காக்கப்படுமா சித்த மருத்துவம்?
உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதன் அடிப்படையில், மூலிகைகள், செடிகள், பூக்கள் வாயிலாக உடலை வளர்க்க, உயிரைக் காக்க சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதன் அடிப்படையில், மூலிகைகள், செடிகள், பூக்கள் வாயிலாக உடலை வளர்க்க, உயிரைக் காக்க சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
இதன் சிறப்பு அம்சம், இந்த மருந்துகள் எந்தவிதப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. அன்றாடம் உணவும் உணவுப் பொருள்களே கூட மருந்துகள்.
அலோபதி மருத்துவ முறையை பெரும்பாலானோர் பின்பற்றி வரும் நிலையில், சித்த மருத்துவ முறையின் மகிமையை இப்போது அரசு உணர்ந்துள்ளது. மக்களும் உணர்ந்துள்ளனர்.
சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவற்றை சித்த மருத்துவத்தில் குணப்படுத்தலாம் என்று தமிழக அரசே விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
நிலவேம்பு கஷாயம் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகும் என்று சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் விளம்பரங்களை தமிழக அரசு வெளியிட்டது.
மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட சில நோய்கள் சித்த மருத்துவ முறையில் குணமாகி வருவதால், கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவ முறையை மக்கள் நாடி வருகின்றனர்.
இதனால், சித்த மருத்துவமனைகளில் கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆனால், சித்த மருத்துவ முறைக்கு அரசு போதிய அளவு நிதி ஒதுக்கீடும், ஊக்கமும் அளிப்பதில்லை என்பதே உண்மை.
அலோபதி மருத்துவத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் (2014-15) ஆயுர்வேத மருத்துவப் பிரிவுக்கு ரூ.230 கோடி நிதியையும், யுனானி மருத்துவப் பிரிவுக்கு ரூ.150 கோடி நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம், யோகா, மருந்தில்லா மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு மொத்தமாக ரூ.70 கோடி நிதியை மட்டுமே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்படுகிறது.
ஆனால், சித்த மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் மட்டும் தயக்கம் காட்டுகிறது.
பாளையங்கோட்டை, அரும்பாக்கம் (சென்னை) ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அரசின் சித்த மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதனால், குறைந்த அளவு மாணவர்களே சித்த மருத்துவப் படிப்பில் சேரும் நிலை ஏற்படுகிறது. மேலும், சித்த மருத்துவம் படித்தால் அரசுப் பணியில் வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது.
எனவே, சித்த மருத்துவம் படிக்க மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 1,000 சித்த மருத்துவமனைகளும், சித்த மருந்தகங்களும் இயங்கி வருகின்றன.
இவற்றில் தலா ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால், இந்தப் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. இதுமட்டுமன்றி, மாற்றுப் பணியிடம் என்ற வகையில், மருத்துவர்களும், பணியாளர்களும் அலைக்கழிக்கப்படும் நிலையும் உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சரியான கட்டட வசதி இல்லாத இடங்களில்தான் இயங்கி வருகிறது.
ஒரு சில இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்த மருத்துவப் பிரிவுக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளனர்.
இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் சித்த மருத்துவப் பிரிவு இயங்கி வரும் இடங்கள் மோசம்தான்!
இதுமட்டுமன்றி, அரசு சித்த மருத்துவர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றிலும் உதவி மருத்துவ அலுவலர் என்ற நிலையே தொடருகிறது.
சித்த மருத்துவமனை வளாகங்களிலோ அல்லது தனியாக இடங்களைக் கொடுத்து அந்த இடங்களிலோ மூலிகைப் பண்ணைகள் தொடங்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.
இப்படி பண்ணைகள் தொடங்குவதால், வீடுகளிலும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதன் அவசியத்தை மக்கள் உணர வாய்ப்பு ஏற்படும்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். அதற்கு வழிகாட்டும் சித்த மருத்துவத்துக்கு உரிய ஊக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும்.
சித்த மருத்துவமனைகள், மருந்தகங்களுக்குப் போதுமான நிதியுதவி அளிப்பதோடு கட்டட வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
போதுமான அளவுக்கு மருத்துவர்களையும், பணியாளர்களையும் நியமிக்கவேண்டும்.
எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும். சித்த மருத்துவத்தின் அருமையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் சித்த மருத்துவத்தின் மகத்துவம், மருத்துவ முறை, மூலிகைகளின் பயன்கள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
இதன் வாயிலாக, மருந்தில்லா மருத்துவ முறையை எதிர்கால சந்ததியினர் உணருவர்.
தமிழகத்தின் பாரம்பரியமான சித்த மருத்துவத்தைக் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.