கானுயிர்க் கருவூலங்கள்
மனித இனத்தின் இணக்கமான உயிர்ச்சூழல் சமன்பாட்டுக்குக் கானுயிர்கள் மிகவும் அவசியம். ஒரு நாட்டின் மதிப்புமிக்கச் செல்வம் கானுயிர்களே.
கட்டுரைகள்கானுயிர்க் கருவூலங்கள்
மனித இனத்தின் இணக்கமான உயிர்ச்சூழல் சமன்பாட்டுக்குக் கானுயிர்கள் மிகவும் அவசியம். ஒரு நாட்டின் மதிப்புமிக்கச் செல்வம் கானுயிர்களே.
மனித இனத்தின் இணக்கமான உயிர்ச்சூழல் சமன்பாட்டுக்குக் கானுயிர்கள் மிகவும் அவசியம். ஒரு நாட்டின் மதிப்புமிக்கச் செல்வம் கானுயிர்களே. பயோ டைவர்சிட்டி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கங்களுக்குக் கானகத்தில் உள்ள மரங்களும், மண்ணும், செடிகளும், கொடிகளும் எவ்வளவு முக்கியமோ, அவை போல் கானுயிர்களும் முக்கியமானவை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களும், செம்மரங்களும் கானகங்களில் காணாமல் போகின்றன.
அன்று சந்தன மரங்களையும், யானைத் தந்தங்களையும் வேட்டையாடிய வீரப்பன் காட்டில்தான் விளையாடினார். இன்று நாட்டில் இருந்து கொண்டு காட்டில் வேட்டையாடும் மாஃபியாக்கள் பல நூறு வீரப்பன்களுக்குச் சமமானவர்கள். காடுகளில் உள்ள கானுயிர்களையும், மரங்களையும் காவல் காத்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு அடையாளமாகத் தமிழில் "காநாடுகாத்தான்' என்று மனிதர்களுக்கும், ஊர்களுக்கும் பெயர்கள் உண்டு. அப்படிப்பட்ட தமிழர்கள் திருப்பதி, சேஷாசலம் மலைக் காடுகளில் செம்மரம் வெட்டும் மாஃபியாக்களின் கையாள்களாக உருவெடுத்துள்ள கையறு நிலையை என்னவென்று நவில!
அரசியல் / உயர்நிலைக் காவல் / வனத் துறை அலுவலர்களின் புரிதலுடன் செயல்படும் வனவிலங்கு / மர வேட்டை மாஃபியாக்கள் கடத்தும் அரிய வகை வனப் பொக்கிஷங்களின் மதிப்பு ஆண்டுக்கு 21,300 கோடி அமெரிக்க டாலர் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் கோடிட்டு எச்சரித்துள்ளது.
சீனா, இந்தியா, கிழக்காசிய நாடுகள் ஆகியன கானுயிர்ப் பொருள் கள்ளக் கடத்தலில் முன்னணி நாடுகள். கானுயிர்க் கருவூலக் கடத்தல் பொருள்களை வாங்கி கைவினை / மருந்துப் பொருளாக விற்றுக் கொள்ளையடிப்பதில் சீனாவை யாரும் விஞ்ச முடியாது. கானுயிர்க் கருவூலங்களைக் கடத்திக் கொள்ளையடிக்கும் இந்திய மாஃபியாக்களில் தமிழர்களின் ஆற்றல், பிற மாநிலங்களிலும் போற்றி வணங்கப்படுகிறது!
ஏராளமாக லாபம் உள்ள குற்றத் தொழில்களில் முதலாவதாக உள்ளது கஞ்சா, அபினி, பிரவுன் சுகர் கடத்தல். இரண்டாவது, ஏற்றுமதி - இறக்குமதி வரிகளை ஏய்த்து கொண்டுவரப்படும் பிஸ்கட் தங்கத்திலிருந்து பல்வேறு நுகர்பொருள்களின் கடத்தல். மூன்றாவது, இளம்பெண்களைக் கடத்தி அரபு நாடுகளில் விற்கும் தொழில். நான்காவது, நிலை கானுயிர்ப் பொருள் கடத்தல். கானுயிர்ப் பொருள்கள் எவை? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் நமது மூச்சே நின்று போகும்.
பண ஆசையால் காட்டு மிருகங்களைக் கொல்வது முதல் பாவம். மரங்களை வெட்டுவது இரண்டாவது பாவம். வெட்டிக் கொன்றதை விற்றுப் பெறும் பணம் மூன்றாவது பாவம் என்று அடுக்கடுக்காகப் பாவம் செய்தால் ஆண்டவனும் பொறுக்க மாட்டான்.
கானுயிர்க் கருவூலங்களில் சந்தனம், செம்மரம், ரோஸ்வுட் தவிர, அச்சம் தரும் வனவிலங்குகளும், பாம்புகளும் அடங்கும். தோலுக்காக மானும், பாம்பும், புலியும், தந்தத்துக்காக யானைகளும், கொம்புகளுக்காக காண்டாமிருகங்களும் கொல்லப்படுகின்றன.
