வேளாண் கடனின் உண்மை நிலை
வேளாண் கடன்கள் பற்றி அவ்வப்போது மிகைப்படுத்தி பேசப்படுகின்றன. வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு
வேளாண் கடன்கள் பற்றி அவ்வப்போது மிகைப்படுத்தி பேசப்படுகின்றன. வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கடனுதவிகள் வழங்க பல்வேறு வழிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன. அரசு தரும் புள்ளிவிவரங்களும் விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி மக்களை நம்பவைக்கின்றன. ஆனால், இது பற்றி விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதில் மறைந்துள்ள பல உண்மைகள் தெரியவரும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் வேளாண் கடன்களின் அளவு இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று 2004-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அரசு அதை செயல்படுத்திவிட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் உரையில் வேளாண் கடன்களின் இலக்கு அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2012-13ஆம் ஆண்டு முதல் 2014-15ஆம் ஆண்டு வரை வேளாண் கடன் இலக்கு முறையே ரூ.5.75 லட்சம் கோடி, ரூ.7 லட்சம் கோடி, ரூ.8 லட்சம் கோடியாகும். 2015-16ஆம் ஆண்டில் விவசாயக் கடன் இலக்கு ரூ.8.5 லட்சம் கோடி.
இந்தக் கடன் இலக்குகளை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 7 சதவீதமாகும்.
2010-11ஆம் ஆண்டு முதல் 2013-14ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் வேளாண் கடன் இலக்கும், சாதனை அளவும் பின்வருமாறு: 2010-11இல் இலக்கு ரூ.3,75,000 கோடி, வழங்கப்பட்டது ரூ.4,68,300 கோடி. 2011-12இல் இலக்கு ரூ.4,75,000 கோடி, வழங்கப்பட்டது ரூ.5,11,000 கோடி. 2012-13இல் இலக்கு ரூ.5,75,000 கோடி, வழங்கப்பட்டது ரூ.6,07,400 கோடி. 2013-14இல் இலக்கு ரூ.7,00,000 கோடி, வழங்கப்பட்டது ரூ.7,11,600 கோடி என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
கடனுதவிக் கொள்கைகளும், கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நன்றாகவே உள்ளன. வர்த்தக வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு கடனுதவி நிறுவனங்கள், உள்ளூர் வங்கிகள் என பல்வேறு வங்கிகள், நிறுவனங்கள் மூலம் கடனுதவி பெற முடியும்.
2014-ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 151 வர்த்தக வங்கிகளுக்கு (பிராந்திய ஊரக வங்கிகள் உள்பட) 1,17,218 கிளைகள் உள்ளன. இவற்றில் 45,177 ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளன.
2012-13ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி கூட்டுறவுத் துறையில் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு 1,081 அலுவலகங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு 13,655 அலுவலகங்கள், 93,488 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேபோல மார்ச் 2014 நிலவரப்படி, 28 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 561 மாவட்டங்களில் 160 சிறு கடனுதவி நிறுவனங்களுக்கு 11,687 கிளைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வேளாண் கடன் கொள்கைத் திட்டங்களோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் நடைமுறைகளோ பலவீனமானவை என்று சொல்லிவிட முடியாது. வேளாண் கடன் திட்ட இலக்கை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. மொத்த வங்கிக் கடனில் 18 சதவீதம் வேளாண் கடன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கணிசமானதும் கூட.
ஒவ்வொரு வங்கிக்கும் கடன் இலக்கை நிர்ணயித்து அதைக் கண்காணிக்க மாநில அளவில் குழுக்கள் உள்ளன. இதைத் தவிர, வேளாண் துறை, ஊரக வளர்ச்சியை உறுதி செய்யும் அதிகாரம் நபார்டு வங்கிக்கு உள்ளது.
இவையெல்லாம் இருந்தும் விவசாயிகளுக்கு உரிய கடன் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. வேளாண் கடனுதவி நிறுவனங்களின் புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் அடிப்படையில் என்ன நடக்கிறது என்பது புரிய வரும்.
இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி 2013 மார்ச் வரை வர்த்தக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கடன் தொகை ரூ. 5.81 லட்சம் கோடி. இது மொத்த வங்கிக் கடனில் 10.52 சதவீதம்தான். இது ரிசர்வ் வங்கியின் கடன் இலக்கான 18 சதவீதத்தை விட குறைவானதாகும். அதாவது 18 சதவீத இலக்கை எட்டுவதில் வங்கிகள் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இதிலிருந்து தப்பிக்க 1996-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது எஞ்சிய கடன் தொகையை முன்னுரிமைக் கடனில் சேர்த்து அதை ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு நேரடியாகக் கடன் வழங்குவதற்கு பதில் வங்கிகள் இதில் முதலீடு செய்து விடுகின்றன.
இதைவிட கவலை தரும் விஷயம் என்னவெனில், இந்த 10.52 சதவீத கடனுதவியும் கூட முழுமையாக ஊரகப் பகுதிகளைச் சென்றடைவதில்லை. ஊரகப் பகுதிகளில் வழங்கப்படும் வேளாண் கடன் தொகை ரூ.2.48 லட்சம் கோடி மட்டுமே. இது மொத்த வங்கிக் கடனில் 4.49 சதவீதமாகும். எஞ்சிய கடன் தொகை நகர்ப்புறமாக மாறிவரும் பகுதிகள், நகர்ப்புறம், பெருநகரங்களில் உள்ள விவசாயிகளுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் சமூகத்தில் அதிகம் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கோ அல்லது குத்தகைதாரர்களுக்கோ உரிய கடனுதவி கிடைப்பதில்லை. 2010-11ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்த விவசாயிகளில் 85.30 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். நாட்டில் மொத்தம் உள்ள 15.96 கோடி ஹெக்டேர் சாகுபடி நிலப்பரப்பில் 44.55 சதவீதம் அதாவது, 7.11 கோடி ஹெக்டேர் இவர்களது சாகுபடி நிலங்களாகும். மொத்த சாகுபடியாளர்களில் 40 சதவீதம் பேர் குத்தகைதாரர்கள். இவர்கள் வைத்துள்ள நிலங்களுக்கோ அல்லது சாகுபடி பரப்புக்கோ அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்குக்கு ஏற்பவோ வேளாண் கடன் கிடைப்பதில்லை.
2013-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி மொத்தம் வழங்கப்பட்ட ரூ.2.81 லட்சம் கோடி வேளாண் கடனில் ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்கள் 5 சதவீதத்துக்கு சமமாகும். இந்த ரூ.2 லட்சத்துக்கு குறைவான கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளைத்தான் சென்று அடைந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
சராசரியாக சிறு விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரத்துக்குக் குறைவாகவும், குறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரத்துக்குக் குறைவாகவும்தான் கடன் வழங்கப்பட்டிருக்கும் என்று நபார்டு அறிக்கை (2012-13) கூறுகிறது.
வர்த்தக வங்கிகள் மட்டுமல்ல, விவசாயிகளுக்குக் கடனுதவி அளித்து வரும் இதர நிதி நிறுவனங்களும் தங்கள் கடமையை சரிவரச் செய்வதில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு வேளாண் கடனுதவியில் கூட்டுறவுச் சங்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன. 1992-93ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களின் வேளாண் கடனுதவி 62 சதவீதமாக இருந்தது. இது 2013-14ஆம் ஆண்டில் வெறும் 17 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
நலிவுற்றவர்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காக 1975-இல் தொடங்கப்பட்டதுதான் பிராந்திய ஊரக வங்கிகள். இவற்றின் செயல்பாட்டிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. தொடக்கத்தில் ஏழைகளுக்கு 100 சதவீதம் கடனுதவி அளித்த இந்த வங்கிகள் இப்போது 15 சதவீதம் மட்டுமே வழங்குகின்றன. இவை சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வங்கிகள் என்ற நிலையிலிருந்து முழுவதும் வர்த்தக நோக்கில் செயல்படும் வங்கிகளாக மாறிவிட்டன.
