முகப்பு
கட்டுரைகள்

வங்கிக் கடனுதவியே உயிர்நாடிப் பிரச்னை!

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகளையும், உடமைகளையும் இழந்தவர்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகளையும், உடமைகளையும் இழந்தவர்கள் லட்சோப லட்சம் பேர். அவர்களில் ஒரு பகுதியினர் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை நடத்தியவர்கள் எனலாம்.
 மழை, வெள்ளம் புகுந்துவிட்டதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், தளவாடங்கள் நீரில் மூழ்கி செயல் இழந்துவிட்டன.
 இப்படி சேதமடைந்த தளவாடங்களின் மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், வீணாகிப்போன மூலப் பொருட்கள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களின் மதிப்பு ரூ.2,500 கோடி என்றும், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் (Industrial Estate Manufacturers Association) மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 தடைபட்டுப்போன உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.10,000 கோடி என மேற்கூறிய ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. இதனால், தொழிலாளர்கள் தினமும் தொழிற்சாலைகளுக்கு வருகை புரிந்து, தளவாடங்கள் தண்ணீல் கிடப்பதால், வேலையின்றி காத்திருந்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதுபோல் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் அதிகம் என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.
 தமிழ்நாட்டில் முறையாகப் பதிவு செய்து கொண்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இவை தவிர, பதிவு செய்து கொள்ளாமல் செயல்படும் சிறு தொழிற்சாலைகள் 4 லட்சத்துக்கும் அதிகமாகும். இவற்றின் ஒட்டுமொத்த முதலீடு சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய். இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 69 லட்சம் பேர்.
 சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், பாடி, திருமுடிவாக்கம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் வேலை செய்ய முடியாமல் காத்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகம்.
 ஏற்கெனவே பெற்றுள்ள ஆர்டர்களுக்கான உற்பத்தியை எப்போது தொடங்க முடியும் என்ற தெளிவில்லாத நிலை பெரும்பாலான தொழிற்சாலைகளில் நீடிக்கிறது.
 சில தொழிற்சாலைகள் ஜனவரி மாத முடிவிற்குள் தொடங்குவதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளன. வேறு பல தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு இரண்டு, மூன்று மாதங்களாவது ஆகக்கூடும் என்று தெரிகிறது.
 காலதாமதம் அதிகரிக்குமானால், அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது.
 பல பெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறும் தொழிற்சாலைகள் செய்து கொடுக்கும் சிறிய, சிறிய நுட்பமான பாகங்களை நம்பித்தான் இருக்கின்றன. எனவே, புதிய உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஆகுமேயானால், பெரும் தொழிற்சாலைகள் தங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் பாகங்களை வேறு இடங்களில் கொள்முதல் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
 இந்நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள உயிர்நாடிப் பிரச்னை பணம்தான். ஆகவே, அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது வங்கிக்கடன். வங்கிகளிடமிருந்து பலவகை உதவிகளை இந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
 ஒன்று, ரூ.10 லட்சம் வரையிலான பழைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; இரண்டு, நிலுவையில் உள்ள கடன் பாக்கியை வசூலிக்க வாராக் கடனுக்கான சட்டத்தை (சர்ஃபாஸி சட்டம் - Sarfasi Act)-ஐ செயல்படுத்தக்கூடாது; மூன்று, அத்தியாவசியமான புதிய இயந்திரங்கள் (மெஷினரி) மற்றும் தளவாடங்களை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை புதிய கடனுதவி (Term Loan) வழங்க வேண்டும்; அதற்கான மாதத் தவணைகளை வசூலிப்பது 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்பட வேண்டும் ஆகியவை ஆகும்.
 மழை வெள்ளத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.14,500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
 இப்போதைக்கு சில வங்கிகள் மட்டுமே தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான தவணைகள் தாமதமானால், அதற்கு அபராத வட்டி (Penal interest) ரத்து செய்யப்படும்.
 ரிசர்வ் வங்கி ஏற்கெனவே பொதுவாக அனுமதித்துள்ள ரீஷெடுயூல் (Reschedule) முறையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு கால நீடிப்பு மற்றும் மாதத் தவணைத் தொகையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகும். இது யானைப் பசிக்கு சோளப் பொரி போல் தான்.
