கிட்ட காரணத்தினாலேயே பணவீக்கம் பெரிதாகிப் பற்றாக்குறை உயர்ந்து சென்றது.
ஐ.மு. கூட்டணி அரசு ரிசர்வ் வங்கியைச் செயல்பட விடாமல் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் பணத்தை அச்சிடும் ஒரு இயந்திரமாகவே ரிசர்வ் வங்கியை மதித்தது. நிதி பற்றாக்குறைக்குரிய பரிகாரம் வருமானத்தை உயர்த்துவதும், தேவையற்ற செலவினங்களைத் தவிர்ப்பதும் ஆகும்.
வளர்ச்சி இல்லாத பொருளாதாரத்தில்தான் நிதி ஆதாரங்களைப் பெருக்க முடியாமல் செலவை சமாளிக்க ரிசர்வ் வங்கி நோட்டடிக்கும் ஒரு அச்சாபீசாகத் திகழும். நிமிர்ந்து நின்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருளாதாரத்தில் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டே வளர்ச்சியை அடையும். கருப்புப் பண ஆதிக்கத்தை ஒழிக்கும். பட்ஜெட் பற்றாக்குறை அற்பமாகத் திகழும்.
முதல் நடவடிக்கையாக மோடி அரசு கருப்புப் பணத்தை மீட்க உச்சநீதிமன்ற யோசனைப்படி ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷாவின் தலைமையில் நியமித்துள்ளதை வரவேற்க வேண்டும். அரிஜித் பசாயத் என்ற மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதியும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் கருப்புப் பண விவகாரம் விரைவில் அம்பலமாகும் என்று நம்புவோம்.
ஏராளமான எதிர்பார்ப்புகளுடன், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குள் அழுத்தமாகத் தடம் பதிப்பார் என்று நம்பி இந்திய மக்கள் மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேசமயம், இந்தியாவின் பற்றாக்குறையையும் முதலீட்டுப் பசியையும் மோடி என்ற மந்திரக்கோல் அவ்வளவு எளிதாகச் சரி செய்து விடுமா என்ற கேள்வியும் உண்டு.
ஒரு அரசின் நிதிக் கொள்கையையும் பணக் கொள்கையையும் வித்தியாசப்படுத்தாமல் ஐ.மு. கூட்டணி அரசு பின்பற்றிய வழியைத் தொடருமானால் பொருளாதாரத்தில் ஊதலும் வெடிப்பும் மாறி மாறி வரும். அவ்வாறு நிகழாமல் நீடித்த வளர்ச்சி ஏற்பட நான்கு வினாக்களுக்கு தக்கபடி விடை காண வேண்டும்.
முதலாவதாக, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் முழுமையான சமன்பாடு. நாம் இறக்குமதி செய்யும் அளவில் ஏற்றுமதியை உயர்த்த முடியவில்லை. தேவையற்ற பல பொருள்களின் இறக்குமதியைத் தடை செய்து அப்பொருள்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துவது.
தங்க இறக்குமதிக்குத் தடை விதித்துவிட்டுக் கள்ளக்கடத்தலுக்கு வழி வழங்காத அளவுக்கு தண்டனைச் சட்டம். ஏற்றுமதிப் பொருள்களுக்கு முன்னுரிமை வழங்கல். எழக்கூடிய முதல் வினா, இறக்குமதிகளைக் குறைத்து ஏற்றுமதிகளை உயர்த்த முடியுமா?
இரண்டாவதாக, செலவினங்களைக் குறைக்கும் நிதிக் கொள்கை. பல வகையான மானியங்கள், பற்றாக்குறை நிதியின் இலக்கு பற்றிய மறுபரிசீலனை செய்வார்களா?
மூன்றாவதாக, நிதி வருமானங்களின் நிர்ணயம். வரிகள் பற்றிய கொள்கை. அரசுக்கு வரவேண்டிய வருமானங்களில் தொய்வு ஏன் என்ற கேள்வி. எந்த அளவில் அரசு வருவாயை உயர்த்தலாம் என்ற கேள்விக்கு வருமான வரி ஏய்ப்பு, கருப்புப் பணப் பதுக்கல் மட்டுமல்ல; வங்கிகளின் வாராக்கடன் மீட்பு பற்றிய தண்டனைச் சட்டம்.
வங்கியில் கடன் வாங்கிய விவசாயி நிலத்தை அடமானம் வைப்பார். கெடு முடிந்தும் கடன் வசூலாகாவிட்டால் நிலம் ஏலத்திற்கு விடப்படுகிறது. நகையும் ஏலத்திற்கு விடப்படுகிறது. வீட்டை அடமானம் வைப்பவர்கள் கடனைக் கட்டாதபோது, வீடு ஏலம் போகிறது.
அதேசமயம் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடன் செலுத்தாவிட்டால் அவர்கள் பங்கு, வீடு, தொழிற்சாலை எதுவும் ஏலம் போவதில்லை. மாறாகப் புதிய கடன் வழங்கப்படுகிறது. இந்தப் பாரபட்சம் தவிர்க்கப்பட்டால் செலவினம் குறைந்து வரவினம் கூடும்.
நான்காவதாக, முக்கிய சமூகக் கட்டமைப்புகளான மின்சாரம், நீராதாரம், போக்குவரத்து, எரிவாயு குறித்த வரிகளில் நுகர்வோரின் வாங்கும் சக்தியைக் கருத்தில் கொண்டு புதிய மதிப்பீடுகள் செய்தல். சுருக்கமாகச் சொல்வதானால் ஐ.மு. கூட்டணி அரசின் கட்டுப்பாடற்ற செலவினங்களினால் ஏற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறை நீக்கப்பட்டுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
சட்டியில் மாவு இருந்தால்தான் அகப்பையில் வரும். வளர்ச்சியில்லாத பொருளாதாரம் வெறும் சட்டி. ஏழைத் திட்டங்களின் எதிர்காலத்தை வெறும் சட்டியால் நிறைவேற்ற முடியாது. வரவினமுள்ள வளர்ச்சிப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமே ஏழ்மையை அகற்றி மலர்ச்சியைப் பெற முடியும்.