யானையின் தந்தம் மதிப்புள்ள பொருள் என்று நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், காண்டாமிருகத்தின் கொம்பு யானையின் தந்தத்தை விடவும் விலை அதிகம். எவ்வாறு சந்தன மரத்தை விடவும் செம்மரம் மதிப்பில் பன்மடங்கு அதிகமோ, அவ்வாறே யானையின் தந்தத்தை விட காண்டாமிருகத்தின் கொம்பு விலை அதிகம். ஒரு கிலோ காண்டாமிருகக் கொம்பின் விலை 3 லட்சம் அமெரிக்க டாலர். தங்கம், பிளாட்டினம் விலையைவிட அதிகம். யானை தந்தத்தின் விலையை தங்கத்தின் விலையோடு குறிப்பிடலாம்.
ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாகவும் இந்தியாவில் குறைந்தபட்சமாகவும் காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு கொம்புகளை சீனாவுக்குக் கடத்தும் குற்ற நடவடிக்கை குறைந்தபாடில்லை. தோலுக்காக மான், புலி, ராஜநாகம் ஆகியன வேட்டையாடப்படுகின்றன. இறந்த புலியின் விலை 10,000 அமெரிக்க டாலர். வனங்களின் குற்றப் பொருள்கள் வாங்குவதில் சீனா மட்டுமே தனித்து விளங்குகிறது.
வியத்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஜப்பான், மலேசியா, கொரியா போன்ற நாடுகளுக்கும் பங்குண்டு. புலி, காண்டாமிருகங்களின் எலும்புகளையும், இறந்த உடலின் சில பாகங்களையும் மஞ்சள் மனிதர்கள் நாட்டு மருந்துகளுக்குப் பயன்படுத்துகிறார்களாம்.
இயற்கை வளங்கள், அரிய வகை உயிரினங்களைக் காப்பாற்றும் ஐ.நா. அமைப்பான IUCN (International Union for the Conservation of Nature and Natural Resources) வழங்கும் தகவல் அடிப்படையில், ஒரு சில அரிய வகைப் பஞ்சவர்ணக் கிளி, ஆமை, பாம்பு, தவளை விலை விவரம்:
சிவப்புக் கால்கள் கொண்ட வண்ண ஆமை விலை ரூ.45,000. வால் உள்ள ஆப்பிரிக்க ஆமை ரூ.38,000. கார்மேகச் சிறகுடன் கருநீலக் கழுத்துள்ள பஞ்சவர்ணக் கிளி ஜோடி விலை ரூ.2 லட்சம். அல்பினோ அமல் கார்ண் பாம்பு (வெள்ளையில் வெளிர் ஆரஞ்சு நிறத் திட்டுகள் கொண்ட மண்ணுளிப் பாம்பு) விலை ரூ.20,000. இகோனா என்ற ஒரு வகை வண்ணத் தவளை விலை ரூ.15,000.
வனக் குற்றப் பொருள் விற்பனை இணையம் (ஆன்லைன்) வழியாகவும் நடைபெறுகிறது. வனக் குற்றப் பொருள்களை வேட்டையாடி விற்பனை செய்ய நவீன தொழில்நுட்பங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
குற்றப் பொருள் விற்கும் கோடீஸ்வரர்களுக்கு வனத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களின் கூட்டணி பலம் உள்ளதால் இந்தக் குற்றத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட குற்றத் தொழில் கூட்டணி இந்தியாவில் மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த அனைத்து நாடுகளிலும் உள்ளன. குற்றப் பொருள் விற்கும் இணையவழி விளம்பரங்கள் பற்றிய தகவல்கள் வியப்பாக உள்ளன. இத்தகவல்களை அனைத்துலக விலங்கின மேம்பாட்டு நிதியகம் (International Fund for Animal Welfare) வெளியிட்டுள்ளது.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன், இங்கிலாந்து, அரபு நாடுகள், ரஷியா, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் வன வேட்டைக் குற்றப் பொருள் விற்பனை மதிப்பு பத்து கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தி ஏழு அமெரிக்க டாலர் ($ 10,07,07,937). இதில் சீனாவின் பங்கு மட்டும் 2.8 கோடி டாலர். இரண்டாவதாக ரஷியாவின் பங்கு 2 கோடி டாலர். சுமார் 42,000 குற்றப் பொருள் பற்றி 280 வலைதளங்கள் (Websites) விலாவாரியாக சுமார் 10,000 விளம்பரங்கள் மூலம் தெரிவித்துள்ளன. இவற்றில் உயிருள்ள விலங்கின எண்ணிக்கை மட்டும் 5,160.
வன விலங்குகள் நிறைந்த ஆப்பிரிக்க, இந்தியக் காடுகளில் உள்ள யானைகள், காண்டாமிருகங்கள், புலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை, புதிய தொழில்நுட்ப வசதியுடன் கொள்ளையடிக்கும் வன வேடர்களால் குறையும் ஆபத்துள்ளது.