 இரண்டு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, தற்போது இந்த தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அசாதாரணமானது. அதற்கு அசாதாரணமான நிவாரணம் மற்றும் உதவி தேவை என்பதில் இரு கருத்துகள் கிடையாது.
 இரண்டாவது, வங்கிகளைப் பொருத்தவரை, கடன் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் கையில் இல்லை. அது தேசிய அளவிலான கொள்கை முடிவு தொடர்புடையது. அது மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
 வங்கிகள் ஒவ்வொரு கணக்கையும் தனித்தனியாக பரிசீலித்த பிறகு தான் எந்த மாதிரியான அணுகுமுறை தேவை என்பதை நிர்ணயிக்க முடியும். ஆனால், புதிய தளவாடங்கள் வாங்குவதற்கு ஏதுவாக புதிய கடன் கொடுப்பதற்கு வங்கிகள் நிச்சயமாக முன்வர வேண்டும்.
 சலுகை வட்டியுடன் கூடியதாக அந்த கடன் திட்டம் இருத்தல் வேண்டும். இதற்கான தவணைகள் 6 மாதங்களுக்குப் பிறகு வசூலிக்கத் தொடங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் நியாயமானவையே.
 சொல்லப்போனால் ஏற்கெனவே, வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள சலுகைகளை சிறு, குறு தொழில்களுக்கும் வழங்குவதற்கு தயக்கம் காட்டத் தேவை இல்லை.
 அதேசமயம், வங்கிகளால் மட்டுமே இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்புக்கும் கடனுதவி செய்வது சாத்தியமில்லை.
 இந்த தொழிற்சாலைகள் தங்கள் தளவாடங்களை காப்பீடு செய்துள்ளனவா என்றால் 30 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்களே காப்பீடு செய்துள்ளன. அதுவும் "தீ' விபத்துக்கான காப்பீடுதான். வெள்ளத்துக்கான காப்பீடு அல்ல.
 இந்நிலையில் தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சங்க நிர்வாகிகள் (SIMA) முன்வைத்துள்ள இரு கோரிக்கைகள் பரிவுடன் பரிசீலிக்கத்தக்கவை. ஒன்று, புதிதாகத் தொடங்கப்படும் சிறு, குறு தொழில்களுக்கு அரசு 25 சதவீத மூலதன மானியம் வழங்குவது.
 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை புதிய நிறுவனங்களாகப் பாவித்து, அவற்றுக்கு மேற்கூறிய திட்டத்தைச் செயல்படுத்தலாம். அந்தத் தொகையை நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கலாம். அது வங்கிக் கடனுக்கு "மார்ஜின்' தொகையாக அமையும்.
 SIMA நிர்வாகிகளின் இரண்டாவது கோரிக்கை என்னவெனில், அரசு ஏற்கெனவே செயல்படுத்தும் வட்டி இல்லா விற்பனை வரி (Interest Free Sales Tax) திட்டத்தை பொருத்தமான முறையில் திருத்தி அமைத்து, மழை, வெள்ளத்தால் இழப்பைச் சந்தித்துள்ள நிறுவனங்களுக்குச் செயல்படுத்த வேண்டும் என்பது. இதன் பயனாக, சிறு, குறு நிறுவனங்கள் வசூலிக்கும் விற்பனை வரித் தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டி இல்லா கடனாக அரசுக்குச் செலுத்தும் சலுகையை வழங்கலாம்.
 அரசு இதுபோன்ற நிதி உதவிகளையும், வங்கிகள் தங்கள் பங்குக்குச் செய்யக்கூடிய கடனுதவிகளையும் காலதாமதமின்றிச் செய்ய வேண்டும்.
 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி சென்னை வந்து மழை, வெள்ளப் பாதிப்பை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு ரிசர்வ் வங்கி, அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
 இதன் விளைவாக, அரசுடமை வங்கிகள் தனியார் வங்கிகள் தவிர முத்ரா (Mudra) வங்கியின் மூலமாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்று செய்திகள் வெளியாயின.
 அதற்கு இணங்க, அடுத்த சில மாதங்களுக்கு மாதத் தவணை செலுத்தத் தாமதமாகும் பட்சத்தில் அதற்கு அபராத வட்டி வசூலிப்பைத் தவிர்த்தால், சர்ஃபாசி சட்ட நடவடிக்கையைத் தள்ளி வைத்தல், புதிய இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு சலுகை வட்டியில் ரூபாய் பத்து லட்சம் வரை புதிய கடன் வழங்குதல், அதற்கு 6 மாதகால அவகாசத்துக்குப் பிறகு தவணை வசூல் செய்தல் உள்ளிட்ட பொருத்தமான சலுகைகள் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.
 வங்கிகளும் உடனடியாக உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். விரைந்து செயல்பட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த விஷயத்தை அணுகிட வேண்டும். அழிவின் விளிம்பில் நிற்கும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை மீட்டெடுத்திட வேண்டும்.
 அரசு, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், காலத்தால் ஆன இந்த உதவியை, இத்தருணத்தில் இல்லாமல், வேறு எப்போது செய்யப் போகின்றன?
 

"மழை, வெள்ளம் புகுந்துவிட்டதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், தளவாடங்கள் நீரில் மூழ்கி செயல் இழந்துவிட்டன."
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →