கட்டுரைகள்

மாற்றத்துக்கு வழி காட்டும் விரிவாக்கப் பணி

உயர் கல்வி நிலையங்களுக்கு மூன்று முக்கியமான பணிகள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்குக் கற்றுத்தருதல்; இரண்டு ஆராய்ச்சி செய்தல்; மூன்று விரிவாக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்.

க. பழனித்துரை

உயர் கல்வி நிலையங்களுக்கு மூன்று முக்கியமான பணிகள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்குக் கற்றுத்தருதல்; இரண்டு ஆராய்ச்சி செய்தல்; மூன்று விரிவாக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுதல். இந்தியாவில் பெரும்பாலான உயர் கல்வி நிலையங்கள் இரண்டு பணிகளை மட்டுமே செய்து வருகின்றன. மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பது; ஆராய்ச்சி செய்வது.

இந்த இரண்டிலும்கூட பெரும்பாலான கல்வி நிலையங்கள் கற்பிப்பதைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றன. சில கல்வி நிலையங்கள் ஆராய்ச்சிப் பணிகளை அவ்வளவு சிரத்தை எடுத்துச் செய்வது கிடையாது. இருந்தபோதிலும் ஆராய்ச்சிப் பணிகளையும் குறைந்தபட்சம் தங்கள் பதவி உயர்வுக்காகவாவது மேற்கொள்வது உண்டு.

இன்னும் சொல்லப்போனால் பல ஆசிரியர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்வது என்பது ஒரு கட்டாயம் என்பதே தெரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பணி ஆணையில் அப்படிக் குறிப்பிடுவது கிடையாது. பதவி உயர்விற்கான நேர்காணலுக்குச் செல்லும்போதுதான் ஆராய்ச்சி பற்றிய கேள்விகள் கேட்கப்படுகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்கள் பலர் மேற்சொன்ன இரண்டு பணிகளைத்தான் கட்டாயக் கடமைகள் என்று நினைத்துச் செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவதாக ஓர் கட்டாயக் கடமை உள்ளது என்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை, நிறுவனங்களுக்கும் தெரிவதில்லை. அந்த மூன்றாவது, விரிவாக்கப் பணியாகும்.

இது ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் சேர்ந்து செய்கின்ற பணியாகும். இது சமூகத்துடன் உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாக தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளுதல் ஆகும்.

விரிவாக்கப் பணி என்றால் ஏதோ விவசாயக் கல்லூரிகள் செய்ய வேண்டிய பணி என எண்ணி மற்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் வாளா இருந்து விடுகின்றன. அத்துடன் இந்த விரிவாக்கப் பணி பற்றி இன்றைய நம் உயர்நிலைக்கல்வி நிலையங்களில் விவாதிக்கப்படுவது இல்லை; அதற்கான அமைப்புகளையும் உருவாக்குவதில்லை.

ஆனால், எல்லா உயர்கல்வி நிலையங்களிலும் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய சேவைத் திட்டம், வயது வந்தோர் கல்வி மையம், வாழ்நாள் கல்வி மையம் என்றெல்லாம் துறைகள் செயல்படுகின்றன.

ஆனால், இவை அனைத்தும் இந்த விரிவாக்கப் பணிகளைக் கற்றுத்தருதல் போலவோ அல்லது ஆராய்ச்சி செய்வது போலவோ மாற்றப்படவில்லை. ஆகையால்தான் நம் உயர்கல்வி மையங்கள் இன்று சமுதாயத்துடன் இணைந்து செயல்படாமல் தனிமைப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

உயர்கல்வி நிலையங்களிலிருந்து சமுதாயம் பெறவேண்டிய பல பணிகள் கிடைக்கப்பெறாமல் அவற்றைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. விரிவாக்கப் பணியை விவசாயப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி போன்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தலாம்.

நம் உயர்கல்வி நிலையங்கள் விரிவாக்கப்பணிகளில் ஈடுபட்டால் சமூகத்தில் உள்ள பல சிக்கல்களும் பிரச்னைகளும் தீர்வதற்கு வழி பிறக்கும். நம் மாணவர்களுக்கும் சமூகப் பார்வையும் அக்கறையும் திறனும் கூடும். நமது அரசு உயர் அதிகாரிகளுக்கும் விரிவாக்கப்பணி பற்றிய தெளிவான பார்வை இல்லை.

ஆகையால்தான் நம் உயர்கல்வி நிலையங்களை விரிவாக்கப்பணிகளில் ஈடுபடுத்த அரசும் அழுத்தம் கொடுப்பதில்லை. பல்கலைக்கழக மானியக் குழு, இந்த விரிவாக்கப் பணியைப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் கட்டாயமாக்க வேண்டும். விரிவாக்கம் பற்றிய விவாதம் உயர்கல்வி நிலையங்களில் நடைபெறுவது கிடையாது.

விரிவாக்கப் பணி என்பது கல்விக்கூடங்களிலும் ஆராய்ச்சிக்கூடங்களிலும் உருவாக்கப்படுகின்ற அறிவு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு ஆகியவற்றை நேரடியாக மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வதாகும். எதை எளிதாக எடுத்துச் செல்ல முடியுமோ அதைக்கொண்டு சென்றாலே சமூக மாற்றம் விரைவாக நடைபெறும்.

சமீபத்தில் ஒரு கிராமத்திற்கு மாணவர்களுடன் சென்று ஒரு வாரம் முகாம் நடத்தியபோது, மாணவர்கள் ஒரு சிறு சேவை செய்தார்கள். அந்தக் கிராமம் முழுக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள். அந்தக் கிராமத்தின் பெரும் பிரச்னையே கழிப்பிடம் இல்லாமைதான்.