எனினும், இந்த ஆபத்துகளை முறியடிக்கும் விதமாக, அனைத்துலக வன விலங்குப் பாதுகாப்பு மையமான W.W.F. இந்தியப் பிரிவுச் சட்டத்தை ஏமாற்றி நிகழும் இணையவழி குற்றப் பொருள் வர்த்தகத்தில் குற்றப் பொருள்களின் ரகசியச் சொல்லை (Code Word) கண்டுபிடித்துப் பல்வகை விலங்குகளும், பாம்புகளும், ஆமைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவை குறைவுதான்.
இந்தியாவில் இப்படிப்பட்ட குற்றப் பொருள் இணையவழி விற்பனையைக் கண்காணிக்கும் சைபர் கிரைம் செல் (Cyber Crime Cell) மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே உண்டு. மேல்காட் புலிச் சரணாலயத்தில் ஒரு புலிக் கொல்லப்பட்டதை "சைபர் கிரைம் செல்' கண்டுபிடித்து 34 நபர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது. இந்தியாவின் சார்பாக சைபர் குற்றக் கண்காணிப்பு நிறுவனமும், சீனாவின் "அலிபாபாவும்' இப்போது ஒருங்கிணைந்து செயலாற்ற முன்
வந்துள்ளன.
எனினும், வனக் குற்றப் பொருள் வர்த்தகத்தின் ஒருங்கிணைந்த கூட்டணி வெல்ல முடியாத பலத்தைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் அடர்ந்த வனங்களே அரசியல் தீவிரவாதிகளின் புகலிடங்களாக உள்ளன. "மாவோயிஸ்டுகள்' என்று கூறிக் கொண்டு, பழங்குடி மக்களைப் பக்கத்தில் சேர்த்துக் கொண்டு வன வேட்டையாடும் இவர்களை, மாசேதுங் உயிருடன் இருந்தால் மன்னிக்கவே மாட்டார்.
ஆனால், பண ஆசை கொண்ட அரசியல் பிரமுகர்கள் மறைமுக முதலாளியாகச் செயல்படுகின்றனர். அது செம்மரமானாலும் சரி, வெண்புலி என்றாலும் சரி சூத்திரதாரிகள் பிடிபடுவது இல்லை. செம்மரம் வெட்டுவோரும், யானையை - புலியை - காண்டாமிருகத்தைக் கொன்று தந்தங்கள் களவாடுவோரும், புலித் தோல் உரிப்போரும், கொம்பு எடுப்போரும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பழங்குடி மக்களே.
மாவோயிஸ்டுகள் அல்லது மாவோயிஸ்டுப் போர்வையில் உள்ள கள்ளக் கடத்தல் மாஃபியாக்களின் கையாள்களாகப் பழங்குடி மக்களில் சிலர் உள்ளனர். தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு, ஆயுதங்கள் வாங்கப் பணம் வேண்டுமே! சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் பணத்தின் மீதான ஆசை யாரை விட்டு வைக்கும்?
5 மணி நேரம் மண் வெட்டி வேலை செய்தால் கிடைக்கும் ஊதியம் ரூ.350. சட்டத்துக்குப் புறம்பாக மரம் வெட்டியோ, மிருக வேட்டையோ செய்தால் கிடைப்பது ரூ.3,500. பிடிபட்டால் சிறைவாசம். சேர்த்த பணம் மிச்சம். வெளிவந்தால் சுகவாசம். மனித உரிமைப் பாதுகாப்பும் உண்டு. இதுதான் உலகம்.
வனக் குற்ற வணிகப் பொருள் மதிப்பு சுமார் 10 கோடி அமெரிக்க டாலர் என்றால், உயிருடன் சரணாலயங்களில் வாழும் கானுயிர்களின் மதிப்பு எவ்வளவு கோடி கோடி டாலர்கள்? வனத்தின் கருவூலங்கள் சந்தன மரம், செம்மரம், ரோஸ்வுட் போன்ற பிற மரங்கள் மட்டுமல்ல; கானுயிர்களான சிங்கம், புலி, கரடி, யானை, காண்டாமிருகங்களும் அதில் அடக்கம்.
கொல்லாமைத் தத்துவ அடிப்படையில் ஹிந்து மதத்தில் மரங்களும், விலங்குகளும், பாம்புகளும், பூச்சிகளும் தெய்வமாக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பாதுகாப்புக்குரிய வனங்களில் மரங்களை வெட்டுவோரும் விலங்குகளை வேட்டையாடி வாழ்வோரும் மனச்சாட்சியில்லாத மனிதர்களே. மர மாஃபியாக்களையும் யானைத் தந்தம் - புலித் தோல் - காண்டாமிருக மாஃபியாக்களையும் தெய்வம் நின்று கொல்லும்.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.