பெண்களுக்கு சம வாய்ப்பு அளிப்போம்!
விதவைகள் மதுராவுக்கு வருவதை விட அவரவர் இருப்பிடங்களில் உள்ள கோயில்கள் அருகிலேயே வசிக்க வேண்டும்
விதவைகள் மதுராவுக்கு வருவதை விட அவரவர் இருப்பிடங்களில் உள்ள கோயில்கள் அருகிலேயே வசிக்க வேண்டும் என்று மதுரா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி கூறியிருக்கிறார். அதன் பின்னர், இந்தக் கருத்துக்கு அவர் விளக்கம் அளித்துள்ளபோதிலும், அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை.
நாட்டில் உள்ள விதவைகளின் நிலையைப் பற்றி அறியாமலும், இரக்கமற்ற முறையிலும் கூறப்பட்டுள்ளதாக உள்ளது ஹேமமாலினியின் கருத்து.
பிருந்தாவனில் இருந்து விதவைகளை விரட்டிவிடுவது அந்த நகரின் சுமையை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், நிர்கதிக்கு ஆளான அந்தப் பெண்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கு எந்த உதவியையும் அது அளிக்காது.
Advertisement
பிருந்தாவனில் உள்ள விதவைகள் மட்டுமல்லாமல், பொதுவாகவே நமது நாட்டில் பெண்களின் நிலை பற்றி ஆழமாக ஆய்வு செய்தால்தான் இந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வைக் காண முடியும்.
பிருந்தாவனில் உள்ள விதவைகளின் நிலைபற்றி முதலில் பார்ப்போம். வெறும் 4.56 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள மதுராவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,005 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் விதவைகள்.
எனினும், சிலர் தங்கள் வசதிக்கேற்ப இந்த எண்ணிக்கையை 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கூறுவார்கள். இந்த விதவைகளில் பெரும்பாலானோர் - அதாவது 74 சதவீதத்தினர் - மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள்.
பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விதவைகள் பிருந்தாவனுக்கு வந்து வசிக்கின்றனர்.
இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விதவைகள் என்பதால் பிருந்தாவனத்தை "விதவைகளின் நகரம்' என்று கூட கூறுவதுண்டு. கணவனால் கைவிடப்பட்டவர்களும், வருமானம் ஈட்ட வழியில்லாத கணவர்களைக் கொண்டவர்களும் இங்கு உள்ளனர்.
எந்தவித ஆதரவும் இல்லாத இளம்பெண்கள் கூட குறைந்த எண்ணிக்கையில் இங்கு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் ஒன்றுதான். இவர்கள் நிராதரவானவர்கள்.
இவர்கள் பஜனை பாடுவதன் மூலம் சொற்ப வருவாய் ஈட்டுகின்றனர். 4 மணி நேரம் பஜனை பாடினால் அவர்களுக்கு ரூ.3 அல்லது ரூ.3 உடன் 100 கிராம் பருப்பும், அரிசியும் வழங்கப்படுகிறது என்று தேசிய மகளிர் ஆணையத்தின் 2009-10-ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை என்று இந்த விதவைகள் வேறு வேறு நேரங்களில் பஜனைப் பாடல்கள் பாடிவருகின்றனர்.
அவர்கள் வசிக்கும் இடம் நெரிசல் மிகுந்ததாக இருக்கும். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இருக்காது. பொதுவாகப் பார்த்தோமானால், அவர்களது வாழ்க்கை பரிதாபகரமானதாகும். மரணத்தை எதிர்பார்த்தே அவர்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இறப்புக்குப் பிறகும் கூட அவர்கள் அவமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடல் துண்டுதுண்டாக அறுக்கப்பட்டு சாக்குப் பைகளில் வைத்து தூக்கி வீசப்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கு அருகதையற்ற ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்கிறார்கள் என்பது திண்ணம்.
பிருந்தாவன் விதவைகளின் பரிதாபகரமான நிலை என்பது இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை உணர்த்தும் ஒரு சிறிய குறியீடே ஆகும். பிருந்தாவனத்தில் வசிக்கும் விதவைகள் வெறும் 15 ஆயிரம் பேர்தான். ஆனால், நாடு முழுவதும் 4 கோடி விதவைகள் எப்படிப்பட்டதொரு வேதனையை அனுபவித்து வருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
வாழ்நாள் முழுவதும் ஓர் ஆணை சார்ந்தே வாழும் வகையில்தான் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். கணவர் இறந்துவிட்டால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாக சீரழிந்துவிடுகிறது. பிருந்தாவனத்துக்கு வரும் விதவைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் ஆதரவுக் கரம் நீட்டுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது நிழல் பட்டால் பாவம் என்று கருதி, அவர்களை வீட்டைவிட்டு விரட்டி விடுகின்றனர்.
