முகப்பு
கட்டுரைகள்

வடமொழியும் தென்தமிழும்

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, இந்திய விடுதலைக்குப் போராடி, சிறையில் வாடியபோது ஜவஹர்லால் நேரு எழுதிய பொக்கிஷம் "டிஸ்கவரி ஆஃப் இண்டியா'. அதே சமயம் நேருவை முந்திக் கொண்டவர், வில்லியம் ஜோன்ஸ்.

கட்டுரைகள்

வடமொழியும் தென்தமிழும்

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, இந்திய விடுதலைக்குப் போராடி, சிறையில் வாடியபோது ஜவஹர்லால் நேரு எழுதிய பொக்கிஷம் "டிஸ்கவரி ஆஃப் இண்டியா'. அதே சமயம் நேருவை முந்திக் கொண்டவர், வில்லியம் ஜோன்ஸ்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, இங்கிலாந்தில் கல்வி கற்று, இந்திய விடுதலைக்குப் போராடி, சிறையில் வாடியபோது ஜவஹர்லால் நேரு எழுதிய பொக்கிஷம் "டிஸ்கவரி ஆஃப் இண்டியா'. அதே சமயம் நேருவை முந்திக் கொண்டவர், வில்லியம் ஜோன்ஸ்.

இவர் கண்டுபிடித்த இந்தியக் காட்சியின் அற்புதங்களை விண்டுரைக்க வார்த்தைகள் இல்லை. உண்மையான இந்தியாவை இவர் கண்டுபிடித்த பிறகே, நேரு இதே சொல்லைக் கையாண்டுள்ளார். இந்த உண்மையைக் காலத்தால் அளவிட வேண்டும். ஜோன்ஸ் ஒரு மொழியியல் வல்லுனர்.

கி.பி. 1783-இல், வில்லியம் ஜோன்ஸ் தனது 37-ஆவது வயதில் கல்கத்தா உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்க லண்டனிலிருந்து கல்கத்தா வந்தார். அன்று இந்திய கவர்னர் ஜெனரலாயிருந்தவர் வாரன்ஹேஸ்டிங்க்ஸ். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைப் பீடம் தில்லி அல்ல; கல்கத்தாதான். வில்லியம் ஜோன்ஸ் மொழியியல் அறிஞர்.

மொழிப்பற்று வேறு. மொழியியல் பற்று வேறு; மொழியியல் பற்றுடையோர் எல்லா மொழிகளையும் கற்று, மொழித் தோற்றம், மொழி வளர்ந்த வரலாறு, பிற மொழி உறவுகள் பற்றி ஆராய்பவர்கள். ஜோன்ஸ் பல மொழிகளைக் கற்றவர். தாய் மொழியாம் ஆங்கிலம் தவிர கிரேக்கம், லத்தீன் மொழிகளையும் பயின்றவர்.

அத்தோடு பிரெஞ்ச், ஜெர்மன், ருஷியன், பின்னிஷ், அராபிக், பாரசீகம், துருக்கியன், சீனம் இவற்றோடு புனித மொழியான ஹீப்ருவையும் கற்றவர்.

அப்போது ஹீப்ரு மொழி பற்றிய தவறான சித்தாந்தத்தை இஸ்ரேலியர்கள்- அதாவது பழைய பைபிள் தலைமுறையினர் பரப்பியிருந்தனர். ஜெருசலத்தின் புனித மொழியான ஹீப்ருவிலிருந்துதான் உலக மொழிகளே பிறந்தன என்ற கருத்து ஐரோப்பாவில் வேரூன்றியிருந்தது.

பாபிலோனிய மொழியுடன் உறவுள்ள ஹீப்ரு, நோவா கட்டிய ஜெருசல கோபுரத்தின் வழங்கல் என்றும் கதை உண்டு. ஆனால், ஐரோப்பிய மொழிகளின் தந்தை மொழிகளான கிரீக், லத்தீனுடன் ஹீப்ருவும் ஒன்று என்ற கருத்தை ஏற்காமல் வாதாடியவர் ஜோன்ஸ்.

ஐரோப்பிய மொழிகளின் மூன்றாவது தந்தை மொழி சம்ஸ்கிருதமே தவிர, ஹீப்ரு அல்ல என்ற உண்மையை இவர் இந்தியாவுக்கு வந்து சம்ஸ்கிருதம் பயின்றபோது கண்டுபிடித்தார்.