அந்த முகாமைப் பார்வையிட வந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாணவர்கள் இந்தப் பிரச்னையை எடுத்துச் சொன்னார்கள். அப்பொழுது அந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மாணவர்களிடம் அரசின் முழு சுகாதாரத் திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.

"இடம் மட்டும் பயனாளிகளைத் தரச்சொல்லுங்கள். அனைவருக்கும் கழிப்பறையை கட்டிவிடலாம். ஒரு பைசாக் கூட அவர்கள் தர வேண்டியது இல்லை' என்று கூறினார். அது மட்டுமல்ல, இந்த ஊரில் உள்ள கோவில்களைக் கணக்கிடுங்கள் என்று மாணவர்களிடம் அவர் கூறிச் சென்றார்.

மாணவர்கள் அந்த ஊரில் உள்ள கோவில்களைக் கணக்கிட்டார்கள். அந்தச் சிறு கிராமத்தில் 19 கோவில்கள் உள்ளன. அத்தனையும் மக்கள் கட்டிய கோவில்கள். அதற்கு திருவிழா ஆண்டுதோறும் அவர்களேதான் நடத்துகின்றனர். அவர்களே பணம் செலவழிக்கின்றனர்.

அந்த ஊர் மக்கள் 80 விழுக்காட்டினர் ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள். "பணம் செலவழித்துக் கோவில் கட்டியவர்கள் ஏன் தங்கள் வீடுகளில் ஒரு கழிப்பறையைக் கட்டிக் கொள்ளவில்லை' என்று மாணவர்கள் கேட்டனர். நான் மாணவர்களிடம் "நீங்கள் கண்டுபிடியுங்கள்' என்று கூறினேன்.

மறுநாள் மாணவர்கள் கூறினார்கள் "இந்த ஊரில் மக்களிடம் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது, அரசு வேலைகளில் இருப்போர் வீடுகளில் மட்டும் கழிப்பறை உள்ளது, மற்றவர்கள் அதைப்பற்றி யோசிப்பதே கிடையாது என்று கூறினார்கள். அதைவிட மிக முக்கியமாக, அரசாங்கத்தில் இப்படியொரு திட்டம் இனாமாக இருக்கின்றது என்பதும் பலருக்குத் தெரியவில்லை' என்று மாணவர்கள் கூறினார்கள்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நான் கேட்டேன். உடனே தெரு நாடகம் ஒன்று தயார் செய்து போட்டுவிடுவோம் என்று கூறி மறுநாள் அதை அங்கு நடத்திக் காட்டினார்கள். அந்தத் தெரு நாடகத்தில் ஒரு காளி வந்து சாமி ஆடுகிறது. அந்தச் சாமி ஆடும்போது ஒருவன் நோய்வாய்ப்பட்டு சாமியிடம் அருள்வாக்கு வாங்குகிறான். அப்போது சுத்தம், சுகாதாரம் பற்றிய செய்திகள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

அதைக் கேட்டவர்கள் மறுநாள் கழிவறை கட்டித்தர மனுச் செய்வது எங்கே எப்படி என்று கேட்டார்கள். அதற்கு மாணவர்கள் வழிகாட்டினார்கள். இது ஒரு சிறு செயல். இது ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம்.

இதேபோல் ஒவ்வொரு முகாமிலும் ஒரு பிரச்னையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு செய்வார்கள். குப்பைகளை வகைப்படுத்தி மக்க வைத்து எப்படி உரமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தனர்.

குழந்தை வளர்ப்பு, தண்ணீர்ப் பாதுகாப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்த மாணவர்கள் சமூக அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள். எனவே விழிப்புணர்வு செய்வதுடன் நின்றுவிட்டனர்.

ஒரு கிராமத்தில் குடிதண்ணீர் பங்கீடு சரிவர நடைபெறாமல் அது பிரச்னையாக மாறி மக்கள் அடித்துக்கொண்டனர். ஒரு பகுதிக்கு அதிகமாகத் தண்ணீர் வருகிறது, மற்றொரு பகுதிக்கு குறைவாக வருகிறது, அதன் காரணமாகக் கிராமத்திற்குள் மோதல்.

அதை ஒரு தொழில்நுட்பத் துறை மாணவர் ஒரு வால்வு மூலம் சரி செய்து காட்டினார். அந்த வால்வைப் பொருத்தியவுடன் எல்லா இடத்திற்கும் சமச்சீராகத் தண்ணீர் வந்தது. இதுபோல் எவ்வளவோ பணிகளை மாணவர்களும் ஆசிரியர்களும் கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் செய்யமுடியும்.

÷இந்தியாவில் இன்று 726 பல்கலைக்கழகங்கள், 38,000 கல்லூரிகள், 11,095 தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், 28 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர்களோடு களத்தில் இறங்கிச் செயல்பட்டால் இன்றைய இந்தியாவில் உள்ள சமூகப் பிரச்சனைகளில் பாதி சரியாகிவிடும்.

கல்வி என்பது பிழைப்பதற்கு மட்டுமல்ல; சமூகத்தை மாற்றிடவும் அது உதவ வேண்டும். அப்படிச் சமூகத்திற்கு உதவவில்லை என்றால் அது கல்வியே அல்ல. நமது கல்விக்கழகங்கள் விரிவாக்கப்பணி பற்றி விவாதித்து செயல்பட முனைய வேண்டும்.

இதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து பல்கலைக்கழகம் வரை திட்டமிடல் வேண்டும். இந்த மூன்றாவது பணியையும் நம் உயர்கல்வி நிறுவனங்கள் செய்ய முன்வந்தால், மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் நாம் ஏற்படுத்த முடியும் என்பது உறுதி!

கட்டுரையாளர்: பேராசிரியர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

SCROLL FOR NEXT