மரணத்துக்கு மாற்றாக அத்தகைய பெண்களுக்கு பிருந்தாவனம் அமைந்துவிடுகிறது. எனவே, அவர்களை சக மனிதர்களாகவும், இந்த நாட்டின் குடிமக்களாகவும் சரிசமமாக நடத்துவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டியுள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண்களின் நிலையை உயர்த்துவது ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகும். சமூகத்தில் சரிபாதியாக விளங்கும் பெண்களைப் புறக்கணிக்கும் எந்த சமூகமும் நாகரிகமானது என்று கூற முடியாது.
இந்தியாவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதை பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் உள்ளனர். உலக அளவில் இது ஆயிரம் ஆண்களுக்கு 984 பெண்கள் என உள்ளது.
எண்ணிக்கையில் சொல்வதென்றால், ஆண்களைவிட 3 கோடியே 56 லட்சத்து 74,113 பெண்கள் குறைவாக உள்ளனர். இதைவிட மோசம் என்னவென்றால், குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் என்ற நிலையே உள்ளது. இவ்வளவு பிரசாரங்களுக்குப் பிறகும் கூட, கணினியுகம் என்று சொல்லப்படும் இப்போதும் ஆண் குழந்தைகளையே பெற்றோர் விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.
மொத்த மக்கள் தொகையில், 6 வயது வரை 16.44 கோடி பேர் உள்ளனர். இதில் 8.57 கோடி பேர் ஆண்கள். 7.87 கோடி பேர் பெண்கள். ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, 70 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாக உள்ளனர்.
கல்வியைப் பொருத்தவரை, பெண்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். 82.14 சதவீதம் ஆண்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆனால், 65.46 சதவீதம் பெண்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை 2013-14-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. 2012-இல் பொதுத் துறை நிறுவனங்களில் மொத்தம் உள்ள 176.09 லட்சம் பணியிடங்களில் 31.52 லட்சம் பெண்கள்தான் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இது வெறும் 17.89 சதவீதமே ஆகும்.
ஒருங்கிணைந்த தனியார் துறையில், மொத்தம் உள்ள 119.70 லட்சம் பணியிடங்களில் 29.93 லட்சம் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 25 சதவீதம்தான். ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த பிரிவில், மொத்தம் உள்ள 295.79 லட்சம் பணியிடங்களில் பெண்கள் 60.54 லட்சம் பேர் பணிவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது 20.46 சதவீதம் ஆகும்.
2013-இல் வெளியிடப்பட்ட பாலின பாகுபாடு குறியீட்டில், மொத்தம் குறிப்பிடப்பட்டுள்ள 152 நாடுகளில், இந்தியா 127ஆவது இடத்தில் உள்ளது.
உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் அவமானத்துக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுவதால், அவர்களது வாழ்க்கை பரிதாபகரமானதாகவும் உள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 2012-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 2,44,270 வழக்குகளும், 2013-இல் 3,09,546 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தைவிட மிகமிகக் குறைவானதாகவே இருக்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இழுக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், இது போன்ற பல சம்பவங்கள் காவல் நிலையம் வரை எடுத்துச் செல்லப்படுவதில்லை.
அதிக வருமானம் அளிக்கும் எல்லா வகையான பணிகளையும் ஆண்கள் பறித்துவிடுகின்றனர். வருமானம் குறைவாக உள்ள அல்லது வருமானமே இல்லாத பணிகளையே பெண்கள் தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வீட்டில் இருக்கும் பெண்கள், வேலை இல்லாதவர்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். உண்மையில் பார்த்தோமானால், அவர்கள்தான் அதிகம் பணிபுரிகின்றனர்.
தொடர்ந்து ஒரே விதமான சலிப்பூட்டும் பணியானாலும், எந்தவித வருமானமும், ஓய்வு நாளும் இல்லாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சமையல் செய்தல், துணி துவைத்தல், வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், குழந்தைகளை வளர்த்தல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு ஊதியம் கொடுப்பது என்று தீர்மானித்தால், மற்ற பணிகளுக்குக் கொடுக்கும் ஊதியத்தை விட இதற்கு அதிகம்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், அவர்களது இந்த உழைப்பு கணக்கில் வருவதேயில்லை.
கணவர் இறந்து விடுவதாலோ அல்லது மற்றவர்களால் கைவிடப்பட்டு, எந்தவிதமான ஆதரவும் அற்ற நிலையிலேயோதான் பெண்கள் பிருந்தாவனத்துக்கு வருகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.
எல்லாவிதமான வேலைவாய்ப்புகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். கார் ஓட்டுநர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
பெண்கள் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுவதுதான் அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும்.