கட்டுரைகள்

அப்போது ஏன் வாய் திறக்கவில்லை?

ஆமிர் கான் பொத்தாம் பொதுவாக இந்தியர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து கொண்டு வருவதாகக் கூறிப் புலம்பியிருப்பதிலிருந்தே

ஜோதிர்லதா கிரிஜா

ஆமிர் கான் பொத்தாம் பொதுவாக இந்தியர்களிடையே சகிப்புத் தன்மை குறைந்து கொண்டு வருவதாகக் கூறிப் புலம்பியிருப்பதிலிருந்தே இந்தியர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதை ஒப்புக்கொண்டவராகிறார்.
 இந்தியா சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற நாடாகி வருகிறது என்று புலம்புகிற இவர், மும்பை குண்டு வெடிப்பின் போதும், அதன் விளைவாக 290 இந்தியர்கள் மாண்ட போதும் ஏன் வாயே திறக்கவில்லை?
 பெரும்பான்மையினருக்கே சிறுபான்மையினரால் இங்கே பாதுகாப்பு இல்லை என்பதை ஏன் இவரைப் போன்றவர்கள் வசதியாகப் புறக்கணிக்கிறார்கள்?
 காஷ்மீரில், மண்ணின் மைந்தர்களான பண்டிதர்கள் - இந்துக்கள் - அவர்களது சொந்த மண்ணிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளில் அகதிகளாய்க் குடியேற நேர்ந்த போது இவர்கள் எல்லாரும் ஏன் வாயே திறக்கவில்லை?
 மதத்தின் பெயரால் ஒரே ஒரு மனிதர் கொல்லப்பட்டாலும் அது மாபெரும் தவறுதான். அதை நாகரிக மனிதர் எவரும் ஏற்க மாட்டார். எனினும், இந்தியா முழுவதிலுமே சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக அங்கலாய்க்கும் இவரும், இவரை ஒத்தவர்களும் பெரும்பான்மையினர் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்ட போது எங்கே போயிருந்தார்களாம்?
 இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பாகிஸ்தானின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க, இவர்கள் ஏன் முன்வருவதில்லை? நன்கு சிந்தித்திருந்தால், ஆமிர் கான் வாயறியாமல் வார்த்தைகளை விட்டிருப்பாரா?
 எனினும், அவர் சொன்னதில் துளியும் உண்மையே இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாய்ப் புலம்பியதற்குப் பதிலாக ஆளும் கட்சியினர் சிலரின் நடவடிக்கைகளும், பேச்சுகளும், அவர்கள் வெளியிடும் கருத்துகளும் மதச்சார்பின்மைக்கு எதிரானவையாக இருக்கத் தொடங்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தால் அது நடுநிலையாளர்களால் ஏற்கப்பட்டிருந்திருக்கும்.
 பதவி ஏற்றதன் பின், மிகச் சில நாள்களிலேயே ஒரு பெண் அமைச்சர் சிறுபான்மையினரெல்லாரும் முறைகேடாய்ப் பிறந்தவர்கள் - illegitimate - என்று திருவாய் மலர்ந்தார்.
 தங்களது ஆதரவால்தான் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததாய்ப் பிரமை கொண்டிருக்கும் இன்னொரு மதவாதக் கட்சியின் தலைவர், முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிவருவதால் அதைச் சரிக்கட்ட இந்துப் பெண்கள் தலா பத்துக் குழந்தைகளைப் பெறவேண்டும் என்று உளறினார்.
 இது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுஜீவி என்று நம்மால் நம்பப்பட்டும், கொண்டாடப்பட்டும் வரும் ஓர் ஆசிரியர், பத்துக் குழந்தைகளுக்கும் எப்படிச் சோறு போட்டு வளர்ப்பது? அனைவரையும் எப்படிப் படிக்க வைப்பது? எல்லாருக்கும் வேலை எப்படிக் கிடைக்கும்? என்று பொருளாதார ரீதியில் மட்டுமே சிந்தித்துப் பதில் கேள்விகளை அடுக்கி, அவரது கூற்றை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