வங்க தேசத்தை அப்போது ஆண்டு வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் அபூர்வமாக ஒரு சிலருக்கு இந்திய மொழிகளைக் கற்கும் ஆர்வம் இருந்ததை ஜோன்ஸ் அறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டார். ஜோன்ûஸப் போலவே மொழியியல் பற்றுள்ளவர் சார்லஸ் வில்கின்ஸ். வில்கின்ஸ் வங்க தேசத்தில் வாழ்ந்த சில சம்ஸ்கிருத அறிஞர்கள் மூலம் மொழிப்பயிற்சி பெற்றிருந்தார்.

சார்லஸ் வில்கின்ஸ் உதவியுடனும், சம்ஸ்கிருத அறிஞர்களின் உதவியுடனும் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் பயின்றார். அவர் மொழியியல் வல்லுநர் என்பதால் ஐரோப்பிய மொழிகளுடன் கொண்டிருந்த சம்ஸ்கிருத உறவைப் புரிந்து கொண்டு வியப்புற்றார். உலக மொழிக் குடும்பம் பற்றிய அடிப்படை ஞானம் இருந்தால்தான் மொழிகளுக்கிடையேயான உறவுகள்

புரியும்.

நாம் ஆரியம், திராவிடம் என்று பேசும்போது அதன் பொருள் மொழிக் குடும்பம் பற்றியதே தவிர இனம் பற்றியது அல்ல. ஆரிய இனம், திராவிட இனம் என்று பாராட்டுவதில் பொருளல்ல. மனித நிறத்தை வைத்து இனத்தைப் பேசலாம். மொழியை வைத்துப் பேச முடியாது.

பண்டைய உலகில் மனித இனம் ஒரே நாட்டில் வாழாமல் அவ்வப்போது பிழைப்பை நாடிப் புலம் பெயர்ந்து சென்றது. பிழைப்புக்கு வந்த இடத்தில் உள்ள மொழியில் தேர்ந்து தாய்மொழியை மறப்பதற்கு வாய்ப்புண்டு.

மொழிக் குடும்பம் பற்றி ஜோன்ஸ் பகுத்துரைத்துள்ளதை கவனிப்பது உசிதம்.மத்திய ஆசியாவை பூர்வீக இடமாகக் கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டம், கி.மு. 8000 அளவில் "ஆரியம்' என்ற மொழியைப் பேசினர்.

ஈரான் - உஸ்பெகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு கூட்டம் ஐரோப்பாவுக்கும் ரஷியாவுக்கும், மற்றொரு கூட்டம் பாகிஸ்தான் - இந்திய

எல்லைக்கும் புலம் பெயர்ந்தது.

மொழியியல் அடிப்படையில் சம்ஸ்கிருதம், லத்தீன், கிரீக் ஆகிய மூன்றுக்குமான உறவை விளக்கும் பொதுச் சொற்கள் நிறைய இருந்ததை ஜோன்ஸ் உணர்ந்தார்.

இம்மூன்றும் தனிச்சிறப்பு நிரம்பிய ஆரிய மொழிக் குடும்பம் என்று அவர் பகுத்துரைத்தமைக்கு ரத்த உறவைக் குறிக்கும் மாதா, பிதா, ப்ராதா -- தாய், தந்தை, சகோதரன், மாமனார், விதவை போன்ற சொற்களும் தவிர எண்களைக் குறிக்கும் சில சொற்களும் ஆதாரமாக உள்ளன.

உலகில் ஆரிய மொழிக் குடும்பத்தில் (சம்ஸ்கிருதம் - லத்தீன் - கிரீக்) ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானியம், ருமேனியம், ருஷியன், போலிஷியன் ஆகிய உள்பிரிவுகளுடன், இந்திய வடமொழிகளும் அடங்கியுள்ளன.

இவை ஆரியம் என்றும், ஆரியம் சாராத மத்திய ஐரோப்பிய மொழிகளான பாரசீகம், அராபியம், துருக்கியம், பின்னிஷ், ஹங்கேரியன் - ஆகியவை செமிட்டிக் மொழிகள் எனவும் பகுத்துரைக்கப்பட்டன. செம்மொழி வேறு; செமிட்டிக் மொழி வேறு.

இந்தியாவின் பழைமைச் சிறப்புள்ள பண்பாடு 7000 ஆண்டுத் தொடர்ச்சியாகப் பரிணமித்து, பன்மொழி கொண்ட இந்தியப் பண்பாட்டின் ஆரிய - திராவிட கலாசார ஒருமைப்பாட்டை தனது பண்டைய இந்திய டிஸ்கவரியாகப் பெருமைப்பட்ட வில்லியம் ஜோன்ஸ், "இந்திய மொழியியல்' (Indology) என்ற கலைத் துறையை உலகளாவிய பல்கலைக்கழகங்களில் உருவாக்கி, முதலாவதாக சம்ஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவிக்கும் விதமாக "வங்கத்தின் ஆசிய சமூகம்' (Asiatic Society of Bengal) என்ற அமைப்பு 1.1.1784-இல் உருவாக்கப்பட்டது.