2008-09 முதல் 2012-13 வரையிலான 5 ஆண்டுகளில் இந்த வங்கிக்கு ரூ.12,589 கோடி லாபமாகக் கிடைத்துள்ளது. இது தவிர வருமான வரியாக ரூ.9,318.27 கோடியை அரசுக்கு வருமானமாக ஈட்டித் தந்துள்ளது ஏழைகளுக்கான இந்த வங்கி.
பிராந்திய ஊரக வங்கிகளில் தற்போது மத்திய அரசின் முதலீடு 50 சதவீதமாகவும், ஆதரவு தரும் வர்த்தக வங்கியின் முதலீடு 35 சதவீதமாகவும், வங்கி செயல்படும் மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகவும் உள்ளது. இப்போது வங்கி செயல்பாட்டு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு 49 சதவீதம் வெளியார் முதலீட்டுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
அதாவது, வங்கியின் செயல்திறனை அதிகரித்து லாபத்தையும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். இந்த வங்கியின் முதலீட்டை தற்போதைய ரூ.5 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயன்பெறப் போவது பணக்காரர்கள்தானே தவிர ஏழைகள் அல்ல.
விவசாயிகளுக்கு சிறு கடனுதவி நிறுவனங்கள் மூலமும் வேளாண் கடன் வழங்கப்படுகிறது. இவை அதிக வட்டி வசூலிப்பதுடன் கடன் பெற்றவர்களை நிர்பந்தப்படுத்தி வசூல் செய்து விடுகின்றன. 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி இவை வழங்கியுள்ள கடன்கள் ரூ.33,517 கோடி.
2013-14ஆம் ஆண்டில் சிறு கடனுதவி நிறுவனங்களின் லாபம் ரூ.6,560 கோடி. கடந்த ஆண்டைவிட 45 சதவீதம் அதிகம். சிறு கடனுதவி நிறுவனங்களுக்கு வர்த்தக வங்கிகள் 83 சதவீதமும், நபார்டு, சிறுதொழில் வளர்ச்சி வங்கி மூலம் 3 சதவீத நிதியுதவியும் கிடைக்கிறது.
சுய உதவிக் குழுக்களுக்கு வர்த்தக வங்கிகள் குறைந்த வட்டியில் கடனுதவி அளிப்பதற்கு பதில் சிறு கடனுதவி நிறுவனங்களுக்குத் திருப்பிவிடுகின்றன. இதனால், ஏழைகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியுள்ளது.
முன்னுரிமைக் கடன்களுக்கான விதிமுறைகள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முன்னுரிமைக் கடன் திட்டத்தின் கீழ் வேளாண் கடனுதவி என்ற பெயரில் பயனடைவது பெரு விவசாயிகளும், பெரு நிறுவனங்களும்தான்.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, விவசாயிகளை எளிதில் அணுகி அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து வங்கிகள் விலகிச் செல்கின்றனவோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகள் கடனுதவி பெற முடியாமல் அவர்கள் தனியாரை நாடிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவது அவர்கள் விவசாயம் செய்வதை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும்.
விவசாயிகளின் வருமானம் ஏற்கெனவே குறைவாக உள்ளது. அர்ஜுன் சென் குப்தா குழுவின் அறிக்கைப்படி 25 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு மாதம் ரூ.5,681 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயி ரூ.3,685 செலவிடுகிறார். ஆனால், அவரது மாத வருமானமோ ரூ.3,589 தான்.
அதாவது செலவு செய்ததைவிட ரூ.96 வருமானம் குறைவு. இதைவிட மோசமானது என்னவெனில் சிறு மற்றும் குறு விவசாயிகள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட 36 சதவீதம் அதிகம் செலவிட நேரிடுகிறது.
உணவு, வேலைப் பாதுகாப்பு இரண்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாதவை. எனவே, விவசாயிகளுக்கு அதிக அளவில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் அரசு முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.
அர்ஜுன் சென் குப்தா குழுவின் அறிக்கைப்படி 25 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு மாதம் ரூ.5,681 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயி ரூ.3,685 செலவிடுகிறார். ஆனால், அவரது மாத வருமானமோ ரூ.3,589 தான்.