 ஒவ்வொரு பிள்ளைப் பேற்றின் போதும் உயிரைப் பணயம் வைத்துப் பிழைக்கும் - சில நேரங்களில் சாகவும் நேரும் - பெண்களைப் பற்றியோ, அவர்களது வலி பற்றியோ, உடல்நல ஊறுகள் பற்றியோ நினைத்தும் பார்க்கத் தோன்றவில்லை அவருக்கு.
 பெண்களின் அமைப்புகளிலிருந்து அத்தலைவருக்கு எதிராகக் கூச்சல்கள் கிளம்பிய பின், வேறொரு மகானுபாவர் பத்துக்குப் பதில் நான்காகிலும் பெற வேண்டும் என்று இற(ர)ங்கினார்.
 இன்னொரு பிரபல பா.ஜ.க. பெண்மணி, சம்ஸ்கிருதம் படிக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கினார். சம்ஸ்கிருதம் கற்றால் நற்குணங்கள் பெருகுமாம்! என்ன கதை இது? தமிழ்ப் படித்தால் நல்ல குணம் வராதா? இதென்ன பிதற்றல்?
 பா.ஜ.க.வினரும் அவர்களின் தோழமைக் கட்சியினரும் ராமஜென்ம பூமியில் ராமருக்குக் கோவில் கட்டுவார்கள் என்கிற நம்பிக்கையின் பேரில்தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 ஊழல் நிறைந்த காங்கிரûஸ விரட்டவே மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்று யாரேனும் கூறினால், நீதான் எல்லா வாக்காளர்களையும் சந்தித்து விசாரித்தாயாக்கும் என்று சிலர் கிண்டல் அடிக்கிறார்கள்.
 இவர்கள் வீடு வீடாய்ப் போய் விசாரித்துத்தான், ராமர் கோவிலுக்காகத்தான் அவர்கள் வாக்களித்தார்கள் என்று தெரிந்து கொண்டார்களாமா?
 பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர், பசுவதைத் தடுப்பின் அடிப்படையில் தான் நாங்கள் வாக்குக் கேட்கிறோம். பிகார் தேர்தலில் நாங்கள் தோற்றால், அது எங்களது இந்தக் கொள்கை தோற்றதாகக் கொள்ளுவோம் என்று அதீத நம்பிக்கையில் சவால் விடுத்தார். என்ன ஆயிற்று?
 முதிர்ந்த வாக்காளர்கள் நிறைந்த இந்தியாவைப் போன்ற நாட்டுக்கு, மதவாதக் கட்சி ஏற்புடையதன்று. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டு வருவதாக அங்கலாய்ப்பதற்குப் பதிலாக, பா.ஜ.க.வினர் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆமிர் கான் போன்றவர்கள் கூறினால் அது விவேகமான கருத்தாக இருக்கும்.
 பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்விளைவுகளையும் பா.ஜ.க.வினர் எண்ணிப் பார்க்க வேண்டும். வங்க தேசத்தின் நூற்றுக்கணக்கான மிகப் பழம் பெரும் காளி கோவில்கள் அதன் பின் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டதையும், கொள்ளையடிக்கப்பட்டதையும் தஸ்லிமா நஸ்ரீன் தமது லஜ்ஜா எனும் நூலில் பட்டியலிட்டிருப்பதை பாஜகவினரின் கவனத்துக்குக் கொண்டு வராதிருக்க முடியவில்லை.
 எனவே, ஆமிர் கான் போன்றவர்களின் வாதத்தை ஏற்க இயலாவிட்டாலும், அதில் கொஞ்சம் உண்மையும் இருப்பதை நாம் மறுத்தல் ஆகாது.
 இந்தியாவின் சகிப்புத்தன்மை என்று கூறியதற்குப் பதில், அவர் ஆளும் கட்சியினரையும், அவர்களின் ஆதரவுக் கட்சிகளையும் விமர்சித்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT