முகப்பு
கட்டுரைகள்

தடைதான் இதற்கு விடை

ஒரு பக்கம் சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்க அனுமதியளித்துவிட்டு, மறுபக்கம் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து மக்களைக் காக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அரசே நடத்தி வருவது வேடிக்கையான விஷயம்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

ஒரு பக்கம் சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்க அனுமதியளித்துவிட்டு, மறுபக்கம் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து மக்களைக் காக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அரசே நடத்தி வருவது வேடிக்கையான விஷயம்.

இத்தகைய போதைப் பொருள்களால் ஏற்படும் புற்றுநோய், பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவாகிறது.

பத்திரிகைகளில் அவ்வப்போது மது, புகையிலை ஒழிப்பு விளம்பரங்கள், உறுதிமொழியேற்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் போதைப் பழக்கம் குறைகிறதா என்றால் அதுதான் இல்லை.

ஆண்டுதோறும் இப்பழக்கம் அதிகரிக்கவே செய்கிறது. இதனால், வருடத்துக்கு இத்தனை லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என அவ்வப்போது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை விளக்கும் வகையில், புண்ணாகி பாதிக்கப்பட்ட நுரையீரல் படமும், புகையிலைப் பழக்கத்தால் வாய்ப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளின் படங்களும் சிகரெட், புகையிலைப் பொட்டலங்களில் வெளியிடப்படுகின்றன.

இந்தப் படத்தைப் பார்த்து, இவற்றைப் பயன்படுத்துபவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடுவார் என்ற எண்ணத்தில் வெளியிடப்படுகிறதா? அல்லது திருந்தி விடுவார் என்று வெளியிடப்படுகிறதா?

போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களில் 100 சதவீதம் பேரும் இதனால் ஏற்படும் பின் விளைவுகளை நன்கு தெரிந்தே பயன்படுத்துகின்றனர்.

சிகரெட் பாக்கெட்டுகளில் இந்த உடல்நலப் பாதிப்புகளின் படங்களை 85 சதவீத அளவுக்கு பயன்படுத்துவதா, வேண்டாமா என்பது தற்போது பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

100 சதவீத அளவுக்குப் படங்களைப் பயன்படுத்தினாலும் பயன் ஒன்றும் இருக்கப் போவதில்லை. "திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற கதைபோல்தான் இதுவும்.

இதேபோல்தான், திரைப்படம், தொலைக்காட்சிகளில் புகைப் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வரும்போது மது அருந்துவதும், புகைப் பிடிப்பதும் உடல் நலத்துக்கு கேடு என்ற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது தெரியாமலா அவர்கள் பயன்படுத்துகிறார்கள்?

இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் புதிதாக இவற்றைப் பயன்படுத்த எண்ணுவோருக்கான எச்சரிக்கை வாசகமாக இருக்கலாமேயொழிய, ஏற்கெனவே இவற்றைப் பயன்படுத்தி கெட்டுச் சீரழிந்து வருபவர்களுக்கு இதனால் என்ன பயன் இருக்கப் போகிறது?

எங்களுக்கு இத்தகைய போதைப் பொருள்களும் வேண்டாம், அதனால் வரும் வருமானமும் வேண்டாம் என அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.

ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வருவாயே அரசாங்கம் எனும் இயந்திரத்தை இயங்க வைக்கும் பொருளாக உள்ளது.

அனைத்துமே போதைப் பொருள்கள்தானே, அனைத்துமே நோயை ஏற்படுத்தி, இறுதியில் மனித உயிர்களைத்தான் ருசி பார்க்கின்றன. இவை அனைத்தையுமே நிறுத்திவிட்டால், தானாகவே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகி விடாதா?

இதேபோன்று பெரும்பாலான பள்ளிகளின் வாசலில் "இப்பள்ளியைச் சுற்றி 100 மீட்டர் தொலைவுக்குப் புகையிலை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இது புகையிலைப் பயன்பாடு இல்லாப் பகுதி' என்பன போன்ற பதாகைகளைக் காண முடிகிறது.

ஆனால், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என எண்ணும் மாணவர், 100 மீட்டருக்கு அப்பால் இவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று வாங்கிப் பயன்படுத்த மாட்டாரா?

இதேபோல்தான் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இத்தகைய பொருள்களை விற்பனை செய்வது குற்றம் என சட்டம் சொல்கிறது. ஆனால், கடைக்கு வருபவர் எத்தனை வயதுக்குள்பட்டவர் என்பது வியாபாரிக்கு எப்படித் தெரியும்?

பொது இடத்தில் புகைப் பிடிப்பது குற்றம். ஒரு தனி மனிதனுக்கு அவன் குடியிருக்கும் வீட்டைத் தவிர அனைத்துமே பொது இடம்தானே. பிறகு சிகரெட்டை வாங்குபவர் எங்குதான் சென்று அதைப் புகைப்பார்?

எவையெல்லாம் பொது இடம் என்பதற்கு அரசுதான் ஒரு வரையறை அளிக்க வேண்டும்.

இப்படி பயனற்ற விதிமுறைகளை வகுத்து, சட்டத்தை இயற்றி, விழிப்புணர்வு என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு பதில் அனைத்தையுமே தடை செய்து விடலாமே?

நாட்டில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்கள், விபத்து போன்றவற்றுக்கு மதுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணி என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதேபோல், பெரும்பாலான குடும்பங்களில் நிம்மதி குலைவதற்கும், பிரச்னைகள் ஏற்படுவதற்கும் மது முக்கியக் காரணமாக இருக்கிறது.

மக்கள் தாங்களாகவே இந்தப் போதைப் பொருள்களை விட்டு விலகி விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

எனவே, வருவாயைப் பெரிதெனக் கருதாமல் அனைத்து போதைப் பொருள்களையும் (மது, சிகரெட், பாக்கெட் புகையிலை) அரசாங்கம் தடை செய்து விட்டால் வேறு வழியின்றி கட்டாயத்தின் அடிப்படையில் மக்கள் திருந்தித்தானே ஆகவேண்டும்.

இதனால், நாட்டில் குற்றங்கள் பெருமளவு குறைவதோடு, மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் அதிகரிக்கும். அதன் காரணமாக ஆரோக்கியமான இந்தியா மலரும்.

முழு கட்டுரையைப் படிக்க →