இந்திய நாடு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பப் பிரதேசம். தமிழ்நாடும் அப்படிப்பட்டதுதான். எனவே, நமக்கு இயற்கையாகவே நிலத்தில் பெய்யும் நீரை குளம், ஏரி, அணைகளில் தேக்கியது போக உபரிநீரை மூன்று திசைகளிலும் உள்ள கடலில் வடித்து விடலாம். பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கி ஓடி வருபவையே!
÷சுமார் 1800 ஆண்டுகட்கு முன்னர் கரிகாலச் சோழன் காவிரியில் அணை கட்டி நீரை சோழ நாட்டின் பாசனத்திற்குப் பயன்படுத்தினான். ஆனால் காவிரியில் வெள்ளம் வந்தால் உபரி நீரை வெளியேற்ற 19-ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் பால் என்ற வெள்ளைக்கார பொறியாளர் தான் திருச்சிக்கு அருகில் முக்கொம்பு என்ற இடத்தில் காவிரியின் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விட அணை கட்டினான். உபரி நீரை கொள்ளும் இடம் கொள்ளிடமாக பெயர் பெற்றது. கரிகாலன் கட்டியது கல்லணை என்பது போல் சர் ஆர்தர் பால் கட்டியதும் Lower Anaicut "கீழணை' எனப் பெயர் பெற்றது. கரிகாலன் கட்டிய அணையை வியந்து பாராட்டியவன் காவிரியின் வெள்ளப் பெருக்கு காலத்தில் உபரி நீர் வடிய வடிகால் வசதி செய்து தந்தான்.
÷ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அணைக்கட்டுகள் தொடக்கம் முதல் முடிவில் கடலில் சங்கமிக்கும் இடம் வரை, வடிகால் வசதியை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து இருந்தார்கள். முதலாவதாக ஆறு, ஏரி போன்ற அதிக நீர்வரத்து வரும் இடங்களில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க அலுவலர் குடியிருப்பு (Inspection Bungalow) கட்டினார்கள். அங்கே நிலையாக பணிபுரிய மேற்பார்வையாளர் (Overseer or Superintendent) மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
÷தமிழ்நாட்டிற்கு இரண்டு பருவ காலங்களில் மிதமாகவும், அதிகமாகவும் மழை பெய்யும். ஒன்று மே, ஜூன், ஜூலை மாதங்களில் வீசும் தென்மேற்குப் பருவக்காற்று. மற்றொன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீசும் வடகிழக்குப் பருவக்காற்று. இதில் வடகிழக்குப் பருவக்காற்றால் ஏற்படும் மழையே நமக்குப் பல வழிகளில் அதிகமாக பயன்படுகிறது.÷
பருவமழை பொய்ப்பதை வெல்ல முடியாத நிலையில்தான் இந்நாளிலும் இருக்கிறோம். ஆனால், வெள்ள நீரை நமது முன்னேற்பாடுகளால், முறையான தொடர் நடவடிக்கையால் கட்டுப்படுத்த இயலும்.
÷கோடை காலங்களில் நீர்நிலைகளில் தூர் வாருதல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில்(catchment area) தடைகளை அகற்றுதல், தற்காலிக, நிரந்தர ஆக்ரமிப்புகளைக் கண்டு களைதல், வடிகால் கால்வாய்களின் இருபக்க கரைகளையும் பழுது பார்த்தல், மேலும் பலப்படுத்தல் போன்றன ஒவ்வோர் ஆண்டும் செய்யப்படுதல் அவசியம்.
÷இப்படிச் செய்யும் பணிக்கு குடிமராமத்து எனப் பெயர். அண்மையில் சென்னை நகர் இதுவரை சந்தித்திராத வெள்ளப் பெருக்கு எதனால், எப்படி ஏற்பட்டது என்பதை உற்று நோக்கினால் பல உண்மைகள் தெரியவரும். "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்ற வகையில் சிந்திப்போம். சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவல்ல சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் மிக முக்கியமானவை. பிற இடங்களைப் போல் வேளாண்மைக்கு இந்த நீர் உபயோகத்தில் இல்லை.
÷இந்த நீர்நிலைகட்கு நீர், மழை காலங்களில் பல இடங்களில் இருந்து வருகிறது. இவ்விடங்களை நீர்பிடிப்பு பகுதிகள் என்கிறோம். பல நேரங்களில், இந்த நீர்நிலைகட்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்படும் அல்லது ஏற்பட்டு இருக்கின்ற தடைகளால், (ஆக்கிரமிப்புகளால் வேளாண்மை செய்வது, குடியிருப்புப் பகுதிகளை உண்டாக்குவது போன்றவை) நீர்வரத்து குறைவது உண்டு.
