பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடுகளில் பெண் குழந்தைகள் கல்வி கற்கச் செல்வது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
ஆப்கன், பாகிஸ்தான் சிறுமிகளை தலிபான்கள் தடுக்கிறார்கள் என்றால், ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் சிறுமிகளை கல்வி கற்கவிடாமல் போகோ ஹரம் பயங்கரவாதிகள் தடுக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவிலேயே பொருளாதாரத்தில் பெரிய நாடாகத் திகழும் நைஜீரியாவில் சிபோக் என்ற வடகிழக்கு நகரத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகளை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர்.
போகோ ஹரம் என்ற அரபி மற்றும் ஹெளசா மொழி (நைஜீரியாவில் பேசப்படும் ஒரு மொழி) வார்த்தைக்கு "மேற்கத்திய கல்வி தடை செய்யப்பட்டது' அல்லது "மேற்கத்திய கல்வி பாவம் நிறைந்தது' எனப் பொருள்.
இந்த இயக்கம் ஏற்கெனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பலமுறை இதுபோன்ற கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கிறது.
இருப்பினும், இந்தக் கடத்தலுக்குப் பின்னர், உலகளாவிய அளவில் கவனம் பெற்றது.
நைஜீரியாவின் 1.67 கோடி மக்கள்தொகையில் பாதிப் பேர் முஸ்லிம்கள். மீதி பாதியில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.
நைஜீரியாவில் தனி இஸ்லாமிய அரசு கோரி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் இயக்கம், மாணவிகளை பிணைக் கைதிகளாக்கி, ராணுவத்தால்
கைது செய்யப்பட்ட தங்களது இயக்கத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் இக்குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக விற்றுவிடப்போவதாகவும் மிரட்டி வருகிறது.
முதலில் இப்படி ஒரு கடத்தலே நடக்கவில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது அதிபர் குட்லக் ஜொனாதன் தலைமையிலான நைஜீரிய அரசு.
ஆனால், மாணவிகளை மீட்கக் கோரி போராட்டங்கள் வெடித்ததும், ஒருவழியாகக் கடத்தல் சம்பவத்தை ஒப்புக்கொண்டாலும், மீட்பு நடவடிக்கையில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை.
கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரையும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த சில மாணவிகளையும்கூட சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்தே சந்தித்தார் அதிபர்.
அதுவும், பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் நைஜீரியாவுக்குச் சென்று, அந்த மாணவிகளைச் சந்தித்த பின்னரே அதிபர் சந்தித்தார்.
பயங்கரவாதிகளின் பிடியில் இன்னும் 219 மாணவிகள் உள்ளனர். அவர்கள் கடத்தப்பட்டு 6 மாதங்களாகியும் மீட்க முடியாத நிலைமைக்கு முழுக்க முழுக்க அரசின் செயல்பாடின்மையையே காரணமாகச் சொல்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் போகோ ஹரம் பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான ராணுவப் பயிற்சி, தொழில்நுட்ப உதவிகளை நைஜீரிய ராணுவத்துக்கு அளித்தும் பயனில்லை.
மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் தினந்தோறும் போராட்டம் நடந்து வருகிறது. "எங்கள் குழந்தைகளைத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்ற பிரசாரத்தையும் அந்நாட்டு மக்கள் சமூக ஊடகத்தில் தொடங்கியுள்ளனர்.
இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்பட உலகெங்கிலுமிருந்து பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதிபர்
ஜொனாதன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பற்றியே கவனம் செலுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"எங்கள் குழந்தைகளைத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்ற வாசகத்தை அடிப்படையாக வைத்து, "ஜொனாதனை திரும்பக் கொண்டு வாருங்கள்' (2015 தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள்) என அதிபரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் செய்த விளம்பரம் அந்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஒரு வழியாக மக்களின் போராட்டம், உலக நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து, போகோ ஹரம் பயங்கரவாதிகளுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை
மேற்கொண்டிருப்பதாக நைஜீரிய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
இதனால், கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும், ஆறு மாதங்களாகத் தங்களது குழந்தைகளின் நிலை என்ன என்று தெரியாமல் தவித்த பெற்றோர்களின் தவிப்பை நைஜீரிய அரசு எப்படி ஈடுகட்டப் போகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.