முகப்பு
கட்டுரைகள்

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!

சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி சென்றிருந்தபோது திருமதி வயோலா என்பவரையும் அவரது கணவரையும் சந்தித்தேன். இருவரும் சட்டம் படித்தவர்கள். திருமதி வயோலா சட்டம் சார்ந்த செய்தியாளராகப் பணியாற்றுபவர்.

பகிர்:

சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனி சென்றிருந்தபோது திருமதி வயோலா என்பவரையும் அவரது கணவரையும் சந்தித்தேன். இருவரும் சட்டம் படித்தவர்கள். திருமதி வயோலா சட்டம் சார்ந்த செய்தியாளராகப் பணியாற்றுபவர்.

எங்களுக்கு இடையேயான பேச்சு சட்டத்தில் தொடங்கி தில்லி நிர்பயா சம்பவத்தில் வந்து நின்றது.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவர் அந்த வழக்கைப் பற்றி சில விவரங்களை என்னிடம் கேட்டார். தெரிந்தவரை பதிலளித்தேன். அவர் பத்திரிகையாளர் அல்லவா?

திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். நிர்பயாவுக்கு இழைக்கப்பட்ட துன்பம் ஓர் இந்தியன் என்ற முறையில் உங்கள் மனதைக் கஷ்டப்படுத்தவில்லையா?

எனக்குப் பொசுக்கென கோபம் வந்தது. கேள்வி கேட்டவர் மீது அல்ல. நிர்பயாவை சின்னாபின்னமாக்கிய அந்தக் கயவர்களின் மீது முதல் கோபம்.

அடுத்த கோபம், அந்த விஷயத்தால் பாதிக்கப்பட்டு வீதியில் இறங்கிய பொது மக்களை செய்தியாக்கி, இந்தியா உலகின் பாலியன் வன்கொடுமை ஸ்பெஷலிஸ்ட் என்ற ரீதியில் ஜெர்மனிக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சென்ற ஊடகங்கள் மீதும்.

ஏனென்றால், அந்த ஊடகங்களின் நோக்கம் உலகின் பார்வையில் இந்த ஒரு சம்பவத்தை வைத்து இந்தியாவின் வளர்ச்சியையும் பெருமைகளையும் புகழையும் சீரழிப்பதுதான்.

எனக்கு சட்டென்று "இதயம் பேசுகிறது' மணியனும் அவருடைய பயண அனுபவம் ஒன்றும் நினைவுக்கு வந்தது.

மணியன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த வேளையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மீது ஒரு கூட்டத்தில் கல் எறியப்பட்டு அது இந்திராவின் மூக்கைத் தாக்கி ஒரு சிறு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. மூக்கில் காயம்பட்ட இந்திரா பிளாஸ்டருடன் இருக்கும் படம் உலகமெங்கும் பத்திரிகைகளில் மறுநாள் வெளியிடப்பட்டது. ÷

இதைக் குறிப்பிட்டு மணியனிடம் ஓர் அமெரிக்கர், "இந்திராவின் மூக்கு எப்படி இருக்கிறது?' என்று கேட்டார். அதற்கு மணியன் சொன்ன பதில் உங்களுக்குத் தெரியுமா, "இந்திராவின் மூக்கு கென்னடியின் மார்பை விட பாதுகாப்பாக உள்ளது' என்று.

நான் பேச ஆரம்பித்தேன். பெண்களைத் தெய்வமாகப் போற்றும் இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் நடந்தது வேதனையானது, வெட்கக்கேடானது.

ஒரு நாடு என்பது பல ஊர்களைக் கொண்டது. ஓர் ஊர் பல தெருக்களைக் கொண்டது. ஒரு தெரு என்பது பல வீடுகளைக் கொண்டது. ஒரு வீட்டில் பல மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஒரு தனி மனிதனின் அல்லது குழுவின் அடாத செயலால் ஒரு நாட்டை நாம் பழிக்க முடியுமா?

தில்லியில் ஓர் இந்தியப் பெண்ணுக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து மக்கள் பொங்கி எழுந்ததால் குற்றவாளிகள் சிறையில் உள்ளனர்.

உங்கள் (ஜெர்மன்) பத்திரிகைகளும் தெளிவான செய்திகளாக வெளியிட்டன. ஆனால், உங்கள் ஜெர்மன் பத்திரிகைகளில் எனது சொந்த ஊருக்கு அருகே உள்ள குற்றால மலையில் ஒரு ஜெர்மானியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் வெளியானதா?

முகம் தெரியாத அந்த ஜெர்மானிய விருந்தினருக்கு நேர்ந்த கொடுமைக்கு நான் எவ்வளவு வருந்தினேனோ, முகம் தெரியாத தில்லி மகளுக்காகவும் அதே அளவு வருந்தினேன்.

எனது ஜெர்மன் பயணத்தில் யூதர்களை கொடுமை செய்த ஹிட்லரின் "சித்திரவதை முகாம்' ஒன்றைப் பார்த்தேன். அங்கு மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும், ஐம்பது ஆண்டு இடைவெளிக்குள் இரண்டு உலகப் போர்கள் நடக்க காரணமாக இருந்த அன்றைய ஜெர்மானிய தலைமைக்காகவும் நான் இன்றைய ஜெர்மன் நண்பர்களை வெறுக்க முடியாது என்றேன். கேள்வி கேட்டவர் வாயடைத்துப் போனார்.

எனது நோக்கம் ஒரு பாலியல் வன்முறையை நியாயப்படுத்துவது அல்ல. ஆனால், அந்த ஒரு சம்பவத்துக்காக என் நாடும், என் மக்களும் மீண்டும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் நிர்பயா கொலையாளிகளை சமீபத்தில் பேட்டி காண இந்த நாடே பொங்கி எழுந்தது. "இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த ஆவணப் படத்துக்கு எழுந்த எதிர்ப்பைக் கண்டு பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. இதற்கான அனுமதியைக் கொடுத்தது யார் என்று பிரச்னையைத் திசைதிருப்பப் பார்த்தது.

ஆவணப் படத் தயாரிப்பாளர்கள் நாங்கள் முறையான அனுமதி பெற்றிருக்கிறோம் என்று சொன்னவுடன் பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தால் ஒரு மிகப் பெரிய ஆதாரம் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் கிடைத்திருப்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.

நிர்பயாவை வன்புணர்ச்சி செய்து கொடுமைப்படுத்திக் கொன்ற பாதகர்களில் ஒருவன் பேட்டியில் தங்கள் செய்கையை நியாயப்படுத்தி உள்ளான்.

நிர்பயாவை குறை சொல்லி அவள் எதிர்த்திருக்காவிட்டால் அவள் இறந்திருக்கமாட்டாள் என்று திமிருடன் கூறினான். அவன் வருந்தவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை அவன் மீதுள்ள வழக்கு இன்னமும் முடியவில்லை என்பதும்.

முதலில் பல நாடுகள் மனித உரிமை என்ற பெயரில் மரண தண்டனையை ரத்து செய்து விட்டன. இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் மிகவும் அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

மும்பையிலும், நாடாளுமன்றத்திலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்களுக்குத்தான் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் தருமபுரியில் பேருந்தை எரித்த வழக்கு உள்பட இன்னும் பல வழக்குகளிலும் கருணை மனுக்கள் முடிந்தபாடில்லை.

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வரும் வரை கருணை மனுக்கள் எல்லாம் கருணை இல்லாத தூக்கத்தில் இருந்தன. கருணை மனுக்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பல வழக்குகளில் கருணை மனுக்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

நிர்பயா வழக்கில் சமீபத்திய பி.பி.சி. பேட்டி கொலையாளிகளுக்கு எதிராகத் திரும்பும் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வந்து குவியும் குப்பைகளுக்கு நடுவே கோமேதகமாக ஒரு கடிதம் வந்தது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவி (பெயரில்லை) எழுதியதாக சொல்லும் கடிதத்தின் சாரத்தைத் தருகிறேன்.

இந்தியாவின் மகளின் மீது தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு நன்றியுடன் கிண்டலாக ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். இந்திய ஆண்களின் மனப்போக்கை கடிதம் சாடுகிறது.

சம்பவத்தைக் கேட்ட தில்லி மாநகரம் பொங்கி எழுந்ததால்தான் குற்றவாளிகள் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். மேல்முறையீட்டுக்கும் மரணத்துக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள். கடிதம் தொடர்ந்து இந்தியாவின் மகளைப் படமாக்கிய லெஸ்லிக்கு சில படங்கள் எடுக்க ஆலோசனை வழங்குகிறது.

1. 2010-ஆம் ஆண்டு கணக்குப்படி, பிரிட்டனில் ஒரு லட்சம் பெண்களில் 29 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரைப் பற்றி இங்கிலாந்தின் மகள் எனப் படம் எடுக்க வேண்டும்.

லட்சம் பெண்களில் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற இந்தியாவின் புள்ளி விவரத்தோடு ஒப்பிடும்போது பிரிட்டனில் இந்த விகிதம் 15 மடங்கு அதிகம்.

ஆகவே, இந்தக் குற்றவாளிகளின் குரல் உலகுக்குத் தெரிய வேண்டாமா? பிரிட்டனே ஐரோப்பாவின் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளுக்குத் தலைநகராகிறது. இந்த உச்சபட்சமான கணக்கில், அந்த நாட்டு சட்டப்படி தகாத உறவுகளும், இயற்கைக்கு மாறான புணர்ச்சிகளும் சேர்க்கப்படவில்லை.

2. உலகிலேயே அதிகபட்சமாக, ஒரு லட்சம் பெண்களுக்கு 132 பெண்கள் என்ற கணக்கில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் தென் ஆப்பிரிக்க மகளைப் பற்றி படம் எடுக்க வேண்டாமா?

3. பிரிட்டனுக்கு கிழக்கேயும், மேற்கேயும் ஆஸ்திரேலியாவின் மகளையும், அமெரிக்காவின் மகளையும் பற்றி படம் எடுக்க வேண்டாமா?

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பட்டியலில் 54-ஆவது இடத்திலிருக்கும் இந்தியாவை நோக்கும்போது, இந்தப் பட்டியலில் 8-ஆவது இடத்திலும், 12-ஆவது இடத்திலும் இருக்கும் ஆஸ்திரேலியாவையும் பிரிட்டனையும் எப்படி விடமுடியும்?

இந்தக் கடிதத்தை யார் எழுதியிருந்தாலும் அவரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவை முகலாயர்கள் ஆண்டபோதுகூட இந்தியாவின் தனித்தன்மைகள் தகர்க்கப்படவில்லை.

ஆனால், இந்தியாவை தன் குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்து மெக்

காலேவை இந்தியாவுக்கு அனுப்பிப் பெற்ற அறிக்கையின்படி இந்தியர்கள் இந்தியத் தன்மையை இழக்க வைக்கப்பட்டார்கள்.

இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல் பெண்கள். அதில் ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாவதும் தவறுதான். லட்சம் பெண்களில் 1.8 பெண்கள் என்ற கணக்கில் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்படுவது வேதனைதான்.

இருந்தாலும், இந்தியாவில் உள்ள மக்கள்தொகை விகிதத்தில் காவலர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

இங்குள்ள ஏழ்மையைக் கணக்கிடும்போது குற்றங்கள் மிக மிகக் குறைவே. பசியால் அழும் குழந்தைக்காக பங்களா வாசலில் தொங்கும் பையில் உள்ள பால் பாக்கெட்டை எங்கள் ஏழைப் பெண்கள் திருடுவதில்லை.

உண்மையைச் சொன்னால் ஏ.சி.யில் தூங்கிக் கொண்டிருக்கும் பணக்கார முதலாளியினுடைய பால் பாக்கெட்டை பால் பூத்திலிருந்து வாங்கி வந்து அந்தப் பையில் போடுவதே அந்த ஏழைப் பெண்தான்.

சாலையில் நடக்கும் விபத்தில் இறக்கும் அடையாளம் தெரியாத, சம்பந்தமே இல்லாத நபருக்காக அழும் ஏழைப் பெண்ணைப் பற்றி படம் எடுக்க பிரிட்டனில் மட்டுமல்ல, இங்கேயும் ஆளில்லை.

பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.