÷வெள்ளக் காலங்களில் உபரிநீரை வடிகால் கால்வாய் மூலம் அகற்ற சரியான (தடுப்புகள் அல்லாத) வழிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு எந்தக் காலத்தில் எத்துணை ஆண்டுகட்கு முன்னர் வரையறுக்கப்பட்டது?
÷நீர்பிடிப்பு பகுதி முதல் ஏரியின் கொள்வாய் வரை எவ்வளவு காலமாக தூர் வாரப்பட இல்லை? மதகுகளின் கரையருகே உள்ள அப்போதைய ஆழம் எவ்வளவு? இப்போது உள்ள ஆழம் எவ்வளவு? இந்த ஏரியில் இருந்து எத்துணை ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றினால் அடையாறு ஆறு அந்த நீரை தன் போக்கில் வங்கக் கடலில் கொண்டு செலுத்தும்?
÷சுமார் 50 ஆண்டு கால அரசு பதிவேடுகளின் அளவு குறிப்புகள் என்ன சொல்லுகின்றன? செம்பரம்பாக்கம் ஏரிக்கும், அடையாறு ஆற்றின் கடல் முகத்துவாரத்திற்கும் உள்ள தூரம் 50 கி.மீ. இருக்குமா? இந்த குறுகிய தூரத்தில் உள்ள வெள்ள நீர் கடலில் சேருவதற்கு முன்னால் முன்னர் எப்போதும் கண்டிராத ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, தியாகராய நகர் போன்ற பகுதிகள் எப்படி வெள்ளத்தில் சிக்குண்டன?
÷"இது நதியின் பிழையன்று, நறும் புனலின் பிழையன்று, மானுடம் செய்த பிழையம்மா'. ஒரு நல்ல கற்பனையைச் செய்து பார்ப்போம். செம்பரம்பாக்கம் ஏரி தொடங்கி அடையாறு முகத்துவாரம் வரை அடையாற்றின் இருபக்க கரைகளும் குறைந்தது 4 அடி உயரத்திற்கு பலமான கரைகள் (நான்கு சக்கர வாகனம் போக வல்ல சாலைகளாக) இருந்திருப்பின்,
சைதாப்பேட்டையோ, ஜாபர்கான் பேட்டையோ, நந்தம்பாக்கமோ, போரூரோ மீனம்பாக்கம் விமான நிலையமோ வெள்ள நீரை ருசி பார்த்து இருக்குமா?
÷செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விட்டப்பட்ட உபரிநீர் ஆற்றின் உட்புறமாக சீறிக் கொண்டு பாய்ந்து தனது தாயிடத்துக்கு சேரும் சேய் போல வங்கக் கடலில் குதூகலித்துக் கொண்டுபோய் இருக்கும். இங்கே நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும். மேற்சொன்ன ஊர்களுக்கு வந்த வெள்ளம் அடையாற்றின் கரைகளை உடைத்துக் கொண்டோ அல்லது செம்பரம்பாக்கம் ஏரியை உடைத்துக் கொண்டோ வந்த நீர் அல்ல!
÷ஆற்றில் பல இடங்களில் கரைகளே இல்லாத நிலையில் பக்கவாட்டில் திரும்பி பள்ளமான இடங்களில் புகுந்தது நீர். இதுதான் உண்மை. அப்படி எனில் ஆற்றின் கரைகள் என்னவாயிற்று? அடையாறு ஆற்றின் இரு கரைகளும் எல்லா இடங்களிலும் உயர்ந்து இருந்திருந்தால் வெள்ளம் வந்திருக்க வாய்ப்பேது?
÷அக்காலங்களில் பொதுவாக கிராமங்களில் நிர்வாக அலுவலர்கள் இருவர், கர்ணம், மானியம், தலையாரி, தோட்டி, வெட்டியான், நீராணிக்கம் என்று நால்வர் கடைநிலை ஊழியர்கள் இருப்பார்கள். இவர்கட்கு ஊரில் நிகழும் பிறப்பு, இறப்பு, நீர்நிலைகளின் நீர் அளவு, உபயோகம், வேளாண் பயிர் சாகுபடி, நஞ்சை, புஞ்சை, தரிசு நிலம், நத்தம் புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, வாய்க்கால், மயானம், பாட்டை புறம்போக்கு விவரங்கள் விரல் நுனியில் இருக்கும்.
÷குடிமராமத்து என்ற திட்டத்தில் கோடை காலங்களில், மழை காலங்களில் செய்ய வேண்டிய பணிகள், கணிக்கப்பட்டு ஊர்மக்கள் ஒத்துழைப்போடு பணம் சேகரித்து நலத் திட்டங்கள் செயல்படுத்துவார்கள். பல வகையான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு மாதம்தோறும் உயர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
÷மக்களாட்சி வந்த பிறகு நிர்வாக அனுபவம், உயர்கல்வி நலன் இவற்றைவிட அவரவர் சாதி, சமூக, கட்சி அடிப்படையில் வெற்றிப் பெற்றவர் ஆட்சி பீடத்தில் அமருவதால் நன்மைகள் விளைவது சொற்பமாகவும், அல்லன அதிகமாகவும் பெருகிவிடுகிறது.
÷அடையாறு ஆறு, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் தொடங்கி அடையாறு நகர் வரை இருபுறமும் ஏன் உயர்ந்த கரைகளை நம்மால் உருவாக்க முடியவில்லை? அப்படியே அவ்வப்போது உருவாக்கினாலும் அவற்றைத் தொடர்ந்து ஏன் பராமரிக்க முடியவில்லை?
÷கரைகள் சமன் செய்யப்படுகின்றன. குப்பைக் கூளங்களைக் கொண்டு மேற்கூரைகள் அமைத்து குடிசைகள் கட்டப்படுகின்றன. இலவச மின்சாரம், இலவச அரிசி, வீட்டு உபயோகப் பொருள்களும் இலவசமாக தருகிறார்கள். இப்படி நீர்நிலை ஓரங்களில் வசிப்பவர்கள் நாளடைவில் இலவச மனை பட்டா பெற்று விடுவார்கள். பிறகு இருப்பிடம் சொந்தமானதும் நிலத்தரகர்களிடம் சொற்பத் தொகைக்கு விற்று விடுவார்கள். பிறகு பணம் படைத்தவர்கள் அங்கே மாடி குடியிருப்புகளை உருவாக்குவார்கள்.
÷ஒரு காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து சோழ மண்டலத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் வரை தொடர்ந்தது. கூவம் ஆற்றில் முன்னொரு காலத்தில் வள்ளல் பச்சையப்ப முதலியார் காலையில் அவ்வாற்றில் குளித்துவிட்டு கந்தக்கோட்டம் சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற வரலாறு இருக்கிறது.
இன்றைக்கு கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு இவற்றின் கரையோரங்களில் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன? ஏழ்மையை விரட்ட வேண்டும். ஏழைகளை வளர்க்கக் கூடாது.
÷சில நேரங்களில் அரசுகள் இவர்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டால், உடனே எதிர்க்கட்சிகள் "குடிசைகளை அகற்றாதே', "ஏழைகளின் வாழ்வாதாரத்தைக் கெடுக்காதே' என்று போராட்டம் நடத்தும். சில நேரங்களில் இதையும் மீறி அரசு செயல்பட்டால் இருக்கவே இருக்கிறது நீதிமன்றங்கள் தடையுத்தரவுப் பிறப்பிக்க? அப்புறம் என்ன? ஆறுகள் கரையில்லாத நிலையில் வெள்ள நீர் பொங்கி வழியும். உடன் நிவாரணம், இடர் களையும் பணி தொடங்கும். பிறகு சில ஆண்டுகளில் மறக்கப்படும்.
÷அரசியல் கட்சித் தலைவர்கள், கல்விமான்கள், ஏழைகளின் பிரதிநிதிகள், நீதிபதிகள், காவல் துறைத் தலைவர்கள், அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தன்னல மறுப்போடு தயவு தாட்சண்யம் இன்றி பொது நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் ஆக்ரமிப்புகள் அகலும், அகலமான சாலை, ஆழமான ஆறு, தூய நீர்நிலைகள் உருவாகும்.
÷எனவே, இந்த அண்மைக்கால இடர்கள் மானுடப் பிழையால் வந்தவையே!
÷நதியின் பிழையன்று. நறும்புனலின் பிழையுமன்று.
கட்டுரையாளர்:
பொதுத்துறை நிறுவன அதிகாரி (ஓய்வு).
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அணைக்கட்டுகள் தொடக்கம் முதல், முடிவில் கடலில் சங்கமிக்கும் இடம் வரை, வடிகால் வசதியை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.