ஜோன்ஸýடன் தோள் கொடுத்த வில்கின்ஸின் "பகவத் கீதை' ஆங்கில மொழிபெயர்ப்பும் அன்று வெளியிடப்பட்டது. அடுத்தபடியாக "ஹிதோபதேசம்' வெளியானது. ஜோன்ஸ் தனது பங்காக மகாகவி காளிதாசனின் "சாகுந்தல'த்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆசிய சமூகம் சார்பில் "ரிக் வேதம்', "சதபத பிராமணம்', "மனு ஸ்மிருதி', "அர்த்த சாஸ்திரம்', "மிருச்சகடிகம்', "மகாபாரதம்', "ராமாயணம்' போன்ற சம்ஸ்கிருத இலக்கியங்கள் பலவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

காசியில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியியல் துறை சிறப்பிடம் பெற்றதுடன் வங்கத்தைத் தேடி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ருஷிய மொழி அறிஞர்கள் வந்து தத்தம் மொழியில் சம்ஸ்கிருத இலக்கியங்களை மொழிபெயர்த்தனர்.

இந்திய இயல் துறையில் மிகவும் பிரபலமான மாக்ஸ் முல்லர்  (Max Muller) சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தையுமே 1823 - 1900 காலகட்டத்தில் "இந்தியப் புனித நூல் வரிசை' (The Sacred Books of India) என்ற தலைப்பில் பல தொகுப்புகளாக ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் வெளியிட்டார்.

ஆரிய மொழிக் குடும்பமான சம்ஸ்கிருதம் பெருஞ்சிறப்புப் பெற்றதைப் போல் திராவிட மொழிக் குடும்பமும் சிறப்புற்றது. "திராவிடம்' என்ற சொல்லாட்சியே சம்ஸ்கிருதம். இதன் பொருள் "தெற்கு மொழி' என்பதே. பாகிஸ்தானில் உள்ள மொஹஞ்சோதாரா - ஹராப்பா நாகரிகம் ஆரியமா, திராவிடமா? அதாவது அந்த எழுத்து முறை வடக்கா - தெற்கா என்பதில் கருத்து வேற்றுமை உண்டு.

ஆரியோ - திராவிடம் என்றோ திராவிடோ - ஆரியம் என்றோ இணைத்துக் கூறிவிடலாம்! திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உண்டு. தமிழில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்கள் உண்டு.

"இந்திய இயல்' என்ற துறை நிறுவப்படாமலேயே "கம்பராமாயணம்', "பாகவத புராணம்', "பகவத் கீதை', "வில்லிப்புத்தூரார் பாரதம்', "கந்தபுராணம்', "விஷ்ணுபுராணம்' என்று ஏராளமான சம்ஸ்கிருதத் தழுவல்கள் தமிழில் உண்டு.

இந்திய இயல் மரபில் ராபர்ட் கால்ட்வெல் பாதிரியார் எழுதிய "திராவிட ஒப்பிலக்கணம்' வெளியிடப்பட்டது. ஜி.யூ. போப் திருக்குறளையும், நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

சம்ஸ்கிருதம் எவ்வளவு தொன்மையோ அதுபோல் தமிழின் பழைமைச் சிறப்பும் ஏற்கப்பட்டு பிற்காலத்தில் தமிழ் மொழியும் செம்மொழியானது. திராவிட மொழி பற்றிய ஆய்வுகள் தெலுங்கில் நிறைய உண்டு.

திராவிட மொழிகளுக்குத் தாயான தமிழ் தனித்து இயங்கும் வல்லமை உண்டெனினும் இதர திராவிட மொழிகளுக்குத் தந்தை மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது. எனினும் இன்றுள்ள தமிழ் மொழியில் வழக்கற்றுப் போன செந்தமிழ்ச் சொற்களை வேறு திராவிட மொழிகளில் புழக்கத்தில் உள்ளன!

இந்திய மொழிகளின் பன்முக உறவுகளை மனதில் கொண்டுதான் பண்டைய இந்திய கலாசாரத்தைக் கண்டுபிடித்த நீதிமான் வில்லியம் ஜோன்ஸ், "இந்திய இயல்' துறையை உருவாக்கி, இந்திய இலக்கியப் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.

ஜோன்ஸ், 1794-இல் 48 வயதிலேயே மரணமுற்றார். செம்மொழி பேசும் மக்கள் அனைவரும் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று கூறினால் அது மிகையல்ல!

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி

முழு கட்டுரையைப் படிக்க →