அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொண்டுள்ள பாகிஸ்தானின் மலாலா யூசஃப் சாயை (17 வயது) "பாகிஸ்தானின் பெருமை' எனப் பாராட்டியுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப். மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை மலாலா பெற்றுள்ளார். ஆனால், இதில் பாகிஸ்தானுக்கு என்ன பெருமை?
பெண் குழந்தைகளின் கல்விக்குக் குரல் கொடுத்த மலாலா 2012ஆம் ஆண்டு பள்ளிக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்து பிரிட்டனில் சிகிச்சை பெற்ற அவர், அங்கேயே பெற்றோருடன் தங்கிப் பயின்று வருகிறார். மலாலா பெண் கல்வியின் அடையாளமாகவே கருதப்பட்டு வந்தாலும், பாகிஸ்தானின் அடையாளத்தில் சிறிதும் மாற்றம் இல்லை.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்தபோது, பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள பள்ளியில் வேதியியல் வகுப்பில் பயின்று கொண்டிருந்தார் மலாலா.
அவரது வகுப்பாசிரியை அவரிடம் இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்தபோதும், மலாலா இயல்பாகவே இருந்தார். வழக்கமாக பள்ளி முடிந்த பிறகே வீடு திரும்பினார்.
"நோபல் பரிசு எனது பள்ளித் தேர்வுக்கு உதவப்போவதில்லை. அதனால், வழக்கம்போல பள்ளி முடிந்த பிறகே வீடு திரும்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆனால், பெண் கல்விக்கான எனது போராட்டத்துக்கு இந்த நோபல் பரிசு நிச்சயம் உதவியாக இருக்கும்' என அவர் தெரிவித்தார்.
ஒரு சிறுமி பள்ளிக்குச் சென்று படிப்பதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு "பாகிஸ்தானில் கல்வி' தொடர்பாக "யுனெஸ்கோ' தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பதில் சொல்கின்றன.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகிலேயே பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2012-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 83 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்லவில்லை. இதில் இரண்டில் ஒரு பங்கு பெண் குழந்தைகள். பெரியவர்களில் 4.95 கோடி பேர் கல்வியறிவு பெறாதவர்கள். இவர்களில் மூன்றில் இரு பங்கு பெண்கள்.
இந்த எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டுக்குள் 5.10 கோடியாக உயரக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 1999-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை, தொடக்கக் கல்வி பயில்வோரின் விகிதம் 58 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதில் பெண் குழந்தைகளின் விகிதம் மாற்றமே இல்லாமல் வெறும் 19 சதவீதமாகவே தொடர்கிறது.
கல்விக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையும் மிகக் குறைவே. சராசரியாக 10 சதவீதமே நிதி ஒதுக்கீடு செய்யும் அரசு, தொடக்கக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைவிட 7 மடங்கு அதிகமாக ராணுவத்துக்குச் செலவிடுகிறது.
பெண்கள் பள்ளிக்குச் செல்வதை எதிர்க்கும் தலிபான்கள், அடிப்படைப் பழைமைவாத இயக்கங்கள் இவற்றால்தான் பாகிஸ்தானில் பெண் கல்வி இப்படி அபாயகரமான நிலையில் உள்ளது.
மலாலா மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பெண் கல்வி எழுச்சி பெற்றாலும், அதற்கு அரசின் ஆதரவு முழுமையாக இல்லை.
பயங்கரவாதப் பிரச்னைகள், அரசியல் குழப்பங்கள், ஆட்சியைத் தக்கவைக்க, அரசியல் பழிவாங்கல்கள் இவற்றுக்கே ஆட்சியாளர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இந்தியாவுடன் பகைமை பாராட்டி, ஆட்சி நடத்துவதில் மட்டுமே குறியாக இருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
"பாகிஸ்தானும் இந்தியாவும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்'-இது மலாலாவின் விருப்பம்.
எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மலாலாவின் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமா?
பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துஸ் சலாம், 1979-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் ஷெல்டன், ஸ்டீவன் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டவர்.
அவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அவர் பாகிஸ்தானில் இல்லை. அப்போதைய பூட்டோ அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டைவிட்டு வெளியேறிய அவர், அதன்பிறகு மரணமடையும்வரையிலும் நாடு திரும்பவேயில்லை.
இப்போது மலாலாவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது நாட்டில் இருக்க முடியவில்லை. இன்னமும் அவருக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் இருப்பதால், அவரால் நாடு திரும்ப முடியாது.
உயரிய நோபல் பரிசு பெற்று நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள், நாடு திரும்ப முடியாத நிலை. பாகிஸ்தானுக்கு இது பெருமையல்ல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.