முகப்பு
கட்டுரைகள்

கேட்பது கிடைக்குமா?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மாநிலம் முழுவதுமுள்ள பொது விநியோகக் கடைகளுக்கு அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவுப் பொருள்களை மத்தியத் தொகுப்பிலிருந்து பெற்று வழங்குகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மாநிலம் முழுவதுமுள்ள பொது விநியோகக் கடைகளுக்கு அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவுப் பொருள்களை மத்தியத் தொகுப்பிலிருந்து பெற்று வழங்குகிறது.

மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் மாவட்ட குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

அரசு பொது விநியோகக் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருள்கள் முறையாக அனைவரையும் சென்றடையவில்லை என்பது நீண்ட நாள்களாக இருந்து வரும் புகார்.

அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என்பதும், அதனால்தான் முறைகேடுகள் அதிகமாக நடக்கின்றன என்பதும் பொதுமக்களின் ஆதங்கம்.

உணவுப் பொருள்கள் விநியோகத்தை முறைப்படுத்த சட்டங்கள் இயற்றப்பட்டும், இவற்றைக் கண்காணிக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு என ஏராளமான நடைமுறைகள் இருந்தும் அவை முறைப்படுத்தப்படவில்லை என்பது கண்கூடான உண்மை.

அதற்கு சான்று தினசரி செய்தித்தாள்களில் வரும் ரேசன் பொருள்கள் கடத்தல், ரேசன் கடையில் முற்றுகை போன்ற செய்திகளைக் கூறலாம்.

நகர்ப்புறங்களில் மாவு (டிபனுக்கு பயன்படும்) அரிசியையும், கிராமப்புறங்களில் சாப்பாட்டுக்கு பயன்படும் அரிசியையும் பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

ஆனால், அவற்றுக்கு மாறாக நகர் பகுதிகளில் சாப்பாட்டு அரிசியும், ஊரகப்பகுதிகளில் பச்சை மற்றும் மாவு (குண்டு ரகம்) அரிசியுமே விநியோகிக்கப்படுகின்றன.

இங்கே பொதுமக்களின் விருப்பமும், தேவையும் புறக்கணிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இலவசமாக வழங்கினாலும் அவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்குவதில்லை.

வேண்டியவற்றை தவிர்த்து வேண்டாதவற்றை திணிப்பதால் பயன்பாடு குறைந்து முறைகேடு செய்வோரின் காட்டில் மழை. இந்தக் குறைபாடுகளை பொதுமக்கள் சில மாவட்ட வழங்கல் அலுவர்களுக்கு தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தாலும் முறைகேடுகள் தொடர்கின்றன.

எந்தெந்த ரக அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளன, அவை எங்கெங்கு அனுப்பப்படுகின்றன போன்ற விவரங்கள் குடோனில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, அவற்றை தேவைப்படும் பகுதிகளுக்கு மாற்றி அனுப்ப வழி செய்யலாம்.

நகரப்பகுதிகளில் மாவு அரிசி போட்டால்தான் அதிகம் வாங்குகின்றனர். சாப்பாட்டு அரிசியை பெரும்பாலான மக்கள் சாப்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை.

அதேபோல கிராமப்பகுதிகளில் சாப்பாட்டு அரிசி வழங்கப்படுவதில்லை. மாறாக டிபன் அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. தினசரி டிபன் செய்யும் வழக்கம் கிராமப்புறங்களில் இல்லாததால் அவை கிராம மக்களுக்குப் பயன்படுவதில்லை.

மேலும் விற்பனையாகாத பொருள்களை வாங்கினால்தான் அரிசி என கட்டாயப்படுத்துவதால் வம்பே வேண்டாம் எனக்கூறி கிராமங்களில் 60 சதவீதத்துக்கும் மேலானோர் டிபன் அரிசியையும் புறக்கணிக்கின்றனர்.

கோதுமை, பருப்பு, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இருப்பு வைத்துக்கொண்டே என்றாவது ஒரு நாள் மட்டும் வழங்கிவிட்டு இருப்பு தீர்ந்துவிட்டதாக கூறி அவற்றை மொத்தமாக விற்று முறைகேடுகள் செய்கின்றனர் நியாய விலைக் கடை ஊழியர்கள்.

இதை மாற்றி கிராமப்பகுதிகளில் சாப்பாட்டு அரிசியும், நகரப்பகுதிகளில் இட்லி அரிசியும் வழங்கவேண்டும். தேவையான பொருள்கள் கிடைத்தால் பொதுமக்கள் வாங்கும் விகிதம் கூடும்; முறைகேடுகளும், அரிசி கடத்தலும் முடிவுக்கு வரும்.

நியாய விலைக் கடையில் ரூ.2 முதல் ரூ.5 வரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதாம் அரிசி வகைகள். அவற்றை மளிகை கடை உரிமையாளர்கள் பெற்று பாலீஷ் செய்து ரூ.35 முதல் 40 வரையில் விற்பனை செய்கின்றனராம்.

சில அரிசி ஆலைகள் இவற்றை மொத்தமாக வாங்கி மொத்தமாக வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து மில்களை மூடி சீல் வைத்தும் உள்ளனர்.

நகர்புறங்களில் இட்லி அரிசி இல்லையென கூறும் கடை ஊழியர்கள் அவற்றை பொதுமக்களிடமே ரூ.5-க்கு நேரடியாக விற்பனை செய்வதும் பல மாவட்டங்களில் நடைபெறுகிறதாம்.

இந்தக் குறைகள் களையப்பட்டு தேவைப்படுகிற பொருள்கள் நியாய விலைக் கடைகளில் மாதம் முழுதும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →