முகப்பு
கட்டுரைகள்

"சுத்தமான இந்தியா' - நிறைவேறாத இலக்கு!

நாட்டை பீடித்துள்ள முக்கியமான பிரச்னைகள் குறித்து அரசுகள் அடக்கிவாசிக்கவே செய்கின்றன. வறுமை குறித்து அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கும், உண்மை நிலவரத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் சுகாதார நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிடுவதற்கு எந்த அரசும் தயாரில்லை.

Updated On : 15 செப்டம்பர், 2014 at 2:42 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:16 PM

நாட்டை பீடித்துள்ள முக்கியமான பிரச்னைகள் குறித்து அரசுகள் அடக்கிவாசிக்கவே செய்கின்றன. வறுமை குறித்து அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கும், உண்மை நிலவரத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் சுகாதார நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிடுவதற்கு எந்த அரசும் தயாரில்லை.

ஆனால், சுகாதாரம் குறித்த உண்மை நிலவரத்தை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது என்பதும் உண்மை. காரணம், இது குறித்த உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு, அதன் மணத்தை (?) எங்கும் பரப்பிவிடும்.

இந்தப் பிரச்னை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அகற்றப்படும் வரை அதன் உண்மை நிலவரத்தை மறைக்கவே முடியாது. இந்தப் பிரச்னையை தாங்கள் மறக்கவில்லை என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக "சுத்தமான இந்தியா, ஒட்டுமொத்த சுகாதாரம்' போன்ற முழக்கங்களை அரசியல்வாதிகள் அவ்வப்போது எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே, நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆனால், 67 ஆண்டுகள் கடுமையாக முயற்சி செய்த பின்னரும்கூட இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கோ, பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க அளவுக்கோ எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

2011}ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 80.6 கோடி இந்தியர்கள் (மொத்த மக்கள்தொகையில் 65 விழுக்காடு) சரியான கழிப்பறை வசதி இல்லாதவர்களாக உள்ளனர் என யுனிசெப், உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.) அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச அளவில், 250 கோடிப் பேர் கழிப்பறை வசதியில்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் 28 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் 104 கோடிப் பேரில் இந்தியர்கள் 62 கோடிப் பேர் என்பதுதான். இந்த இழிவான சூழ்நிலையை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் 53.1 விழுக்காடு வீடுகளில் கழிப்பறைகளே இல்லை. 36.4 விழுக்காடு வீடுகளில்தான் தண்ணீர் வசதியுடன் ("வாட்டர் கிளாசெட்') கூடிய கழிப்பறைகள் உள்ளன. இதுதவிர, 9.4 விழுக்காடு வீடுகளில் குழி கழிப்பறைகளும், 1.1 விழுக்காடு வீடுகளில் அதைவிட மோசமான அமைப்பிலான கழிப்பறைகளுமே உள்ளன.

இதன் பொருள், 60 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், திறந்தவெளிகளில் - அதாவது சாலையோரங்களில், விவசாய நிலங்களில், ரயில் இருப்புப் பாதைகளில், நீர்நிலைகளுக்கு அருகே- மலம் கழிக்கிறார்கள். இதைத்தான் யுனிசெப், மற்ற அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மத்திய குடிநீர், சுகாதார அமைச்சகம் 2012-13}இல் மேற்கொண்ட ஆய்வில், ஊரகப் பகுதிகளில் 40.35 விழுக்காடு வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது தெரிய வந்துள்ளது.

வெவ்வேறு ஆய்வுகளின் புள்ளிவிவரங்களில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சுகாதாரக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை.

"சுகாதாரமற்ற நிலை மக்களின் உயிரைப் பறிக்கிறது, நோய்களை உண்டாக்குகிறது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது, நல்வாழ்வைச் சீரழிக்கிறது. ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ் கிருமிகளும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் இருக்கின்றன.

காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் "ஏ' போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்கள் வெளியேற்றும் மலத்தில் அந்த நோய்களை உண்டாக்கும் கிருமிகள் ஏராளமாக இருக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.

இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவுவதற்கு கழிப்பறைகள் இல்லாததும் முக்கியக் காரணம் என்றும் உலக வங்கியின் ஆய்வு கூறுகிறது.

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதால் பலவீனமாகும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடும், நிமோனியா நோயும் உருவாக வாய்ப்புள்ளது.

இந்தியாவில் 48 விழுக்காடு குழந்தைகள் ஏதாவது ஓர் அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய்களுக்கு ஆளாவது மட்டுமல்ல. வேறு பல இன்னல்களும் சேர்கின்றன. பாம்புக் கடி போன்றவற்றுக்கு ஆளாவதுடன் பாலியல் தொல்லைகளுக்கும் அது வழிவகுக்கிறது.

மலத்தை மனிதன் அள்ளுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளபோதிலும், 0.3 விழுக்காடு வீடு

களில் (7.4 லட்சம்) இந்த இழிநிலை தொடருகிறது.

இந்த எண்ணிக்கை என்பது ஒரு குறியீடுதான். உண்மையில் இதைவிட அதிக எண்ணிக்கையிலானோர் இந்தப் பணியைச் செய்துவர வாய்ப்புள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் (2019) கொண்டாடப்படும் வேளையில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

இதற்கான செயல்திட்டம் இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2}ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த இலக்கை அடைய மோடிக்கு முன்னர் இருந்த அரசுகளும் விரும்பின.

பெண்களுக்கு கண்ணியம் அளிக்கவும், ஊரகப் பகுதிகளில் சுகாதார நிலையை மேம்படுத்தவும் மத்திய ஊரக சுகாதாரத் திட்டம் 1986-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம், பின்னர் தனிப்பட்ட சுகாதாரம், வீடுகளில் கழிப்பறை, பாதுகாப்பான குடிநீர், குப்பைகளை அகற்றுதல், அசுத்தமான நீரை அகற்றுதல், மலம் அகற்றுதல் என 1999}இல் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தேவைக்கேற்ற அணுகுமுறை என்ற அடிப்படையில், இது "ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டம்' என்று பெயர் மாற்றம் பெற்றது. சீர்திருத்தப்பட்ட திட்டத்தில் கல்வி, தகவல் தொடர்பு, மனித ஆற்றல் மேம்பாடு, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் சுகாதாரம் குறித்து ஊரகப் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்தப்பட்டது.

முழு சுகாதாரத் திட்டத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், அதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பின்பற்றத்தக்க செயல்பாடுகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் "நிர்மல் கிராம புரஸ்கார்' (தூய்மையான கிராம விருது) என்ற விருதை மத்திய அரசு அறிவித்தது.

நிர்மல் கிராம புரஸ்காரின் வெற்றியால் ஊக்கம் பெற்ற மத்திய அரசு, புதிய உத்திகள், முழுமையான அணுகுமுறை மூலம் 2022-க்குள் ஊரகப் பகுதிகளில் முழு சுகாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக முழு சுகாதாரத் திட்டத்தை "நிர்மல் பாரத் அபியான்' (தூய்மையான பாரத இயக்கம்) என்று பெயர் மாற்றி நிறைவேற்ற முந்தைய அரசு திட்டமிட்டது.

ஆனால், 2022 வரை காத்திருக்காமல், அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, முழு சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்த இப்போதைய அரசு விரும்புகிறது.

நாட்டில் கழிப்பறை வசதி இல்லாத 11.11 கோடி வீடுகளில் 8.84 கோடி வீடுகள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள வீடுகள் என்றும், எனவே, அவற்றுக்கு உதவிக் கரம் நீட்டுவது அரசின் கடமை என்றும் அமைச்சகத்தின் ஆய்வு மதிப்பீடு செய்துள்ளது (பணக்காரராக இருந்தும், சொந்தமாக கழிப்பறை இல்லாதவர்கள் உள்ளனரா என்ற கேள்வி எழுவதும் இயற்கை யானதுதானே!).

அதேபோல, 56,928 பள்ளிகளிலும், 1,07,695 அங்கன்வாடிகளிலும், 1,14,395 சமூக சுகாதார வளாகங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது.

கழிப்பறை கட்டுவதற்கு ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ரூ.15 ஆயிரமும், பள்ளிகளுக்கு ரூ.54 ஆயிரமும், அங்கன்வாடிகளுக்கு ரூ.20 ஆயிரமும், சமூக சுகாதார வளாகங்களுக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, கழிப்பறைகள் கட்டுவதற்கு மட்டுமே ரூ.1.4 லட்சம் கோடி செலவாகும். கழிவுநீர்க் கால்வாய்கள், அது தொடர்பான அடிப்படைக் கட்டமைப்புகள் அமைக்க இன்னும் அதிக நிதி தேவைப்படும்.

சுகாதாரத்தைப் பேண முழுமையான ஒருங்கிணைந்த திட்டம் தீட்டப்பட வேண்டும். திட்டங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற தீவிர முனைப்பும், மன உறுதியும் முந்தைய அரசுகளுக்கு இல்லாததே தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணம்.

நேர்மையாக முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றால், இந்தப் பிரச்னையில் முந்தைய அரசுகள் எத்தகைய முடிவை எட்டினவோ, அதே நிலைதான் இப்போதைய அரசின் முயற்சிகளுக்கும் ஏற்படும்.

இந்த விஷயத்தில் அரசின் வாக்குறுதிகள் நீர்த்துப் போகாமல் மெய்ப்பட வேண்டும் என்றால் மக்களும், மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் அவர்களது பிரதிநிதிகளும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.